பதிவு செய்த நாள்
17
ஆக
2018
12:08
வீரபாண்டி: காவடி அலகில், அந்தரத்தில் பறந்தபடி, ஊர்வலமாக வந்து, ஏராளமான பக்தர்கள், அம்மனை வழிபட்டனர். ஆடித்திருவிழாவை முன்னிட்டு, ஆட்டையாம்பட்டி, பெரிய மாரியம்மன் கோவிலில், நேற்று, ஏராளமான பெண்கள், குடும்பத்துடன் கோவிலுக்கு வந்து, கோழி, ஆடுகளை பலியிட்டு, பொங்கல் வைத்து, சுவாமியை வழிபட்டனர். விரதமிருந்த பக்தர்கள், பூங்கரகம், தீச்சட்டிகளை ஏந்தி, உடல் முழுவதும் விதவித அலகு குத்தி, காவடி அலகுகளில் அந்தரத்தில் பறந்தபடி, ஊர்வலமாக வந்து, தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றினர். இன்றிரவு வண்டி வேடிக்கை, நாளை மஞ்சள் நீராட்டுதலுடன், திருவிழா நிறைவடையும்.
ரூபாய் நோட்டுகளால்...: ஆட்டையாம்பட்டி, வேலநத்தம், செங்குந்தர் சின்ன மாரியம்மன் கோவிலில், சக்தி அழைத்தலுடன் பொங்கல் வைபவம், கடந்த இரு நாட்களாக நடந்தது. அதை முன்னிட்டு, மூலவர் அம்மனுக்கு, புது ரூபாய் நோட்டுகளால்,சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. நேற்று மாலை, கம்பம் எடுத்து, கங்கையில் சேர்க்கும் நிகழ்ச்சியால், கோவில் முன் நடப்பட்டிருந்த கம்பத்தை, ஏராளமான பக்தர்கள், ஊர்வலமாக எடுத்து வந்து, அதற்கென உள்ள கிணற்றில் விட்டனர். இன்று காலை, தேரில் அம்மன் எழுந்தருளி, திருவீதி உலா வருவார். விரதமிருந்த பக்தர்கள், ஊர்வலத்தில், பூங்கரகம், அக்னி கரகம் எடுத்து வருவர். நாளை, மஞ்சள் நீராட்டு உற்சவத்துடன், திருவிழா நிறைவடையும்.
நெய் விளக்கேற்றி...: நாக, கருட பஞ்சமியை முன்னிட்டு, பனமரத்துப்பட்டி, நாழிக்கல்பட்டி, இச்சாதாரி நாகதேவதை கோவிலில், நேற்று முன்தினம் சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து, அம்மனுக்கு பால், தயிறு, தேன், சந்தனம், கரும்புச்சாறு உள்பட, 16 வகை அபி?ஷகம் நடந்தது. அன்னாச்சி, சாத்துக்குடி, மாதுளை, எலுமிச்சை, தேங்காய், பூசணி ஆகியவையில், நெய் விளக்கேற்றி, திரளான பக்தர்கள் வேண்டுதல் வைத்தனர்.