Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

6. கடலாடு காதை 8. வேனிற்காதை
முதல் பக்கம் » சிலப்பதிகாரம்
7. கானல் வரி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

31 ஜன
2012
15:40

அஃதாவது - நெய்தலங்கானலின்கண் வெண்காலமளி மிசையிருந்து கானல்வரி என்னும் இசைப்பாவினைப் பாட அப்பாட்டின் வழியாக அவ்விருவர்க்கும் ஊழ்வினை உருத்துவந்தூட்டத் தொடங்கியதனைக் கூறும் பகுதி என்றவாறு. வரிப்பாடல் பிறவும் உளவாயினும் சிறப்புக்கருதி, கானல்வரி எனக் குறியீடு செய்தருளினர் என்றுணர்க.

(கட்டுரை)

அஃதாவது - பொருள் பொதிந்த உரைநடையா லியன்ற செய்யுள் என்றவாறு.

சித்திரப் படத்துள்புக்குச் செழுங்கோட்டின் மலர்புனைந்து
மைத்தடங்கண் மணமகளிர் கோலம்போல் வனப்புஎய்திப்
பத்தரும் கோடும் ஆணியும் நரம்பும்என்று
இத்திறத்துக் குற்றம்நீங்கிய யாழ்கையில் தொழுதுவாங்கி
பண்ணல் பரிவட்டணை ஆராய்தல் தைவரல்
கண்ணிய செலவு விளையாட்டுக் கையூழ்
நண்ணிய குறும்போக்கு என்று நாட்டிய
எண்வகையால் இசைஎழீஇப்
பண்வகையால் பரிவுதீர்ந்து
மரகதமணித் தாள்செறிந்த மணிக்காந்தள் மெல்விரல்கள்
பயிர்வண்டின் கிளைபோலப் பல்நரம்பின் மிசைப்படர
வார்தல் வடித்தல் உந்தல் உறழ்தல்
சீருடன் உருட்டல் தெருட்டல் அள்ளல்
ஏர்உடைப் பட்டடைஎன இசையோர் வகுத்த
எட்டு வகையின் இசைக்கர ணத்துப்
பட்டவகைதன் செவியின்ஓர்த்(து)
ஏவலன், பின் பாணி யாதுஎனக்
கோவலன் கையாழ் நீட்ட, அவனும்
காவிரியை நோக்கினவும் கடல்கானல் வரிப்பாணியும்
மாதவிதன் மனம்மகிழ வாசித்தல் தொடங்குமன்.  1

வேறு (ஆற்று வரி)

திங்கள் மாலை வெண்குடையான்
சென்னி செங்கோல் அதுஒச்சிக்
கங்கை தன்னைப் புணர்ந்தாலும்
புலவாய் வாழி காவேரி.
கங்கை தன்னைப் புணர்ந்தாலும்
புலவாது ஒழிதல் கயல்கண்ணாய்.
மங்கை மாதர் பெருங்கற்புஎன்று
அறிந்தேன் வாழி காவேரி.   2

மன்னும் மாலை வெண்குடையான்
வளையாச் செங்கோல் அதுஓச்சிக்
கன்னி தன்னைப் புணர்ந்தாலும்
புலவாய் வாழி காவேரி.
கன்னி தன்னைப் புணர்ந்தாலும்
புலவாது ஒழிதல் கயல்கண்ணாய்.
மன்னும் மாதர் பெருங்கற்புஎன்று
அறிந்தேன் வாழி காவேரி.   3

உழவர் ஓதை மதகுஓதை
உடைநீர் ஓதை தண்பதங்கொள்
விழவர் ஓதை சிறந்துஆர்ப்ப
நடந்தாய் வாழி காவேரி.
விழவர் ஓதை சிறந்துஆர்ப்ப
நடந்த எல்லாம் வாய்காவா
மழவர் ஓதை வளவன்தன்
வளனே வாழி காவேரி.   4

வேறு (சார்த்து வரி - முகச்சார்த்து)

கரியமலர் நெடுங்கண் காரிகைமுன்
கடல்தெய்வம் காட்டிக் காட்டி
அரியசூள் பொய்த்தார் அறன்இலர்என்று
ஏழையம்யாங்கு அறிகோம் ஐய
விரிகதிர் வெண்மதியும் மீன்கணமும்
ஆம்என்றே விளங்கும் வெள்ளைப்
புரிவளையும் முத்தும்கண்டு ஆம்பல்
பொதிஅவிழ்க்கும் புகாரே எம்மூர்.  5

