பதிவு செய்த நாள்
16
ஆக
2018
03:08
காஞ்சிபுரம்:ஏகாம்பரநாதர் கோவில் புதிய உற்சவர் சிலை செய்ததில், முறைகேடு நடந்து உள்ளதாக எழுந்த புகாரின் அடிப்படையில், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார், நேற்று மீண்டும் ஆய்வு செய்தனர். காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் இருந்த பழைய உற்சவர் சிலை பழுதடைந்து விட்டதாக கூறி, அறநிலையத் துறை சார்பில், 2015ல் புதிய உற்சவர் சிலை செய்யப்பட்டது. அதற்காக, பொது மக்களிடம் இருந்து தங்கம் நன்கொடையாக பெறப்பட்டது.அந்த சிலையில், 5.45 கிலோ தங்கம் சேர்க்கப்பட்டதாக கூறிய நிலையில், போலீஸ் அதிகாரிகள் நடத்திய ஆய்வில், தங்கமே சேர்க்கப்படவில்லை என்பது தெரிய வந்தது.
காஞ்சிபுரத்தைச் சேர்ந்த, அண்ணாமலை என்பவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். நீதிமன்ற உத்தரவின் படி, அந்த வழக்கு, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசுக்கு மாற்றப்பட்டது. அந்த பிரிவின் போலீஸ், ஐ.ஜி., பொன்.மாணிக்கவேல் விசாரணை செய்ததில், புதிய சிலையில் தங்கம் சேர்க்கப்படாதது மீண்டும் உறுதியானது. ஏற்கனவே, இந்த கோவிலில் சோதனை மற்றும் அதிகாரிகளிடம் பல முறை விசாரணை நடந்த நிலையில், நேற்று, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு புதிய, டி.எஸ்.பி., பழனிசெல்வம், ஆய்வாளர் முத்துகுமார் மற்றும் போலீசார், ஏகாம்பரநாதர் கோவிலுக்கு சென்று, புதிய உற்சவர் சிலையை ஆய்வு செய்தனர். மேலும், சிலை ஆவண காப்பகத்தில் உள்ள மற்ற சிலைகளையும் ஆய்வு செய்தனர்.