Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 
 

28. கச்சிமாநகர் புக்க காதை 30. பவத்திற மறுகெனப் பாவை நோற்ற காதை
முதல் பக்கம் » மணிமேகலை
29. தவத்திறம் பூண்டு தருமங்கேட்ட காதை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 ஜன
2012
17:16

(இருபத்தொன்பதாவது மணிமேகலை, காஞ்சி மாநகர்க்கட் சென்ற பின்னர் அறவண வடிகளும் தாயருஞ் செல்ல அவரைக் கண்டு இறைஞ்சித் தருமங் கேட்ட பாட்டு)

அஃதாவது மணிமேகலை பவுத்த சமயத்தின்கண் பிக்குணிக்குக் (பெண்துறவிக்கு) கூறி உள்ள எட்டுக் கட்டளைகளையும் மேற்கொள்வதாகிய தவக்கோலம் தாங்கி அறவண அடிகளாரிடத்தே அச்சமயத்தார்க்கு உரிய அறங்களைக் கேட்டறிந்த செய்கையைக் கூறும் செய்யுள் என்றவாறு.

இதன்கண் அறவண வடிகளார் தம்மை வணங்கிய மணிமேகலையை வாழ்த்தி அவளுக்குத் தாம் கச்சிநகரத்திற்கு வந்த வரலாறு கூறுபவர்: பீலிவளை பெற்ற மகவினைக் கடலில் கெடுத்ததும், அதுகேட்ட சோழமன்னன் வருத்தமுற்று அம்மகவினைத் தேடி அலைந்த காரணத்தால் தன் நகரத்தில் தான் செய்யக்கடவ இந்திர விழாவை மறந்தமையும் அதனால் மணிமேகலா தெய்வம் அந்நகரத்தைக் கடல் கொள்க என்று சபித்ததும் தனக்கு விழாச் செய்யாமையால் இந்திரனும் சாபமிட்டானாக இவ்வாற்றல் புகார் நகரம் கடல்கோள் பட்டதும், இங்ஙனம் ஆகும் என்று யாம் முன்பே தெரிந்து இக்காஞ்சி நகரத்திற்கு மாதவி சுதமதி என்னும் மகளிரோடு இந்நகரத்திற்கு வந்தேம் என்று அறிவித்ததும் அதுகேட்ட மணிமேகலை தான் மாதவன் உருவங்கொண்டு வஞ்சிமாநகரம் அடைந்த செய்தியும், அந்நகரத்தில் பல்வேறு சமயக்கணக்கர்களைக் கண்டு அவர் தம் சமய நன்பொருள்களைக் கேட்டறிந்த செய்தியையுங்கூறி அவர் கூறிய பொருள்கள் தன் மனத்திற்குப் பொருந்தாமையால் தாமரையும் அறவண அடிகளாரையும் காண்டற்கு விரும்பிக் கச்சிமாநகர் புக்க செய்தியையும் அவ்வடிகளார்க்கு உரைத்தலும், அதுகேட்ட அடிகளார் மணிமேகலை வேண்டுகோட் கிணங்கிப் புத்தர் அறங்களை மணிமேகலைக்குச் செவியறிவுறுத்துதலும் பிறவும் கூறப்படுகின்றன.

இறைஞ்சிய இளங்கொடி தன்னை வாழ்த்தி
அறம் திகழ் நாவின் அறவணன் உரைப்போன்
வென் வேல் கிள்ளிக்கு நாகநாடு ஆள்வோன்
தன் மகள் பீலிவளை தான் பயந்த
புனிற்று இளங் குழவியைத் தீவகம் பொருந்தி
தனிக் கலக் கம்பளச் செட்டி கைத் தரலும்
வணங்கிக் கொண்டு அவன் வங்கம் ஏற்றிக்
கொணர்ந்திடும் அந் நாள் கூர் இருள் யாமத்து
அடைகரைக்கு அணித்தா அம்பி கெடுதலும்
மரக்கலம் கெடுத்தோன் மைந்தனைக் காணாது  29-010

அரைசற்கு உணர்த்தலும் அவன் அயர்வுற்று
விரைவனன் தேடி விழாக்கோள் மறப்பத்
தன் விழாத் தவிர்தலின் வானவர் தலைவன்
நின் உயிர்த் தந்தை நெடுங் குலத்து உதித்த
மன் உயிர் முதல்வன் மகர வேலையுள்
முன்னிய வங்கம் முங்கிக் கேடுற
பொன்னின் ஊசி பசுங் கம்பளத்துத்
துன்னியதென்னத் தொடு கடல் உழந்துழி
எழு நாள் எல்லை இடுக்கண் வந்து எய்தா
வழுவாச் சீலம் வாழ்மையின் கொண்ட  29-020

பான்மையின் தனாது பாண்டு கம்பளம்
தான் நடுக்குற்ற தன்மை நோக்கி
ஆதி முதல்வன் போதி மூலத்து
நாதன் ஆவோன் நளி நீர்ப் பரப்பின்
எவ்வம் உற்றான் தனது எவ்வம் தீர் எனப்
பவ்வத்து எடுத்து பாரமிதை முற்றவும்
அற அரசு ஆளவும் அற ஆழி உருட்டவும்
பிறவிதோறு உதவும் பெற்றியள் என்றே
சாரணர் அறிந்தோர் காரணம் கூற
அந்த உதவிக்கு ஆங்கு அவள் பெயரைத்  29-030

தந்தை இட்டனன் நினை தையல் நின் துறவியும்
அன்றே கனவில் நனவென அறைந்த
மென் பூ மேனி மணிமேகலா தெய்வம்
என்பவட்கு ஒப்ப அவன் இடு சாபத்து
நகர் கடல் கொள்ள நின் தாயரும் யானும்
பகரும் நின் பொருட்டால் இப் பதிப் படர்ந்தனம்
என்றலும் அறவணன் தாள் இணை இறைஞ்சி
பொன் திகழ் புத்த பீடிகை போற்றும்
தீவதிலகையும் இத் திறம் செப்பினள்
ஆதலின் அன்ன அணி நகர் மருங்கே  29-040

வேற்றுருக் கொண்டு வெவ் வேறு உரைக்கும்
நூல் துறைச் சமய நுண் பொருள் கேட்டே
அவ் உரு என்ன ஐ வகைச் சமயமும்
செவ்விது அன்மையின் சிந்தையின் வைத்திலேன்
அடிகள்! மெய்ப்பொருள் அருளுக என்ன
நொடிகுவென் நங்காய்! நுண்ணிதின் கேள் நீ
ஆதி சினேந்திரன் அளவை இரண்டே
ஏதம் இல் பிரத்தியம் கருத்து அளவு என்னச்
சுட்டுணர்வைப் பிரத்தியக்கம் எனச் சொலி
விட்டனர் நாம சாதி குணம் கிரியைகள்  29-050

மற்று அவை அனுமானத்தும் அடையும் என
காரண காரிய சாமானியக் கருத்து
ஓரின் பிழைக்கையும் உண்டு பிழையாதது
கனலில் புகைபோல் காரியக் கருத்தே
ஏனை அளவைகள் எல்லாம் கருத்தினில்
ஆன முறைமையின் அனுமானம் ஆம் பிற
பக்கம் ஏது திட்டாந்தம் உபநயம்
நிகமனம் என்ன ஐந்து உள அவற்றில்
பக்கம் இம் மலை நெருப்புடைத்து என்றல்
புகையுடைத்து ஆதலால் எனல் பொருந்து ஏது  29-060

வகை அமை அடுக்களை போல் திட்டாந்தம்
உபநயம் மலையும் புகையுடைத்து என்றல்
நிகமனம் புகையுடைத்தே நெருப்புடைத்து என்றல்
நெருப்புடைத்து அல்லாது யாதொன்று அது புகைப்
பொருத்தம் இன்று புனல்போல் என்றல்
மேவிய பக்கத்து மீட்சி மொழி ஆய்
வைதன்மிய திட்டாந்தம் ஆகும்
தூய காரிய ஏதுச் சுபாவம்
ஆயின் சத்தம் அநித்தம் என்றல்
பக்கம் பண்ணப்படுதலால் எனல்   29-070

பக்க தன்ம வசனம் ஆகும்
யாதொன்று யாதொன்று பண்ணப்படுவது
அநித்தம் கடம் போல் என்றல் சபக்கத்
தொடர்ச்சி யாதொன்று அநித்தம் அல்லாதது
பண்ணப் படாதது ஆகாசம் போல் எனல்
விபக்கத் தொடர்ச்சி மீட்சி மொழி என்க
அநன்னுவயத்தில் பிரமாணம் ஆவது
இவ் வெள்ளிடைக்கண் குடம் இலை என்றல்
செவ்விய பக்கம் தோன்றாமையில் எனல்
பக்க தன்ம வசனம் ஆகும்   29-080

இன்மையின் கண்டிலம் முயற்கோடு என்றல்
அந் நெறிச் சபக்கம் யாதொன்று உண்டு அது
தோற்றரவு அடுக்கும் கைந் நெல்லிபோல் எனல்
ஏற்ற விபக்கத்து உரை எனல் ஆகும்
இவ்வகை ஏது பொருள் சாதிப்பன
என்னை காரியம் புகை சாதித்தது? என்னின்
புகை உள இடத்து நெருப்பு உண்டு என்னும்
அன்னுவயத்தாலும் நெருப்பு இலா இடத்துப்
புகை இல்லை என்னும் வெதிரேகத்தாலும்
புகஈ நெருப்பைச் சாதித்தது என்னின்  29-090

நேரிய புகையில் நிகழ்ந்து உண்டான
ஊர்த்தச் சாமம் கௌடிலச் சாமம்
வாய்த்த நெருப்பின் வரு காரியம் ஆதலின்
மேல் நோக்கிக் கறுத்திருப்ப பகைத்திருப்ப
தாமே நெருப்பைச் சாதிக்க வேண்டும்
அன்னுவயம் சாதிக்கின் முன்னும்
கழுதையையும் கணிகையையும்
தம்மில் ஒருகாலத்து ஓர் இடத்தே
அன்னுவயம் கண்டான் பிற்காலத்து
கழுதையைக் கண்ட இடத்தே கணிகையை  29-100

அனுமிக்க வேண்டும் அது கூடா நெருப்பு
இலா இடத்துப் புகை இலை எனல் நேர் அத்
திருத்தகு வெதிரேகம் சாதிக்கும் என்னின்
நாய் வால் இல்லாக் கழுதையின் பிடரில்
நரி வாலும் இலையா காணப்பட்ட
அதனையே கொண்டு பிறிதோர் இடத்து
நரி வாலினால் நாய் வாலை அனுமித்தல்
அரிதாம் அதனால் அதுவும் ஆகாது
ஒட்டிய உபநயம் நிகமனம் இரண்டும்
திட்டாந்தத்திலே சென்று அடங்கும்   29-110

பக்கம் ஏது திட்டாந்தங்கள்
ஒக்க நல்லவும் தீயவும் உள அதில்
வௌிப்பட்டுள்ள தன்மியினையும்
வௌிப்பட்டுள சாத்திய தன்மத்திறம்
பிறிதின் வேறு ஆம் வேறுபாட்டினையும்
தன்கண் சார்த்திய நயம் தருதல் உடையது
நன்கு என் பக்கம் என நாட்டுக அது தான்
சத்தம் அநித்தம் நித்தம் என்று ஒன்றைப்
பற்றி நாட்டப்படுவது தன்மி
சத்தம் சாத்திய தன்மம் ஆவது   29-120

நித்த அநித்தம் நிகழும் நல் ஏது
மூன்றாய்த் தோன்றும் மொழிந்த பக்கத்து
ஊன்றி நிற்றலும் சபக்கத்து உண்டாதலும்
விபக்கத்து இன்றியே விடுதலும் சபக்கம்
சாதிக்கின் பொருள் தன்னால் பக்கத்து
ஓதிய பொது வகை ஒன்றி இருத்தல்
சத்த அநித்தம் சாத்தியம் ஆயின்
ஒத்த அநித்தம் கட ஆதி போல் எனல்
விபக்கம் விளம்பில் யாதொன்று யாதொன்று
அநித்தம் அல்லாதது பண்ணப் படாதது  29-130

ஆ அகாசம் போல் என்று ஆகும்
பண்ணப்படுதலும் செயலிடைத் தோன்றலும்
நண்ணிய பக்கம் சபக்கத்திலும் ஆய்
விபக்கத்து இன்றி அநித்தத்தினுக்கு
மிகத் தரும் ஏதுவாய் விளங்கிற்று என்க
ஏதம் இல் திட்டாந்தம் இரு வகைய
சாதன்மியம் வைதன்மியம் என
சாதன்மியம் எனப்படுவது தானே
அநித்தம் கட ஆதி அன்னுவயத்து என்கை
வைதன்மிய திட்டாந்தம் சாத்தியம்  29-140

எய்தா இடத்தில் ஏதுவும் இன்மை
இத்திறம் நல்ல சாதனத்து ஒத்தன
தீய பக்கமும் தீய ஏதுவும்
தீய எடுத்துக்காட்டும் ஆவன
பக்கப் போலியும் ஏதுப் போலியும்
திட்டாந்தப் போலியும் ஆஅம் இவற்றுள்
பக்கப்போலி ஒன்பது வகைப்படும்
பிரத்தியக்க விருத்தம் அனுமான
விருத்தம் சுவசன விருத்தம் உலோக
விருத்தம் ஆகம விருத்தம் அப்பிர   29-150

சித்த விசேடணம் அப்பிரசித்த
விசேடியம் அப்பிரசித்த உபயம்
அப்பிரசித்த சம்பந்தம் என
எண்ணிய இவற்றுள் பிரத்தியக்க விருத்தம்
கண்ணிய காட்சி மாறுகொளல் ஆகும்
சத்தம் செவிக்குப் புலன் அன்று என்றல்
மற்று அனுமான விருத்தம் ஆவது
கருத்து அளவையை மாறாகக் கூறல்
அநித்தியக் கடத்தை நித்தியம் என்றல்
சுவசன விருத்தம் தன் சொல் மாறி இயம்பல்  29-160

என் தாய் மலடி என்றே இயம்பல்
உலக விருத்தம் உலகின் மாறாம் உரை
இலகு மதி சந்திரன் அல்ல என்றல்
ஆகம விருத்தம் தன் நூல் மாறு அறைதல்
அநித்த வாதியா உள்ள வைசேடிகன்
அநித்தியத்தை நித்தியம் என நுவறல்
அப்பிரசித்த விசேடணம் ஆவது
தத்தம் எதிரிக்குச் சாத்தியம் தெரியாமை
பௌத்தன் மாறாய் நின்ற சாங்கியனைக்
குறித்து சத்தம் விநாசி என்றால்   29-170

அவன் அவிநாசவாதி ஆதலின்
சாத்திய விநாசம் அப்பிரசித்தம் ஆகும்
அப்பிரசித்த விசேடியம் ஆவது
எதிரிக்குத் தன்மி பிரசித்தம் இன்றி
இருத்தல் சாங்கியன் மாறாய் நின்ற
பௌத்தனைக் குறித்து ஆன்மாச் சைதனியவான்
என்றால் அவன் அநான்ம வாதி
ஆதலின் தன்மி அப்பிரசித்தம்
அப்பிரசித்த உபயம் ஆவது
மாறு ஆனோர்க்குத் தன்மி சாத்தியம்  29-180

ஏறாது அப்பிரசித்தமாய் இருத்தல்
பகர் வைசேடிகன் பௌத்தனைக் குறித்து
சுகம் முதலிய தொகைப் பொருட்குக் காரணம்
ஆன்மா என்றால் சுகமும் ஆன்மாவும்
தாம் இசையாமையின் அப்பிரசித்த உபயம்
அப்பிரசித்த சம்பந்தம் ஆவது
எதிரிக்கு இசைந்த பொருள் சாதித்தல்
மாறு ஆம் பௌத்தற்கு சத்த அநித்தம்
கூறில் அவன்ன் கொள்கை அஃது ஆகலில்
வேறு சாதிக்க வேண்டாது ஆகும்   29-190

ஏதுப் போலி ஓதின் மூன்று ஆகும்
அசித்தம் அநைகாந்திகம் விருத்தம்ம் என
உபய அசித்தம் அன்னியதர அசித்தம்
சித்த அசித்தம் ஆசிரய அசித்தம்
என நான்கு அசித்தம் உபய அசித்தம்
சாதன ஏது இருவர்க்கும் இன்றி
சத்தம் அநித்தம் கண் புலத்து என்றல்
அன்னியதர அசித்தம் மாறு ஆய் நின்றாற்கு
உன்னிய ஏது அன்றாய் ஒழிதல்
சத்தம் செயலுறல் அநித்தம் என்னின்  29-200

சித்த வௌிப்பாடு அல்லது செயலுறல்
உய்த்த சாங்கியனுக்கு அசித்தம் ஆகும்
சித்த அசித்தம் ஆவது
ஏது சங்கயமாய்ச் சாதித்தல்
ஆவி பனி என ஐயுறா நின்றே
தூய புகை நெருப்பு உண்டு எனத் துணிதல்
ஆசிரய அசித்தம் மாறு ஆனவனுக்கு
ஏற்ற தன்மி இன்மை காட்டுதல்
ஆகாசம் சத்த குணத்தால் பொருளாம் என்னின்
ஆகாசம் பொருள் அல்ல என்பாற்குத்  29-210

தன்மி அசித்தம் அநைகாந்திகமும்
சாதாரணம் அசாதாரணம் சபக்கைக
தேசவிருத்தி விபக்க வியாபி
விபக்கைகதேச விருத்தி சபக்க
வியாபி உபயைகதேச விருத்தி
விருத்த வியபிசாரி என்று ஆறு
சாதாரணம் சபக்க விபக்கத்துக்கும்
ஏதுப் பொதுவாய் இருத்தல் சத்தம்
அநித்தம் அறியப்படுதலின் என்றால்
அறியப்படுதல் நித்த அநித்தம் இரண்டுக்கும்  29-220

செறியும் கடம் போல் அநித்தத்து அறிவோ?
ஆகாசம் போல நித்தத்து அறிவோ?
என்னல் அசாதாரணம் ஆவது தான்
உன்னிய பக்கத்து உண்டாம் ஏதுச்
சபக்க விபக்கம் தம்மில் இன்றாதல்
சத்தம் நித்தம் கேட்கப்படுதலின்
என்னின் கேட்கப்படல் எனும் ஏதுப்
பக்கத்து உள்ளதாயின் அல்லது
சபக்க விபக்கத்து மீட்சித்து ஆதலின்
சங்கயம் எய்தி அநேகாந்திகம் ஆம்  29-230

சபக்கைகதேச விருத்தி விபக்க
வியாபி ஆவது ஏதுச் சபக்கத்து
ஓர் இடத்து எய்தி விபக்கத்து எங்கும்
உண்டாதல் ஆகும் சத்தம் செயலிடைத்
தோன்றாதாகும் அநித்தம் ஆகலின்
என்றால் அநித்தம் என்ற ஏதுச்
செயலிடைத் தோன்றாமைக்குச் சபக்கம்
மின்னினும் ஆகாசத்தினும் மின்னின்
நிகழ்ந்து ஆகாசத்தில் காணாது ஆகலின்
அநித்தம் கட ஆதியின் ஒத்தலின் கடம் போல்  29-240

அழிந்து செயலில் தோன்றுமோ? மின் போல்
அழிந்து செயலில் தோன்றாதோ? எனல்
விபக்கைகதேச விருத்தி சபக்க
வியாபி ஆவது ஏது விபக்கத்து
ஓரிடத்து உற்று சபக்கத்து ஒத்து இயறல்
சத்தம் செயலிடைத் தோன்றும் அநித்தம் ஆதலின் எனின்
அநித்த ஏதுச் செயலிடைத் தோன்றற்கு
விபக்க ஆகாயத்தினும் மின்னினும்
மின்னின் நிகழ்ந்து ஆகாசத்துக் காணாது
சபக்கக் கட ஆதிகள் தம்மில்   29-250

எங்கும் ஆய் ஏகாந்தம் அல்ல மின் போல்
அநித்தம் ஆய்ச் செயலிடைத் தோன்றாதோ? கடம்போல்
அநித்தம் ஆய்ச் செயலிடைத் தோன்றுமோ? எனல்
உபயைகதேச விருத்தி ஏதுச்
சபக்கத்தினும் விபக்கத்தினும் ஆகி
ஓர் தேசத்து வர்த்தித்தல் சத்தம்
நித்தம் அமூர்த்தம் ஆதலின் என்னின்
அமூர்த்த ஏது நித்தத்தினுக்குச்
சபக்க ஆகாச பரமாணுக்களின்
ஆகாசத்து நிகழ்ந்து மூர்த்தம் ஆம்   29-260

பரமாணுவின் நிகழாமையானும்
விபக்கமான கட சுக ஆதிகளில்
சுகத்து நிகழ்ந்து கடத்து ஒழிந்தமையினும்
ஏகதேசத்து நிகழ்வது ஏகாந்தம் அன்று
அமூர்த்தம் ஆகாசம்போல நித்தமோ?
அமூர்த்தம் சுகம் போல் அநித்தமோ? எனல்
விருத்த வியபிசாரி திருந்தா ஏது ஆய்
விருத்த ஏதுவிற்கும் இடம் கொடுத்தல்
சத்தம் அநித்தம் செயலிடைத் தோன்றலின்
ஒத்தது எனின் அச் செயலிடைத் தோன்றற்குச்  29-270

சபக்கமாயுள்ள கட ஆதி நிற்க
சத்தம் நித்தம் கேட்கப்படுதலின்
சத்தத்துவம் போல் எனச் சாற்றிடுதல்
இரண்டினும் சங்கயம் ஆய் ஏகாந்தம் அல்ல
விருத்தம் தன்னைத் திருத்தக விளம்பின்
தன்மச் சொரூப விபரீத சாதனம்
தன்ம விசேட விபரீத சாதனம்
தன்மிச் சொரூப விபரீத சாதனம்
தன்மி விசேட விபரீத சாதனம்
என்ன நான்கு வகையது ஆகும் அத்  29-280

தன்மச் சொரூப விபரீத சாதனம்
சொன்ன ஏதுவின் சாத்திய தன்மத்து
உருவம் கெடுதல் சத்தம் நித்தம்
பண்ணப்படுதலின் என்றால் பண்ணப்
படுவது அநித்தம் ஆதலின் பண்ணப்பட்ட
ஏதுச் சாத்திய தன்ம நித்தத்தை விட்டு
அநித்தம் சாதித்தலான் விபரீதம்
தன்ம விசேட விபரீத சாதனம்
சொன்ன ஏதுச் சாத்திய தன்மம்
தன்னிடை விசேடம் கெடச் சாதித்தல்  29-290

கண் முதல் ஓர்க்கும் இந்திரியங்கள்
எண்ணின் பரார்த்தம் தொக்கு நிற்றலினால்
சயன ஆசனங்கள் போல என்றால்
தொக்கு நிற்றலின் என்கின்ற ஏதுச்
சயன ஆசனத்தின் பராத்தம்போல் கண் முதல்
இந்தியங்களியும் பரார்த்தத்தில் சாதித்துச்
சயன ஆசனவானைப் போல் ஆகிக்
கண் முதல் இந்தியத்துக்கும் பரனாய்ச்
சாதிக்கிற நிர் அவயவமாயுள்ள
ஆன்மாவைச் சாவயவமாகச்   29-300

சாதித்துச் சாத்திய தன்மத்தின்
விசேடம் கெடுத்தலின் விபரீதம்
தன்மிச் சொரூப விபரீத சாதனம்
தன்மியுடைய சொரூப மாத்திரத்தினை
ஏதுத் தானே விபரீதப்படுத்தல்
பாவம் திரவியம் கன்மம் அன்று
குணமும் அன்று எத் திரவியம் ஆம் எக்
குண கன்மத்து உண்மையின் வேறாதலால்
சாமானிய விசேடம்போல் என்றால்
பொருளும் குணமும் கருமமும் ஒன்றாய்  29-310

நின்றவற்றின்னிடை உண்மை வேறு ஆதலால் என்று
காட்டப்பட்ட ஏது மூன்றினுடை
உண்மை பேதுப்படுத்தும் பொதுவாம்
உண்மை சாத்தியத்து இல்லாமையினும்
திட்டாந்தத்தில் சாமானியம் விசேடம்
போக்கிப் பிறிதொன்று இல்லாமையானும்
பாவம் என்று பகர்ந்த தன்மியினை
அபாவம் ஆக்குதலான் விபரீதம்
தன்மி விசேட விபரீத சாதனம்
தன்மி விசேட அபாவம் சாதித்தல்   29-320

முன்னம் காட்டப்பட்ட ஏதுவே
பாவம் ஆகின்றது கருத்தாவுடைய
கிரியையும் குணமும் ஆம் அதனை விபரீதம்
ஆக்கியது ஆதலான் தன்மி விசேடம்
கெடுத்தது தீய எடுத்துக்காட்டு ஆவன
தாமே திட்டாந்த ஆபாசங்கள்
திட்டாந்தம் இரு வகைப் படும் என்று முன்
கூறப்பட்டன இங்கண் அவற்றுள்
சாதன்மிய திட்டாந்த ஆபாசம்
ஓதில் ஐந்து வகை உளதாகும்   29-330

