பதிவு செய்த நாள்
11
ஆக
2018 
02:08
 
 சேலம்: ஆடிப்பண்டிகையை முன்னிட்டு, சேலம் மாவட்டத்திலுள்ள அம்மன் கோவில்களில், நேற்று, சிறப்பு பூஜை நடந்தது. இதில், பல்வேறு அலங்காரங்களால் காட்சியளித்த அம்மனை, திரளானோர் வழிபட்டனர்.
ஆடிப்பண்டிகையை முன்னிட்டு, சேலம், கோட்டை மாரியம்மன் உள்பட, மாவட்டத்திலுள்ள அம்மன் கோவில்களில், சிறப்பு பூஜை நடந்துவருகிறது. நேற்று, கோட்டை மாரியம்மன், ராஜ அலங்காரத்தில் காட்சியளித்தார். அஸ்தம்பட்டி மாரியம்மனுக்கு, ஆரஞ்சு, ஆப்பிள், சாத்துக்குடி, மாதுளை, அன்னாசி பழங்களால், சிறப்பு அலங்காரம்; குகை மாரியம்மனுக்கு, மதுரை மீனாட்சியம்மன் அலங்காரம்; குகை காளியம்மனுக்கு, காசி விசாலாட்சி அலங்காரம்; அம்மாபேட்டை, பலப்பட்டரை மாரியம்மனுக்கு, திருமணக்கோல அலங்காரம் சாத்துபடி செய்யப்பட்டிருந்தது. செவ்வாய்ப்பேட்டை மாரியம்மன் கோவிலில், மூலவர் அம்மனுக்கு, சிறப்பு அபி ?ஷகம், ஆராதனை செய்து, முத்தங்கி அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. தொடர்ந்து, உற்சவர் அம்மனுக்கு, மஞ்சள் பட்டுடுத்தி, மேள, தாளம் முழங்க, அழைத்து வந்து, 44 அடி உயர தேரில் அமரவைத்து, தேரோட்டம் நடந்தது. இணை ஆணையர் வரதராஜ் தலைமையில், பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து, தேரோட்டத்தை தொடங்கிவைத்தனர். பக்தர்கள், ஓம் சக்தி தாயே, மாரி தாயே என, மெய்சிலிர்க்க முழக்கமிட்டனர். அப்புசெட்டி தெரு, மீனாட்சி கோவில் தெரு, சந்தைப்பேட்டை பிரதான சாலை, சண்முகா தியேட்டர் வழியாக, மீண்டும், செவ்வாய்ப்பேட்டை பிரதான சாலையில் வந்து, மதியம், 2:00 மணிக்கு, நிலையை அடைந்தது. மேலும், வாழப்பாடி, செல்வ மாரியம்மன் கோவிலில், மூலவர் அம்மன் முத்து பல்லக்கில் அலங்கரிக்கப்பட்டு, சிறப்பு பூஜை நடந்தது.
தீ மிதி விழா: இடைப்பாடி, ஓங்காளியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு, நேற்று மாலை, தீ மிதி விழா நடந்தது. அதில், 1,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் தீ மிதித்து, நேர்த்திக்கடன் செலுத்தினர். சிலர், முதுகில் அலகு குத்தியும், பெண்கள் தங்கள் குழந்தைகளுடன் தீ மிதித்தனர். மேலும், வேன், கார் உள்ளிட்ட வாகனங்களை, பலர் இழுத்துவந்தனர்.