காதலர் ஆகிக் கழிக்கானல்
கையுறைகொண்டு எம்பின் வந்தார்
ஏதிலர் தாமாகி யாம்இரப்ப
நிற்பதையாங்கு அறிகோம் ஐய
மாதரார் கண்ணும் மதிநிழல்நீர்
இணைகொண்டு மலர்ந்த நீலப்
போதும் அறியாது வண்டுஊச
லாடும் புகாரே எம்மூர்.   6

மோது முதுதிரையால் மொத்துண்டு
போந்துஅசைந்த முரல்வாய்ச் சங்கம்
மாதர் வரிமணல்மேல் வண்டல்
உழுதுஅழிப்ப மாழ்கி ஐய
கோதை பரிந்துஅசைய மெல்விரலால்
கொண்டுஓச்சும் குவளை மாலைப்
போது சிறங்கணிப்பப் போவார்கண்
போகாப் புகாரே எம்மூர்.   7

வேறு (முகம் இல் வரி)

துறைமேய் வலம்புரி தோய்ந்து மணல்உழுத
தோற்றம் மாய்வான்
பொறைமலி பூம்புன்னைப் பூஉதிர்ந்து நுண்தாது
போர்க்கும் கானல்
நிறைமதி வாள்முகத்து நேர்க்கயல்கண் செய்த
உறைமலி உய்யாநோய் ஊர்சுணங்கு மென்முலையே
தீர்க்கும் போலும்.   8

(கானல் வரி)

நிணம்கொள் புலால்உணங்கல் நின்றுபுள் ஓப்புதல்
தலைக்கீடு ஆகக்
கணம்கொள் வண்டுஆர்த்து உலாம்கன்னி நறுஞாழல்
கையில் ஏந்தி
மணம்கமழ் பூங்கானல் மன்னிமற்று ஆண்டுஓர்
அணங்குஉறையும் என்பது அறியேன் அறிவேனேல்
அடையேன் மன்னோ.   9

வலைவாழ்நர் சேரி வலைஉணங்கும் முன்றில்
மலர்கை ஏந்தி
விலைமீன் உணங்கல் பொருட்டாக வேண்டுஉருவம்
கொண்டு வேறுஓர்
கொலைவேல் நெடுங்கண் கொடுங்கூற்றம் வாழ்வது
அலைநீர்த்தண் கானல் அறியேன் அறிவேனேல்
அடையேன் மன்னோ.   10

வேறு (நிலைவரி)

கயல்எழுதி வில்எழுதிக் கார்எழுதிக் காமன்
செயல்எழுதித் தீர்ந்தமுகம் திங்களோ காணீர்.
திங்களோ காணீர் திமில்வாழ்நர் சீறூர்க்கே
அம்கண்ஏர் வானத்து அரவுஅஞ்சி வாழ்வதுவே. 11

எறிவளைகள் ஆர்ப்ப இருமருங்கும் ஓடும்
கறைகெழுவேல் கண்ணோ கடுங்கூற்றம் காணீர்.
கடுங்கூற்றம் காணீர் கடல்வாழ்நர் சீறூர்க்கே
மடம்கெழுமென் சாயல் மகளா யதுவே.  12

புலவுமீன் வெள்உணங்கல் புள்ஓப்பிக் கண்டார்க்கு
அலவநோய் செய்யும் அணங்குஇதுவோ காணீர்.
அணங்குஇதுவோ காணீர் அடும்புஅமர்த்தண் கானல்
பிணங்குநேர் ஐம்பால்ஓர் பெண்கொண் டதுவே.  13

வேறு (முரிவரி)

பொழில்தரு நறுமலரே புதுமணம் விரிமணலே
பழுதுஅறு திருமொழியே பணைஇள வனமுலையே
முழுமதி புரைமுகமே முரிபுரு வில்இணையே
எழுதுஅரு மின்இடையே எனைஇடர் செய்தவையே. 14

திரைவிரி தருதுறையே திருமணல் விரிஇடமே
விரைவிரி நறுமலரே மிடைதரு பொழில்இடமே
மருவிரி புரிகுழலே மதிபுரை திருமுகமே
இருகயல் இணைவிழியே எனைஇடர் செய்தவையே. 15