சாதன தன்ம விகலமும் சாத்திய
தன்ம விகலமும் உபய தன்ம
விகலமும் அநன்னுவயம் விபரீதான்
னுவயம் என்ன வைதன்மிய திட்
டாந்த ஆபாசமும் ஐ வகைய
சாத்தியா வியாவிருத்தி
சாதனா வியாவிருத்தி
உபயா வியாவிருத்தி அவ்வெதிரேகம்
விபரீத வெதிரேகம் என்ன இவற்றுள்
சாதன தன்ம விகலம் ஆவது   29-340

திட்டாந்தத்தில் சாதனம் குறைவது
சத்தம் நித்தம் அமூர்த்தம் ஆதலான்
யாதொன்று யாதொன்று அமூர்த்தம் அது நித்தம்
ஆதலான் காண்புற்றது பரமாணுவில் எனின்
திட்டாந்தப் பரமாணு
நித்தத்தோடு மூர்த்தம் ஆதலான்
சாத்திய தன்ம நித்தத்துவம் நிரம்பிச்
சாதன தன்ம அமூர்த்தத்துவம் குறையும்
சாத்திய தன்ம விகலம் ஆவது
காட்டப்பட்ட திட்டாந்தத்தில்   29-350

சாத்திய தன்மம் குறைவுபடுதல்
சத்தம் நித்தம் அமூர்த்தம் ஆதலால்
யாதொன்று யாதொன்று அமூர்த்தம் அது நித்தம்
புத்திபோல் என்றால்
திட்டாந்தமாகக் காட்டப்பட்ட
புத்தி அமூர்த்தம் ஆகி நின்றே
அநித்தம் ஆதலான் சாதன அமூர்த்தத்துவம்
நிரம்பி சாத்திய நித்தத்துவம் குறையும்
உபய தன்ம விகலம் ஆவது
காட்டப்பட்ட திட்டாந்தத்திலே   29-360

சாத்திய சாதனம் இரண்டும் குறைதல்
அன்றியும் அது தான் சன்னும் அசன்னும்
என்று இரு வகையாம் இவற்றுள் சன்னா உள
உபய தன்ம விகலம் ஆவது
உள்ள பொருட்கண் சாத்திய சாதனம்
கொள்ளும் இரண்டும் குறையக் காட்டுதல்
சத்தம் நித்தம் அமூர்த்தம் ஆதலான்
யாதொன்று யாதொன்று அமூர்த்தம் அது நித்தம்
கடம் போல் எனின் திட்டாந்தமாகக்
காட்டப்பட்ட கடம் தான் உண்டாகிச்  29-370

சாத்தியமாய் உள நித்தத்துவமும்
சாதனமாய் உள அமூர்த்தத்துவமும் குறையும்
அசன்னா உள்ள உபய தன்ம விகலம்
இல்லாப்பொருட்கண் சாத்திய சாதனம்
என்னும் இரண்டும் குறையக் காட்டுதல்
சத்தம் அநித்தம் மூர்த்தம் ஆதலான்
யாதொன்று யாதொன்று மூர்த்தம் அது அநித்தம்
ஆகாசம் போல் எனும் திட்டாந்தத்து
சாத்திய தன்மமாய் உள்ள அநித்தமும்
சாதன தன்மமாய் உள்ள மூர்த்தமும்  29-380

இரண்டும் ஆகாசம் அசத்து என்பானுக்கு
அதன்கண் இன்மையானே குறையும்
உண்டு என்பானுக்கு ஆகாசம் நித்தம்
அமூர்த்தம் ஆதலால் அவனுக்கும் குறையும்
அநன்னுவயம் ஆவது சாதன சாத்தியம்
தம்மில் கூட்டம் மாத்திரம் சொல்லாதே
இரண்டனுடைய உண்மையைக் காட்டுதல்
சத்தம் அநித்தம் கிருத்தம் ஆதலின்
யாதொன்று யாதொன்று கிருத்தம் அது அநித்தம் எனும்
அன்னுவயம் சொல்லாது குடத்தின்கண்ணே  29-390

கிருத்த அநித்தம் காணப்பட்ட
என்றால் அன்னுவயம் தெரியாதாகும்
விபரீதான்னுவயம் வியாபகத்துடைய
அன்னுவயத்தாலே வியாப்பியம் விதித்தல்
சத்தம் அநித்தம் கிருத்தத்தால் எனின்
யாதொன்று யாதொன்று கிருத்தம் அநித்தம் என
வியாப்பியத்தால் வியாபக்கத்தைக் கருதாது
யாதொன்று யாதொன்று அநித்தம் அது கிருத்தம் என
வியாபகத்தால் வியாப்பியத்தைக் கருதுதல்
அப்படிக் கருதின் வியாபகம் வியாப்பியத்தை  29-400

இன்றியும் நிகழ்தலின் விபரீதம் ஆம்
வைதன்மிய திட்டாந்தத்துச்
சாத்தியா வியாவிருத்தி ஆவது
சாதன தன்மம் மீண்டு
சாத்திய தன்மம் மீளாதுஒழிதல்
சத்தம் நித்தம் அமூர்த்தத்து என்றால்
யாதொன்று யாதொன்று நித்தமும் அன்று அது
அமூர்த்தமும் அன்று பரமாணுப் போல் எனின்
அப்படித் திட்டாந்தமாகக் காட்டப்பட்ட
பரமாணு நித்தம் ஆய் மூர்த்தம் ஆதலின்  29-410

சாதன அமூர்த்தம் மீண்டு
சாத்திய நித்தம் மீளாதுஒழிதல்
சாதனா வியாவிருத்தி ஆவது
சாத்திய தன்மம் மீண்டு
சாதன தன்மம் மீளாது ஒழிதல்
சத்தம் நித்தம் அமூர்த்தத்து என்றால்
யாதொன்று யாதொன்று நித்தம் அன்று அஃது
அமூர்த்தமும் அன்று கன்மம்போல் என்றால்
வைதன்மிய திட்டாந்தமாகக்
காட்டப்பட்ட கன்மம்   29-420

அமூர்த்தமாய் நின்றே அநித்தம் ஆதலின்
சாத்தியமான நித்தியம் மீண்டு
சாதனமான அமூர்த்தம் மீளாது
உபயா வியாவிருத்தி காட்டப்பட்ட
வைதன்மிய திட்டாந்தத்தினின்று
சாதன சாத்தியங்கள் மீளாமை அன்றியும்
உண்மையின் உபயா வியாவிருத்தி
இன்மையின் உபயா வியாவிருத்தி
என இருவகை உண்மையின்
உபயா வியாவிருத்தி உள்ள பொருட்கண்  29-430

சாத்திய சாதனம் மீளாதபடி
வைதன்மிய திட்டாந்தம் காட்டல்
சத்தம் நித்தம் அமூர்த்தம் ஆதலின்
என்றாற்கு யாதொன்று யாதொன்று நித்தம் அன்று
அமூர்த்தமும் அன்று ஆகாசம்போல் என்றால்
வைதன்மிய திட்டாந்தமாகக் காட்டப்பட்ட
ஆகாசம் பொருள் என்பாற்கு
ஆகாசம் நித்தமும் அமூர்த்தமும் ஆதலான்
சாத்திய நித்தமும் சாதனமா உள்ள
அமூர்த்தமும் இரண்டும் மீண்டில இன்மையின்  29-440

உபயா வியாவிருத்தி ஆவது
சத்தம் அநித்தம் மூர்த்தம் ஆதலான்
என்ற இடத்து யாதொன்று யாதொன்று அநித்தம்
மூர்த்தமும் அன்ன்று ஆகாசம் போல் என
வைதன்மிய திட்டாந்தம் காட்டில்
ஆகாசம் பொருள் அல்ல என்பானுக்கு
ஆகாசம் தானே உண்மை இன்மையினால்
சாத்திய அநித்தமும் சாதன மூர்த்தமும்
மீட்சியும் மீளாமையும் இலையாகும்
அவ்வெதிரேகம் ஆவது சாத்தியம்   29-450

இல்லா இடத்துச் சாதனம் இன்மை
சொல்லாதே விடுதல் ஆகும் சத்தம்
நித்தம் பண்ணப்படாமையால் என்றால்
யாதொன்று யாதொன்று நித்தம் அன்று
பண்ணப்படுவது அல்லாது அதுவும்
அன்று எனும் இவ் வெதிரேகம் தெரியச்
சொல்லாது குடத்தின்கண்ணே பண்ணப்
படுதலும் அநித்தமும் கண்டேம் ஆதலான்
என்னின் வெதிரேகம் தெரியாது
விபரீத வெதிரேகம் ஆவது   29-460

பிரிவைத் தலைதடுமாறாச் சொல்லுதல்
சத்தம் நித்தம் மூர்த்தம் ஆதலின்
என்றால் என்று நின்ற இடத்து
யாதோர் இடத்து நித்தமும் இல்லை அவ்
இடத்து மூர்த்தமும் இல்லை எனாதே
யாதோர் இடத்து மூர்த்தமும் இல்லை அவ்
இடத்து நித்தமும் இல்லை என்றால்
வெதிரேகம் மாறுகொள்ளும் எனக் கொள்க
நாட்டிய இப்படி தீய சாதனத்தால்
காட்டும் அனுமான ஆபாசத்தின்
மெய்யும் பொய்யும் இத்திற விதியால்
ஐயம் இன்றி அறிந்து கொள் ஆய்ந்து என்  29-472

உரை

(இதன் கண் 1 முதல் 36 ஆம் அடிகாறும் அறவணர் தம்மை வணங்கிய மணிமேகலையை வாழ்த்துதலும் தாமும் மாதவியும் சுதமதியும் ஆகிய மூவரும் காஞ்சி மாநகரத்திற்கு வருதற்குரிய காரணமும் கூறுவதாய ஒரு தொடர்.)

அறவண அடிகளார் மணிமேகலைக்குக் கூறுதல்

1-2 : இறைஞ்சிய.............உரைப்போன்

(இதன் பொருள்) அறந்திகழ் நாவின் அறவணன் இறைஞ்சிய இளங்கொடி தன்னை வாழ்த்தி-நல்லறமே நாளும் விளங்குகின்ற செந்நாவினையுடைய அறவண அடிகளார் தம் திருவடிகளிலே வீழ்ந்து என் மனப்பாட்டறம் வாய்வதாக என்றுட் கொண்டு வணங்கிய இளங்கொடி போல்வாளாகிய மணிமேகலையை நீடுழி வாழ்க என்று வாழ்த்திப் பின்னர்; உரைப்போன்-தாம் காஞ்சி நகரத்திற்கு வரநேர்ந்த காரணத்தைக் கூறத்தொடங்குவோர் என்க.

(விளக்கம்) இறைஞ்சுதல்-வணங்குதல். தம்பால் அணுகுவோர்க்கெல்லாம் நாளும் நல்லறமே நவின்று தழும்பேறிய நல்ல நாவினன் அவ்வறவணன். இவனே மணிமேகலைக்கு ஞானாசிரியனாய் அவள் ஊழ் கூட்டுவித்தது என அவ்வாசிரியன் மாண்புணர்த்துவார் அறந்திகழ் நாவின் அறவணன் என்று விதந்தார். அறவணன் என்னும் அவன் பெயர் இயற்பெயரன்று, சிறப்புப் பெயர். அச்சிறப்பு அறந்திகழ் நா உடைமையே என்பதும் இதனால் அறிவுறுத்தவாறாம் என்க.

இதுவுமது

3-12 : வென்வேற்...........மறப்ப

(இதன் பொருள்) நாக நாடு ஆள்வோன் தன் மகள் பீலிவளை நாகநாட்டை ஆளும் அரசனுடைய மகளாகிய பீலிவளை என்பவள்; வென்வேல் கிள்ளிக்குத் தான் பயந்த புனிற்று இளங்குழவியை-வெற்றிவேலை உடைய நெடுமுடிக்கிள்ளி என்னும் சோழமன்னனுடன் காதற்கேண்மை கொண்டு வயிறு வாய்த்து அவனைப் பிரிந்து போய்த் தான் ஈன்று அணிமைத்தாகிய பச்சிளங்குழந்தையை; தீவகம் பொருந்தி-மணிபல்லவத்தீவை எய்தி; தனிக்கலக் கம்பலச்செட்டி கைத்தரலும்-கடலின்கண் ஒற்றை மரக்கலத்தோடு அத்தீவின் மருங்கின் வந்த கம்பளச் செட்டி என்னும் காவிரிப்பூம் பட்டினத்துச் செட்டியின்பால் கையடை செய்து கொடுத்து அக்குழவியை அதன் தந்தையிடத்து ஒப்புவிக்குமாறு கூற; அவன் வணங்கிக் கொண்டு வங்கம் ஏற்றி கொணர்ந்திடும் அந்நாள் கூர்இருள் யாமத்து-பீலிவளையை அச்செட்டி வணங்கி ஏற்றுக் கொண்டு அக்குழவியைத் தன் மரக்கலத்தில் ஏற்றிக்கொண்டு வருகின்ற அந்த நாளின் மிக்க இருளையுடைய நள்ளிரவிலே; அம்பி அடைகரைக்கு அணித்தா கெடுதலும்-அம்மரக்கலம் காவிரிப்பூம்பட்டினத்துக் கடல் கரைக்கு அணித்தாக வரும்பொழுது கெட்டொழிந்ததாக; மரக்கலம் கெடுத்தோன்-தன் மரக்கலத்தை இழந்த அச்செட்டி அக்குழவியையும் காணப்பெறானாய் உடைமரம் பற்றி உய்ந்து கரை ஏறி அச்செய்தியை; அரைசற்குணர்த்தலும் அவன் அயர்வு உற்று விரைவனன் தேடி விழாக்கோள் மறப்ப-சோழ மன்னனுக்கு அறிவித்தலும் அதுகேட்ட அம்மன்னவன் மகவன்பினால் பெரிதும் வருந்தி விரைந்து அக்குழந்தையைத் தேடும் முயற்சியில் ஈடுபடுதலாலே தான் தன் முன்னோர் முறைப்படி தன் நகரத்தின்கண் இந்திரவிழா எடுத்தலை மறந்தொழிய என்க.

(விளக்கம்) வென்வேல்-வெற்றிவேல். கிள்ளி-நெடுமுடிக்கிள்ளி. பீலிவளையின் வரலாறு இருபத்தைந்தாம் காதையில் (178-185) காண்க. புனிறு-ஈன்றணித்தாங் காலம். தீவகம்-மணிபல்லவம். தனிக்கலம்-ஒற்றை மரக்கலம்; கம்பலச் செட்டி, காவிரிப்பூம்பட்டினத்தில் வாழ்பவனாதலின் அவன்பால் கையடை செய்தனள் என்க. பீலிவளை தன்னாட்டரசியாதலின் கம்பலச் செட்டி வணங்குதல் வேண்டிற்று. வங்கம்-மரக்கலம். அணித்தக என்க. அம்பி-மரக்கலம். மைந்தன்-குழவி என்னும் பொருட்டு. அரைசன்; நெடுமுடிக்கிள்ளி. தேடி-தேட. விழாக்கோள்-விழாச் செய்தலை மேற்கொள்ளுதல்.

இதுவுமது

13-22 : தன்விழா............நோக்கி

(இதன் பொருள்) வானவர் தலைவன் தன் விழாத் தவிர்தலின்-அமரர் அரசனாகிய இந்திரன் தனக்குரிய திருவிழா கைவிடப்பட்டமையின்; நின் உயிர்த்தந்தை நெடுங்குலத்து உதித்த மன்உயிர் முதல்வன் மகர வேலையுள் முன்னிய வங்கம் முங்கிக் கேடுற-மணிமேகலாய்! நினக்கு உயிர் போன்ற தந்தையாகிய கோவலனுடைய நெடிய குலத்தில் முன்பு தோன்றியவனும் மன்னுயிர்கட்கெல்லாம் பேரருள் செய்யும் தலைவனும் ஆகிய வணிகன் ஒருவன் சுறாமீன்கள் திரிகின்ற கடலினுள் முற்பட்டியங்கிய தன் மரக்கலம் முழுகிக் கெட்டமையால்; பொன்னின் ஊசி பசுங் கம்பளத்து துன்னியத என்னதொடு கடல் உழந்துழி-பொன்னாலியன்ற சிறிய ஊசி ஒன்று பச்சை நிறமான மாபெரும் சம்பளத்தின்கண் பொருந்தினாற் போன்று தோண்டப்பட்ட மாபெரும் கடலின்கட் கிடந்து நீந்தி வருந்திய பொழுதும்; எழுநாள் எல்லை இடுக்கண்வந்து எய்தா வழுவாச்சீலம் வாய்மையின் கொண்ட பான்மையின்-ஏழு நாள் முடியும் அளவும் தன் உயிர்க்கு இறுதியாகிய சாத்துன்பம் வந்து உறாமைக்குக் காரணமான பிறழாத சீலத்தையும் நால்வகை வாய்மையோடு மேற்கொண்டு அவ்வணிகன் ஒழுகினமையால்; தனது பாண்டு கம்பளம்தான் நடுக்குற்ற தன்மை நோக்கி-(இந்திரன்) தன்னுடைய வெண்ணிறக் கம்பளமாகிய இருக்கை தானே நடுங்குதலுற்ற தன்மையை அறிந்து என்க.

(விளக்கம்) வானவர் தலைவன்  மன்னுயிர் முதல்வன் மேற்கொண்ட பான்மையினால் தனது கம்பளம் நடுக்குற்ற தன்மை நோக்கி என இயைக்க, தந்தை: கோவலன். முதல்வன் என்றது, கோவலன் முன்னோனாகிய ஒரு வணிகன். முங்கி-முழுகி. பொன்னூசி-வணிகனுக்கும், பசுங்கம்பளம்-கடலுக்கும் உவமை. பொன்னின் ஊசி மரக்கலத்திற்கு உவமை என்பாரும் உளர். அவர் மன்னுயிர் முதல்வன் பொன்னின் ஊசி பசுங்கம்பளத்துத் துன்னியதென்ன தொடுகடல் உழந்துழி என்னும் உவமையில் பொன்னிறமான மேனி படைத்த வணிகன் கடல் நீரின் மேல் நீந்துதற்கு உவமையாகுங்கால் தோன்றும் அழகினை உணர்ந்திலர். வங்கத்திற்குப் பொன்னூசியை உவமை என்று சொல்லி அப்பொன்னையும் இரும்பாக்குதலின் அழகொன்றும் இன்மை உணர்க. தொடுகடல்:வினைத்தொகை. கடல்-சகரரால் தோண்டப்பட்டது என்னும் வழக்குப்பற்றி தொடுகடல் என்றார். உழத்தல்-வருந்தி நீந்துதல். உழந்துழியும் எனல் வேண்டிய சிறப்பும்மை தொக்கது. இடுக்கண் என்றது-சாதலை. எய்தாமைக்குக் காரணமான சீலத்தையும் வாய்மையினையும் அவ்வணிகன் மேற்கொண்ட பான்மையினால் இந்திரனுடைய பாண்டு கம்பளம் நடுக்குற்றது என்றவாறு. எனவே இப்பாண்டு கம்பளம் அறத்தால் மிக்கோருக்கு இருக்கை ஆகும் தெய்வத்தன்மை உடைத்தாகலின் நிலவுலகின்கண் அறத்தால் மிக்கோருக்கு இடுக்கண் வந்துற்ற காலத்தே அது பொறாமல் நடுங்கும் இயல்புடையது என்பது பெற்றாம். இனி இங்ஙனமே இப்பாண்டுகம்பளம் தன்மேல் அமரும் அறவோனாகிய இந்திரனுங் காட்டில் அறத்தின் மிக்கோர் உருவாகும் பொழுதும் தன்மேல் இருக்கும் இந்திரனைத் தாங்குதல் பொறாமல் (புதிதாக உருவாகின்ற அவ்வறவோனைத் தாங்குதற் பொருட்டு) நடுங்கும் என்பதனைப் பாத்திர மரபு கூறிய காதையில் 28-29 : இந்திரன் பாண்டு கம்பளம் துளக்கியதாகலின் என்பதனாலும் அறிதல் கூடும். வாய்மை-நால்வகை வாய்மை. பாண்டு கம்பளம்-வெள்ளைக் கம்பளம். நோக்கி என்றது மனத்தால் ஆராய்ந்து என்றவாறு. கோவலனுடைய முன்னோன் இடையிருள் யாமத்து எறிதிரைப் பெருங்கடல் உடைகலப்பட்டு கடலின்கண் சிலநாள் நீந்திய செய்தியை இளங்கோவும் ஓதுதல் (சிலப்-15:28 ஆம் அடி முதலாக) உணர்க.

இதுவுமது

23-29 : ஆதி................கூற

(இதன் பொருள்) ஆதி முதல்வன் போதி மூலத்து நாதன் ஆவோன்-ஆதி முதல்வனாகிய புத்த தேவன் போதியின் கீழ் இருந்து அருளிச் செய்த அறங்களை உலகத்திற்கு எடுத்தோதும் வழி நிலைத் தலைவன் என்னும் போதிசத்துவன் ஆகும் தகுதியை இனிப் பெறப்போகின்ற ஒரு வணிகன்; நளிநீர்ப் பரப்பின் எவ்வமுற்றான் தனது-செறிந்த நீர்ப்பரப்பாகிய கடலின்கண் தனது கலம் முழுகிவிட்டமையால் துன்பம் உறுவானுடைய; எவ்வம் தீர் என-துன்பத்தை நீ சென்று தீர்த்து உய்விப்பாயாக என்று தன் பக்கலில் இருந்த தெய்வத்திற்குப் பணித்தமையாலே அத்தெய்வம் சென்று அவ்வணிகனே; பவ்வத்து எடுத்து-அக்கடலினின்றும் கரையேற்றிய பின்னர் அவன்; பாரமிதை முற்றவும்-பாரமிதை பத்தானும் நிரம்பவும்; அற அரசு ஆளவும் அறஆழி உருட்டனும் அறம் நிலவும் அரசாட்சி செய்யவும் அறமாகிய சக்கரத்தை உருட்டவும்; பிறவிதோறு உதவும் பெற்றியள் என்றே சாரணர் அறிந்தோர் காரணங் கூற-அந்த வணிகனுக்குப் பின்னர் நிகழும் பிறப்புகள்தோறும் உதவி செய்யும் தன்மையன் ஆயினள் அப்பெண் தெய்வம் என்று அந்தரசாரிகள் ஆகிய சாரணருள் இந்நிகழ்ச்சியை அறிந்தவர் நின்பெயருக்குக் காரணமாகக் கூறுதலாலே என்க.

(விளக்கம்) புத்தர்கள் கவுதம புத்தருடைய காலத்துக்கு முன்னரே உலகின்கண் அறம் குறைந்த காலந்தோறும் பிறந்து அவ்வப்போது மீண்டும் அறத்தை நிலைநாட்டிச் சென்றனர்; அவ்வாறு தோன்றினோர் எல்லாம் ஆதி புத்தர் அருளிய அறத்தையே மீண்டும் பரப்பினர் ஆதலின் அவரெல்லாம் புத்தர் அவதாரம் என்றே மதிக்கப்பட்டனர். இவரைப் போதி சத்துவர் என்றும் கூறுவர். போதி சத்துவர் என்பதன் பொருள்-ஞானத்தின் ஆற்றலை முழுதும் பெற்றவர் என்பதாம். எனவே ஈண்டு மரக்கலம் முழுகிக் கடலில் மிதந்த வணிகன் இப்பிறப்பில் வழுவாச் சீலம் வாய்மையிற் கொண்ட பான்மையினன் ஆதலின் எதிர்காலத்தே புத்தனாகும் தகுதியுடையோன் ஆவான்; அவன் செய்த அறமே ஏழுநாள் காறும் அலைகடலில் உயிர்போகா வண்ணம் காத்து வருகின்றது ஆயினும் அலைகடலில் அவன் இன்னும் நீந்தி வருந்தா வண்ணம் காத்தல் நம் கடன் என்பான் தன் அருகிருந்த தெய்வத்தை நோக்கி நீ சென்று எவ்வம் தீர் என்று பணித்தான். இவ்வரலாறு இந்நூலின்கண் கூறப்பட்டமையின் அவற்றையே ஈண்டும் பாட்டிடை வைத்தலின் ஓதுவோர் குறிப்பாக உணர்ந்து கொள்ளக்கூடும் என்று கருதிச் சொல் பல்கா வண்ணம் சுருக்கமாகவே நூலாசிரியர் கூறுதல் உணர்க. பாரமிதை உடம்பு நேரவும் உறுப்பே நேரவும் பொருள் நேரவும் தானம் முதல் ஞானமீறாக உள்ள பத்தும் நிரம்புதல். பெற்றியள்-தன்மையள். சாரணருள் அறிந்தோர் கூற என்க.

