தஞ்சை புன்னைநல்லுார் மாரியம்மன் கோவிலில் முத்துப்பல்லக்கு விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13ஆக 2018 11:08
தஞ்சாவூர்: தஞ்சாவூர் அடுத்த புன்னைநல்லுார் மாரியம்மன் கோவிலில், 95வது ஆண்டு முத்துப்பல்லக்கு திருவிழா நேற்று இரவு கோலாகலமாக நடந்தது. மின்னொளியில் ஜொலித்த முத்துப்பல்லக்கை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
தஞ்சாவூர் அடுத்த புன்னைநல்லுார் மாரியம்மன் கோவிலில் உள்ள அம்பாள் மஹா ஞானி சதாசிவ ப்ரமேந்தரர் அவர்களால் பிரதிஷ்டை செய்யப்பட்டது. புற்று மண்ணால் சுயம்பு மூர்த்தியாக உருவான அம்பாளுக்கு தற்பொழுதும் அக்னி நக்ஷத்ர காலங்களில் முகத்தில் வியர்வை துளி தெரியும். இந்த வியர்வை துளியானது, விளக்கின் ஒளி பட்டு முத்து முத்தாக தெரிகிறது. இதனால் அம்மனுக்கு முத்து மாரியம்மன் என்ற சிறப்பு பெயரும் உண்டு. கம்பீரமாக அமர்ந்த கோலத்தில் காட்சி கொடுத்து அருள்பாலித்து வருகின்ற அம்மன் புற்று மண் என்பதால் நித்யபடி அபிஷேகம் கிடையாது. 5 வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே தைலாபிஷேகம் நடைபெறும். இத்தனை சிறப்பு மிக்க இக்கோவிலின் 95வது ஆண்டு முத்துப்பல்லக்கு விழா நாதஸ்வரம்,கோலாட்டம் என சிறப்பாக அமைப்பட்டு திருவிழா வெகு விமர்சையாக நடந்தது. முன்னதாக நேற்று காலை 9 மணிக்கு பக்தர்கள் பாற்குட வீதியுலா,மதியம் அம்மனுக்கு பாலபிஷேகம் செய்யப்பட்டது. அதன்பிறகு முத்துமணிச் சிவிகையில் அலங்காரத்தில் அம்மன் முத்துப்பல்லக்கு வீதிஉலா கோலாகலமாக நடந்தது. இதில் தமிழகம் முழுவதும் இன்றி வெளி மாநிலத்தை சேர்ந்தவர்களும் விழாவில் கலந்துக்கொண்ட ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். நாளை(14ம் தேதி) விடையாற்றியுடன் விழா நிறைவு பெறுகிறது.