வளைவளர் தருதுறையே மணம்விரி தருபொழிலே
தளைஅவிழ் நறுமலரே தனிஅவள் திரிஇடமே
முளைவளர் இளநகையே முழுமதி புரைமுகமே
இளையவள் இணைமுலையே எனைஇடர் செய்தவையே. 16

வேறு (திணை நிலைவரி)

கடல்புக்கு உயிர்க்கொன்று வாழ்வர்நின் ஐயர்
உடல்புக்கு உயிர்க்கொன்று வாழ்வைமன் நீயும்
மிடல்புக்கு அடங்காத வெம்முலையோ பாரம்
இடர்புக்கு இடுகும் இடைஇழவல் கண்டாய்.  17

கொடுங்கண் வலையால் உயிர்க்கொல்வான் நுந்தை
நெடுங்கண் வலையால் உயிர்க்கொல்வை மன்நீயும்
வடம்கொள் முலையால் மழைமின்னுப் போல
நுடங்கி உகுமென் நுசுப்புஇழவல் காண்டாய்.  18

ஓடும் திமில்கொண்டு உயிர்க்கொள்வர் நின்ஐயர்
கோடும் புருவத்து உயிர்க்கொல்வை மன்நீயும்
பீடும் பிறர்எவ்வம் பாராய் முலைசுமந்து
வாடும் சிறுமென் மருங்குஇழவல் கண்டாய்.  19

வேறு

பவள உலக்கை கையால் பற்றித்
தவள முத்தம் குறுவாள் செங்கண்
தவள முத்தம் குறுவாள் செங்கண்
குவளை அல்ல கொடிய கொடிய   20

புன்னை நீழல் புலவுத் திரைவாய்
அன்னம் நடப்ப நடப்பாள் செங்கண்
அன்னம் நடப்ப நடப்பாள் செங்கண்
கொன்னே வெய்ய. கூற்றம் கூற்றம்.  21

கள்வாய் நீலம் கையின் ஏந்திப்
புள்வாய் உணங்கல் கடிவாள் செங்கண்
புள்வாய் உணங்கல் கடிவாள் செங்கண்
வெள்வேல் அல்ல. வெய்ய வெய்ய.  22

வேறு

சேரல் மடஅன்னம் சேரல் நடைஒவ்வாய்
சேரல் மடஅன்னம் சேரல் நடைஒவ்வாய்
ஊர்திரை நீர்வேலி உழக்கித் திரிவாள்பின்
சேரல் மடஅன்னம் சேரல் நடைஒவ்வாய்.  23

(கட்டுரை)

ஆங்கு, கானல்வரிப் பாடல்கேட்ட மான்நெடுங்கண் மாதவியும்
மன்னும்ஓர் குறிப்புஉண்டுஇவன் தன்நிலை மயங்கினான்எனக்
கலவியால் மகிழ்ந்தாள்போல் புலவியால் யாழ்வாங்கித்
தானும்ஓர் குறிப்பினள்போல் கானல்வரிப் பாடல்பாணி
நிலத்தெய்வம் வியப்புஎய்த நீள்நிலத்தோர் மனம்மகிழக்
கலத்தொடு புணர்ந்துஅமைந்த கண்டத்தால் பாடத்தொடங்கும்மன். 24

வேறு (ஆற்று வரி)

மருங்கு வண்டு சிறந்துஆர்ப்ப மணிப்பூ ஆடை அதுபோர்த்துக்
கருங்க யல்கண் விழித்துஒல்கி நடந்தாய் வாழி காவேரி.
கருங்க யல்கண் விழித்துஒல்கி நடந்த எல்லாம் நின்கணவன்
திருந்து செங்கோல் வளையாமை அறிந்தேன் வாழி காவேரி. 25

பூவர் சோலை மயில்ஆலப் புரிந்து குயில்கள் இசைபாடக்
காமர் மாலை அருகுஅசைய நடந்தாய் வாழி காவேரி.
காமர் மாலை அருகுஅசைய நடந்த எல்லாம் நின்கணவன்
நாம வேலின் திறம்கண்டே அறிந்தேன் வாழி காவேரி. 26

வாழி அவன்தன் வளநாடு மகவாய் வளர்க்கும் தாய்ஆகி
ஊழி உய்க்கும் பேர்உதவி ஒழியாய் வாழி காவேரி.
ஊழி உய்க்கும் பேர்உதவி ஒழியாது ஒழுகல் உயிர்ஓம்பும்
ஆழி ஆள்வான் பகல்வெய்யோன் அருளே வாழி காவேரி. 27