இதுவுமது

30-36 : அந்த..............படர்ந்தனம்

(இதன் பொருள்) அந்த உதவிக்கு ஆங்கு அவள் பெயரை-அவ்வாறு தன் குல முதல்வனுக்கு அத்தெய்வம் செய்த உதவியின் நினைவுக்குறியாக அம்மணிமேகலை என்னும் தெய்வத்தின் பெயரை; நினை தந்தை இட்டனன்-உனக்கு உன் தந்தை சூட்டினன்; தையல் நின் துறவியும் அன்றே கனவில் கனவு என அறைந்த மெல்பூ மேனி மணிமேகலா தெய்வம் என்பவட்கு ஒப்ப அவன் இடு சாபத்து தையால்! நின்னுடைய துறவறச் செய்தியையும் அற்றை நாளிலேயே நின் தாயாகிய மாதவியின் கனவிலே நனவுபோலத் தோன்றி அறிவித்தருளிய மெல்லிய மலர் போன்ற அம்மணிமேகலா தெய்வம் சாபம் இட்டாற் போன்றே அவ்விழாவிற்குரிய இந்திரன் இட்ட சாபத்தாலே; நகர் கடல் கொள்ள-அக்காவிரிப் பூம்பட்டினமாகிய நகரத்தைக் கடல் விழுங்கிக் கொள்ளுதலால்; நின் தாயரும் பகரும் யானும் நின் பொருட்டால் இ பதி படர்ந்தனம்-உன்னுடைய தாயராகிய மாதவியும் சுதமதியும் நினக்கு அறங்கூறுதற்குரிய யானும் உனக்கு அறங்கூறவும் உன்னைக் காணவும் இக்காஞ்சி மாநகரத்திற்கு வந்தேம் என்றார் என்க.

(விளக்கம்) உதவி-தன் முன்னோனுக்கு உயிர் தந்த உதவி. அவள்-அம்மணிமேகலா தெய்வம். நினை தந்தை இட்டனன் என மாறி நினக்கு என இரண்டனுருபை நான்காவதாகத் திரித்துக் கொள்க. தையல் : அண்மை விளி. துறவி-துறவு நிகழ்ச்சி. அன்றே என்றது நினக்கு நின்தந்தை பெயர் சூட்டிய அற்றை நாள் இரவே என்றவாறு. கனவில் நனவு என என்றது நனவில் வந்து சொல்வது போல விளக்கமாக என்றவாறு. தெய்வத்திற்கு ஒப்ப அவன் இடுசாபம் என்றதனால் தெய்வமும் சாபமிட்டமை பெற்றாம். இது பாட்டிடைவைத்த குறிப்புப் பொருள். மணிமேகலா தெய்வம் மாதவியின் கனவில் தோன்றி நீ காமன் கையறக் கடுநவை அறுக்கும் மாபெரும் தவக்கொடி ஈன்றனை என்றே நனவே போலக் கனவகத் துரைத்தேன் ஈங்கு இவ்வண்ணம் ஆங்கு அவட்கு உரை என்று அந்தரத்து எழுந்து ஆங்கு அருந்தெய்வம் போயபின் என (7:36-40) முன்னம் வந்தமையானும் உணர்க. அவன் : இந்திரன். நகர்-காவிரிப்பூம்பட்டினம். பகரும் யானும் என மாறுக. இதனால் மணிமேகலைக்கு அறங்கூறும் செயல் தம்முடையதாம் என அடிகளார் முன்னரே இருத்தி ஞானத்தால் உணர்ந்திருந்தனர் என்பது பெற்றாம். நின் பொருட்டால் என்றது நினக்கு அறங்கூறும் பொருட்டும் நின்னைக் காணும்பொருட்டும் என இரு பொருளும் பயந்து நின்றது. பதி : காஞ்சிமா நகரம். படர்ந்தனம் : தன்மைப் பன்மை வினைமுற்று.

மணிமேகலை வேண்டுகோள்

37-45 : என்றலு.............என்ன

(இதன் பொருள்) என்றலும்-என்று கூற அது கேட்ட மணிமேகலை; அறவணன் தாள் இணை இறைஞ்சி பொன் திகழ் புத்த பீடிகை போற்றும் தீவதிலகையும் இத்திறம் செப்பினள் ஆதலின்-அறவண அடிகளாரின் திருவடிகளை வணங்கி அடிகேள்! பொன்னொளி விளங்குகின்ற புத்தபீடிகையை நாளும் வழிபட்டுப் போற்றுகின்ற தீவதிலகை என்னும் தெய்வமும் அம்மணிபல்லவத் தீவின்கண் இச்செய்திகளை இவ்வாறே அறிவித்தனள். ஆதலால் அவள் கூறியவாறே; அனை அணிநகர் மருங்கே வேறு உருக்கொண்டு வெவ்வேறு உரைக்கும் நூல் துறை சமய நுண் பொருள் கேட்டே-அந்த அழகிய வஞ்சி மாநகரத்தின் பக்கலிலே எனது பெண்ணுருவம் சுரந்து மாதவனாகிய மாற்றுருவம் கொண்டு சென்று அவ்விடத்தே தம்முள் மாறுபட்டு வேறு வேறாகக் கூறுகின்ற சமயநூல் வழிப்பட்ட பல்வேறு சமயக்கணக்கரிடத்தும் அவ்வவர் சித்தாந்தமாகிய நுண்பொருள்களை வினவிக் கேட்ட பின்னர்; ஐவகைச் சமயமும் அ உருவெனை செவ்விது அன்மையில் சிந்தையின் வைத்திலேன்-அவற்றை யான் ஆராய்ந்து பார்த்தவிடத்தே அளவை வாதம் முதலிய ஐந்து வகையினுள் அடங்கும் அச்சமயக்கணக்கர் சித்தாந்தம் அனைத்தும் யான் மேற்கொண்டுள்ள அம்மாதவன் வடிவம் போன்றே பொய்யாய்ச் செம்மை உடையன அல்லாமை காணப்பட்டமையின் அவை மறக்கற்பாலன் என்று துணிந்து என் சிந்தையின்கண் வையாதுவிடுத்தேன் ஆதலின்; அடிகள் மெய்ப்பொருள் அருளுக என்ன-இப்பொழுது அடிகள் எனக்கு மெய்யேயாகிய செம்பொருளை அறிவித்தருளுக என்று வேண்டா நிற்ப என்க.

(விளக்கம்) புத்த பீடிகை-மணிபல்லவத்தில் அமைந்த புத்தபீடிகை. தீவதிலகை என்னும் தெய்வமும் இச்செய்திகளை இவ்வாறே கூறினாள் என்றாள். இவற்றை யான் முன்னரே அறிந்தளேன் என்றறிவித்தற்கு. அணிநகர் என்றது-வஞ்சி நகரத்தை ஐவகைச் சமய நுண் பொருளும் வெறும் பொய் என்பதற்குத் தான் கொண்டிருந்த அப்பொய்யுருவமாகிய அம்மாதவன் உருவத்தையே உவமை எடுத்துக்கூறிய அழகு உணர்க. சமயம் என்னும் சாதியொருமை பற்றி செவ்விது என்று ஒருமை முடிபேற்றது. பன்மை ஒருமை மயக்கம் என்பாரும் உளர்.

(46 ஆம் அடியாகிய இது முதல் இக்காதை முடியுங்காறும் அறவண அடிகளார் மணிமேகலைக்கு அறம் செவியறிவுறுத்துதலாய் ஒரு தொடர்)

அறவணர் அறங்கூறத் தொடங்குதல்

46-56 : நொடிகுவெ.................பிற

(இதன் பொருள்) நங்காய் நொடிகுவென் நீ நுண்ணிதின் கேள்-நங்கையே! நீ விரும்பியவாறே யான் உனக்கு அம்மெய்ப்பொருளைச் சொல்லுவேன் நீயும் விழிப்புடன் கூர்ந்து கேட்பாயாக; ஆதி சினேந்திரன் ஏதம் இல் பிரத்தியம் கருத்து அளவு என்ன அளவை இரண்டே-ஆதி பகவனாகிய புத்தர் தலைவன் குற்றம் இல்லாத காட்சி அளவையும் குற்றமில்லாத கருத்தளவையும் என்று அளவைகள் இரண்டே என்று வரையறை செய்துள்ளான்; சுட்டு உணர்வை பிரத்தியக்கம் எனச் சொலி நாம சாதி குணகிரியைகள் விட்டனர்-அவ்விரண்டனுள் ஐம்பொறிகளால் தனித்தனியே அவ்வவற்றிற்குரிய புலன்களைச் சுட்டி உணர்ந்து கொள்ளுதல் மட்டுமே காட்சி அளவையாம் என்று அறுதியிட்டுக் கூறி அளவைவாதி முதலியோர் கூறுகின்ற பெயர் வகை பண்பு செயல் முதலியவற்றைக் காட்சி அளவையோடு கூட்டாது ஒழித்து விட்டனர், ஏற்றுக்கெனின்; மற்று அவை அனுமானத்தும் அடையும் என-அப்பெயர் முதலியன காட்சி அளவைக்கு மட்டுமே உரியன ஆகாமல் கருத்தளவையினும் எய்தும் எனக் கருதியதனாலாம், இனி; காரண காரிய சாமானிய கருத்து ஓரின் பிழைக்கையும் உண்டு-அவர் கருத்தளவையினும் காரணக் கருத்தளவை காரியக் கருத்தளவை சாமானியக் கருத்தளவை என்று வகைப்படுத்திக் கூறும் கருத்தளவைகளைக் கூர்ந்து ஆராயுமிடத்து அவையும் பிழைபடுதலும் உண்டு; பிழையாததும் உண்டு-அவற்றில் பிழைபடாத அளவையும் ஒன்றுண்டு, அஃது யாதெனின்; கனலில் புகைபோல் காரியக் கருத்து-நெருப்பின் காரியமாகிய புகைபோன்ற காரியத்தை ஏதுவாகக் கொள்ளுகின்ற கருத்தளவை ஒன்றுமேயாம்; ஏனை அளவைகள் எல்லாம் கருத்தினில் ஆன முறைமையின்-பிறர் கூறுகின்ற ஏனைய அளவைகள் எல்லாம் ஆராய்ச்சியால் தோன்றுகின்ற முறைமை காரணமாக; அனுமானமாம் பிற-கருத்தளவையின்கண் அடங்குதலின் கருத்தளவை என்றலே அமையும் என்றார் என்க.

(விளக்கம்) நொடிகுவென்-சொல்லுவேன்; ஆதி சினேந்திரன் என்றது முதன் முதலாகப் பவுத்த சமயத்தை உலகில் பரப்பியவன். அந்த ஆதிப்புத்தன் காட்சி அளவையும் கருத்தளவையும் என இரண்டு அளவைகளே கொண்டனன். இவற்றுள் குற்றம் உடையனவும் உள. அவை கொள்ளப்படா என்பார் ஏதும் இல் பிரத்தியம் கருத்தளவு என்றார். ஏதும் இல் கருத்தளவு என்றும் பிரத்திய அளவு என்றும் இச்சொற்களை இரண்டிடத்தும் கூட்டிக் கொள்க. பிரத்தியம்-பிரத்தியக்கம் என்பதன் சிதைவு. பிரத்தியக்கம் எனினும் காட்சி எனினும் ஒக்கும். கருத்து எனினும் அனுமானம் எனினும் ஒக்கும். இனி, காட்சி காண்டல் என்பன சவிகற்பக் காட்சிக்கும் பொதுவாதலால் பிரத்தியம் சுட்டுணர்வாய் வேறுபடுவது பற்றி மொழி பெயர்க்கா தொழிந்தார் என உணர்க என்பாரும் உளர். அங்ஙனமாயின் அவரே பிரத்தியம் என்னும் சொல்லுக்குக் காட்சி என்று பொருளுரைத்தல் போலியாம்; மேலும் காட்சி அளவைக்குச் சுட்டல் திரிதல் கவர்கோடல் சுட்டுணர்வொடு திரியக்கோடல் என்றும் ஐயம் தேராது தெளிதல் கண்டுணராமை என்றும் கூறியவாற்றால் அறிக என்று அவர் கூறிய விளக்கமும் போலியாம். என்னை? காட்சி அளவைக்குப் பவுத்தர்கள் இக்குற்றங்களைக் கூறார் ஆதலின் காட்சிக்கு இங்ஙனம் குற்றம் கூறுவார் அளவை வாதி முதலியோராவார். பவுத்தர்கள் குற்றமும் ஒன்று உளது என அதனை விலக்குதற்கு ஈண்டு ஏதம் இல் பிரத்தியம் என்றார். காட்சிக்கு உரிய குற்றம் பிரத்தியக்க விருத்தம் என்பதாம். அதன் இயல்பினைச் சிறிது போக்கிக் கூறுவதும், ஆதி சினேந்திரனால் கொள்ளப்பட்ட காட்சி அளவை வேறு பிறர் கூறும் காட்சி அளவை வேறு என்பது தோன்ற, சுட்டுணர்வைப் பிரத்தியக்கம் எனச்சொல்லி அதற்கு ஏனையோர் கூறும் குணமும் குற்றமும் கொள்ளாது விட்டனர் என்றார். எனவே ஈண்டுச் சுட்டுணர்வு என்று அறவணர் கூறுகின்ற காட்சி அளவையின் இயல்பு வேறு, அளவை வாதிகள் கூறுகின்ற காட்சி அளவையின் இயல்பு வேறு என்றுணர்தல் வேண்டும். அளவை வாதிகள் சுட்டு என்பது காட்சி. அளவையின் ஒரு குற்றமாகக் கொண்டனர். ஈண்டுச் சுட்டுணர்வே ஏதம் இல் காட்சி என்று அறவணவடிகள் கூறுதலைக் கூர்ந்து நோக்காது இதற்கும் அளவை வாதிகள் கூறுகின்ற சுட்டிற்கும் வேறுபாடு உணரமாட்டாமல் இரண்டிற்கும் ஒரு படித்தாக உரைகூறும் கூற்றுப் போலியாம் என்க. மேலும் இப்பிரத்திய அளவைக்கு அவர்கள் கூறும் விளக்கம் எல்லாம் பொருந்தாதனவேயாம். அவற்றை அவர் உரை நோக்கி உணர்க.

இனி, பவுத்தர்கள் கூறுகின்ற வாயில் ஊறு நுகர்வு என்னும் மூன்றன் கூட்டரவினால் உண்டாகும் உணர்வே காட்சி அளவை என்று கொள்வர். எனவே அவருடைய அறிவுக் கந்தமும் நுகர்ச்சிக் கந்தமும் ஒன்றுபடுங்கால் உயிரின் உணர்வு தெரிவது காட்சி அளவை என்று கொண்டனர் என்பது 30 ஆம் காதையினும் விளக்குவாம். ஈண்டுச் சுட்டுணர்வு என்பதும் நுகர்ச்சிக் கந்தத்தையேயாம் என்றுணர்க. நுகர்ச்சிக் கந்தம் எனினும் வேதனை எனினும் ஒக்கும். எனவே சிவஞான சித்தியாரில் தன்வேதனைக் காட்சி என்பது மட்டுமே அவர் கூறுகின்ற சுட்டுணர்வு அல்லது பிரத்தியக்கம் என்றறிக. இனி, காண்டல் வாயில் மனம் தன் வேதனையோடு யோகக் காட்சியெனச் சைவ வாதிகள் கூறுகின்ற நால்வகைக் காட்சிகளுள் தன்வேதனைக் காட்சி ஒன்றுமே பவுத்தர்களுக்குக் காட்சி அளவையாம் என்பது பெற்றாம். இனி அளவைவாதிகள் காட்சி அளவைக்குக் கூறுகின்ற நாமசாதி குணக்கிரியைகள் கருத்தளவைக்கும் செல்லுதலின் அவற்றைக் கைவிட்டனர். இனி அனுமானத்திற்குக் கூறுகின்ற காரணகாரிய சாமானியங்களும் பிழைபடும் என அவற்றையும் பவுத்தர்கள் கைவிட்டனர். இனி அனுமானத்திற்குக் கூறுகின்ற காரணகாரிய சாமானியங்களும் பிழைபடும் என அவற்றையும் பவுத்தர்கள் கைவிட்டனர். ஆயினும் அவற்றுள் கனலில் புகைபோல் என வருகின்ற காரியானுமானம் மட்டும் பவுர்த்தர்களுக்கும் உடன்பாடேயாம். இவற்றை யன்றி அளவை வாதிகள் கூறுகின்ற ஏனைய உவமம் ஆகமம் அருத்தாபத்தி ஐதிகம் அபாவம் மீட்சி யொழிவறிவு எய்தியுண்டாம் நெறி என்னும் எட்டளவைகளும் கருத்தளவின்கண் அடங்குவனவாதலின் அவற்றை வேறளவையாகக் கொள்ளுதல் இலேம் என்பார் ஏனை அளவைகள் எல்லாம் கருத்தினில் ஆன முறைமையின் அனுமானமாம் என்றார். பிற: அசைச் சொல்.

கருத்தளவையின் உறுப்புகளும் அவற்றின் இயல்புகளும்

57-67 : பக்கம்...................ஆகும்

(இதன் பொருள்) பக்கம் ஏது திட்டாந்தம் உபநயம் நிகமனம் என்ன ஐந்து உள-இனி இரண்டாவதாகிய கருத்தளவைக்கு மேற்கோளும் ஏதுவும் எடுத்துக் காட்டும் உபநயமும் நிகமனமும் என்று கூறப்படுகின்ற ஐந்து உறுப்புகள் உள்ளன; அவற்றில் பக்கம் இம்மலை நெருப்பு உடைத்து என்றல்-அவ்வைந்தனுள் முன்னிறுத்தப்ப்ட்ட மேற்கோள் ஆவது இந்த மலை நெருப்பினை உடையதாம் என்று கூறுதல்; ஏது-அங்ஙனம் கூறுதற்கு ஏதுவாவது; புகை உடைத்து ஆதலால் எனல்-இம்மலை தன்னிடத்தே புகை உடையதாய் இருத்தலால் எனல் அம்மேற்கோளுக்குப் பொருந்திய ஏதுக்கூறியவாறாம்; திட்டாந்தம் வகை அமை அடுக்களை போல்-இனித் திட்டாந்தம் எனப்படுவது பலவகையாக அமைந்த அடுக்களை போன்று என ஒன்றினை எடுத்துக் காட்டுதல்; உபநயம் மலையும் புகை உடைத்து என்றல்-இனி உபநயம் ஆவது இம்மலையும் புகையுடையது என்று கூறுதல்; நிகமனம் ஆவது புகை உடையது எதுவோ அது நெருப்பும் உடையது ஆம் என்று கூறுதல்; நெருப்புடைத்து அல்லாது யாதொன்று அது புகைப்பொருத்தம் இன்று புனல்போல் என்றல்-யாதொரு பொருள் நெருப்புடையது அல்லாத பொருளோ அது புகைப் பொருத்தமும் இல்லாததாம் நீர் போல என்று கூறுதல்; மேவிய பக்கத்து மீட்சி மொழியாய்-பொருந்திய மேற்கோளின் நின்றும் எதிர்மறைச் சொல்லாய்; வைதன்மிய திட்டாந்தம் ஆகும்-எதிர்மறை எடுத்துக்காட்டாகும் என்றார் என்க.

(விளக்கம்) பக்கம்-மேற்கோள். ஏது-கருவி. திட்டாந்தம்-எடுத்துக்காட்டு, உபநயம்-துணிந்தது துணிதல், நிகமனம்-நிலை நாட்டுதல் என நிரலே தமிழில் கூறிக்கொள்க. இனி எதிர்மறை எடுத்துக் காட்டாவது: நிலை நாட்டிய தொன்றனை மேற்கோளின் மறுதலைப் பொருள் ஒன்றனை எடுத்துக் காட்டுமாற்றானும் உறுதியூட்டுதல். இங்ஙனம் கூறும் எடுத்துக்காட்டை வைதன்மிய திட்டாந்தம் என்பர். ஈண்டு மேற்கோளாகிய நெருப்பிற்கு மறுதலைப் பொருளாகிய புனலின்கண் புகையின்மையில் அதனை எடுத்துக் காட்டுதல் காண்க. மீட்சி மொழி-மறுதலைச் சொல், என்றது புனலை. புனல்-நீர். வைதன்மிய திட்டாந்தம்-எதிர்மறை எடுத்துக்காட்டு. எனவே முன் கூறிய எடுத்துக்காட்டாகிய அடுக்களை உடன்பாட்டு எடுத்துக்காட்டு என்பார், வகை அமை அடுக்களை என்றார். வகை-பண்பு வகை எனவே அதனைச் சாதன்மிய திட்டாந்தம் என்ப.

இதுவுமது

68-76 : தூய................என்க

(இதன் பொருள்) தூய காரிய ஏது சுபாவம் ஆயின்-இனி மேற்கோளைச் சாதிப்பதில் சிறந்ததாகிய காரிய ஏது மேற்கோளுக்கு இயல்பாய பண்பாயின்; சத்தம் அநித்தம் என்றல் பக்கம்-ஒலி அழியும் பொருள் என்பது மேற்கோள்; பண்ணப்படுதலால் எனல் பக்கதன்ம வசனமாகும்-செய்யப்படுவதால் என்றல் மேற்கோளின் இயல்பு கூறும் மொழியாகும்; யாதொன்று யாதொன்று பண்ணப்படுவது அநித்தம் கடம் போல் என்றல்-யாதொரு பொருள் யாதொரு பொருள் பண்ணப்படுவதோ அப்பொருள் அழியும் பொருளாகும் குடம்போல் என்று கூறுதல் மேற்கோளோடு தொடர்ச்சியுடைய உடன்பாட்டு மொழியாம்; யாதொன்று அநித்தம் அல்லாதது பண்ணப்படாதது ஆகாசம் போல் எனல்-யாதொரு பொருள் அழியாத பொருளாய் இருக்குமோ அப்பொருள் ஒருவரால் செய்யப்படாத இயற்கைப் பொருளாகவும் இருக்கும் வானம் போல் என்று கூறுதல்; விபக்க தொடர்ச்சி மீட்சி மொழி என்க-மேற்கோளின் மறுதலைப் பொருளொடு தொடர்புடைய மறுதலை மொழி என்றார் என்க.

(விளக்கம்) முன்னர் அளவை வாதிகள் கூறும் காரணம் காரியம் சாமானியம் என்னும் முவ்வகை அனுமானங்களும் ஆராயுமிடத்துப் பிழைபடுதலும் உண்டு, அவற்றுள் காரியானுமானத்தில் அவ்வளவைவாதிகள் கனலில் புகைபோல் என்று கூறும் காரியானுமானம் மட்டும் ஒரோ வழி, பிழைபடாதது ஆதலும் கூடும் என்றார் ஈண்டு அவர் கூறும் அவ்வனுமானம் போல எவ்வாற்றானும் பிழைபடாத காரியானுமானம் இது என்பார் தூய காரிய ஏது சுபாவம் ஆயின் சத்தம் அநித்தம் என்றால் என்றார். இங்ஙனம் கூறுமிடத்து சத்தம் அநித்தம் என்பது மேற்கோள். பண்ணப்படுதலால் என்பது ஏது. இவ்வேது மேற்கோளின் தன்மையை அறிவுறுத்துதலின் அதுவே மேற்கோளின் தன்மையைக் கூறும் மொழியாகவும் அமைதலின் அதனைப் பக்கதன்ம வசனம் ஆகும் என்றார். யாதொன்று யாதொன்று கடம் போல் என்றல் தன் மேற்கோளோடு தொடர்புடைய மொழியாகிய எடுத்துக் காட்டாகும். இதற்கு எதிர்மறை எடுத்துக்காட்டு ஆகாசம் ஆம். சபக்கம் உத்தேசமாக எடுத்துக் கொண்ட மேற்கோள்; இதன் மறுதலை விபக்கம் என்றறிக. மீட்சிமொழி: எதிர்மறைச் சொல்.

இதுவுமது

77-84 : அநன்னு............ஆகும்

(இதன் பொருள்) அநன்னு வயத்தில் பிரமாணமாவது-பொருளும் ஏதுவும் சேர்ந்திராத இடத்தில் அவற்றின் இன்மையைக் காண்டற்கு அளவையாவது; இவ்வெள் இடைக்கண்-இந்த வெற்றிடத்தில்; குடம் இலை என்றால் செவ்விய பக்கம்-இந்த வெற்றிடத்தில் குடம் இல்லை என்று துணிதல் செம்மையான மேற்கோளாகும்; தோன்றாமை இல் எனல்-காணப்படாமையால் இல்லை என்று கூறும் ஏது; பக்க தன்ம வசனமாகும்-மேற்கோளின் தன்மை உணர்த்தும் மொழியாகும்; இன்மையின் கண்டிலம் முயற்கோடு (போல்) என்றல் அந்நெறிச் சபக்கம்-இல்லாமையால் யாம் கண்டிலேம் முயற்கொம்பைக் காணமாட்டாமை போல என்பது அவ்வழியில் உடன்பாட்டு மேற்கோள் தொடர்ச்சி எடுத்துக்காட்டாகும்; யாதொன்று உண்டு அது தோற்றரவு அடுக்கும்-யாதொரு பொருள் ஓரிடத்தில் உளதாம் அது காட்சிக்குப் புலப்படும்; கை நெல்லி போல் எனல் ஏற்ற விபக்கத்து உரை எனல் ஆகும்-அகங்கையில் இருக்கின்ற நெல்லிக்கனி போல என்று மொழிதல் இதற்கேற்ற மறுதலை மீட்சி மொழி என்று கூறலாம் என்றார் என்க.

