திருக்கனுார்: கொண்டாரெட்டிப்பாளையம் செங்கேணியம்மன் கோவிலில் சாகை வார்த்தல் மற்றும் செடல் உற்சவம் நேற்று நடந்தது. திருக்கனுார் அடுத்த கொண்டாரெட்டிப்பாளையம் கிராமத்தில் உள்ள செங்கேணியம்மன் கோவிலில், புதிதாக அமைக்கப்பட்ட ஆஸ்தான மண்டபத்தின் கும்பாபிஷேகம் மற்றும் சாகை வார்த்தல் விழா, கடந்த 6ம் தேதி கணபதி பூஜையுடன் துவங்கியது. காலை 7:00 மணிக்கு ஆஸ்தான மண்டபத்திற்கு கும்பாபிஷேகம் நடந்தது. 7ம் தேதி காலை 7:00 மணிக்கு சங்கராபரணி ஆற்றில் இருந்து பால்குடம் எடுத்துவரப்பட்டு, அம்மனுக்கு அபிஷேகம் மற்றும் இரவு 7:00 மணிக்கு திருவிளக்கு பூஜை நடந்தது.
கடந்த 8 ம் தேதி மதியம் 3:00 மணி அளவில் அய்யனாரப்பன் சுவாமிக்கு ஊரணி பொங்கல் நிகழ்ச்சி மற்றும் நேற்று முன்தினம் (9ம் தேதி) மதியம் 3:00 மணிக்கு எல்லைபிடாரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், பொங்கல் வைத்தல் நடந்தது. முக்கிய நிகழ்வாக, நேற்று காலை 7:00 மணிக்கு சத்தி கரகம் புறப்பாடு, பகல் 12:00 மணிக்கு அம்மனுக்கு சாகை வார்த்தலும், மதியம் 3:00 மணிக்கு செடல் உற்சவம் நடந்தது. இதில், அக்கிராமத்தை சேர்ந்த திரளான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.