பதிவு செய்த நாள்
14
ஆக
2018
01:08
ஈரோடு: ஆடிப்பூர விழாவையொட்டி, அம்மன் கோவில்களில், அம்மன் வளைகாப்பு நிகழ்வு, நேற்று கொண்டாடப்பட்டது. அம்மனுக்கு வளைகாப்பு நடத்தி, பூஜையில் வைத்த வளையல் மற்றும் தாலிச்சரடுகளை, பெண்களுக்கு வழங்குவது இதன் சிறப்பு. இதில் பங்கேற்றால், சுமங்கலி பெண்களின் தாலி பாக்கியம் பலம் பெறும்; கன்னி பெண்களுக்கு விரைவில் திருமணம் நடக்கும். மகப்பேறு பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம். ஆடிப்பூர விழா, ஈரோடு மாவட்டத்தில் அனைத்து கோவில்களிலும், நேற்று சிறப்பாக நடந்தது. ஈரோடு கோட்டை ஆருத்ர கபாலீஸ்வரர் கோவிலில், 16 வகையான திரவிய அபிஷேகத்தை தொடர்ந்து, சிறப்பு அலங்காரம், மஹா தீபாராதனை நடந்தது. இதில் பங்கேற்ற பெண்களுக்கு, கண்ணாடி வளையல், தாலிச்சரடு வழங்கப்பட்டது. இதேபோல், கோட்டை கஸ்தூரி அரங்கநாதர் கோவிலில், ஆண்டாள் திருமஞ்சனம் உற்சவம் நடந்தது.
* கோபி, ஈஸ்வரன் கோவில் வீதியில், விசாலாட்சி சமேத, விஸ்வேஸ்வர சுவாமி கோவிலில், ஆடிப்பூர வளைகாப்பு விழா கோலாகலமாக நடந்தது. திரளான பெண்கள் கலந்து கொண்டனர்.
* புன்செய்புளியம்பட்டி மாரியம்மன், ஊத்துக்குளி அம்மன், பிளேக் மாரியம்மன், காமாட்சியம்மன், ஆதிபராசக்தி அம்மன், சவுடேஸ்வரியம்மன் கோவில்களில் அபிஷேக, ஆராதனை நடந்தது. மாரியம்மன், பிளேக் மாரியம்மனுக்கு, 1,008 வளையல்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
* சிவகிரி, கொல்லன்கோவில், செல்லாண்டியம்மன் கோவிலில், ஆடிப்பூரத்தை முன்னிட்டு, திருவிளக்கு பூஜை நடந்தது. நூற்றுக்கணக்கான பெண்கள் கலந்து கொண்டனர்.