வேறு (சார்த்து வரி)

தீங்கதிர் வாள்முகத்தாள் செவ்வாய் மணிமுறுவல் ஒவ்வா வேனும்
வாங்கும்நீர் முத்துஎன்று வைகலும் மால்மகன்போல் வருதிர் ஐய
வீங்குஓதம் தந்து விளங்குஒளிய வெண்முத்தம் விரைசூழ் கானல்
பூங்கோதை கொண்டு விலைஞர்போல் மீளும் புகாரே எம்மூர்.  28

மறையின் மணந்தாரை வன்பரதர் பாக்கத்து மடவார் செங்கை
இறைவளைகள் தூற்றுவதை ஏழையம் எங்ஙனம்யாங்கு அறிகோம் ஐய
நிறைமதியும் மீனும் எனஅன்னம் நீள்புன்னை அரும்பிப் பூத்த
பொறைமலிபூங் கொம்புஏற வண்டுஆம்பல் ஊதும் புகாரே எம்மூர்.  29

உண்டாரை வெல்நறா ஊண்ஓழியாப் பாக்கத்துள் உறைஒன்று இன்றித்
தண்டாநோய் மாதர் தலைத்தருதி என்பதுயாங்கு அறிகோம் ஐய
வண்டல் திரைஅழிப்பக் கையால் மணல்முகந்து மதிமேல் நீண்ட
புண்தோய்வேல் நீர்மல்க பரதர் கடல்தூர்க்கும் புகாரே எம்மூர்.  30

வேறு (திணை நிலைவரி)

புணர்த்துணையோடு ஆடும் பொறிஅலவன் நோக்கி
இணர்த்ததையும் பூங்கானல் என்னையும் நோக்கி
உணர்வுஒழியப் போன ஒலிதிரைநீர்ச் சேர்ப்பன்
வணர்சுரி ஐம்பாலோய் வண்ணம் உணரேனால்.  31

தம்முடைய தண்ணளியும் தாமும்தம் மான்தேரும்
எம்மை நினையாது விட்டாரோ விட்டுஅகல்க
அம்மென் இணர அடும்புகாள் அன்னங்காள்
நம்மை மறந்தாரை நாம்மறக்க மாட்டேமால்.  32

புன்கண்கூர் மாலைப் புலம்பும்என் கண்ணேபோல்
துன்பம் உழவாய் துயிலப் பெறுதியால்
இன்கள்வாய் நெய்தால்நீ எய்தும் கனவினுள்
வன்கணார் கானல் வரக்கண்டு அறிதியோ?  33

புள்இயல்மான் தேர்ஆழி போன வழிஎல்லாம்
தெள்ளுநீர் ஓதம் சிதைத்தாய்மற்று எஞ்செய்கோ?
தெள்ளுநீர் ஓதம் சிதைத்தாய்மற்று எம்மோடுஈங்கு
உள்ளாரோடு உள்ளாய் உணராய்மற்று எஞ்செய்கோ? 34

நேர்ந்தநம் காதலர் நேமிநெடுந் திண்தேர்
ஊர்ந்த வழிசிதைய ஊர்க்கின்ற ஓதமே
பூந்தண் பொழிலே புணர்ந்துஆடும் அன்னமே
ஈர்ந்தண் துறையே இதுதகாது என்னீரே.  35

நேர்ந்தநம் காதலர் நேமிநெடுந் திண்தேர்
ஊர்ந்த வழிசிதைய ஊர்ந்தாய்வாழி கடல்ஓதம்
ஊர்ந்த வழிசிதைய ஊர்ந்தாய்மற்(று) எம்மொடு
தீர்ந்தாய்போல் தீர்ந்திலையால் வாழி கடல்ஓதம்.  36

வேறு (மயங்கு திணை நிலைவரி)

நன்நித் திலத்தின் பூண்அணிந்து நலம்சார் பவளக் கலைஉடுத்துச்
செந்நெல் பழனக் கழனிதொறும் திரைஉ லாவு கடல்சேர்ப்ப.
புன்னைப் பொதும்பர் மகரத்திண் கொடியோன் எய்த புதுப்புண்கள்
என்னைக் காணா வகைமறத்தால் அன்னை காணின் என்செய்கோ? 37

