பதிவு செய்த நாள்
13
ஆக
2018
03:08
மதுரை அன்னைக்கும் சொக்கருக்கும் தினம் தினம் வழிபாடு எத்தனை எத்தனையோ:
சீவன் முக்திபுரம் பஞ்சதஷாட்சரியின் துவாதச சாந்த புரம் எனப்பலப்பல பெயர் விளங்கும் புண்ணிய தலம் ஸ்ரீ மீனாக்ஷி சொக்கேசனின் திருக்கோயிலில் நடைபெறும் நித்திய வழிபாட்டு முறைகள் காரண ஆகமத்தின் வழிப்படியே முறைப்படுத்தப்பட்டு நிகழ்த்தப்படுவதாகும். அவ்வாறு நிகழ்ந்து வரும் எட்டுக்கால பூஜை முறைகள் உத்தோமத்தமமாகும்.
1. திருவனந்தல்
2. விளா பூசை
3. கால சந்தி
4. திரி கால சந்தி
5. உச்சிக் காலம்
6. சாய ரக்ஷை
7. அர்த்தச் சாமம்
8. பள்ளியறை எனப் பெயருற்ற நித்திய வழிபாடு காலங்களாகும்.
திருவனந்தல்: காலை 4.30 துவக்கம் 5 மணியளவில் நிகழும் முதற்பூசை திருவனந்தல் ஆகும். சித்தி விநாயகருக்கு வழிபாடு செய்து துவங்கப் பெறும் பள்ளியறையில் உள்ள சோம சுந்தரப் பெருமானின் திருவடிகளைச் சுவாமி கோயிலுக்கு எழுந்தருளச் செய்வர். பின்னர் மீனாக்ஷி யம்மைக்கு வழிபாடு நிகழும். இவ்வழிபாட்டின் போது மீனாக்ஷியம்மை ""மஹா சோடசிரூபமாக விளங்குவது மரபு. இறைவனைத் துயில் உணர்த்தி வழிபாடு செய்யும் திருப்பள்ளியெழுச்சியாகும் இக்காலம். ஞானப்பால் இப்பூசையின் முடிவில் அன்பர்களுக்கு வழங்கப்படும்.
விளா பூசை: இக்காலத்தில் விநாயகர், சுப்ரமண்யர், அம்பாள், சுவாமி முதலிய மூர்த்திகளுக்கு நீராட்டல் செய்விக்கபெறும். ஸ்நபனம், புண்யாஹவசனம், அக்னி காரியம் முதலிய வைதீகச் சடங்குகளுடன் இவ்வழிபாடு துவங்கப்பெறும். இவ்வழிபாட்டின் போது ஸ்ரீ மீனாக்ஷியம்மை ""பாலை வடிவில் காட்சி தருகிறாள். இவ்வழிபாடு காலை 6 மணி முதல் 7 மணிக்குள் நிகழ்வதாகும்.
கால சந்தி: இதனைக் காலைப் பூசை எனப்படும். இவ்வழிபாட்டில் நித்யாக்னி காரியமும் நித்ய பணியும் நிகழ்கின்றன. வைகையாற்றிலிருந்து திருமஞ்சனம் கொண்டு வரப்பெறும். பரிவார மூர்த்திகளுக்கு அபிஷேகம் நிகழ்த்தப்பெறும். இவ்வழிபாட்டின் போது அம்மை ""புவனை என்னும் சக்தி அம்சமாக திகழ்கிறாள்.
திரிகால சந்தி: உச்சிக்கால வழிபாட்டிற்கு முன்னர் இது நிகழ்த்தப்பெறும். இக்காலத்தில் ""ஷியாமளை எனும் தேவி அம்சமாக ஸ்ரீ மீனாட்க்ஷி விளங்குகிறாள்.
உச்சிகாலம்: இது நடுப்பகலில் நிகழ்வதாகும். பகற்பொழுதில் நிகழும் வழிபாடுகளில் சிறப்புடையதாகும். ஸ்நபனம் ஆவரண பூசை முதலியவற்றுடன் நிகழ்வது. இவ்வழிபாட்டில் கோ பூசை நிகழ்கிறது. ஸ்ரீ மீனாக்ஷியம்மை பசு வடிவாகச் சொக்க நாதப் பெருமானை வழிபாடு செய்தல் கோ பூசையாகும். எல்லா உயிர்களுக்கும் இருப்பிடம் பசு. அவ்வடிவைக் கொண்டு அம்மை இறைவனை வழிபடுவதால் எல்லா உயிர்களுக்கும் இறைவனை வழிபட்ட பலன் இக்காலத்தில் கிடைக்கின்றது. பிள்ளையின் நோய்க்குத் தாய் மருந்துண்பது போல் மக்களாகிய உயிரினங்களின் உயர்வுக்கு அம்மை தானே பசு வடிவில் இறைவனை வழிபடுகிறாள். இக்கால வழிபாட்டின் போது ""மாதங்கி வடிவில் விளங்குகிறாள்.
