பதிவு செய்த நாள்
13
ஆக
2018
12:08
கிணத்துக்கடவு: ஆடி அமாவாசையை முன்னிட்டு பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, நெகமம் பகுதியிலுள்ள கோவில்களில் நடந்த சிறப்பு பூஜையில் பக்தர்கள் திரளாக பங்கேற்றனர். ஆடி அமாவாசையை முன்னிட்டு, நேற்று முன்தினம் கோவில்களில் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. முன்னோர்களுக்கு திதி கொடுத்து வழிபட்ட மக்கள், அம்மன், சிவன் கோவில்களுக்கு சென்று தரிசனம் செய்தனர்.கிணத்துக்கடவு, கொண்டம்பட்டி ரோட்டில் உள்ள மாரியம்மன், மாகாளியம்மன் மற்றும் புற்றிடங்கொண்டீசர் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
சூலக்கல் மாரியம்மன், பெரியகளந்தை ஆதீஸ்வரன் கோவில்களில் அதிகாலையில் இருந்தே பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று வழிபட்டனர்.நெகமம் அடுத்த கப்பளாங்கரையில், பார்வதி உடனமர் பரமசிவன் கோவிலில், ஐந்து வேல்களை கொண்ட பரமசிவனும், பார்வதிதேவியும் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தனர்.
* வால்பாறை, நடுமலை துண்டுக்கருப்பராயர் சுவாமி கோவிலில் ஆடி அமாவாசையை ஒட்டி, நேற்று முன்தினம் காலை, 6:00 மணிக்கு அபிஷேகம், அலங்கார பூஜை நடந்தது. வால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவிலில் காசி விஸ்வநாதருக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜை நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு, சுவாமியை வழிபட்டனர்.