வாரித் தரள நகைசெய்து வண்செம் பவள வாய்மலர்ந்து
சேரிப் பரதர் வலைமுன்றில் திரைஉ லாவு கடல்சேர்ப்ப.
மாரிப் பீரத்து அலர்வண்ணம் மடவாள் கொள்ளக் கடவுள்வரைந்து
ஆர்இக் கொடுமை செய்தார்என்று அன்னை அறியின் என்செய்கோ?  38

புலவுற்று இரங்கி அதுநீங்கப் பொழில்தண் டலையில் புகுந்துஉதிர்ந்த
கலவைச் செம்மல் மணம்கமழத் திரைஉ லாவு கடல்சேர்ப்ப.
பலஉற்று ஒருநோய் திணியாத படர்நோய் மடவாள் தனிஉழப்ப
அலவுற்று இரங்கி அறியாநோய் அன்னை அறியின் என்செய்கோ? 39

வேறு

இளைஇருள் பரந்ததுவே எல்செய்வான் மறைந்தனனே
களைவுஅரும் புலம்புநீர் கண்பொழீஇ உகுத்தனவே
தளைஅவிழ் மலர்க்குழலாய் தணந்தார்நாட்டு உளதாம்கொல்
வளைநெகிழ எரிசிந்தி வந்தஇம் மருள்மாலை?  40

கதிரவன் மறைந்தனனே கார்இருள் பரந்ததுவே
எதிர்மலர் புரைஉண்கண் எவ்வநீர் உகுத்தனவே
புதுமதி புரைமுகத்தாய் போனார்நாட்டு உளதாம்கொல்
மதிஉமிழ்ந்து கதிர்விழுங்கி வந்தஇம் மருள்மாலை? 41

பறவைபாட்டு அடங்கினவே பகல்செய்வான் மறைந்தனனே
நிறைநிலா நோய்கூர நெடுங்கண்நீர் உகுத்தனவே
துறுமலர் அவிழ்குழலாய் துறந்தார்நாட்டு உளதாம்கொல்
மறவையாய் என்உயிர்மேல் வந்தஇம் மருள்மாலை? 42

வேறு (சாயல் வரி)

கைதை வேலிக் கழிவாய் வந்துஎம்
பொய்தல் அழித்துப் போனார் ஒருவர்
பொய்தல் அழித்துப் போனார் அவர்நம்
மையல் மனம்விட்டு அகல்வார் அல்லர்.  43

கானல் வேலிக் கழிவாய் வந்து
நீநல்கு என்றே நின்றார் ஒருவர்
நீநல்கு என்றே நின்றார் அவர்நம்
மான்நேர் நோக்கம் மறப்பார் அல்லர்.  44

அன்னம் துணையோடு ஆடக் கண்டு
நென்னல் நோக்கி நின்றார் ஒருவர்
நென்னல் நோக்கி நின்றார் அவர்நம்
பொன்நேர் சுணங்கிற் போவார் அல்லர்.  45

வேறு (முகம் இல் வரி)

அடையல் குருகே அடையல்எம் கானல்
அடையல் குருகே அடையல்எம் கானல்
உடைதிரைநீர்ச் சேர்ப்பற்கு உறுநோய் உரையாய்
அடையல் குருகே அடையல்எம் கானல்.  46

வேறு (காடுரை)

ஆங்கனம் பாடிய ஆயிழை பின்னரும்
காந்தள் மெல்விரல் கைக்கிளை சேர்குரல்
தீந்தொடைச் செவ்வழிப் பாலை இசைஎழீஇப்
பாங்கினில் பாடிஓர் பண்ணும் பெயர்த்தாள்.  47

வேறு (முகம் இல் வரி)

நுளையர் விளரி நொடிதரும்தீம் பாலை
இளிகிளையில் கொள்ள இறுத்தாயால் மாலை
இளிகிளையில் கொள்ள இறுத்தாய்மன் நீயேல்
கொளைவல்லாய் என்ஆவி கொள்வாழி மாலை.  48

பிரிந்தார் பரிந்துஉரைத்த பேர்அருளின் நீழல்
இருந்துஏங்கி வாழ்வார் உயிர்ப்புறத்தாய் மாலை
உயிர்ப்புறத்தாய் நீஆகில் உள்ஆற்றா வேந்தன்
எயில்புறத்து வேந்தனோடு என்ஆதி மாலை.  49

பையுள்நோய் கூரப் பகல்செய்வான் போய்வீழ
வையமோ கண்புதைப்ப வந்தாய் மருள்மாலை
மாலைநீ ஆயின் மணந்தார் அவர்ஆயின்
ஞாலமோ நல்கூர்ந் ததுவாழி மாலை.  50