(விளக்கம்) அநன்னுவயம்-பொருளும் ஏதுவும் இல்லாமை. அவ்வில்லாமையைத் துணிதலே ஈண்டு மேற்கோளாம் என்க. அதற்குப் பொருள் தோன்றாமையே ஏதுவாயிற்று. இல் பொருளுக்குத் தோன்றாமையே இயல்பும் ஆயிற்று என்பார் இல்லை என்றால் பக்கம் எனவும் தோன்றாமையால் இல்லை என்றல் அவ்வில்லாமையின் இயல்புணர்த்தும் மொழியும் ஆதல் உணர்க. இன்மையால் கண்டிலம் முயற்கொம்பினைக் காணமாட்டாமைபோல என்றது மேற்கோளைத் தொடர்ந்து வந்த எடுத்துக்காட்டு என்பார் அந்நெறிச் சபக்கம் என்றார். இன்மைக்கு உண்மை மறுதலையாகலின் தோன்றுதலும் கைநெல்லிபோல் என்னும் எடுத்துக்காட்டும் அநன்னுவயத்தில் மேற்கோளின் மறுதலையைத் தொடர்ந்து வந்த மொழிகள் ஆயின என்க.

அறவண அடிகள் பிறர்தம் மதங்கூறி மறுத்தல்

85-95 : இவ்வகை.............வேண்டும்

(இதன் பொருள்) இவ்வகை ஏது பொருள் சாதிப்பன-மணிமேகலாய் ஈண்டு யாம் கூறியவாறே ஏதுவினால் துணிபொருள் சாதிக்கப்படுவனவாம்; காரியம் புகை சாதித்தது என்னை என்னின்-அளவைவாதி முதலியோரைக் காரியானுமானத்தில் காரியமாகிய புகை துணிபொருளை எவ்வண்ணம் சாதித்தது என்று வினவின் அவர் யாம் மேலே கூறியவாறு கூறாமல் பின்வருமாறு கூறுவர்; புகை உளவிடத்து நெருப்பு உண்டு என்னும் அன்னுவயத்தாலும்-புகை இருக்குமிடத்தே சாதன சாத்தியம் ஒருங்கிருத்தல் என்னும் அன்னுவயத்தாலும்; நெருப்பிலா இடத்து புகை இல்லை என்னும் வெதிரேகத்தாலும்-நெருப்பு இல்லாத இடத்தில் புகையும் இல்லை என்னும் எதிர்மறையானும்; புகைஇ-புகையானது; நெருப்பைச் சாதித்தது என்னின்-நெருப்புண்மையை அறிவித்தது என்பர், இங்ஙனம் கூறின்; நேரிய புகையின் நிகழ்ந்து உண்டான ஊர்த்தச் சாமம் கவுடிலச் சாமம்-நுணுகிய புகையின் வாயிலாய் நிகழ்ந்து உண்டான மேல்நோக்கிய செலவும் வளைந்து செல்லும் செலவும் என்னும் இருவகைக் காரியங்களே; வாய்த்த நெருப்பின் வருகாரியம் ஆதலின்-தமக்குக் காரணமாக வாய்த்த நெருப்பினின்றும் தோன்றி வருகின்ற காரியங்கள் ஆதலின்; மேல் நோக்கிக் கறுத்து இருப்ப-மேல் நோக்கிச் சென்று கறுத்திருப்பனவும்; பகைத்திருப்ப தாமே-இவ்வாறு மேல் நோக்கிச் செல்லுதலினின்றும் மாறுபட்டு வளைந்து சென்று வெளுத்திருப்பனவும் ஆகிய காரியங்களால் உண்டான பொருள்கள் தாமும்; நெருப்பைச் சாதிக்க வேண்டும்-தாம் தோன்றிய நிலைக்களத்தே நெருப்புண்மையை அறிவித்தல் வேண்டும் அன்றோ? அக்காரியங்கள் தோன்றும் நிலைக்களத்தில் நெருப்பில்லாமையின் அக்காரியானுமானம் பொருந்தாது என்றார் என்க.

(விளக்கம்) அறவண அடிகள் முன்னர் ஏனையோர் கூறும் காரண காரிய சாமானியக் கருத்து ஓரின் பிழைக்கையும் உண்டு எனவும் அவற்றுள் பிழையாதது கனலில் புகைபோல் காரியானுமானம் என்று உடன்பட்டார்; அங்ஙனம் உடன்பட்டவர் கனலில் புகைபோல் காரியானுமானங்களும் பக்கம் முதலிய ஐந்து உறுப்புகளால் ஆராய்ந்து காண்போர்க்கே பிழைபடாததாம் என 59 ஆம் அடி முதலாக 67 ஆம் அடி இறுதியாகத் தாமே ஆராய்ந்து காட்டினர். ஈண்டு அவ்வாறன்றி அன்னுவயத்தாலும் வெதிரேகத்தாலும் காரியானுமானம் துணி பொருளைச் சாதிக்கும் என்பார் கூற்றைத் தாமே எடுத்துக் கூறி அவர் கூற்றுப் பிழைபடுமாற்றைக் காட்டி மறுத்தவாறாம். காரியம் புகை-காரியமாகிய புகை. அன்னுவயம்-சாதன சாத்தியம் ஒருங்கிருத்தல். நேரிய புகை-நுண்மையான புகை. புகைவாயிலாய் நிகழ்ந்துண்டான ஊர்த்தசாமமும் கவுடிலச்சாமமும் என்னும் இருவகைக் காரியங்கள் என்றவாறு. ஊர்த்தசாமம் கவுடிலச்சாமம் என்பன நிரலே மேல்நோக்கிச் செல்லும் காரியம் வளைந்து படர்ந்து செல்லும் காரியம் என்னும் பொருளுடையன. இக்காரியங்களால் உண்டாக்கப்பட்ட பொருள் வானத்தே கறுத்த பிழம்புகளாகவும், வெள்ளிய பிழம்புகளாகவும் கரிய பிழம்புகளாகவும் மேல்நோக்கிச் செல்லுவனவாகவும் படர்ந்து செல்லுவனவாகவும் இருப்பன புகையே அன்றிப் பிறவும் உள; அவை நெருப்பினின்றும் தோன்றுவன அல்ல; ஆகவே அக்காரியங்கள் இருந்தும் அவை நெருப்பைச் சாதிக்க மாட்டாமையின் அவர் கூறும் முறை பிழைபடுதல் அறிக; என்று அறிவுறுத்தபடியாம். இது காரியத்தை மறுத்தவாறு. கறுத்திருப்ப கைத்திருப்ப என்பன பலவறி சொல். அவை புழுதிப்படலமும் முகிற்படலமும் பனிப்படலமும் பிறவுமாம் என்க. இவற்றில் அக்காரியங்கள் உளவாதலும் உணர்க.

அன்னுவயத்திற்கு மறுப்பு

96-101 : அன்னு................கூடா

(இதன் பொருள்) அன்னுவயம் சாதிக்கின்-இனிச் சாதன சாத்தியம் ஒருங்கிருத்தலாகிய அன்னுவயங் கண்டான் பின்னர் அவற்றுள் சாதனத்தை மட்டும் கண்டுழி அதனோடு சாத்தியமும் இருத்தல் வேண்டும் என்று துணியின்; முன்னும் கழுதையையும் கணிகையையும் தம்மில் ஒரு காலத்து ஓர் இடத்தே அன்னுவயம் கண்டான்-முன்னொரு காலத்தே ஒரு கழுதையையும் ஒரு கணிகை மகளையும் ஓர் இடத்தே அணுகி நிற்கக்கண்டவன் ஒருவன்; பின் காலத்துக் கழுதையைக் கண்டு அவ்விடத்தே கணிகையை அனுமிக்க வேண்டும்-பின்னொரு காலத்தே பிறிதோரிடத்தே கழுதையை மட்டும் கண்டு அவ்விடத்தே கணிகையும் இருப்பாளாகத் துணிதல் வேண்டும்; அதுகூடா-அங்ஙனம் துணிதல் கூடாமையின் அதுவும் பிழைபடுதல் அறிக என்றார் என்க.

(விளக்கம்) அன்னுவயத்தால் பொருளுண்மை சாதிக்கக் கூடுமானால் கழுதையையும் கணிகையையும் அன்னுவயம் கண்டான் பின்னொரு காலத்தே கழுதையைத் தனித்துக் கண்டவன் அங்குக் கணிகையும் இருத்தல் வேண்டும் என்று, துணிதல் வேண்டும் என்று நகைச்சுவை பட மறுத்தவாறாம். அனுமித்தல்-துணிதல்.

வெதிரேகத்தை மறுத்தல்

101-108 : நெருப்பு..................ஆகாது

(இதன் பொருள்) நெருப்பு இலா இடத்து புகை இலை எனல் நேர் அத்திருத்தகு வெதிரேகம் சாதிக்கும் என்னின்-இனி நெருப்பு இல்லாத இடத்தில் புகையும் இல்லையாம் எனல் போன்ற அந்தச் சிறப்பு மிக்க எதிர்மறை துணிபொருளைச் சாதிக்கும் என்றலோ; நாய் வால் இல்லா கழுதையின் பிடரின் நரி வாலும் இலையாக் காணப்பட்ட அதனையே கொண்டு-ஒருவன் ஓரிடத்தே ஒரு காலத்தே கழுதையின் பிடரி மயிரைக் கண்டு இது நாய் வாலோ அல்லது நரியின் வாலோ என்று ஐயுற்று அணுகிப்பார்க்குமிடத்தே ஆண்டு நாய் வாலும் நரி வாலும் இல்லையாகக் காணப்பட்ட அக்காட்சியையே ஏதுவாகக் கொண்டு; பிறிதோர் இடத்து நரி வாலின் நாய் வாலை அனுமித்தல் அரிதாம் அதனால் அதுவும் ஆகாது-அவன் மற்றொரு காலத்தே வேறோரிடத்தே ஒரு வாலைக் கண்டவன் அது நரிவால் இல்லையாதல் கண்டு இது நாய் வாலும் இல்லை எனத் துணிதல் வேண்டும், அதுவும் இயலாதாம் ஆதலினால் இவ்வெதிர்மறைக் கருத்தளவையும் அளவையாகமாட்டாது என்றார் என்க.

(விளக்கம்) நெருப்பிலா இடத்துப் புகை இல்லையாம்; ஆகவே எம் மலையிடத்துப் புகையுளதோ அங்கு நெருப்பும் இருத்தல் வேண்டும் என்று துணிதற்கு இவ்வெதிர்மறை ஏதுவாதலின் இதனையும் அளவையாகக் கொள்வர் அளவை வாதிகள். அவ்வெதிர்மறை ஏதுவினை ஈண்டு அறவண அடிகளார் எடுத்துக் காட்டி நகைச்சுவை தோன்ற மறுத்தல் உணர்க. காணப்பட்ட வால் நாய் வால் ஆதலும் கூடுமாதலின் அதுவும் ஆகாது என்றவாறு. இவ்வாற்றால் கருத்தளவைக்குப் பிறர் கூறும் காரியமும் அன்னுவயமும் வெதிரேகமும் ஆகிய உறுப்புகள் போலி என்றறிவித்த படியாம். திருத்தகு வெதிரேகம் என்றது இகழ்ச்சிக் குறிப்பு.

பக்கம் முதலிய ஐந்துறுப்புகளுள் மூன்றுறுப்புகளே பவுத்தர் மேற்கொள்வர் என்றல்

109-112 : ஒட்டிய...........உள

(இதன் பொருள்) உபநயம் நிகமனம் இரண்டும் ஒட்டிய-நங்காய் முன்பு முதலாகக் கூறப்பட்ட கருத்தளவையின் உறுப்புகள் ஐந்தனுள் இறுதியில் நின்ற உபநயமும் நிகமனமும் ஆகிய இரண்டுறுப்புகளும் தருக்கவாதி முதலிய பிற சமயக்கணக்கர்களால் சேர்க்கப்பட்டவையாம்; திட்டாந்தத்திலே சென்று அடங்கும்-எடுத்துக்காட்டு என்னும் உறுப்பிலே அவ்விரண்டும் புக்கு அடங்குவனவாம் ஆகவே; பக்கம் ஏது திட்டாந்தங்கள்-நம்மனோர் இப்பொழுது மேற்கொள்வன மேற்கோளும் ஏதுவும் எடுத்துக்காட்டும் ஆகிய மூன்றுறுப்புகள் மட்டுமேயாம்; ஒக்க நல்லவும் தீயவும் உள-அம்மூன்றனுள் தம்முள் ஒப்ப நல்லனவும் தீயனவும் ஆகிய உறுப்புகளும் உளவாம் என்றார் என்க.

(விளக்கம்) உபநயம் நிகமனம் இரண்டும் ஒட்டிய என மாறுக. ஓட்டிய-பிறரால் ஓட்டப்பட்ட. அவ்வாறு ஓட்டி ஐந்துறுப்பினையும் பயில வழங்குபவர் நையாயிகரும் வைசேடிகரும் பிறரும் என்க. தருக்க நூலோர் ஆகிய அவர்-

உரைசெய்பிர திக்கினையு மேதுவுமு தாகரண முபந யம்பின்
பரவிநிக மனமுமெனும் படித்தாகு மேத்துவா பாச மப்பாற்
கருதிலவை யைவகையாஞ் சித்தவிசித் தத்தொடனே காந்தி கஞ்சீர்ப்
பிரணரணச் சமமொடுகா லாத்தியா பதிட்டமெனப் பேசலாமே (மெய்ஞ்ஞான : 48ஆம் சருக்)
என்பர்.

அறவணர் கருத்தளவையின் தாம் மேற்கொண்டுள்ள பக்கம் முதலிய மூன்றுறுப்புகளின் இயல்புகளை இனிக்கூறத் தொடங்குகின்றார்

112-117 : அதில்..........நாட்டுக

(இதன் பொருள்) அதில்-அவற்றுள்; வெளிப்பட்டுள்ள தன்மியினையும் வெளிப்பட்டுள சாத்திய தன்மத்திறம்-தன் மாற்றாருடன் சொற்போர் செய்தமையால் அனைவரும் காணும்படி வெளிப்பட்டிருக்கின்ற அத்துணிபொருளின் பண்புத்தன்மையையும்; பிறிதில் வேறாம் வேறுபாட்டினையும்-பிறபொருள்களில் நின்றும் வேறாகும் வேற்றுமையையும்; தன்கண் சார்த்திய நயந்தருதல் உடையது நன்கு என் பக்கம் என நாட்டுக-தன்னிடத்தே ஏறட்டுக் கொண்டிருக்கின்றதொரு நன்மையைத் தருவது எதுவோ அது நன்று என்று கூறப்படுகின்ற மேற்கோள் என்று உள்ளத்தில் பதித்துக் கொள்வாயாக என்றார் என்க.

(விளக்கம்) அதில் : ஒருமைப் பன்மை மயக்கம். சொற்போரின் பொருட்டுப் பலரும் அறிய எடுத்துச் சொல்லிய தன்மி என்பார் வெளிப்பட்டுள்ள தன்மி என்றார். தன்மி என்றது சாத்தியத்தை. அஃதாவது துணிபொருளை என்க. தன்மத்திறம் அதற்கியல்பாம் தன்மை. பிறிது என்றது மேற்கோளின் மறுதலைப் பொருளை. தன்கண் சார்த்துதலாவது-தன்பால் உடையதாய் இருத்தல். அவ்வேறுபாடுடைமையை மேற்கோளுக்கு ஆக்கந் தருதலின் அவ்வாக்கத்தை நயம் என்றார். வெளிப்பட்டுள்ள தன்மையினைத் தன்கண் சார்த்திய நயம் எனவும் பிறிதில் வேறாம் வேற்றுமையைத் தன்கண் சார்த்திய நயம் எனவும் தனித்தனி கூறிக் கொள்க. நன்கென் பக்கம் என்றது முன்னர் நல்லவும் தீயவுமாகிய பக்கங்களுள் நல்லனவாகியவற்றுள் ஒன்றாகிய பக்கம் என்றவாறு. ஈண்டு விரித்துக் கூறிய நயம் இரண்டனுள் முன்னது ஒற்றுமை நயம். பின்னது வேற்றுமை நயம் என்க.

இதுவுமது

117-124 : அதுதான்...........விடுதலும்

(இதன் பொருள்) அதுதான்-அங்ஙனம் நாட்டுதலாவது; சத்தம் அநித்தம் நித்தம் என்று ஒன்றைப்பற்றி நாட்டப்படுவது-சத்தமானது அநித்தம் என்றாதல் நித்தம் என்றாதல் தான் மேற்கொண்டுள்ள இவ்விரண்டனுள் ஒன்றை ஏதுவானும் எடுத்துக்காட்டானும் சாதித்து நிறுத்துவதாம்; தன்மி சத்தம்-இதன்கண் தன்மியாவது சத்தமாம்; சாத்திய தன்மமாவது-ஈண்டு துணிந்த பொருளின் தன்மமாவது; நித்தா நித்தம்-நித்தமாதல் அநித்தமாதல் இவ்விரண்டனுள் தான் மேற்கொண்டதே துணிபொருளின் தன்மமாம்; நிகழும் நல் ஏது மூன்றாய்த் தோன்றும்-இங்ஙனம் கூறப்பட்ட மேற்கோளுக்கு நிகழா நின்ற நல்ல ஏதுவும் மூன்றுவகையாகக் காணப்படும், அவையாவன; மொழிந்த பக்கத்து ஊன்றி நிற்றலும் சபக்கத்து உண்டாதலும் விபக்கத்து இன்றியே விடுதலும்-எடுத்துக் கொண்ட மேற்கோளில் சிறப்பாகப் பொருந்தி நிற்றலும் அதனைச் சார்ந்து வந்த மேற்கோளிலும் பொருந்தி நிற்றலும் மறுதலை மேற்கோளின்கண் இல்லாதொழிதலும் என்னும் இம்மூவகையும் ஆம் என்றார் என்க.

(விளக்கம்) சத்தம் : எழுவாய். அநித்தம் நித்தம்-சத்தமானது அநித்தம் என்றாதல் நித்தம் என்றாதல் தான் மேற்கொண்ட தொன்றைப் பற்றி வாதிட்டு நிலைநாட்டுவது என்க. அங்ஙனம் நிலைநாட்டுங்கால் தான் நாட்டிய பண்பினை ஏற்றுக்கொள்வது சத்தமே யாதலின் தன்மி சத்தம் என்றார். சத்தத்திற்கு உரித்தாக நாம் மேற்கொள்ளும் இருவகைப் பண்புகளுள் ஒன்றே சாத்திய தன்மமாம் என்பது கருத்து. மேற்கோளைச் சாதித்தற்கு நம்மால் கூறப்படும் ஏதுக்கள் மூன்றுவகைப்படும் என்று அறிவித்தவாறு. மொழிந்த பக்கத்து வாதத்திற்கு எடுத்து மொழிந்த மேற்கோளின்கண் என்க. சபக்கம் தன் மேற்கோளின் சார்பாக வரும் மேற்கோள். அவ்வேது அங்ஙனம் வரும் துணைமேற் கோளிலும் இருக்கும், விபக்கம் மறுதலை மேற்கோள். அதன் கண் ஏதுவின் இன்மை உளதாம். இவ்வாற்றால் ஏது மூன்று வகைப்படும் என்றராயிற்று. பக்கத்தினும் சபக்கத்தினும் உண்மை வகையால் இரண்டு ஏதுக்களும் விபக்கத்தில் இன்மை வகையால் ஓர் ஏதுவும் ஆக மூன்றாம் என்க. விபக்கத்தில் ஏதுவின் இன்மையே ஓர் ஏதுவாக மேற்கோளைச் சாதிப்பது உணர்க.

ஏதுக்களின் விளக்கம்

124-135 : சபக்கம்..................என்க

(இதன் பொருள்) சபக்கம் சாதிக்கில்-துணை மேற்கோளால் தான் எடுத்துக் கொண்ட மேற்கோளைச் சாதிக்குமிடத்தே; பொருள் தன்னால்-தான் எடுத்துக்காட்டும் பொருளால்; பக்கத்து ஓதிய பொதுவகை-தான் மேற்கொண்ட பொருளுக்கு ஓதிய பொதுத்தன்மை அத்துணை மேற்கோளாடும்; ஒன்றி இருத்தல்-பொருந்தியிருத்தல், அஃதாவது; சத்த அநித்தம் சாத்தியம் ஆயின்-மேற்கொண்ட சத்தத்திற்கு அநித்தம் சாத்திய தன்மம் ஆகுமிடத்தே அச்சத்தத்தோடு; ஒத்த அநித்தம் கடாதி போல் எனல்-ஒத்த தன்மத்தையுடைய தன்மியாகிய குடம் போல் என்று கூறுதல் இதற்கு; விபக்கம் விளம்பில்-மறுதலை மேற்கோள் கூறின்; யாதொன்று யாதொன்று அநித்தம் அல்லாதது பண்ணப்படாதது ஆஅ காசம் போல் என்றாகும்-யாதொரு பொருள் யாதொரு பொருள் அழிவில்லாததோ அப்பொருள் ஒருவரால் செய்யப்படாத பொருளும் ஆம் வானத்தைப்போல் என்று எடுத்துக்காட்டுக் கூறப்படுவதாம். இங்ஙனம் கூறுங்கால்; பண்ணப்படுதலும் செயலிடைத் தோன்றலும் நண்ணிய பக்கம் சபக்கத்திலுமாய்-பண்ணப்படுவதும் தொழிலிடத்தே தோன்றுவதும் ஆகிய இரண்டு ஏதுக்களும் பொருந்திய மேற்கோளிடத்தும் துணை மேற்கோளிடத்துமாய் உளவாகி; விபக்கத்து இன்றி-மறுதலை மேற்கோளிடத்தே இல்லாமல்; அநித்தத்தினுக்கு-சாதிக்கப்பட்ட சாத்தியதன்மமாகிய அநித்தத்திற்கு; மிகத் தரும் ஏதுவாய் விளங்கிற்று என்க-மிகவும் ஆக்கம் தருகின்ற ஏதுவாக விளங்கிற்று என்று கூறுக என்றார் என்க.

(விளக்கம்) சபக்கம் துணி பொருளை வற்புறுத்துதற்கு எடுத்துக் காட்டுகின்ற துணைமேற்கோள். பொருள்-துணிபொருள். பொதுவகை-பொதுத்தன்மை. சத்த அநித்தம் ஒலியின் நிலையாமை. சாத்தியம் என்பது நிலையாமை உடையது என்று துணிவது. ஒலி தோன்றிய பொழுதே அழிதலின் ஏது ஊன்றி நிற்றல் காண்க. துணைமேற்கோளாகிய குடத்தின்கண் அந்நிலையாமை உண்டாதலும் காண்க. விபக்கம் ஆகாசம் என்றது ஈண்டுப் பிறர் தம்மதம் மேற்கொண்டு கூறியபடியாம். என்னை? பவுத்தருக்கு ஆகாசம் ஒரு பூதம் என்றல் உடன்பாடன்மையின் என்க. விபக்கம்-மறுதலை மேற்கோள். அதன்கண் துணிபொருளின் இன்மையே ஏதுவாய் அதற்கு ஆக்கம் தருதல் காண்க.

நல்ல எடுத்துக்காட்டுகள்

(136-142) : ஏதமில்............ஒத்தன

(இதன் பொருள்) ஏதம் இல் திட்டாந்தம் இருவகைய-குற்றமில்லாத எடுத்துக்காட்டுகள் இரண்டு வகைப்படுவனவாம், அவையாவன; சாதன்மியம் வைதன்மியம் என-சாத்திய தன்மத்தை உடையதும் அஃதில்லாததும் என்று கூறப்படுவன இவற்றுள்; சாதன்மியம் எனப்படுவது அன்னுவயத்து அநித்தம் கடாதி என்கை-சாதன்மிய திட்டாந்தம் என்பது சாத்திய தன்மத்தோடு தானும் ஒத்திருக்கும் வகையில் நிலையாமை உடையன என்று குடம் முதலியவற்றை எடுத்துக்காட்டுதல்; வைதன்மிய திட்டாந்தம் சாத்தியம் எய்தா இடத்தில் ஏதுவும் இன்மை-வைதன்மிய திட்டாந்தமாவது, சாத்திய தன்மைத் திறம் இல்லாத இடத்தில் மேற்கோள் தன்மமாகிய ஏதுவும் இல்லாதொழிதல்; இத்திறம் நல்ல சாதனத்து ஒத்தன-இத்தன்மைகள் மேற்கூறிய நல்லேதுக்களோடு பெரிதும் ஒத்தன என்றார் என்க.