சாய ரக்ஷை: இது சாயங்கால பூசை. பிரதோஷ கால பூஜை எனவும் வழங்கப்பெறும். இரவின் தொடக்கமான மாலைப் பொழுதில் இப்பூசை நிகழும். இவ்வழிபாட்டின் போதும் ஆவாஹனம், அபிஷேகம் முதலியன நிகழும். இப்பூசையின் போது ""சுக சியாமளை யாக ஸ்ரீ மீனாட்க்ஷி காட்சி தருகிறாள். சாய ரக்ஷை கால வழிபாட்டில் சோடசோபசாரத்துடன் தீபாராதனை நிகழும்.
அர்த்தச் சாமம்: இது நடு இரவு பூசையாகும். இப்பூசை மதுரைக் கோவிலில் மிகச்சிறப்புடையதாகும். இவ்வழிபாட்டில் ஸ்ரீ மீனாட்க்ஷியம்மை பஞ்ச தஷாட்சரி கோலத்தில் வெண்ணிறத்துகில் உடுத்துச் சாந்த வடிவினளாக காட்சி தருகின்றாள். இக்கால வழிபாட்டிலும் அபிஷேகம் முதலியன நிகழும்.
பள்ளியறை: இது அர்த்தச் சாம வழிபாட்டையடுத்து நிகழ்வதாகும். "சோடசி என்னும் நிலையில் மீனாட்க்ஷி இக்காலத்தில் அருள் வழங்குகிறாள். சோம சுந்தரப் பெருமானுக்குப் பள்ளியறை வழிபாடு நிகழ்த்திய பின்னர் அவருடைய திருவடிகளை பல்லக்கில் எழுந்தருளச் செய்து வேத பாரயண, திருமுறை, கோஷங்களுடன் மேள வாத்தியம் முழங்க அம்மையின் திருக்கோயிலுக்குக் கொண்டு வருவர். இக்காலத்தில் கோயிலின் வரவு செலவு கணக்குகள் பெருமான் முன்னர் படிக்கும் வழக்கம் நடைபெறுகிறது. மீனாட்க்ஷி சன்னதியின் முன்பு பல்லக்கு வந்தவுடன் அம்மையே வந்து பாத பூசை செய்து அழைத்துச்செல்லும் பாவனையில் வழிபாடு செய்யப்பெறும். பின்னர் பள்ளியறையில் சுவாமியை எழுந்தருளச் செய்து பள்ளியறைப் பூசை நிகழும். இப் பூசையில் குழம்பு பால், அப்பம் முதலியன நிவேதிக்கப் பெறும். இசைக் கலைஞர் இறைவனைப் பாடுவார். அப்பாடலை நாதஸ்வரத்தில் அக்கலைஞர் வாசிப்பார். அன்பர்களுக்கு அருட்பிரசாதம் வழங்க இப்பூசை முடிவு பெறும். இப் பூசையின் விரிவு அர்த்த ஜாம பூஜை பள்ளியறை தத்துவம்-இல் காண்க. இக்காலத்தில் எல்லாச் சிவாலயங்களின் சிவ மூர்த்திகளும் சொக்கநாதர் உருவில் ஒடுங்குவதாக மரபு. எனவே இவ்வழிபாட்டின் போது தரிசிப்பதால் அனைத்துச் சிவாலயங்களையும் வழிபட்ட பலன் என்பது துணிபு இவ்வாறு மதுரைக் கோயிலில் காலை 4.30 மணி முதல் இரவு 10.30 மணி வரை நாள் தோறும் நித்ய வழிபாடுகள் நிகழ்கின்றன. இவ்வழிபாடுகளை நிகழ்த்த மன்னர்களும், செல்வர் களும், பல்வேறு காலங்களில் திட்டங்கள் செய்துள்ளனர். மதுரைக் கோயிலில் நித்திய வழிபாடு களும் நைமித்ய வழிபாடுகளும் பிற கோயில்களுக்கு முன்னுதராணமாகச் சிறந்த முறையில் திட்டம் செய்யப்பட்டிருக்கின்றன.
