சாணார்பட்டி: பொதுவாக புராண கால கோயில்கள் ஒவ்வொன்றுக்கும் ஒரு தனி சிறப்பு உள்ளது. திருமண தடை, குழந்தை பாக்கியம், தொழில் வளம் போன்றவற்றுக்காக பரிகார கோயில்களை தேடி மக்கள் செல்வர். இதுபோல் சாணார்பட்டி அருகே உள்ள தவசிமேடையில் உள்ள மகாலிங்கேஸ்வரர் கோயிலுக்கும் (ஒடுக்கம்) சிறப்பு உண்டு. தவசக்திகள் நிறைந்த சித்தர்கள் மற்றும் மகான்கள் பலர் இங்கு ஜீவ சமாதி அடைந்துள்ளனர். ஒடுக்க யோக நிலை பெறுவதற்கு உரிய 9 தலங்களுள் தவசி மேடையும் ஒன்று என நம்புகின்றனர். கொள்கையில் 16 அடி உயரம் கொண்ட பரத்வாஜ் மகரிஷி இங்கு ஒடுக்க யோகம் அடைந்தார் என கூறப்படுகிறது.
ராமபிரான் இங்கு பூஜை செய்த சரயு தீர்த்தம் எனும் சிறு நீர்நிலை, காலப்போக்கில் மறைந்ததாக பெரியோர்கள் கூறுகின்றனர். இத்தலத்தில் மகாலிங்கேஸ்வருக்கு நேர் எதிரே ஆதி பைரவர் தோன்றியிருப்பது சிறப்பு. மூலவர், பைரவர் மீது சூரிய ஒளி விழுகிறது. திருமணத்தடை ஏற்படும் பெண்கள் மக நட்சத்திர நாளன்று இங்கு வழிபாடு செய்து வாழையில் எளியவர்களுக்கு அன்னதானம் செய்வதன் மூலம் தடை நீங்கும் என்பது நம்பிக்கை. திண்டுக்கல் - நத்தம் ரோடு 12 கி.மீ., ல் உள்ள விராலிப்பட்டி பிரிவில் இருந்து 2 கி.மீ. தொலைவில் உள்ளது தவசிமேடை. திண்டுக்கல் பஸ் நிலையத்தில் இருந்து குறித்த நேரங்களில் பஸ் வசதி உள்ளது. நிர்வாகி கனகமுத்து கூறியதாவது, ‘பழமை மாறாத இக்கோயிலில் மக நட்சத்திரம் மற்றும் தேய்பிறை அஷ்டமி தினங்களில் சிறப்பு பூஜைகள் நடக்கும். சில காரணங்களுக்காக மற்ற கோயில்களை போல் இங்கு கும்பாபிஷேகம் நடத்தப்படுவதில்லை ’ என கூறினார். இவருடன் 95782 11659 என்ற எண்ணில் பேசலாம்.