(விளக்கம்) சாதன்மியம்-துணி பொருளோடு ஒத்த பண்புடைமை. வைதன்மியம்-துணிபொருள் பண்பிற்கு மறுதலையாதல் (அஃதாவது அநித்தம் அல்லாதது-பண்ணப்படாதது. ஆகாசம் போல் என்று முன்னும் வந்தமை உணர்க) நல்ல சாதனம் என்றது முன் கூறிய நல்லேதுக்களை.

மேற்கோட் போலியும் ஏதுப் போலியும் எடுத்துக்காட்டுப் போலியும்

143-153 : தீய.............என

(இதன் பொருள்) தீயபக்கமும் தீய ஏதுவும் தீய எடுத்துக்காட்டும் ஆவன-குற்றமுடைய மேற்கோளும் குற்றமுடைய ஏதுவும் குற்றமுடைய எடுத்துக்காட்டும் ஆகிய இவை; பக்கப்போலியும் ஏதுப் போலியும் திட்டாந்தப் போலியும் ஆஅம்-மேற்கோட் போலியும் ஏதுப்போலியும் போலி எடுத்துக்காட்டும் என்பனவாம்; இவற்றுள் பக்கப் போலி ஒன்பது வகைப்படும்-இவற்றுள் மேற்கோட் போலி ஒன்பது வகைப்படும், அவை; பிரத்தியக்க விருத்தம் அனுமான விருத்தம் சுவசன விருத்தம் உலோக விருத்தம் ஆகம விருத்தம்-காட்சி முரணும் கருத்து முரணும் தன்மொழி மாறுபாடும் உலக மலைவும் நூல் முரணும்; அப்பிரசித்த விசேடணம் அப்பிரசித்த விசேடியம் அப்பிரசித்த உபயம் அப்பிரசித்த சம்பந்தம் என-பண்பு விளங்காமை சிறப்பு விளங்காமை பண்பும் சிறப்பும் ஒருங்கே விளங்காமை விளக்கமில்லாத தொடர்பு எனப்படும் இவ்வொன்பதுமாம் என்றார் என்க.

(விளக்கம்) பிரத்தியக்கம் விருத்தம்-காட்சி முரண். அனுமானம்-கருத்து. சுவசனம்-தன்சொல். உலோகம்-உலகம். இது சான்றோர் என்னும் பொருட்டு. ஆகமம்-நூல். அப்பிரசித்தம்-விளங்காமை. விசேடணம்-பண்பு. விசேடியம்-சிறப்பு. உபயம் என்றது பண்பும் சிறப்பும் ஆகிய இரண்டும் என்றவாறு.

பக்கப் போலியின் விளக்கம்

154-166 : எண்ணிய...............நுவறல்

(இதன் பொருள்) எண்ணிய இவற்றுள்-ஈண்டு எண்ணித் தொகுக்கப்பட்ட மேற்கோள் போலிகளுள் வைத்து; பிரத்தியக்க விருத்தம் கண்ணிய காட்சி மாறுகொளல் ஆகும்-கருதிய காட்சி அளவையோடு முரண்படக் கூறுதலாம், அஃதாவது; சந்தம் செவிக்குப் புலன் அன்று என்றல்-ஒலி செவிக்குப் புலப்படாது என்பது போலவன; மற்று அனுமான விருத்தம் ஆவது கருத்து அளவையை மாறாகக் கூறல் அநித்தியக் கடத்தை நித்தியம் என்றல்-இனிக் கருத்தளவை முரணாவது கருத்தளவிற்கு மாறுபடக் கூறதல், அது அழியும் தன்மையுடைய குடத்தை அழியாதது என்று கூறுதல்; சுவசன விருத்தம் தன் சொல் மாறி இயம்பல் என் தாய் மலடி என்றே இயம்பல்-தன் சொல் முரணாவது ஒருவன் தான் எடுத்துச் சொல்லும் சொல்லே பொருள் முரண்படச் சொல்லுதல், அது என்னை ஈன்றாள் மலடி என்று கூறுதலாம்; உலக விருத்தம் உலகின் மாறு ஆம் உரை இலகும் மதி சந்திரன் அல்ல என்றல்-இனி உலக மலைவு ஆவது சான்றோருடைய சொல் மரபிற்கு முரணாகின்ற மொழி அது விளங்கும் மதி என்னும் சொல் சந்திரன் என்ற பொருளை உடையதன்று என்று கூறுதல், ஆகம விருத்தம் தன் நூல் மாறு அறைதல் அநித்தவாதியாய் உள்ள வைசேடிகன் அநித்தியத்தை நித்தியம் என நுவறல்-நூல் முரணாவது ஒருவன் தன் சமய நூல் கருத்திற்கு முரணாகக் கூறுதல், அஃதாவது பொருளுக்கு நிலையாமை கூறும் கொள்கை உடையவனாகிய வைசேடிகவாதி தன் நூற் கருத்திற்கு முரணாக நிலையாமையுடைய தொன்றனை நிலையுதலுடைத்து என்று கூறுதல் என்க.

(விளக்கம்) கண்ணிய-கருதிய, காட்சி-காட்சி அளவை. அநித்தியக் கடம்-அழியும் இயல்புடைய குடம். மதி அறிவின் மேல் செல்லாமைக்கு இலகுமதி என்றார். அல்ல-அன்று. நுவறல்-கூறுதல்.

இதுவுமது

167-178 : அப்பிர.........சித்தம்

(இதன் பொருள்) அப்பிரசித்த விசேடணம் ஆவது-விளக்கமில் பண்பாவது; தம் தம் எதிரிக்குச் சாத்தியம் தெரியாமை-சொற்போர் புரிவோர் தங்கள் தங்களுடைய எதிரிக்குத் தாம் வற்புறுத்தும் துணிபொருள் விளங்காது மொழிதல். அதுவருமாறு; பவுத்தன் மாறாய் நின்ற சாங்கியனைக் குறித்து சத்தம் விநாசி என்றால்-வாதிடுகின்ற பவுத்தன் ஒருவன் தனக்கு மாறுபட்டிருக்கின்ற சாங்கியன் ஒருவனைச் சுட்டிச் சொற்போரிடும் பொழுது ஒலி அழிதன் மாலைத்து என்று கூறினால்; அவன் அவிநாசவாதி ஆதலின் சாத்திய விநாசம் அப்பிரசித்தமாகும்-அச்சாங்கியன் பொருள் நிலையுதலுடைத்து என்னும் கொள்கை உடையவன் ஆதலின் பவுத்தன் கூறிய துணிபொருளின் பண்பாகிய அழிவு அச்சாங்கியனுக்கு விளக்க விளக்கமில்லாத சிறப்பாவது; எதிரிக்குத் தன்மி பிரசித்தம் இன்றி இருத்தல்-தன் மாற்றானுக்குத் தான் கூறும் மேற்கோளின் சிறப்பு விளக்கமின்றி இருத்தல், அஃதாவது; சாங்கியன் மாறாய்நின்ற பவுத்தனைக் குறித்து ஆன்மா சைதனியவான் என்றால் அவன் அநரன்மவாதி ஆதலின் தன்மி அப்பிரசித்தம்-சாங்கியவாதி ஒருவன் தனக்கு எதிரியாய் நின்ற பவுத்தனோடு வாதிடுபவன் அவனை நோக்கி உயிர் அறிவுடைத்து என்று கூறின் அப்பவுத்தன் உயிர் என்பதொன்றில்லை என்னும் கொள்கை உடையவன் ஆதலால் அவனுக்குச் சாங்கியன் எடுத்து மொழிந்த தன்மியாகிய உயிர் விளக்கமற்ற தாம் என்க.

(விளக்கம்) அப்பிரசித்தம்-விளக்கமில்லாமை. விசேடனம் என்றது ஈண்டுச் சாத்திய வசனத்தை. சாங்கியன் காணப்படும் பொருள் எல்லாம் உள் பொருளே என்னும் கொள்கை உடையவன். மேலும் எப்பொருளும் காரண உருவத்தினின்றும் காரிய உருவத்திற்கும், காரிய உருவத்தினின்றும் மாறுவதேயன்றி அழிவதில்லை என்னும் கோட்பாடுடையன் ஆதலின் அவன் அவினாசி ஆதலால் என்றார். விசேடியம்-தன்மி. மாறாய் நின்ற பவுத்தன்-எதிரியாய் நின்று சொற்போர் புரியும் பவுத்தன். ஆன்மா-உயிர். சைதன்யம்-அறிவுடையது. அநான்மவாதி-உயிர் என்று ஒரு பொருள் இல்லை என்னும் கொள்கை உடையவன். ஆன்மா சைதன்யவான்-என்புழி, ஆன்மா-தன்மி. சைதன்யம்-தன்மம். எனவே ஆன்மா என்பது எதிரிக்கு அப்பிரசித்தம் ஆயிற்று என்க.

இதுவுமது

179-185 : அப்பிர...........உபயம்

(இதன் பொருள்) அப்பிரசித்தம் உபயமாவது-அப்பிரசித்த உபயம் என்னும் குற்றமாவது; மாறு ஆனோற்கு தன்மி சாத்தியம் ஏறாது அப்பிரசித்தமாய் இருத்தல்-எதிரிக்கு மேற்கோளும் துணிபொருளும் ஆகிய இரண்டும் நெஞ்சத்தில் புகாமல் விளக்கமில்லாதிருத்தல், அதுவருமாறு; பகர் வைசேடிகன் பவுத்தனைக் குறித்து-வாதிடுகின்ற வைசேடிகன் எதிரியாகிய பவுத்தனை நோக்கி; சுகம் முதலிய தொகைப் பொருட்குக் காரணம் ஆன்மா என்றால்-இன்பம் முதலியனவாகத் தொகுத்துக் கூறப்படுகின்ற பொருள்களுக்கெல்லாம் காரணமாவது உயிரே என்று கூறினால்; தாம் சுகமும் ஆன்மாவும் இசையாமையில் அப்பிரசித்த உபயம்-பவுத்த சமயத்தினர் இன்பம் முதலிய தொகைப் பொருளையும் அவற்றிற்கு காரணமாகிய உயிரையும் உள்பொருள் என்று ஒப்புக்கொள்ளாமையினால் மேற்கோளும் ஏதுவுமாகிய இரண்டும் விளங்காமை என்னும் குற்றமாம் என்க.

(விளக்கம்) உபயம் என்றது மேற்கொளும் துணிபொருளும். பகர் வைசேடிகன்-வாதிடுகின்ற வைசேடிகன்; வினைத்தொகை. பவுத்தன் என்றது எதிரியாகிய பவுத்தன் என்பதுபட நின்றது. சுகம் முதலிய தொகைப் பொருளாவன-

அறிவரு ளாசை யச்ச மானம்
நிறைபொறை யோர்ப்புக் கடைப்பிடி மையல்
நினைவு வெறுப்புவப் பிரக்க நாண் வெகுளி
துணிவழுக் காறன் பெளிமை யெய்த்தல்
துன்ப மின்ப மிளமை மூப்பிகல்
வென்றி பொச்சாப் பூக்க மறமதம்
மறவி யினைய வுடல்கொ ளுயிர்க்குணம்

என்னும் இவை. தன்மியாகிய உயிர் பவுத்தனுக்கு உடன்பாடன்மையின் அதன் தன்மமாகிய சுகம் முதலியனவும் உடன்பாடாகாமல் இரண்டும் விளங்காவாயின.

இதுவுமது

186-190 : அப்பிர............ஆகும்

(இதன் பொருள்) அப்பிரசித்த சம்பந்தம் ஆவது-அப்பிரசித்த சம்பந்தம் என்று சொல்லப்படுகின்ற குற்றமாவது விளக்கமில்லாமையால்; எதிரிக்கு இசைந்த பொருள் சாதித்தல்-தனக்கு மாறாய் நின்று வாதிடுகின்ற பகைவனுக்குப் பொருந்திய துணிபொருளைத் தானே சாதித்துக் கொடுத்தல், அதுவருமாறு; மாறாம் பவுத்தற்கு சத்த அநித்தம் கூறின அவன் கொள்கை அஃதாகலில்-பொருள்கள் நித்தம் என்னும் கொள்கை உடையான் ஒருவன் தனக்கு மாறுபட்டு நிற்கும் பவுத்தனொடு வாதிடுங்கால் ஒலி அழியும் இயல்புடைத்து என்று கூறுவானாயின்; அப்பவுத்தனுடைய கொள்கைகளே அதுவாயிருத்தலால் வேறு சாதிக்க வேண்டாதாகும்-அவ்வெதிர் தன் கொள்கையை வாதியே துணிந்து கூறிவிட்டமையின் தான் ஒன்று கூறிச் சாதிக்க வேண்டாததாகி முடிதலால் இஃது அப்பிரசித்த சம்பந்தம் என்னும் குற்றமாம் என்க.

(விளக்கம்) வாதி எதிரியின் கொள்கை தனக்கு விளக்கமின்மையின் அவன் கொள்கையோடியைதலின் இக்குற்றம் அப்பிரசித்த சம்பந்தம் எனப்பெயர் பெற்றது என்க. இனி இவ்வாறு பிரதிவாதியின் கொள்கையை வாதி சாதித்துக் கொடுத்தல் அரிதல் காணப்படுவதொன்றாகலின் அப்பெயர் பெற்றது எனக் கருதுவாரும் உளர். இதனால் வாதி தனக்கே தோல்வி உண்டாக்கிக் கொள்ளுதலின் இது குற்றமாயிற்று என்க.

ஏதுப்போலி

191-202 : ஏதுப்போலி..........ஆகும்

(இதன் பொருள்) ஏதுப்போலி ஓதின்-இனி ஏதுப்போலி என்னும் குற்றமுடைய ஏதுக்களை வகுத்துக் கூறுமிடத்து; அசித்தம் அநைகாந்திகம் விருத்தம் என மூன்று ஆகும்-அசித்தம் என்றும் அநைகாந்திகம் என்றும் விருத்தம் என்றும் மூன்று வகைப்படும்; அசித்தம் உபயாசித்தம் அன்னியதா சித்தம் சித்தா சித்தம் ஆசிரயா சித்தம் என நான்கு-இனி அவற்றுள் அசித்தம் என்னும் ஏதுப்போலி உபயா சித்தம் என்றும் அன்னியதா சித்தம் என்றும் சித்தா சித்தா சித்தம் என்றும் ஆசிரயா சித்தம் என்றும் நான்கு வகைப்படும்; அந்நாகைனுள்; உபயா சித்தம் சாதன ஏது இருவர்க்கும் இன்றி சத்தம் அநித்தம் கடபுலத்து என்றால்-உபயா சித்தம் எனப்படுவது மேற்கோளைச் சாதித்தற்குரிய கருவியாகக் கூறப்பட்ட ஏதுவானது வசதியும் பிரதிவாதியுமாகிய இருவர் திறத்தினும் ஏதுவாதலின்றிப் பயனில் சொல்லாயொழிதல், அதுவருமாறு; ஒலி நிலையாமை உடைத்து ஏற்றாலெனின் அது கண்ணுக்குப் புலப்படுதலால் என்று கூறுதல்; அன்னிய தாசித்தம்-அன்னியதாசித்தம் என்னும் குற்றமாவது; மாறாய் நின்றற்கு உன்னிய ஏது அன்றாய் ஒழிதல்-வாதி தன்னோடு மாறுபட்டு நின்ற பிரதிவாதிக்கு ஏதுவாகும் என்று நினைத்துக் கூறியவண்ணம் ஏதுவாகாமல் ஒழிதலாம், அதுவருமாறு; சாங்கியனுக்கு சத்தம் அநித்தம் செயல் உரல் என்னில்-பவுத்தன் ஒருவன் தன்னோடு மாறாய் நிற்கின்ற சாங்கியனை நோக்கி ஒலி நிலையாமை உடைத்து ஏற்றாலெனில் அது செயற்கையினால் தோன்றுதலால் என்று ஏதுக் கூறுவானாயின் அவ்வேதுவானது; சித்த வெளிப்பாடு அல்லது செயலுறல் உய்த்த சாங்கியனுக்கு அசித்தம் ஆகும்-எப்பொருளும் மூலப்பகுதியினின்றும் ஒன்றினொன்றாகத் தாமே வெளிப்படுவதல்லது செயலில் தோன்றும் என்னும் கொள்கையைக் கைவிட்டுவிட்ட சாங்கியனுக்கு அவ்வேது நிகதம் அல்லாமையின் அன்னியதாசித்தம் என்னும் ஏதுப்போலியாம் என்றார் என்க.

(விளக்கம்) ஏதுப்போலி-குற்றமுடைய ஏதுக்கள். அவை வகையால் மூன்றாய், விரியால் பலவாம் என்க. அசித்தம் ஏதுவாகா தொழிதல். அஃது உபயாசித்தம் முதலிய நான்காய் வரியும் என்க. அவற்றுள் வாதி கூறுகின்ற ஏது தனக்கும் பிரதிவாதிக்கும் ஏதுவாகாதொழிதல். உபயாசித்தம்-சத்தம் கண்ணுக்குப் புலப்படுதலால் அநித்தம் என்றாற் போல்வது என்பார் சத்தம் அநித்தம் கட்புலத் தென்றல் என்றார். கண்ணுக்குப் புலப்படுதலால் என்று கூறிய ஏது தவறாகலின் இருவர்க்கும் ஏதுவாகாதொழிந்து காண்க. அல்நியத அசித்தம் எனக் கண்ணழித்துக் கொள்க. அல்நியதம்-ஒருதலை ஆகாமை. மாறாய் நின்றற்கு-பிரதிவாதிக்கு. இதற்கு எடுத்துக்காட்டு, சாங்கியனுக்கு சத்தம் அநித்தம் என்பதற்கு அது செயலிடைத் தோன்றுதலை ஏதுவாகக் காட்டுதல். சாங்கியன் சத்தம் சித்தம் என்னும் மூலப்பகுதியினின்றே எல்லாப் பொருளும் நிரலே தோன்றி ஒடுங்கும் என்னும் கொள்கை உடையன் ஆதலின் அது செயலின்கண் தோன்றும் என்பது ஒருதலையன்று. தானேயும் வெளிப்படும் என்னும் கொள்கை உடையன் ஆதலின் அவனுக்கு இவ்வேது அன்னியதமாய் அசித்தமாயிற்று என்க. இதற்கு அன்னிதரா சித்தம் எனப் பாடந்திருத்தி அன்னியதரன்-வாதி பிரதிவாதி இருவரில் ஒருவன் என்று பொருள் கூறுவாரும் உளர். இஃது ஏனைய குற்றங்களுக்கும் பொதுவாகலின் அவர் உரை போலியாதல் உணர்க. சத்தம் வியஞ்சனம் உள் வழித்தோன்றி இவ்வழிக் கெடும் என்பது சற்காரிய வாதியாகிய சாங்கியன் கொள்கையாதலின் மேகங்களினின்றும் இடி முதலிய ஒலி செய்வோர் இல்லாமலும் தோன்றுதலால் நியதியுட்படாமையுமுணர்க. இருட்கண்ணதாகிய குடத்தினுருவம் விளக்கு வந்த வழி விளங்கி அல்லுழி விளங்காமை போல, ஓசையும் இதழ்நா அண்ண முதலிய அவ்வக் கருவிகளின் தொழிற்பாடு நிகழ்ந்தவழி விளங்கியும் அல்லுழி விளங்காமையும் மாத்திரையேயன்றித் தோன்றி யழிதலின்மையான், அது போலியேது வென்றொழிக எனவரும் சிவஞான பாடியம் சூ-உ சிவஞான உரை விளக்கம் நோக்குக. சாங்கியனுக்கு இஃது அன்னியதா சித்தம் என்னும் குற்றமாகும் என்றவாறு.

இதுவுமது

203-206 : சித்தா...........துணிதல்

(இதன் பொருள்) சித்தா சித்தம் ஆவது-சித்தா சித்தம் என்று கூறப்படுகின்ற ஏதுப்போலியாவது; ஏது சங்கயமாய் சாதித்தல்-வாதியானவன் தான் சாதிக்கத் துணிந்த மேற்கோளைச் சாதித்தற் பொருட்டு எடுத்துக் கூறாநின்ற ஏதுவினைத் தானே ஐயுற்ரவன் தெளியாமுன்பே ஐயத்திற்கிடமான அவ்வேது வினைக்கொண்டே மேற்கோளைச் சாதித்தலாம். அஃகாமாறு; ஆவி பனியென ஐயுறாநின்றே தூய புகை நெருப்பு உண்டு எனத்துணிதல்-தான் கண்ட பொருள் புகையோ பனிப்படலமோ என்று தன்னுள் ஐயுற்று அது தெளிதற்கு முன்பே; தூய புகை என்று துணிந்தான்போல-அதனை ஏதுவாகக் காட்டி அது தோன்றுமிடத்தே நெருப்பு உண்டு என்று கூறி நிலை நாட்டுதல் போல்வன என்றார் என்க.

(விளக்கம்) சித்தாசித்தம் துணிவும் துணியாமையும். சங்கயம்-சம்சயம்; ஐயம். ஏது துணியப்படாமையின் துணிந்த பொருளும் ஐயுறப்படுமாதலின் இவ்வேது சித்தா சித்தம் என்னும் குற்றத்தின் பாற்படும் என்றவாறு.

இதுவுமது

207-211 : ஆசிரயா...........அசித்தம்

(இதன் பொருள்) ஆசிரயா சித்தம்-ஆசிரயா சித்தம் என்னும் ஏதுப்போலியாவது; மாறானவனுக்கு ஏற்ற தன்மி இன்மை காட்டுதல்-தன்னோடு மாறுபட்டுச் சொற்போர் நிகழ்த்துகின்ற எதிரிக்குப் பொருந்திய மேற்கோள் இல்லாமையை அறிவிக்கின்ற ஏதுவைக் கூறிக் காட்டுதல், அதுவருமாறு; வசதி ஆகாசம் சத்த குணத்தால் பொருளாம் என்னின்-சாங்கியன் ஒருவன் தனக்குமாறாய் நின்ற பவுத்தனை நோக்கி வெளி என்னும் பூதம் ஒலி என்னும் குணத்தை உடைத்தாதலால் உள் பொருளாம் என்னுமிடத்து; ஆகாசம் பொருள் அல்ல என்பாற்கு தன்மி அசித்தம்-வெளி ஒரு பொருள் அல்ல என்னுங் கொள்கையுடைய அப்பவுத்தனுக்கு வாதியினால் சாதிக்கப்பட்ட மேற்கோளே இல்பொருள் ஆதலின் அதனைச் சாதித்த சத்தகுணம் என்னும் ஏது ஆசிரயா சித்தம் என்னும் குற்றமுடைய ஏதுப்போலியாம் என்றார் என்க.

(விளக்கம்) ஆசிரயா சித்தம்-சார்பு பெறப்படாமை. ஆகாசம் பொருள் அல்ல என்பான் ஈண்டுப் பவுத்தன். இதற்கு வாதி வைசேடிகள் முதலியவர். சத்தகுணத்தால் என்னும் ஏதுவாகிய குணம் தனக்குச் சார்பாகிய குணி பெறப்படாமையில் ஆசிரயா சித்தம் என இக்குற்றம் பெயர் பெற்றது. அப்பிரசித்த விசேடியம் என்பது பக்கப் போலி ஆதலின் ஈண்டு இஃது அதனினும் வேறாம். என்னை ஈண்டுக் கூறப்பட்ட ஏதுவிற்கு விலைக்களன் இன்மையின் இஃது ஏதுப்போலியே ஆதல் உணர்க.

இதுவுமது

211-216 : அநைகாந்தி..............ஆறு

(இதன் பொருள்) அநைகாந்திகமும்-அநைகாந்திகம் என்னும் ஏதுப்போலியும்; சாதாரணம் அசாதாரணம்-சாதாரண ஏதுப்போலியும் அசாதாரணம் என்னும் ஏதுப்போலியும்; சபக்க ஏகதேச விருத்தி விபக்க வியாபி-சபக்க ஏகதேச விருத்தி விபக்கவியாபி ஏதுப்போலியும்; விபக்க ஏகதேச விருத்தி சபக்க வியாபி-விபக்க ஏகதேச விருத்தி சபக்க வியாபி என்னும் ஏதுப்போலியும்; உபய ஏகதேச விருத்தி-உபய ஏகதேச விருத்தி என்னும் ஏதுப்போலியும்; விருத்த வியபி சாரி என்று ஆறு-விருத்த வியபிசாரி என்னும் ஏதுப்போலியும் என்று ஆறு வகைப்படும் என்றார் என்க.

(விளக்கம்) சாதாரணம்-பொது. அஃதாவது மேற்கோளைச் சாதித்தற்கு எடுத்துக் கூறும் ஏது மறுதலை மேற்கோளுக்கும் பொதுவாதல். அசாதாரணம் மேற்கோளுக்கு மட்டுமே சிறப்பாதல்; ஏனையவற்றிற்கு விளக்கம் பின் கூறப்படும்.

