பதிவு செய்த நாள்
11
ஆக
2018
10:08
ராமேஸ்வரம் : ஆடி அமாவாசையை முன்னிட்டு ராமேஸ்வரத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள், முன்னோர்கள் ஆன்மா சாந்தியடைய வேண்டி திதி பூஜை செய்து, அக்னி தீர்த்த கடலில் நீராடினார்கள்.
ராமேஸ்வரம், கன்னியாகுமரி, வேதாரண்யம் பகுதிகளில் உள்ள நீர் நிலைகளில் ஏராளமான பக்தர்கள் புனித நீராடினர். ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் அதிகாலையிலேயே ஏராளமானோர் புனித நீராடி, முன்னோர்களுக்கு திதி கொடுத்து வழிபாடு நடத்தினர். ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் ஆடித்திருக்கல்யாண விழாவுக்காக ஆக.,4ல் கொடி ஏற்றத்துடன் திருவிழா துவங்கியது. முக்கிய விழாவான ஆடி அமாவாசையையொட்டி, கோயிலில் இருந்து தங்க கருட வாகனத்தில் ஸ்ரீ ராமர் புறப்பாடாகி, அக்னி தீர்த்த கடற்கரையில் எழுந்தருளி பக்தருக்கு தீர்த்தவாரி கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இங்கு புனித நீராட தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து நேற்று ஏராளமான பக்தர்கள் ரயில், அரசு பஸ், தனியார் வாகனம் மூலம் ராமேஸ்வரத்தில் குவிந்தனர். ஆயிரக்கணக்கான பக்தர்கள், முன்னோர்கள் ஆன்மா சாந்தியடைய வேண்டி திதி பூஜை செய்து, அக்னி தீர்த்த கடலில் நீராடினார்கள். பின், கோயிலுக்குள் உள்ள 22 புனித தீர்த்தங்களை நீராட, பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து நீராடினர். சுவாமி, அம்மன் சன்னதியில் நடந்த சிறப்பு பூஜையில், பக்தர்கள் பயபக்தியுடன் தரிசனம் செய்தனர்.