திண்டுக்கல், திண்டுக்கல்லில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு களிமண் விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி மும்முரமாக நடக்கிறது. திண்டுக்கல் அருகே வேடப்பட்டியில் களிமண்ணில் விநாயகர் சிலைகள் தயாரித்து விற்கின்றனர். அரை அடி முதல் 2 அடி வரை சிலைகள் தயார் செய்கின்றனர். இங்கிருந்து சேலம், திருச்சி, உடுமலைப்பேட்டை, திருப்பூருக்கு அதிகம் விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. மண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலை ரூ.150, வண்ணம் பூசிய சிலை ரூ.250 க்கும் விற்பனையாகிறது.
ஆர்டரின் பேரில் மொத்தமாகவும் விற்பனை செய்யப்படுகிறது. மாசுக்கட்டுப்பாட்டு விதிகளுக்கு உட்பட்டு களிமண், இயற்கை வண்ணம் பூசி சிலைகள் தயாரிக்கப்படுகிறது. இதனை தண்ணீரில் கரைப்பதால் நீர் மாசுபடாது. வியாபாரி அய்யப்பன் கூறுகையில், ஒரு மாதமே இருப்பதால் விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி வேகமாக நடக்கிறது. களிமண் மற்றும் தண்ணீர் தட்டுப்பாட்டால் விலைக்கு வாங்கி சிலைகள் செய்கிறோம். அதனால் கடந்த ஆண்டை விட சிலையின் விலை ரூ.100 அதிகரித்துள்ளது. களிமண்ணால் மட்டுமே செய்வதால் சுற்றுச்சுழலுக்கு பாதிப்பு ஏற்படாது, என்றார்.