ஒவ்வொரு கால வழிபாட்டிற்கும் உரிய பலன்கள் இவை இவை எனத் திருவிளையாடற் புராணம் என பல நன்மைகளைக் கூறுகின்றது. அப்பலன்களைப் பெறும்வகையில் நாமும் ஸ்ரீ மீனாட்க்ஷியம்மையின் திருக்கோயில் நித்ய வழிபாடுகளில் தவறாது கலந்து கொண்டு பயனுற அவ்வன்னையயே வேண்டியபடி நன்மைகளை பெறுவோமாக. திருக்கோயிலில் காலங்கள் தோறும் வழிபடுவதே உத்தம சிவ புண்ணியம். மக்கள் அனைவரும் எல்லா காலங்களிலும் எல்லா வழிபாடுகளிலும் கலந்து கொள்வதென்பது எக்காலமும் இயலாது. அவ்வாறு திருக்கோவில் தரிசனங்கள் யாவற்றையும் தரிசிக்க சிவ புண்ணியம் என்ற பூர்வ புண்ணியம் இருக்க வேண்டும் என்று பெரியோர் கூறுவர். நற் திருக்கோயிலில் ஊழியம் செய்யும் புண்ணியமாவது பெற்றிருக்க வேண்டும். அதிலும் குறிப்பாக தெய்வ உருவங்களை தொட்டுக் கைங்கரியங்கள் செய்யும் பாக்கியம் கிட்ட வேண்டும். அவ்வாறு பெற்ற வாய்ப்பினை முழு மன ஈடுபாட்டுடன் செய்பவர்கள் பற்றி;
மனிதப்பிறவியில் உலகாதாயப்பணிகளை இறைவன் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாய் செய்யப் பணித்துள்ளான். இறையியல் இல்லற இயல் பல்லுயிர்க்கும் சேவை செய்யும் வாய்ப்பு அதைச்செவ்வனே தன்னலம் சிறிதும் இன்றி தொண்டாற்றிட கூட இறைவனின் முழுத்துணை இன்றி செய்திடவியலாது என்பதே உண்மை. குடும்பம், பாசம், தேசம், சேவை. ஞானம், கல்வி ஈசன் பூசை என அவரவர்க்கு கிட்டிய பணியினிடை செய்து முடிப்பதை கடனென்றும் கடமை என்றும் காலத்தின் கட்டாயம் என்றும் ஊழின் உபசரிப்பென்றும் எவ்விதமேனும் கூறியாக வேண்டும். எவ்வாறாயினும் சத்சங்கத்தாருடன் தன்னை இணைத்துக் கொள்வோர்க்கு எந்நிலையிலும் நல்லவையே வாய்க்கப்பெறுவது உறுதி.
அவ்வாறு நோக்குகையில் மதுரை திருக்கோயிலில் காலையிலோ மாலையிலோ வழிபட்டுப் பலர் பயனடைவர். சிலர் மாலை வழிபாட்டிலும் இரவுப் பள்ளியறை வாழிபாட்டிலும் கலந்து கொள்வர். அவ்வகையில் இரவுப் பள்ளியறை வழிபாடு, மதுரை முதலிய தலங்களில் மிக உன்னதமாக காணப்படும் வழிபாடாகும். சொக்கநாதர் சன்னிதியிலிருந்து அப்பெருமானது திருப்பாதங்கள் பல்லக்கில் எழுந்தருளப் படுத்தப்படும். இரண்டாம் பிரகாரம் மூலமாக அப்பாதம் அம்மன் சன்னிதிக்கு கொண்டு செல்லப்படும். அப்போது சுவாமி கோவிலின் கம்பத்தடி முன்பு பெருமானுக்கு வேதம் திருமுறை முதலியவற்றை உரியவர்கள் ஓதி முடிப்பர். பின் நாதஸ்வர இசையோடும், சேர்ந்து திருமுறை ஓதுவார்கள். அவ்வாறே பாராயணத்துடன் அம்மன் சன்னிதிக்கு அப்பாதங்களை எழுந்தருளப் பண்ணுவர். அம்மனுக்கு தீபாராதனை ஆனவுடன் பல்லக்கு பள்ளியறையின் முன்பு கொண்டு சொல்லப்படும். திருப்பாதத்தை பட்டர் கையில் ஏந்தி பள்ளியறையில் கொண்டு போய் எழுந்தருளப் பண்ணுவார். அங்குச் சோடசோபச்சார தீபாராதனை நடைபெறும். பள்ளியறை மங்கலத் திருப்பாடல் நாதஸ்வரத்துடன் பாடப்படும்.