இதுவுமது

217-223 : சாதாரணம்..............என்னல்

(இதன் பொருள்) சாதாரணம்-சாதாரணம் என்னும் அனைகாந்திக ஏதுப்போலியாவது; ஏது சபக்க விபக்கத்துக்கும் பொதுவாய் இருத்தல்-மேற்கோளைச் சாதித்தற்கு எடுத்துக் கூறும் ஏதுவானது தன் மேற்கோளுக்கும் மறுதலை மேற்கோளுக்கும் பொதுவாக இருத்தலாம். அதுவருமாறு; சத்தம் அநித்தம் அறியப்படுதலின் என்றால்-ஒலி அநித்தமாம் என்னும் தன் மேற்கோள் கூறி அதனை வலியுறுத்தற்கு ஏதுவாக ஏற்றலெனின் அறியப்படுதலின் என்று கூறினால்; அறியப்படுதல்-அறியப்படுதல் என்னும் ஏதுவானது; அநித்தம் நித்தம் இரண்டுக்கும் செறியும்-தான் சாதித்தற்குரிய அநித்தத்திற்கேயன்றி மறுதலை மேற்கோளாகிய நித்தத்திற்கும் பொருந்துமாதலின்; கடம் போல் அநித்தத்து அறிவோ ஆகாசம் போல நித்தத்து அறிவோ என்னல்-குடத்திற்கண் போல அழிதலை அறியும் அறிவோ வானத்தின்கட்போல அழியாமையை அறியும் அறிவோ என்று வினவுமாறு சபக்க விபக்கங்களுக்குப் பொதுவாய் நிற்றல் அறிக என்றார் என்க.

(விளக்கம்) சபக்க விபக்கம்-தன் பக்கமும் மறுதலைப் பக்கமும் ஈண்டு ஏது அறியப்படுதலின் என்றது இவ்வேது தான் சாதித்தற்குரிய அநித்தத்திற் போல அதன் மறுதலையாகிய நித்தத்தின் கண்ணும் செல்லுதல் உணர்க. இவ்வாற்றால் இது சாதாரண அநைகாந்திகம் என்னும் ஏதுப்போலியாயிற்று. சாதாரணம் எனினும் பொது எனினும் ஒக்கும்.

இதுவுமது

223-230 : அசாதாரண...........அநேகாந்திகமாம்

(இதன் பொருள்) அசாதாரணம் ஆவது தான்-அசாதாரண அனைகாந்திகம் என்னும் ஏதுப்போலி ஆவது; உன்னிய பக்கத்து உண்டாம் ஏது-தன் மேற்கோளுக்கமைந்த ஏதுவானது; சபக்கம் விபக்கம் தம்மில் இன்று ஆதல்-தன் துணை மேற்கோளினும் மறுதலை மேற்கோளினும் செல்லாதாதல், அதுவருமாறு; சத்தம் நித்தம் கேட்கப்படுதலின் என்னின-ஒருவன் சத்தம் நித்தப் பொருள் கேட்கப்படுதலால் என்று கூறுமிடத்து; கேட்கப்படல் எனும் ஏது-மேற்கோளைச் சாதிக்கக் கூறிய கேட்கப்படுதல் என்னும் ஏதுவானது; பக்கத்து உள்ளதாயின் அல்லது-தான் எடுத்துக்கொண்ட சத்தம் என்னும் மேற்கோளின்கண் இருப்பதல்லது; சபக்க விபக்கத்து மீட்சித்து ஆதலின்-தற்சார்பான உடன்பாட்டு மேற்கோளினாதல் மறுதலை மேற்கோளினாதல் இல்லாதொழிதலின்; சங்கமம் எய்தி அநேகாந்திகமாம்-பிரதிவாதிக்கும் ஐயத்தை உண்டாக்கி அனைகாந்திகம் என்னும் ஏதுப்போலியாம் என்றார் என்க.

(விளக்கம்) அசாதாரணம் எனினும் சிறப்பு எனினும் ஒக்கும். சத்தத்திற்குக் கேட்கப்படுதல் சிறப்பாதல் உணர்க. சபக்க விபக்கத்துக்கு மீட்சித்து எனவே இதற்குச் சாதன்மிய திட்டாந்தமும் வைதன்மிய திட்டாந்தமும் கிடைக்கப்பெறா என்றராயிற்று. மீட்சித்து-இல்லது. சபக்கமும் விபக்கமும் மேற்கோளை ஐயமின்றித் துணிதற்கு எடுத்துக்காட்டப்படுவன ஆதலின் அவை இல்லாதொழியின் துணியப்படாமல் ஐயம் எய்திப் பலதலைப்படும் என்பார் சங்கயமெய்தி அனைகாந்திகமாம் என்றார்.

இதுவுமது

231-242 : சபக்க.................எனல்

(இதன் பொருள்) சபக்க ஏக தேச விருத்தி விபக்க வியாபி ஆவது-இனி மேற்கோளைச் சாதித்தற்கு எடுத்துக் கூறிய ஏதுவானது சபக்கத்தின்கண் ஓரிடத்தின்கண் உளதாய் விபக்கத்தின்கண் எவ்விடத்தும் உளதாகின்ற அனைகாந்திக ஏதுப்போலி ஆவது; சபக்கத்து ஓரிடத்தெய்தி விபக்கத்து எங்கும் உண்டாதல் ஆகும்-எடுத்துக்காட்டின்கண் ஓரிடத்தே காணப்பட்டு மறுதலை எடுத்துக்காட்டின் கண் எவ்விடத்தும் உளதாதல் ஆகும், அதுவருமாறு; சத்தம் செயலிடைத் தோன்றாது ஆகும் அநித்தம் ஆகலின் என்றால்-ஒருவன் ஒலியானது செயற்கையின்கண் தோன்றாத்தொன்றாம் என்று கூறி அம்மேற்கோளைச் சாதித்தற்கு சத்தம் அநித்தமாதலால் என ஏதுக்கூறினால்; அநித்தம் என்ற ஏது-அநித்தம் என்று கூறிய ஏதுவானது; செயலிடைத் தோன்றாமைக்கு சபக்கம்-சத்தம் செயலின்கண் பிறவாமைக்குச் சபக்கமாகிய; ஆகாசத்தினும் மின்னினும்-வானத்திலும் மின்னலிடத்தினும் ஆகிய இரண்டினும்; மின்னின நிகழ்ந்து ஆகாசத்தில் காணாதாகலின்-மின்னலிடத்தே காணப்பட்டு வானின் கண் காணப்படாதாகலின் சபக்க ஏகதேச விருத்தியாய்; அநித்தம்-அவ்வநித்தம் என்னும் ஏதுவானது; கடாதியின் ஒத்தலில்-குடம் முதலிய விபக்கத்தில் யாண்டும் காணப்படுதலால்; கடம் போல் அழிந்து செயலில் தோன்றுமோ மின்போல் அழிந்து செயலில் தோன்றாதோ எனல்-மறுதலை மேற்கோளாகிய குடம் முதலியவற்றைப் போல அழிதலால் செயலின்கண் பிறக்குமோ அல்லது மின்போல அழிதலால் செயற்கையில் பிறவாதோ என்று ஐயுறுதல் என்றார் என்க.

(விளக்கம்) இதற்குத் தோன்றாது என்னும் துணிபொருளுக்கு அநித்தம் ஏதுவாகலின், அதற்குக் காட்டிய மின்னும் ஆகாசமும் சபக்கமாயிற்று. மின்னலில் சத்தம் செயலிடைத் தோன்றாமல் தானே தோன்றுதலின் அநித்த ஏது. மின்னலில் ஏகதேசத்தில் ஓரிடத்தில் எய்திற்று. ஆகாசத்திற்கு ஏதுவாகா தொழிந்தது காண்க. இனி விபக்கமாகிய குடம் முதலியவற்றில் அநித்த ஏது யாண்டும் பொருந்துதலும் காண்க.

இதுவுமது

243-253 : விபக்க...............எனல்

(இதன் பொருள்) விபக்க ஏகதேச விருத்தி சபக்க வியாபி-விபக்கத்தின்கண் ஓரிடத்து மட்டும் விருத்தியாகி சபக்கத்தின்கண் எங்கும் இருக்கின்ற அனைகாந்திக ஏதுப்போலி என்னும் குற்றமாவது; ஏவி விபக்கத்து ஓர் இடத்து உற்று சபக்கத்து ஒத்து இயறல்-மேற்கோளைச் சாதிக்க எடுத்துக் கூறும் ஏதுவானது மறுதலை மேற்கோளின்கண் ஓரிடத்தே காணப்பட்டு சபக்கத்தின்கண் எங்கும் உளதாதல், அதுவருமாறு; சத்தம் செயலிடைத் தோன்றும்-ஒலியானது தொழிலின்கண் தோன்றுவதாம் என்று கூறி; அநித்தம் ஆதலின் எனின்-அஃது அநித்தப் பொருள் ஆதலின் என்று ஏதுக்கூறுமிடத்து; அநித்த வேது-அங்ஙனம் கூறப்பட்ட அநித்தமாகிய ஏதுவானது; செயலிடைத் தோன்றற்கு-சத்தமானது செயலிடைத் தோன்றும் என்னும் மேற்கோளுக்கு; விபக்க ஆகாயத்தினும் மின்னினும்-மறுதலை மேற்கோளாகிய வானம் மின்னல் என்பவற்றில்; மின்னின் நிகழ்ந்து ஆகாசத்துக் காணாது-மின்னலாகிய ஓரிடத்தில் மட்டும் பொருந்து ஏகாந்தம் அல்ல-தன் பக்கமாகிய குடமுதலியவற்றில் எங்கும் ஆகி ஒருதலைத் துணிவல்லவாதலின்; மின்போல் அநித்தமாய் செயலிடைத் தோன்றாதோ-மின்னல் போல நிலையாமை உடைத்தாய்ச் செயலின்கண் பிறவாதொழிவதோ அல்லது; கடம் போல் அநித்தமாய்ச் செயலிடைத் தோன்றுமோ எனல்-குடம் போல நிலையாப் பொருளாய்ச் செயலின்கண் பிறப்பதோ எனப் பலதலைப்படுதலின் அப்பெயர் பெற்றது என்றார் என்க.

(விளக்கம்) ஏகதேச விருத்தி-ஓரிடத்தே பொருந்துதல். விபக்கம் ஆகிய ஆகாயத்தினும் மின்னினும் ஆகிய இரண்டில் அநித்தம் மின்னலில் மட்டும் காணப்பட்டு ஆகாயத்துக் காணப்படாதாயிற்று. இவை இரண்டும் செயலிடைத் தோன்றாப் பொருளாதலின் செயலிடைத் தோன்றும் சத்தத்திற்கு விபக்கங்கள் ஆயின. அங்ஙனமாகவும் அநித்த ஏது மின்னலில் காணப்பட்டு ஆகாயத்தில் காணப்படாமை உணர்க. அநித்தப் பொருள்களுள் மின்னல் செயலிடைத் தோன்றுததும் குடம் செயலிடைத் தோன்றுதலும் உடைத்தாகலின் அநித்தவேது பலதலைப்படுதல் காண்க.

இதுவுமது

254-266 : உபயை.........எனல்

(இதன் பொருள்) உபயை ஏகதேச விருத்தி-இனி உபயைக தேசவிருத்தி என்னும் ஏதுப்போலியாவது; ஏது சபக்கத்தினும் விபக்கத்தினும் ஆகி-எடுத்துக் கூறப்படுகின்ற ஏதுவானது தன் பக்கத்திலும் மறுதலைப் பக்கத்தினும் காணப்பட்டு; ஓர் தேசத்து வர்த்தித்தல்-இரண்டினும் ஒவ்வோரிடத்தே மட்டும் பொருந்துதல், அதுவருமாறு; சத்தம் நித்தம் அமூர்த்தம் ஆதலின் என்னின்-ஒலியானது நிலையுதல் உடைத்தாம், என்னை? உருவமற்ற பொருள் ஆதலால் என்று ஏதுக்கூறுமிடத்து; அமூர்த்த ஏது-உருவமில்லாமை என்னும் ஏதுவானது; நித்தத்தினுக்கு சபக்க ஆகாச பரமாணுக்களின்-நிலைத்தலுக்குத் தன் பக்கமாகிய ஆகாயம் பரமாணு என்னும் இவற்றில்; ஆகாசத்து நிகழ்ந்து அமூர்த்தமாம்-ஆகாயத்தினிடத்தே நிகழ்ந்து (அமூர்த்தமாம்); மூர்த்தமாம் பரமாணுவின் நிகழாமையானும்-உருவமாகிய பரமாணுவினிடத்தில் பொருந்தாமையானும்; விபக்கமான கடசுகாதுகளில்-இனி மறுதலை மேற்கோளான குடம் இன்பம் முதலியவற்றுள் உருவமற்ற; சுகத்து நிகழ்ந்து கடத்து ஒழிந்தமையினும்-இன்பத்திற்குப் பொருந்தி உருவமுடைய குடம் முதலியவற்றில் பொருந்தாமை யானும், ஏகதேசத்து நிகழ்வது ஏகாந்தம் அன்று-இவ்வாறு சபக்க விபக்கங்களில் ஒவ்வோர் இடத்தேமட்டும் பொருந்தும் ஏது ஒருதலைத் துணிவுடைத்தன்று, என்னை?; அமூர்த்த ஆகாசம் போல நித்தமோ அமூர்த்த சுகம் போல் அநித்தமோ எனல்-அமூர்த்த ஏது உருவமற்ற வானம்போல நித்தத்தைக் காட்டுவதோ அல்லது உருவமற்ற இன்பம் போல அநித்தத்தைக் காட்டுவதோ என்று பலதலைப்படுதலின் இஃது உபமைகதேச விருத்தி என்னும் ஏதுப்போலியாயிற்று என்றார் என்க.

(விளக்கம்) உபயம்-சபக்கம் விபக்கமாகிய இரண்டிடத்தும். ஏகதேசம்-ஓரிடம். வர்த்தித்தல்-பொருந்துதல். சத்தம் நித்தம் என்பது மேற்கோள். அமூர்த்தம்-ஏது. அமூர்த்தம்-உருவ மற்றது; அருவம் எனினுமாம். மூர்த்தம்-உருவம். சுகாதிகள்-இன்பம் முதலிய பண்புகள். ஏகாந்தம் அன்று என்றது-அநைகாந்தம் என்றவாறு.

இதுவுமது

267-274 : விருத்த...........அல்ல

(இதன் பொருள்) விருத்த வியபிசாரி-இனி விருத்த வியபிசாரி என்னும் அநைகாந்திக ஏதுப்போலியாவது; திருந்தா ஏதுவாய் விருத்த ஏதுவிற்கும் இடம் கொடுத்தல்-வாதி திருத்தமில்லாத ஏதுவாக எடுத்துக் கூறுமிடத்து அது தானே பகைவனுக்கேற்ற மாறுபட்ட ஏதுவினை எடுத்துக் கூறுதற்கும் இடங்கொடுப்பது, அதுவருமாறு; சத்தம் அநித்தம் செயலிடைத் தோன்றலின் ஒத்தது எனின்-வாதியானவன் ஒலியானது நிலையாமை உடையது செயலின்கண் பிறத்தலால் எமது மேற்கோளுக்குப் பொருந்திற்கு என்று கூறுமிடத்து அச்செயலிடைத் தோன்றற்கு; சபக்கமாய் உள்ள கடாதி நிற்க-அங்ஙனம் செயலின்கண் பிறத்தற்குத் தன் மேற்கோளுக்கியைந்த குடம் முதலியன இருக்க அவற்றைக் கூறாமல்; சத்தம் அநித்தம் கேட்கப்படுதலின்-ஒலியானது நிலையாமை உடைத்து செவியினால் கேட்கப்படுதலால் என ஏதுக்கூறி; சத்தத்துவம் போல் என சாற்றிடுதல்-ஒலித்தன்மை போல் என எடுத்துக்காட்டுதல், இவற்றில் கேட்கப்படுதல் என்னும் ஏதுவானது மேற்கோளை வலியுறுத்தும் சபக்க விபக்கங்களைப் பெறமாட்டாமையால் திருந்தா ஏதுவாய்; இரண்டினும் சங்கயமாய்-சாத்தியத்தினும் ஏதுவினும் ஐயமுண்டாக்கி அனைகாந்திகம் என்னும் ஏதுப்போலியாம் என்றார் என்க.

(விளக்கம்) சத்தம் அநித்தம் என்று சாதித்தற்கு செயலிடைத் தோன்றல் என்னும் ஏதுவும் சபக்கமாய் உள்ள குடம் முதலியன இருக்கவேயும் அவற்றைக் கூறாமல் அப்பொருளைச் சாதித்தற்குக் கேட்கப்படுதல் என்று ஏதுக்கூறி அவ்வேதுவை வலியுறுத்தும் எடுத்துக்காட்டு இன்மையில் சத்தம் அநித்தம் என்னும் தான் சாதித்தற்குரிய சத்தத்துவத்தையே எடுத்துக்காட்டாகக் கூறுதல். அங்ஙனம் கூறிய வழி ஏதுவும் எடுத்துக்காட்டும் ஆகிய இரண்டினும் ஐயமேற்பட்டு ஒரு தலையாகத் துணியப்படாமல் அநைகாந்திகமாம் என்றவாறு; இதற்கு இங்ஙனம் கூறாது பொருந்தா உரை கூறுவாரும் உளர்.

இதுவுமது

275-280 : விருத்தம்............வகையதாகும்

(இதன் பொருள்) விருத்தம் தன்னைத் திருத்தக விளம்பில்-விருத்தம் என்னும் ஏதப்போலியை அழகாகச் சொல்லுமிடத்து; தன்ம சொரூப விபரீத சாதனம் தன்ம விசேட விபரீத சாதனம்....... என்ன நான்கு வகையதாகும்-தன்ம சொரூப விபரீத சாதனம் முதலாக தன்மி விசேட விபரீத சாதனம் என்று சொல்லப்பட்ட நான்கு வகைப்படும் என்றார் என்க.

(விளக்கம்) விருத்தம்-முரண். தன்மச் சொரூபம் பண்பின் இயல்பு. விபரீதம்-முரண். விசேடம்-சிறப்பு. தன்மி-குணி; சாதனம்-ஏது.

தன்மச் சொரூப விபரீத சாதனம்

280-287 : அத்தன்மை.........விபரீதம்

(இதன் பொருள்) அத்தன்ம சொரூப விபரீத சாதனம்-அங்ஙனம் கூறப்பட்ட தன்ம சொரூப விபரீத சாதனம் என்னும் விருத்த ஏதுப்போலி ஆவது; சொன்ன ஏதுவில் சாத்திய தன்மத்து உருவங்கெடுதல்-வாதி. மேற்கோளைச் சாதித்த்கு எடுத்துச் சொன்ன ஏதுவின்கண் துணி பொருளின் இயல்பாகிய உருவம் அழிதல், அதுவருமாறு; சத்தம் நித்தம்-ஒலியானது நிலையுதலுடையது என மேற்கோள் கூறி அதனை வலியுறுத்துதற்கு ஏதுவாக; பண்ணப்படுதலின் என்றால்-பண்ணப்படுவதனால் என்று கூறினால்; பண்ணப்படுவது அநித்தம் ஆதலின்-பண்ணப்படுகின்ற பொருள் நிலையாமை உடைத்தாதலின்; பண்ணப்பட்ட ஏது-தான் எடுத்துக் கூறிய பண்ணப்படுதலால் என்னும் ஏதுவானது; சாத்திய தன்ம நித்தத்தைவிட்டு-தான் எடுத்துக்கூறிய துணிபொருளின் தன்மையாகிய நிலையுதலை ஒழித்து அதற்கு முரணாகிய; அநித்தம் சாதித்தலால் விபரீதம்-நிலையாமையை வற்புறுத்துதலால் இது விருத்த ஏதுப்போலியாயிற்று என்றார் என்க.

(விளக்கம்) தன்மச் சொரூபம்-பண்பியல்பு. சாத்திய தன்மம்-துணி பொருளின் தன்மை. சாத்திய தன்மம் நித்தம்-தான் சாதிக்கக் கருதிய பொருள் தன்மையாகிய நித்தம் என்க. விபரீதம் எனினும் விருத்தம் எனினும் ஒக்கும்.

தன்ம விசேட விபரீத சாதனம்

288-302 : தன்ம..........விபரீதம்

(இதன் பொருள்) தன்ம விசேட விபரீத சாதனம்-இனி, தன்ம விசேட விபரீத சாதனம் என்னும் விருத்த ஏதுப்போலியாவது; சொன்ன ஏது-மேற்கோளைச் சாதித்தற்கு எடுத்தோதிய ஏதுவானது; சாத்திய தன்மம் தன்னிடை வசேடங்கெட சாதித்தல்-துணியப்படும் பொருளினது பண்பின் சிறப்புக் கெடும்படி சாதித்தற்கு உரியதாதல், அதுவருமாறு; கண் முதல் ஓர்க்கும் இந்திரியங்கள் எண்ணின்-கண் முதலிய உயிரின் அறிவுக் கருவிகளை ஆராயுமிடத்து அவை; பரார்த்தம்-உயிர்க்கு வேறாகிய (உயிரில்) பொருள்களாம் என்று தன் மேற்கோள் கூறி; தொக்கு நிற்றலினால்-அவை உயிரோடு சேர்ந்து நிற்றலால் என ஏதுக்கூறி; சயன ஆசனங்கள் போல என்றால்-படுக்கையும் இருக்கையும் போல என்று எடுத்துக் காட்டும் கூறியவிடத்து; சயன சனத்தின் பரார்த்தம் போல் கண்முதல் இந்தியங்களையும் பரார்த்தத்தில் சாதித்து-படுக்கையும் இருக்கையும் உயிர்க்கு வேறாதல் போன்று கண் முதலிய கருவிகளையும் வேறுபொருள்களாகச் சாதித்து; சயன ஆசன வானைப் போல ஆகி-படுக்கையையும் இருக்கையையும் தனக்கு வேறாகிய உமைமைகளாகப் பெற்றிருப்பான் ஒருவனைப் போன்று ஆகும்படி; கண் முதல் இந்தியத்துக்கும் பரனாய் சாதிக்கிற நிர் அவயமாய் உள்ள ஆன்மாவை-கண் முதலிய கருவிகளுக்கும் வேறான பொருளாய்ச் சாதித்தற்குரிய அவயவப் பகுப்பற்ற உயிரை; சா அவயமாக சாதித்து-உறுப்புகளோடு கூடியதாகச் சாதிக்குமாற்றால்; சாத்திய தன்மத்தின் விசேடங்கெடுத்தலின் விபரீதம்-துணி பொருளின் சிறப்புப் பண்பை அழித்து விடுதலால் இது விருத்தம் என்னும் ஏதுப்போலியாம் என்க.

(விளக்கம்) தன்ம விசேடம்-துணிபொருளின் சிறப்பு. சொன்ன ஏது-சாதித்தற்கு எடுத்துச் சொன்ன ஏது. கண் முதலிய கருவிகளையும் சயனாசனங்கள் போன்ற கருவிகளோடு ஒன்றாகத் தொகுத்துக் கூறி இவை ஆன்மாவிற்கு வேறாகும் என்னாமல் தொக்கு நிற்றலின் எனக்கூறிய ஏது இவற்றை ஆன்மாவின் உறுப்புகளாகச் சாதித்துவிட்டது. சயனாசனவான்-சயனாசனமாகிய உடைமைகளை உடையவன் ஆகி. ஆக-இவ்வேதுவினால் சாத்திய தன்மமாகிய அவயவ மின்மையாகிய சிறப்புக் கெட்டது; அதனால் இது விருத்த ஏதுப்போலியாயிற்று என்க.

தன்மிச் சொரூப விபரீத சாதனம்

303-312 : தன்மி.............விபரீதம்

(இதன் பொருள்) தன்மிச் சொரூப விபரீத சாதனம்-துணி பொருளின் இயல்பினை வேறுபடுத்துவதாகிய ஏதுப்போலியாவது; தன்மி உடைய சொரூப மாத்திரத்தினை ஏதுத்தானே விபரீதப்படுத்தல்-சாதித்தற்குரிய பொருள் இயல்பை மட்டும் அதனைச் சாதித்தற்கு எடுத்துக்கூறிய ஏதுவே மாறுபடுத்திவிடுதலாம், அதுவருமாறு; பாவம் திரவியம் கன்மம் அன்று குணமும் அன்று-உண்மையானது பொருளும் அன்று தொழிலும் அன்று பண்பும் அன்று, என்னை; எத்திரவியம் ஆம் எக்குணம் கன்மம் உண்மையின் வேறாதலால்-எப்பொருளாயினும் எப்பண்பாயினும் எத்தொழிலாயினும் உண்மைத் தன்மையின் வேறுதலால்; அவற்றிற்குப் பொதுவாகிய உண்மைத் தன்மையில் வேறாகத் தனித்திருத்தலால்; சாமானிய விசேடம் போல் என்றால்-மேற்கோளும் ஏதுவும் கூறிப் பொதுவும் சிறப்பும் போல என்று திட்டாந்தமும் கூறுமிடத்து; பொருளும் குணமும் கருமமும் ஒன்றாய் நின்று அவற்றின் இடை உண்மை வேறு ஆதலால்-பொருளும் குணமும் தொழிலும் என ஒருங்கு எண்ணப்பட்டு நின்ற பொருள்களின்கண் உள்ள உண்மைத் தன்மையினும் வேறாகப் பொது உண்மைத்தன்மை உடைமையால்; என்று காட்டப்பட்ட ஏது-என்று கூறப்பட்ட ஏதுவின்கண்; மூன்றின் உடை உண்மை ஏது படுத்தும்-பொருள் முதலிய மூன்று பொருள்களினிடத்தும் உள்ள ஏதுவாகக் காட்டப்பட்ட; பொதுவாம் உண்மை-மூன்றிற்கும் பொதுவாய் உள்ள உண்மைத்தன்மை-சாத்தியத்து இல்லாமையினும்-சாதிக்கப்படுகின்ற பாவத்தின் கண் இல்லாமையானும்; திட்டாந்தத்தில் சாமானியம் விசேடம் போக்கி பிறிது ஒன்று இல்லாமையானும்-எடுத்துக்காட்டின்கண் கூறப்பட்ட பொதுவும் சிரப்புமாகிய உண்மைத்தன்மையை விட்டுச் சாத்தியமாகிய உண்மை வேறென்று அல்லாமையானும் ஏதுவாக எடுத்துக் கூறப்பட்ட உண்மைத் தன்மையினின்றும் சாதிக்கப்படும் உண்மைத்தன்மை வேறோர் உண்மைத்தன்மை அல்லாமையானும்; பாவம் என்று பகர்ந்த தன்மியினை-உண்மை என்று சாதித்த துணி பொருளைச் சாதிக்கும் ஏதுவின்மையால்; அபாவம் ஆக்குதலால் விபரீதம்-இல்பொருளாக்குதலால் இது தன்மியின் இயல்பையே கெடுத்தொழிந்தமையின் விருத்த ஏதுப்போலியாயிற்று என்றார் என்க.

(விளக்கம்) வைசேடிகர் திரவியம் குணம் கன்மம் சாமானியம் விசேடம் சமவாயம் எனப்பொருள் ஆறு என்பர். இவற்றுள் சாமானியம் மகா சாமானியம் அவாந்தர சாமானியம் பரசாமானியம் என்றும் வாளாது முதல் பொதுவென்றும் கூறுவர். இவற்றுள் சாமானியம் பொருள்களின் உண்மைத் தன்மை முதலியவற்றை உணர்தற்குக் காரணம் என்பர். சாமானியம் எனினும் உண்மைத் தன்மை எனினும் ஒக்கும். இங்கு பாவம் என்பது, திரவியம் கன்மம் குணம் என்னும் இவற்றின் உண்மையையேயாம். அவ் உண்மையைப் பொருள் என்று சாதித்தற்கு எடுத்த ஏதுவானது சாதிக்க வேண்டிய அவ்வுண்மையே ஆதலின், இது விருத்த ஏதுப்போலி ஆயிற்று. ஏதுவாகிய உண்மை துணி பொருளின் வேறாகாமையின் அதனது சிறப்பை இவ்வேது கெடுத்தல் அறிக. பொதுவாகிய இப்பாவத் தன்மைக்குப் பிறிதோர் ஏதுவின்மையின் அது சாதிக்கப்படாது இல்பொருளாய் ஒழிந்தது என்க.

தன்மி விசேட விபரீத சாதனம்

313-325 : தன்மி..............கெடுத்தது

(இதன் பொருள்) தன்மி விசேட விபரீத சாதனம்-துணிபொருளின் சிறப்புத் தன்மையை வேறுபடுத்தும் விருத்த ஏதுப்போலியாவது; தன்மி விசேட அபாவம் சாதித்தல்-துணிபொருளின் உண்மையைச் சாதித்தற்கு மாறாக அதன் இன்மையைச் சாதித்தலாம், அதுவருமாறு: முன்னம் காட்டப்பட்ட ஏதுவே-பாவத் திரவியம் குணம் கன்மம் ஆகிய மூன்றும் உண்மையின் வேறுதலால் என முன்னம் காட்டிய ஏதுவே; பாவமாகின்றது-உண்மையாகின்றது; கருத்தா உடைய கிரியையும் குணமுமாம் அதனை-வாதியினுடைய தொழிலினது உண்மைத் தன்மையும் குணத்தின் உண்மைத் தன்மையும் ஆகிய அவ்வுண்மையையே; விபரீதம் ஆக்கியது ஆதலால்-வேறுபடுத்தி அவற்றையும் இல்பொருளாக்கியது ஆதலால்; தன்மி விசேடம் கெடுத்தது-அவ்வாதி சாதிக்கத் துணிந்த உண்மைத் தன்மையின் சிறப்பைக் கெடுத்தது ஆதலால் அதுவே தன்மி விசேட விபரீத சாதனம் என்னும் விருத்த ஏதுப்போலியாம் என்றார் என்க.

(விளக்கம்) முதலில் தன்மியின் இயல்பினை விருத்தமாக்கிய அவ்வேதுவே தன்மியாகிய பாவத்தை அபாவமாக்கி அதன் உள்பொருளாம் சிறப்பைக் கெடுத்து இல்பொருள் ஆக்குதலின் இஃது அப்பெயர் பெற்றது.

திட்டாந்தப் போலி

325-330 : தீய............ஆகும்

(இதன் பொருள்) தீய எடுத்துக் காட்டாவனதாம்-நன்மையல்லாத எடுத்துக்காட்டுகள் எனச் சொல்லப்படுவனவே; திட்டாந்த ஆபாசங்கள்-திட்டாந்த ஆபாசங்கள் என்றும் சொல்லப்படும்; திட்டாந்தம் இருவகைப்படும் என்று முன் கூறப்பட்டன-எடுத்துக்காட்டுகள் இரண்டு வகைப்படும் என்று முன்பே கூறப்பட்டன; அவற்றுள் இங்கண்-அவ்விரண்டனுள் இவ்விடத்தே; சாதன்மிய திட்டாந்த ஆபாசம் ஓதிக ஐந்து வகை உளதாகும். சாதன்மிய திட்டாந்தப் போலியை விரித்தோதினால் ஐந்து வகைப்படும் என்றார் என்க.

(விளக்கம்) எடுத்துக்காட்டு திட்டாந்தம் என்பன ஒரு பொருள் பல சொல். தீய எடுத்துக்காட்டு எனினும் திட்டாந்த ஆபாசம் எனினும் திட்டாந்தப்போலி எனினும் ஒக்கும். முன்னர் (136-137) ஏதமில் திட்டாந்தம் இருவகைய சாதன்மியம் வைதன்மியம் என என்று ஓதினமை கருதி திட்டாந்தம் இருவகைப்படும் என்று முன் கூறப்பட்டன என்றார். இங்கண் என்றது அவற்றின் போலிகளைக் கூறத்தொடங்குகின்ற இவ்விடத்தே என்றவாறு. அவற்றுள் என்றது சாதன்மிய வைதன்மிய திட்டாந்தங்கள் என்னும் அவ்விரண்டனுள் வைத்து என்றவாறு.

இனி, அவற்றின் போலிவகை கூறுகின்றனர். சாதன்மிய திட்டாந்தப் போலி விரிவகையால் ஐந்து வகைப்படும் என்க.

சாதன்மிய திட்டாந்தப் போலி வகை

331-334 : சாதன..............என்ன

(இதன் பொருள்) சாதன தன்ம விகலமும் சாத்திய தன்ம விகலமும் உபயதன்ம விகலமும்-சாதன தன்மம் குறைவதும் சாத்திய தன்மம் குறைவதும் சாதன சாத்தியமாகிய இரண்டின் தன்மம் குறைவதும்; அநன்னுவயம் விபரீதான்னுவயம் எனை-அநன்னுவயமும் விபரீதான்னுவயமும் என்று ஐந்து வகைப்படும்.

(விளக்கம்) விகலம்-குறை. தன்மம்-பண்பு. விபரீதம்-மாறுபாடு.

வைதன்மிய திட்டாந்தப் போலி வகை

335-339 : வைதன்மிய.........என்ன

(இதன் பொருள்) வைதன்மிய திட்டாந்தம் ஆபாசமும் ஐவகைய-மறுதலை எடுத்துக்காட்டுப் போலியும் ஐந்து வகைப்படும், அவை; சாத்திய அவியாவிருத்தி சாதன அவியாவிருத்தி-சாத்திய அவியாவிருத்தி என்றும் சாதன அவியாவிருத்தி என்றும்; உபயா அவியாவிருத்தி அவ்வெதிரேகம் விபரீத வெதிரேகம் என்ன-உபயா அவியாவிருத்தி என்றும் அவ்வெதிரேகம் விபரீதவெதிரேகம் என்றும் ஐந்து வகைப்படும் என்றார் என்க.

(விளக்கம்) எனவே திட்டாந்தப் போலிகள் பத்துவகைப்படும் என்றாராயிற்று. வைதன்மிய திட்டாந்தம் எதிர்மறை எடுத்துக்காட்டு. ஆபாசமும் என்புழி உம்மை இறந்தது தழீஇயது; என்னை? சாதன்மிய திட்டாந்தமே அல்லாது என்பது கருத்தாகலின் சாத்திய அவியாவிருத்தி சாத்தியத்தின்கண் வியாப்பியமும் விருத்தியும் இல்லது என்றவாறு. சாதனத்தின்கண் வியாப்பியமும் விருத்தியும் இல்லாதது சாதன வியாவிருத்தி என்க. உபயம்-சாத்தியசாதனம் இவ்விரண்டிலும் வியாத்தியும் விருத்தியும் இல்லது என்க. அவ்வெதிரேகம் எதிர்மறை இல்லது. விபரீத வெதிரேகம்-மாறுபாடான எதிர்மறை.

திட்டாந்தப் போலி விளக்கங்கள்

(1) சாதன்மிய திட்டாந்தப் போலி

339-348 : இவற்றுள்.................குறையும்

(இதன் பொருள்) இவற்றுள் சாதன தன்ம விகலமாவது-இத்திட்டாந்தப் போலிகளுள் வைத்துச் சாதன்மிய திட்டாந்தத்தில் சாதன தன்ம விகலம் என்னும் போலியாவது; திட்டாந்தத்தில் சாதனங் குறைவது-எடுத்துக்காட்டின் கண் ஏதுவின் தன்மை குறைவதாம், அதுவருமாறு; சத்தம் நித்தம் அமூர்த்தம், ஆதலால்-ஒலி நிலையுதலுடையது அருவமாகலின் என்று மேற்கோளும் ஏதுவும் கூறி எடுத்துக்காட்டாக; யாதொன்று யாதொன்று அமூர்த்தம் அது நித்தம் ஆதலால்-யாதொரு பொருள் யாதொரு பொருள் அருவமோ அது நிலையுதலுடையதாம், இங்ஙனமாதலின்; காண்புற்றது பரமாணுவில் எனில்-இவ்வுண்மை காணப்பட்டது பரமாணுவிடத்தில் எனத் திட்டாந்தம் காட்டினால்; திட்டாந்தம் பரமாணு நித்தத்தோடு மூர்த்தம் ஆதலால்-திட்டாந்தமாகக் காட்டப்பட்ட பரமாணுவானது நிலைத்தல் தன்மையோடு உருவமும் உடையது ஆதலால்; சாத்திய தன்ம நித்தத்துவம் நிரம்பி-துணி பொருளின் பண்பாகிய நிலைத்தல் தன்மை நிரம்பி; சாதன தன்ம அமூர்த்தத்துவம் குறையும்-ஏதுவின் பண்பாகிய உருவமில்லாத்தன்மை குறைவதாம், ஆகவே இத்திட்டாந்தம் சாதன தன்மவிகலம் என்னும் போலியாயிற்று என்றார் என்க.

(விளக்கம்) சாதன தன்ம விகலம் ஏதுவின் பண்பு குறைதல். அமூர்த்தம் என்னும் ஏது பரமாணு என்னும் திட்டாந்தம் உருவ முடைத்தாகலின் குறைதல் காண்க. நித்தத்துவம்-நிலைத்தல் தன்மை. அமூர்த்தத்துவம்-உருவமில்லாத தன்மை.

இதுவுமது

349-358 : சாத்திய............குறையும்

(இதன் பொருள்) சாத்திய தன்ம விகலமாவது-சாத்திய தன்ம விகலம் என்னும் சாதன்மிய திட்டாந்தப் போலியாவது; காட்டப்பட்ட திட்டாந்தத்தில்-மேற்கோளை வற்புறுத்துதற்கு எடுத்துக்காட்டப்பட்ட சாதன்மிய திட்டாந்தத்தின்கண்; சாத்திய தன்மம் குறைவுபடுதல்-துணி பொருளுக்குரிய பண்பு குறைவுபடுதலாம், அதுவருமாறு; சத்தம் நித்தம் அமூர்த்தம் ஆதலால்-ஒலி நிலைத்தல் தன்மைத்து அருவப்பொருள் ஆதலால் என மேற்கோளும் ஏதுவும் கூறி அதற்கு எடுத்துக்காட்டாக; யாதொன்று யாதொன்று அமூர்த்தம் அது நித்தம் பத்தி போல என்றால்-யாதொரு பொருள் யாதொரு பொருள் உருவம் அற்றதோ அப்பொருள் நிலைத்தல் உடையது புத்தியைப் போல் என்று கூறினால்; திட்டாந்தமாகக் காட்டப்பட்ட புத்தி-ஈண்டு எடுத்துக்காட்டாகக் கூறப்பட்ட புத்தியானது; அம்மூர்த்தமாகி நின்றே அநித்தம் ஆதலால்-உருவமற்றதாம் இருந்தே நிலையாமையும் உடைத்தாதலின்; சாதன அமூர்த்தத்துவம் நிரம்பி சாத்திய நித்தத்துவம் குறையும்-ஏதுப்பண்பாகிய உருவமில்லாத் தன்மை முற்றுப்பெற்றுத் துணி பொருளின் பண்பாகிய நிலைத்தல் தன்மை குறையும், ஆதலால் இது சாத்தியதன்ம விகலம் என்னும் குற்றமுடைய சாதன்மிய திட்டாந்தப் போலியாயிற்று என்றார் என்க.

(விளக்கம்) திட்டாந்தம்-சாதன்மிய திட்டாந்தம். சாத்திய தன்மம்-ஈண்டு நித்தத்துவம். புத்தி-திட்டாந்தம். புத்தி-அருவம் ஆதலின் ஏதுத் தன்மம் ஆகிய அமூர்த்தத்துவம் முற்றியது. சாத்திய தன்மமாகிய நித்தத்துவம் புத்தி அழிபொருள் ஆதலின் குறைந்தது என்றவாறு.

இதுவுமது

359-366 : உபய...........காட்டுதல்

(இதன் பொருள்) உபய தன்மவிகலமாவது-உபய தன்மவிகலம் என்னும் சாதன்ம திட்டாந்தப் போலியாவது; காட்டப்பட்ட திட்டாந்தத்திலே-வாதியால் எடுத்துக் காட்டப்பட்ட திட்டாந்தத்தின் கண்; சாத்தியம் சாதனம் இரண்டும் குறைதல்-துணிபொருளின் பண்பும் ஏதுவின் பண்பும் ஆகிய இரண்டும் குறைதலாம்; அன்றியும் அதுதான்-அதுவல்லாமல் அத்திட்டாந்தம் தானும், சன்னும் அசன்னும் என்று இருவகையாம்-உள்ளதும் இல்லதும் என இருவகைப்படும்; இவற்றுள் சன்னு உள உபயதன்ம விகலம் என்னும் சாதன்மிய திட்டாந்தப் போலியாவது; உள்ள பொருட்கண் சாத்திய சாதனம் கொள்ளும் இரண்டும் குறையக் காட்டுதல்-உள்பொருளின் கண் துணி பொருளும் ஏதுவும் ஆகிய இரண்டும் கொண்டுள்ள பண்புகள் குறையும்படி எடுத்துக்காட்டுக் கூறுதல் என்க.

(விளக்கம்)  இதன்கண் உபயதன்ம விகலம் என்னும் திட்டாந்தப் போலி சாதன சாத்தியங்கள் இரண்டினுடைய பண்பும் குறையும்படி திட்டாந்தம் காட்டுதல் இதுவேயுமன்றி இத்திட்டாந்தப் போலி உள்பொருளும் இல்பொருளும் பற்றி இரண்டு வகைப்படும் என்றாராயிற்று சன்னு-உள்பொருள். அசன்னு-இல்பொருள். இனி, உள்பொருள் பற்றி வருகின்ற உபயதன்ம விகல திட்டாந்தப் போலிக்கு விளக்கங்கூறுவார் உள்பொருளின்கண் சாத்திய தன்மம் குறையக் காட்டுவது என்றவாறு.

இதுவுமது

367-372 : சத்த..........குறையும்

(இதன் பொருள்) சத்த நித்தம் அமூர்த்தம் ஆதலான்-ஒலி நிலையுதல் உடையது என மேற்கோள் கூறி, அதனை வலியுறுத்தற்கு அது அருவப்பொருள் ஆதலால் என ஏதுவும் கூறி அதற்குத் திட்டாந்தமாக; யாதொன்று யாதொன்று அமூர்த்தம் அது நித்தம் கடம்போல் எனின்-யாதொரு பொருள் யாதொரு பொருள் அருவப்பொருளோ  அப்பொருள் நிலைத்தலுடைய பொருளாம் குடம்போல என்று கூறினால்; திட்டாந்தமாகக் காட்டப்பட்ட குடம்தான் உண்டாகி-ஈண்டுத் திட்டாந்தமாக எடுத்துக் காட்டப்பட்ட குடம் தானும் உள்பொருளாய் அதன்கண்; சாத்தியமாய் உள நித்தத்துவமும் சாதனமாய் உள அமூர்த்தத்துவமும் குறையும்-துணிபொருளாய் உள்ள நிலைத்தல் தன்மையும் ஏதுவாய் உள்ள அருவத்தன்மையும் குறைவனவாம் ஆதலால் இது உள்பொருளின்கண் உபயதன்மவிகலம் என்னும் சாதன்மிய திட்டாந்தப்போலி ஆயிற்று என்றார் என்க.

(விளக்கம்) கடம்-குடம். குடம் ஈண்டு சாதன்மிய திட்டாந்தத்தின் கண் உள்பொருளாய் உள்ள திட்டாந்தம் என்க.

இதுவுமது

373-384 : அசன்னா.............குறையும்

(இதன் பொருள்) அசன்னா உள்ள உபயதன்ம விகலம்-இல்பொருளின்கண் வருகின்ற உபயதன்ம விகலம் என்னும் சாதன்மிய திட்டாந்தப் போலியாவது; இல்லாப்பொருட்கண் சாத்திய சாதனம் என்னும் இரண்டும் குறையக்காட்டுதல்-இல்பொருளைச் சாத்திய சாதனம் என்னும் இரண்டனுடைய பண்புகளும் குறையும்படி திட்டாந்தமாக எடுத்துக்காட்டுதலாம், அதுவருமாறு; சத்தம் அநித்தம் மூர்த்தம் ஆதலால்-ஒலி நிலையாமை உடைத்து உருவப்பொருள் ஆதலால் என மேற்கோளும் எதுவும் கூறி அதற்கு எடுத்துக்காட்டாக; யாதொன்று யாதொன்று மூர்த்தம் அது அநித்தம் ஆகாசம் போல் எனும் திட்டாந்தத்து யாதொரு பொருள் யாதொரு பொருள் உருவமுடையதோ அப்பொருள் நிலையாத்தன்மை உடையதாம் வானம் போல என்று கூறப்பட்ட திட்டாந்தத்தின்கண்; சாத்தியதன்மமாய் உள்ள அநித்தமும் சாதன தன்மமாய் உள்ள மூர்த்தமும் இரண்டும்-துணிபொருளின் பண்பாயிருக்கின்ற நிலையாத்தன்மையும் ஏதுவின் பண்பாய் இருக்கின்ற உருவமும் ஆகிய இரண்டும்; ஆகாசம் அசத்து என்பானுக்கு அதன்கண் இன்மையானே குறையும்-ஆகாயம் இல்பொருள் என்பவனுக்கு அவ்விரண்டும் இல்லாமையாலே குறைவனவாம், இனி; உண்டென்பானுக்கு ஆகாசம் நித்தம் அமூர்த்தமாதலால் அவனுக்கும் குறையும்-ஆகாயம் உள்பொருள் என்பவனுக்கோ அவ்வாகாயம் நிலைத்தல் தன்மை உடையதாய் அருவப்பொருளும் ஆதலால் அத்தகையவனுக்கும் சாதன சாத்திய தன்மங்கள் இரண்டும் குறையும் ஆதலால் இஃது இல்பொருளின்கண் வந்த உபயதன்ம விகலம் என்னும் திட்டாந்தப் போலி ஆம் என்றார் என்க.

(விளக்கம்) அசன்னு-இல்பொருள். சாத்திய சாதனம் என்னும் இரண்டின் தன்மங்களும் குறையக் காட்டுதல். மூர்த்தம்-உருவமுடைய பொருள். ஆகாசம்-பவுத்தர்களுக்கும் இல்பொருள். எனவே ஈண்டுப் பிரதிவாதியாய் நின்றவன் பவுத்தன் என்பது தோன்ற ஆகாசம் அசத்தென்பானுக்கு என்றார். ஆகாசம் உண்டென்பவன் சாங்கியன் என்க. சாங்கியனுக்கு ஆகாயம் நித்தமும் அருவமும் ஆதலால் அவனுக்கும் ஆகாயம் என்னும் திட்டாந்தத்தின்கண் சாத்திய தன்மமும் சாதன தன்மமும் குறைதல் உணர்க.

அநன்னுவயம்

385-392 : அநன்னு........ஆகும்

(இதன் பொருள்) அநன்னுவயமாவது-அநன்னுவயம் என்னும் சாதன்மிய திட்டாந்தப்போலியாவது; சாதன சாத்தியம் தம்மில் கூட்டம் மாத்திரம் சொல்லாதே-ஏதுவும் துணிபொருளும் தம்முள் இயைந்திருக்கும் கூட்டத்தை மட்டும் சொல்லாமல்; இரண்டனுடைய உண்மையைக் காட்டுதல்-அவ்விரண்டனுடைய உண்மைத்தன்மையை மட்டும் திட்டாந்தங்காட்டுதல், அதுவருமாறு; சத்தம், அநித்தம் கிருத்தம் ஆதலின்-ஒலி அழியும் இயல்பிற்று எழுப்பப்படுதலால் எனச் சாத்தியமும் ஏதுவும் கூறி; யாதென்று யாதொன்று கிருத்தம் அது அநித்தம் எனும் அன்னுவயம் சொல்லாது-யாதொரு பொருள் யாதொரு பொருள் பண்ணப்படுமோ அப்பொருள் அழியும் தன்மைத்தாம் என்று கூறவேண்டிய நியமமான உடனிகழ்ச்சியைச் சொல்லாமல்; குடத்தின்கண்ணே கிருத்த அநித்தம் காணப்பட்ட என்றால் அன்னுவயம் தெரியாது ஆகும்-திட்டாந்தமாகக் குடத்தின் கண்ணே செயலும் அழிவும் காணப்பட்டன என்றால் அன்னுவயம் தெரியாதாகும் சாத்திய சாதனங்களின் தன்மங்களுக்கு நியதமான உடனிகழ்ச்சி விளக்கமாகா தொழியும் ஆதலால் இஃது அப்பெயர் பெற்றது என்றார் என்க.

(விளக்கம்) திட்டாந்தத்தினும் அன்னுவயமே துணி பொருளைச் சாதித்தற்குச் சிறப்புடைத்தாகலின் அதனைக் கூறாமல் திட்டாந்தங்கூறுதல் பொருளை நன்கு விளக்காமையின் இத்திட்டாந்தம் போலி என்றவாறு. கிருத்தமும் அநித்தமும் காணப்பட்ட என்புழி, காணப்பட்ட என்பது அகர ஈற்றுப் பலவறிச்சொல்.