பள்ளியறைக்குச் சுவாமி வரும்போது அம்மன் சன்னிதி வரை நடைபாவாடை விரித்து வைப்பதும், அதிற் பெருமான் நடந்து வருவதாகக் கொள்வதும் ஐதீகம். வரும் வழியில் சில இடங்களில் தீபாராதனை நடைபெறும். பிரம்மராகம் ஓதப்படும். வேத பாராயண கோஷங்களோடு பெருமான் பள்ளியறைக்கு எழுந்தருள்வதை இன்றும் பழமை முறை மாறாது காணலாம். பள்ளியறையில் தீபாராதனை முடிந்தவுடன் அனைவருக்கும் பால், சுண்டல், திருநீறு வழங்கப்படும். இதனோடு பள்ளியறை வழிபாடு நிறைவடையும். பள்ளியறைக்குப் பெருமான் எழுந்தருளும் பல்லக்குத் தற்சமயம் வெள்ளியால் செய்யப்பட்டுள்ளது. இப்பள்ளியறை வழிபாடு ஒன்றைச் செய்வதற்குத்தான் திருமலை நாயக்கர் நாள்தோறும் வருகை தருவாராம். சம்பா, வடை, அப்பம், நைவேத்தியம் முதலியன அதற்கென உருவாக்கிய அம்மன் கோயில் மடைப்பள்ளியில் தயாராகி அனைவருக்கும் வழங்கப்படுமாம். நல்ல சந்தனமும் வழங்கப்படும் இது பற்றி திருமலை நாயக்கர் வரலாற்றில் குறிப்பில் காணப்படுகிறது சந்தனக் கட்டையில் தங்க ஆணியடித்துப் பச்சைக் கற்பூரம் சேர்த்து இழைக்கப்பட்ட மலாக்கா தேசத்து சந்தனக்குழம்பை நாள்தோறும் திருமலை நாயக்கர் பெருமானுக்கு அணியச் செய்து பக்தர்களுக்கும் வழங்குவித்து தாமும் பூசி நிறைவுடன் வழிபட்டுச் செல்வதுண்டாம்.
ஒரு நாள் சந்தனம் இழைக்கும் பட்டர் பூசனைக்கு முன்பாக ஆசை கொண்டு சந்தனத்தை தம் உடம்பில் பூசிக்கொண்டு கோயிலில் ஒருபால் உறங்கி விட்டார். நாயக்க மன்னர் கோவிலின் உள்ளே பிரவேசித்தவுடன் சந்தன வாடை வருவதைக் கண்டு பரிசாரகனை எழுப்பச் செய்து அவன் ஆசையைப் பாராட்டி அவனுக்கு நாள்தோறும் சம்பாவும் சந்தனமும் வணங்கப் பணித்ததாக வரலாறு கூறுகிறது. இறைவன் வேறாகவும், உடனாகவும் இருந்து தொழிற்படும் தத்ததுவத்தில் இறைவன் இறைவியோடு உடனாக நின்று திருவருள் பாலிப்பதை இப்பள்ளியறை விழா உண்ர்த்துகிறது. நாள்தோறும் நடைபெறுகின்ற கால வழிபாடுகளில் பள்ளியறை வழிபாடு ஒன்றில் தான் இறைவன் இறைவியோடு ஒன்றியிருந்து ஆன்ம கோடிகளுக்கு அருள் வழங்குகிறான். ஆதலால் இவ்வழிபாட்டிலேதான் மக்களுக்கு நாட்டம் அரசருக்கும் தேட்டம். இவற்றையெல்லாம் கருதியே பழங்காலத்திலேயிருந்து பள்ளியறை வழிபாட்டில் சுவாமிக்கு முன்பு ஓதுவார் திருமுறை விண்ணப்பம் செய்யவும் அத்யானப்பட்டர் வேதம் ஓதவும் பாகவதர் பிரம்ம தானம் பாடவும், ஆடல் பாடல்களோடு இவ்வழிபாட்டை ஏற்படுத்தியுள்ளனர். இவ்வழிபாட்டின் சிறப்புக்காக பிற்காலம் வயிநாகரம் நாகப்பச் செட்டியார் கட்டளை ஏற்படுத்தியுள்ளார். சக்தியும் சிவனும் ஒன்றியிருந்து அருள் வழங்கும் நிலை இரண்டு. காலைத் திருவனந்தல் தரிசனம் ஒன்று, மற்றொன்று பள்ளியறை தரிசனம்
இவை கிட்டியவர்களுக்கு பேரின்பம் உடன் கிடைக்கும் என்பது சம்பந்தர் வாக்கு
அண்ணல் ஆலவாய்........நன்னினான் தனை
எண்ணியே தொழ....திண்ணம் இன்பமே.