விபரீதான்னுவயம்

393-401 : விபரீதம்.............ஆம்

(இதன் பொருள்) விபரீத அன்னுவயம்-விபரீதான்னுவயம் என்னும் சாதன்மிய திட்டாந்தப போலியாவது; வியாபகத்துடைய அன்னுவயத்தாலே-சாத்திய தன்மத்தின் அன்னுவயத்தைக் கொண்டே; வியாப்பியம் விதித்தல்-சாதன தன்மமாகிய வியாப்பித்தை நிலைநாட்டுதல், அதுவருமாறு; சத்தம் அநித்தம் கிருத்தத்தால் எனின்-ஒலியானது அழியும் இயல்பிற்று பண்ணப்படுதலால் என்றக்கால்; யாதொன்று யாதொன்று கிருத்தம் அநித்தம் என-யாதொரு பொருள் யாதொரு பொருள் பண்ணப்படுவதோ அப்பொருள் அழியும் இயல்பிற்றும் ஆம் என்று வியாத்தியைக் காட்டி; வியாப்பியத்தால் வியாபகத்தைக் கருதாது-சாதன தன்மமாகிய நியதமான உடனிகழச்சியைக் கொண்டு காரணமாகிய சாத்திய தன்மத்தைத் துணியாமல்; யாதொன்று யாதொன்று அநித்தம் அது கிருத்தம் என-யாதொரு பொருள் யாதொரு பொருள் அழியும் இயல்பிற்றே அப்பொருள் பண்ணப்படும் பொருளாம் என்று; வியாபகத்தால் வியாப்பியத்தைக் கருதுதல்-வியாபகமாகிய சாத்திய தன்மத்தைக் கொண்டு வியாப்பியமாகிய சாதன தன்மத்தைக் குறித்தல்; அப்படிக் கருதின் வியாபகம் வியாப்பியத்தை இன்றியும் நிகழ்தலின் விபரீதமாம்-அங்ஙனம் குறிக்குமிடத்து சாத்திய தன்மம் ஆகிய வியாபகம் சாதன தன்மமாகிய வியாப்பியம் இல்லாமலே நிகழும் என்றாதலின் முரணும், ஆதலின் இது விபரீதான்னுவயம் திட்டாந்தபோலி ஆயிற்று என்றார் என்க.

(விளக்கம்) கிருத்தப்பொருள் அநித்தம் என்று கருதுதலே முறை. ஈண்டு கிருத்தம் சாதன தன்மம். அநித்தம் சாத்திய தன்மம். ஆதலால் சாத்திய தன்மத்தைக் கொண்டு சாதன தன்மத்தை நிலைநாட்டியபடியாம். இனி, இதற்குத் திட்டாந்தமாக வருவது கிருத்தப்பொருள் ஆம், இங்ஙனம் கூறுவதே முறையாகவும் இதற்கு மாறாகத் திட்டாந்தமாக அநித்தப் பொருளைக் கூறின் அத்திட்டாந்தம் அநித்தத்தை நிலைநாட்டாது கிருத்தத் தன்மையை நிலைநாட்டுதற்கு ஏதுவாகின்றது. ஆகவே சாதனத்தைக் கொண்டு சாத்தியத்தை நிலைநாட்டுதலின்றி இது சாத்தியத்தைக்கொண்டு சாதனத்தை வற்புறுத்துதல் போலத் தோன்றுதலின் விபரீதமாயிற்று. பிறரெல்லாம் இது திட்டாந்தப் போலிக்குக் கூறும் விளக்கம் என்பதை மறந்தார் போன்று உரை கூறுவர். அவ்வுரை போலி என்க. வியாபகம் ஒரு பொருளின்கண் எங்கும் இருப்பது. வியாப்பியம் அப்பொருளின்கண் அடங்கியிருப்பது. நெருப்பு வியாபகப் பொருள், அதன்கண் அடங்கி எழும் புகை வியாப்பியம் என்று உணர்க.

வைதன்மிய திட்டாந்தப் போலி வகை

(1) சாத்தியாவியா விருத்தி

402-412 : வைதன்மிய...........ஒழிதல்

(இதன் பொருள்) வைதன்மிய திட்டாந்தத்து சாத்திய அவியா விருத்தி ஆவது-இனி இரண்டாவதாகிய எதிர்மறை எடுத்துக்காட்டென்னும் வைதன்மிய திட்டாந்தப் போலிகளுள் சாத்தியா விருத்தி என்னும் வைதன்மிய திட்டாந்தப் போலியாவது; சாதன தன்மம் மீண்டு சாத்திய தன்மம் மீளாது ஒழிதல்-ஏதுவின் பண்பு மீட்சியுற்று, துணிபொருட் பண்பிற்கு எதிர்மறை ஆகாமையால் மீளாது நிற்றல், அது வருமாறு:
சத்தம் நித்தம் அமூர்த்தத்து என்றால்-ஒலியானது நிலைத்தல் தன்மைத்து; அஃது அருவப்பொருள் ஆதலின் என்று மேற்கோளும் ஏதுவும் கூறியக்கால் அதற்கு எடுத்துக்காட்டாக; யாதொன்று யாதொன்று நித்தமும் அன்று அது அமூர்த்தமும் அன்று பரமாணுப்போல் எனில்-யாதொரு பொருள் யாதொரு பொருள் நிலையாப் பொருளாகுமோ அப்பொருள் அருவமும் அன்று பரமாணுவைப் போல என்று வைதன்மிய திட்டாந்தம் கூறின் அப்படித் திட்டாந்தமாகக் கூறப்பட்ட பரமாணு; நித்தமாய் மூர்த்தம் ஆதலில்-அவ்வாறு திட்டாந்தமாகக் கூறப்பட்ட பரமாணுவானது நிலைத்தல் தன்மைத்தாய் உருவப்பொருளும் ஆதலின், இதன்கண்; சாதன அமூர்த்தம் மீண்டு ஏதுவின் தன்மமாகிய உருவம் தனக்கு இன்மையால் இல்லாது மீண்டு; சாத்திய நித்தம் மீளாது ஒழிதல்-துணிபொருளாகிய நிலைத்தல் தன்மை தனக்கும் உண்மையின் அது மீளாது தன்கண் இருத்தலாம்: என்றார் என்க.

(விளக்கம்) வைதன்மிய திட்டாந்தம்-சாத்தியதன்மமும் சாதன தன்மமுமாகிய இரண்டற்கும் எதிர்மறையாக இருத்தல் வேண்டும்; ஈண்டு சத்தம் நித்தம் என்புழி நித்தம் எடுத்துக்காட்டாகிய பரமாணுவும் நித்தம் ஆதலின் அதற்கு எதிர்மறையன்றாயிற்று. இனிச் சாதனம் அமூர்த்தம். எனவே பரமாணு அதன் எதிர்மறையாகிய மூர்த்தம் ஆதலின் அது மீண்டது என்றார். ஈண்டு மீளல் மீளாமை இரண்டும் இன்மை என்னும் பொருட்டு. பிறாண்டும் இதனைக் கடைப்பிடுத்திடுக.

சாதனாவியா விருத்தி

413-424 : சாதனா.............மீளாது

(இதன் பொருள்) சாதன அவியா விருத்தியாவது-சாதனா வியாவிருத்தி என்னும் வைதன்மிய திட்டாந்தப் போலியாவது; சாத்திய தன்மம் மீண்டு சாதன தன்மம் மீளாது ஒழிதல்-துணிபொருளின் பண்பு திட்டாந்தத்தின்கண் இல்லையாய் மீட்சி பெற்று ஏதுவின் பண்புக்கு எதிர்மறையாகாது திட்டாந்தத்தின்கண் உளதாதல், அதுவருமாறு; சத்தம் நித்தம் அமூர்த்தத்து என்றல்-ஒலியானது நிலைத்தற்றன்மையுடைத்து என்று தன் மேற்கோள் கூறி அருவப்பொருளாகலின் என்று கூறியவிடத்து அதற்கு வைதன்மிய திட்டாந்தமாக; யாதொன்று யாதொன்று நித்தம் அன்று அஃது அமூர்த்தமும் அன்று கன்மம் போல் என்றல்-யாதொரு பொருள் யாதொரு பொருள் நிலையாப் பொருள் ஆகுமோ அப்பொருள் அருவமுமன்றாம் என்று கூறி வினை போல் என்று எடுத்துக் காட்டினால்; வைதன்மிய திட்டாந்தமாகக் காட்டப்பட்ட கன்மம் அமூர்த்தமாய் நின்றே அநித்தம் ஆதலின்-ஈண்டு எதிர்மறை எடுத்துக்காட்டாகக் காட்டப்பட்ட வினையான அருவமாயிருந்தே அழிதன்மாலைத்து மாதலாலே; சாத்தியம் ஆன நித்தியம் மீண்டு சாதனமான அமூர்த்தம் மீளாது-துணிபொருட் பண்பாகிய நிலையுதற்றன்மை திட்டாந்தத்தின்கண் இல்லையாய் மீட்சியுற்று ஏதுவின் பண்பாகிய அருவம் அதற்குமுளதாய் மீட்சி பெறாதாயிற்று என்றார் என்க.

(விளக்கம்) சாதனாவியா விருத்தி-சாதனத்தன்மை மீட்சியுறாமை. இதனால் இஃது இப்பெயர்த்தாயிற்று. மீட்சியுறாமை எனினும் எதிர்மறையாகாமை எனினும் ஒக்கும்.

உபயாவியாவிருத்தி

424-432 : உபயா............காட்டல்

(இதன் பொருள்) உபயாவியாவிருத்தி-உபயாவியாவிருத்தி என்னும் வைதன்மிய திட்டாந்தப் போலியாவது காட்டப்பட்ட வைதன்மிய திட்டாந்தத்தினின்று-எடுத்துக்காட்டப்பட்ட எதிர்மறை எடுத்துக்காட்டினின்றும்; சாதன சாத்தியங்கள் மீளாமையன்றியும்-ஏதுவின் பண்பும் துணிபொருட் பண்பும் மீட்சியுறாமையோடு; உண்மையின் உபயாவியாவிருத்தி இன்மையின் உபயாவியாவிருத்தி என இருவகை-உள்பொருட்கண் உபயாவியாவிருத்தி எனவும் இல் பொருட்கண் உபயாவியாவிருத்தி எனவும் அது இருவகைப்படும். அவ்விரண்டனுள் வைத்து; உண்மையின் உபயாவியா விருத்தி-உள் பொருட்கண் சாத்திய சாதனம் மீளாதபடி வைதன்மிய திட்டாந்தம் காட்டல்-உள் பொருளின்கண் சாத்திய தன்மமும் சாதன தனமுமாகிய இரண்டும் மீட்சியுறாதபடி எதிர்மறை எடுத்துக்காட்டினை எடுத்துக்காட்டுதலாம், அதுவருமாறு: சத்தம் நித்தம் அமூர்த்தம் ஆதலின் என்றாற்கு-ஒலி நிலையுதலுடைத்து என்னை? அஃது அருவப் பொருளாகலின் என்று மேற்கோள் கூறி அதனை வலியுறுத்தற்கு ஏதுவும் கூறிய வாதியானவன்; யாதொன்று யாதொன்று நித்தம் அன்று அமூர்த்தமும் அன்று ஆகாசம் போல் என்றால்-யாதொரு பொருள் யாதொரு பொருள் நிலையாமையுடைத்தோ அப்பொருள் அருவப் பொருளும் அன்றாம் ஆகாயம் போல என வைதன்மிய திட்டாந்தம் கூறிய வழி; வைதன்மிய திட்டாந்தமாகக் காட்டப்பட்ட ஆகாசம் பொருள் என்பாற்கு-இங்ஙனம் மறுதலை எடுத்துக்காட்டாகக் காட்டப்பட்ட ஆகாயம் உள்பொருள் என்னும் கொள்கையுடைய பிரதிவாதிக்கு; ஆகாசம் நித்தமும் அமூர்த்தமும் ஆதலால்-ஆகாயமானது நிலைத்தற்றன்மையுடையதும் அருவப்பொருளும் ஆதலாலே; இத்திட்டாந்தத்தினின்றும் துணிபொருளாகிய நிலைத்தலும் ஏதுத்தன்மையாகிய அருவமும் ஆகிய இரண்டும் ஆகாயத்திலுள்ளதாய் மீட்சியுறாவாயின; என்றார் என்க.

(விளக்கம்) உண்மையின்-உள்பொருளின்கண். உள்ளபொருள்-உள்பொருள். ஆகாசம் உள்பொருள் என்பாற்கு என்றவாறு.

440-449 : இன்மை..............இலையாகும்

(இதன் பொருள்) இன்மையின் உபயவியாவிருத்தியாவது-இனி இல்பொருளின்கண் உபயாவியாவிருத்தி என்னும் வைதன்மிய திட்டாந்தப் போலியாவது; சத்தம் அநித்தம் மூர்த்தம் ஆதலால் என்றவிடத்து-ஒலி அழிதன் மாலைத்து, என்னை? உருவப்பொருளாகலின் என்று மேற்கோளும் ஏதுவும் கூறியவிடத்தே; யாதொன்று யாதொன்று அநித்தம் மூர்த்தம் அன்று ஆகாசம் போல் என-யாதொரு பொருள் யாதொரு பொருள் நிலையாமையுடைத்தோ அப்பொருள் உருவப் பொருளும் ஆகாது ஆகாயம் போல் என்று; வைதன்மிய திட்டாந்தம் காட்டில்-எதிர்மறைத் திட்டாந்தம் காட்டினால்; ஆகாசம் பொருள் அல்ல என்பானுக்கு-ஆகாயம் உள்பொருள் அன்று என்னும் கொள்கையுடைய பிரதிவாதிக்கு; ஆகாசந்தானே உண்மை இன்மையினால்-திட்டாந்தமாகக் காட்டிய ஆகாயம் என்பதே இல்பொருளாதலாலே; சாத்திய அநித்தமும் சாதன மூர்த்தமும் மீட்சியும் மீளாமையும் இலையாகும்-சத்தம் அநித்தம் என்னும் சாத்தியப் பண்பும் மூர்த்தம் என்னும் ஏதுத்தன்மையுமாகிய இரண்டுமே மீட்சியுறுதலும் மீளாமையுமாகிய இரண்டு தன்மையுமே இல்லையாகும் என்றார் என்க.

(விளக்கம்) அன்ன்று என்புழி னகரமெய் அளபெடுத்தது. ஆகாசம் பொருள் அல்ல என்பான் பவுத்தன். உண்மையின்மை-உள்பொருளாந்தன்மையில்லாமை.

அவ்வெதிரேகம்

450-459 : அவ்வெதிரேகம்..............தெரியாது

(இதன் பொருள்) அவ்வெதிரேகமாவது-இனி அவ்வெதிரேகம் என்னும் வைதன்மிய திட்டாந்தப் போலியாவது; சாத்தியம் இல்லாவிடத்துச் சாதனம் இன்மை சொல்லாதே விடுதல் ஆகும்-சாத்திய தன்மம் இல்லாதவிடத்தே சாதன தன்மமும் இல்லாமையை எடுத்துக் கூறாமலே விட்டொழிதலாகும், அது வருமாறு; சத்தம் நித்தம் பண்ணப்படாமையால் என்றால்-ஒலி நிலைத்தற்றன்மையுடைத்து செய்யப்படாமையால் என்று கூறியவிடத்தே; வைதன்மிய திட்டாந்தம் காட்டுபவன் யாதொன்று யாதொன்று நித்தமன்று பண்ணப்படுவதல்லாததுவும் அன்று எனும் இவ்வெதிரேகம் தெரியச் சொல்லாது-யாதொரு பொருள் யாதொரு பொருள் நிலையுதலுடைத்தன்றோ அப்பொருள் பண்ணப்படுவதல்லாத பொருளுமாம் என இவ்வெதிர்மறைப் பண்பு கேட்போர்க்கு நன்கு விளங்கும்படி கூறாமல்; குடத்தின் கண்ணே பண்ணப்படுதலும் அநித்தமும் கண்டேம் ஆதலால் என்னின்-குடத்தின்கண் பண்ணப்படுதலும் நிலையாமையும் கண்டேம் ஆதலின் என்று கூறின்; நித்தம் அன்று பண்ணப்படுவது அல்லாததுவும் அன்று என்னும் எதிர்மறைகள் கேட்போர்க்கு நன்கு விளங்கித் தோன்றமாட்டா ஆதலின் இஃது அவ்வெதிரேக வைதன்மிய திட்டாந்தப் போலியாயிற்று என்றார் என்க.

(விளக்கம்) வெதிரேகம்-எதிர்மறை. வைதன்மிய திட்டாந்தம் காட்டுதலின் நோக்கமே துணிபொருட் பண்பை உடன்பாட்டுத் திட்டாதத்தால் வலியுறுத்திய பின்னரும் எதிர்மறைத் திட்டாந்தத்தானும் வலியுறுத்துதலே ஆதலின் அத்திட்டாந்தத்தின்கண் எதிர்மறைப் பண்பு விளங்குமாறு கூறுவதே முறையாகும். அவ்வாறு கூறாதவிடத்தே அவ்வெதிர்மறைப்பண்பு விளங்காமையாலே அவ்வெதிரேக வைதன்மிய திட்டாந்தப் போலி என்னப்பட்டது.

ஈண்டு, சாத்திய தன்மம் நித்தம் என்பது வைதன்மிய திட்டாந்தத்தில் அந்நித்த தன்மை இருத்தல் கூடாதாகலின் அதனைச் சாத்தியம் இல்லாவிடம் என்றார். அங்ஙனமே சாதன தன்மம் பண்ணப்படாமையாம். ஆகவே நித்தியத் தன்மை இல்லாவிடத்தே அதனைச் சாதித்தற்குரிய சாதனத் தன்மையும் இல்லாமை வேண்டும். இவ்வாறு அவ்விரண்டின் உண்மையைக் கூறும் சொற்களுக்கு எதிர்மறைச் சொல்லால் அவற்றைக் கூறிகாட்ட வேண்டும். அங்ஙனமன்றிக் குடமாகிய வைதன்மிய திட்டாந்தத்தே அவற்றின் எதிர்மறைச் சொல்லைக் கொண்டு விளக்குதல் வேண்டும். நித்தத்தின் எதிர்மறை நித்தமன்று என்பதாம். பண்ணப்படுவதன்று என்பதன் எதிர்மறை பண்ணப்படாததன்று என்பதாம். இவற்றால் கூறாது, நித்தியத்தின் எதிர்மறையாம் என்றுட்கொண்டு அநித்தியம் என்றும் பண்ணப்படாமையின் எதிர்மறை பண்ணப்படுதல் என்றுட்கொண்டு பண்ணப்படுதல் என்றும் கூறியவழி இவை சாத்திய தன்மத்தின் எதிர்மறையையும் சாதன தன்மத்தின் எதிர்மறையையும் கேட்போர் உளத்திற் பதிப்பனவாகாமல் குடத்தின் இயல்பு கூறுவதுபோலத் தோன்றிக் குடம் திட்டாந்தமாகாமலே ஒழிதலின் இதற்கு எதிர்மறை தோன்றச் சொல்லாமையே காரணம் ஆதல் நுண்ணிதின் உணர்க.

விபரீத வெதிரேகம்

460-468 : விபரீத..............கொள்கை

(இதன் பொருள்) விபரீத வெதிரேகமாவது-விபரீத வெதிரேகம் என்னும் வைதன்மிய திட்டாந்தப் போலியாவது; மறுதலைப் பக்கத்து சாத்திய தன்மத்தையும் சாதன தன்மத்தையும் முறைப்படக் கூறாமல் தலை தடுமாறக் கூறுதலாம், அதுவருமாறு; சத்தம் நித்தம் மூர்த்தமாதலின் என்றால் என நின்றவிடத்து-சத்தம் நிலையுதலுடைத்து, என்னை அஃதுருவப் பொருளாதலான் என மேற்கோளும் ஏதுவும் முறைப்படியே கூறி வைத்து அவ்விடத்தே வைதன்மிய திட்டாந்தம் கூறப்புகுந்து; யாதோர் இடத்து நித்தமும் இல்லை அவ்விடத்து மூர்த்தமும் இல்லை எனாதே-எப்பொருளில் நிலையுதற்றன்மை யில்லையோ அப்பொருளிடத்தே உருவமும் இல்லையாம் என அம்முறைப்படியே கூறாமல் யாதோர் இடத்து மூர்த்தமும் இல்லை அவ்விடத்து நித்தமும் இல்லை என்றால்-யாதொரு பொருளில் உருவம் இல்லையோ அப்பொருளிடத்தே நிலையுதற்றன்மையுமில்லை என்றக்கால் இதன்கண் சாத்திய தன்மத்தின் எதிர்மறை சாதன தன்மத்தின் எதிர்மறை போல மாறுபட்டுத் தோன்றுதலால் ஈரிடத்தும்; வெதிரேகம் மாறுகொள்ளும் எனக் கொள்க-வைதன்மிய திட்டாந்தத்திலமைந்த எதிர்மறைப் பண்பு சாதன சாத்திய மிரண்டினும் மாறுபட்டுத் தோன்றும் ஆதலால் இத்தகைய திட்டாந்தம் விபரீத வைதன்மிய திட்டாந்தப் போலி எனக் கொள்வாயாக! என்றார் என்க.

(விளக்கம்) சாத்திய தன்மத்தின் எதிர்மறையும் சாதன தன்மத்தின் எதிர்மறையும் இடம் மாறுதலாலே கேட்போர்க்கு மனத்தடு மாற்றத்தை உண்டாக்குதலால் இஃது அப்பெயர்த்தாயிற்று.

முடிவுரை

469-472 : நாட்டிய............ஆய்ந்தென்

(இதன் பொருள்) நாட்டிய இப்படித் தீய சாதனத்தால்-மணிமேகலாய்! யாம் ஈண்டு உனக்கு விளக்கி நிலைநாட்டிய ஏதும் போலிகளாலும்; காட்டும் அனுமான ஆபாசத்தின் ஈண்டு விளக்கிக் காட்டிய கருத்துப் போலி வகைகளானும் மயங்காமல்; இத்திறவியால் காட்சி கருத்து என்னும்-நம்மனோர்க்குரிய காட்சியளவையும் கருத்தளவையும் ஆகிய இரண்டு குற்றமற்ற அளவைகளானும்; மெய்யும் பொய்யும் ஐயம் இன்றி ஆய்ந்து அறிந்து கொள்-மெய்ப்பொருள் இயல்பினையும் பொய்ப்பொருளியல்பினையும் சிறிதும் ஐயந்திரிபற ஆராய்ந்து அறிந்து கொள்வாயாக! என்று அறவணவடிகளார் செவியறிவுறுத்தியருளினர் என்பதாம்.

(விளக்கம்) இப்படி-இத்தகைய. தீயசாதனம்-ஏதுப்போலி. அனுமான ஆபாசம் என்றது பக்கப் போலியை. மெய்-மெய்ப்பொருள்; பொய்-யபாய்ப்பொருள். ஐயமின்றி என்றதனால் திரிபின்றி எனவும் கூறிக்கொள்க.

இனி, இக்காதையினை, இறைஞ்சிய இளங்கொடி தன்னை உரைப்போன், நகர் கடல் கொள நின் தாயரும் யானும் நின் பொருட்டால் இப்பதிர்ப் படர்ந்தனம் என்றலும் இறைஞ்சித் தீவதிலகையும் செப்பினள். ஐவகைச் சமயமும் செவ்வித்தன்மையின் சிந்தையில் வைத்திலேன் அடிகள் மெய்ப்பொருள் அருளுக என்ன நங்காய் கேள் நீ, அளவை இரண்டே பிரத்தியங் கருத்தளவு என்ன? சுட்டுணர்வைப் பிரத்தியக்கம் எனச்சொல்லி விட்டனர் மற்றவை ஏனை அளவைகளெல்லாம் அனுமானமாம், பக்கம் ஏதுத் திட்டாந்தம் உபநயம் நிகமனம் என ஐந்துள, தீயபக்கமும் தீய வேதுவும் தீய எடுத்துக்காட்டும் ஆவன பக்கப் போலியும் ஏதுப் போலியும் திட்டாந்தப் போலியுமாம் நாட்டிய இப்படிச் சாதனத்தால் ஆபாசத்தின் ஐயமின்றி விதியால் மெய்யும் பொய்யும் ஆய்ந்து அறிந்துகொள் என்றார் என வினைமுடிவு செய்க.

தவத்திறம்பூண்டு தருமம் கேட்ட காதை முற்றிற்று.

 
மேலும் மணிமேகலை »
temple
தமிழில் தோன்றிய முதல் சமயக் காப்பியம் மணிமேகலை ஆகும். இந்நூல் பவுத்த மத சார்புடைய நீதிகளை எடுத்துச் ... மேலும்
 

1. விழாவறை காதை நவம்பர் 11,2011

முதலாவது விழாவறைந்த பாட்டு அஃதாவது: பூம்புகார் நகரத்து வாழ்கின்ற சமயக் கணக்கர் முதலிய பெரியோர் ... மேலும்
 
இரண்டாவது ஊரலருரைத்த பாட்டு அஃதாவது விழாவறைதல் கேட்ட மாந்தர் மாதவியை நினைந்து நாடகக் கணிகை துறத்தல் ... மேலும்
 
மூன்றாவது மலர்வனம் புக்கபாட்டு அஃதாவது-மாதவியும் வயந்த மாலையும் சொல்லாட்டம் நிகழ்த்தும் பொழுது ... மேலும்
 
நான்காவது மணிமேகலை உதயகுமரனைக் கண்டு பளிக்கறை புக்க பாட்டு அஃதாவது -உவவனத்தினுட் சுதமதியோடு மணிமேகலை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Copyright © 2020 www.dinamalar.com. All rights reserved.