வேறு

தீத்துழை வந்தஇச் செல்லல் மருள்மாலை
தூக்காது துணிந்தஇத் துயர்எஞ்சு கிளவியால்
பூக்கமழ் கனலில் பொய்ச்சூள் பொறுக்க என்று
மாக்கடல் தெய்வம்நின் மலர்அடி வணங்குதும்.  51

வேறு (கட்டுரை)

எனக்கேட்டு,
கானல்வரி யான்பாடத் தான்ஒன்றின்மேல் மனம்வைத்து
மாயப்பொய் பலகூட்டும் மாயத்தாள் பாடினாள்என
யாழ்இசைமேல் வைத்துத்தன் ஊழ்வினைவந்து உருத்ததுஆகலின்
உவவுஉற்ற திங்கள்முகத்தாளைக் கவவுக்கை ஞெகிழ்ந்தனனாய்ப்
பொழுதுஈங்குக் கழிந்ததுஆகலின் எழுதும்என்று உடன்எழாது
ஏவலாளர் உடஞ்சூழக் கோவலன்தான் போனபின்னர்,
தாதுஅவிழ் மலர்ச்சோலை ஓதைஆயத்து ஒலிஅவித்துக்
கையற்ற நெஞ்சினளாய் வையத்தி னுள்புக்குக்
காதலனுடன் அன்றியே மாதவிதன் மனைபுக்காள்
ஆங்கு,
மாயிரு ஞாலத்து அரசு தலைவணக்கும்
சூழி யானைச் சுடர்வாள் செம்பியன்
மாலை வெண்குடை கவிப்ப
ஆழி மால்வரை அகவையா எனவே.  52

உரை

மாதவியின் யாழ் மாண்பு - நூலாசிரியர் கூற்று

1-4 : சித்திரப்படத்துள் .............. வாங்கி

(இதன்பொருள்:) சித்திரம் படத்துள் புக்கு - ஓவியம் பொறிக்கப்பட்ட பல்வேறு வண்ணத்தாற் றிகழும் துகிலாலியன்ற உறையினுட் புகுந்து; செழுங் கோட்டின் மலர் புனைந்து - அழகினால் வளமுடைத்தாகிய தனது கோட்டின் உச்சியிலே நறுமண மலர் மாலை சூட்டப் பெற்று விளங்குவதாலே; மைத் தடங்கண் மணமகளிர் கோலம் போல் வனப்பு எய்தி - மை எழுதிய பெருவிழிகளையுடைய புதுமணம் புகுதும் மகளிருடைய திருமணக் கோலம் போன்று காண்போர் கண்கவரும் பேரழகு பெற்று; பத்தரும் கோடும் ஆணியும் நரம்பும் என்று இத் திறத்துக் குற்றம் நீங்கிய - பத்தரும் தண்டும் முறுக்காணிகளும் நரம்புகளும் பிறவுமாகிய தன் உறுப்புக்களின் திறத்திலே குற்றம் சிறிதுமில்லாத; யாழ் - வசந்தமாலை கையிலிருந்த தனது யாழினை; தொழுது வாங்கி - கைகுவித்துத் தொழுது தனதிருகைகளாலும் வாங்கிக்கொண்டு, வெண்கால் அமளிமிசை கோவலன் றன்னோடு இன்னிசையின்பம் கூட்டுணவேண்டும் என்னும் கொள்கையோடிருந்த அம் மாமலர் நெடுங்கண் மாதவி என்பாள் பின்னர் என்க.

(விளக்கம்) முன்னைக் காதையில் (கடலாடு. 171-2) வசந்த மாலைகளைத் திருந்துகோல் நல்லியாழ் செவ்வனம் வாங்கி என்றோதிய அடிகளார் மீண்டும் அந்நிகழ்ச்சியையே கானல்வரி என்னும் இக் காதைக்குத் தோற்றுவாயாக்கித் தொடங்குகின்றார், அஃதெற்றுக் கெனின் அந்த யாழினது சிறப்பினையும் மாதவி அதனை இசை கூட்டுந் தன்மையினையும் விதந்தோதற் பொருட்டென்க.

ஈண்டு அடிகளார் யாழின் தோற்றத்திற்குப் புதுமணக் கோலம் பூண்ட மகளிரை உவமையாக்குதலின் அவர் கூறும் யாழ் இக்காலத்தே யாழ்ப்புலவர் கைக்கொண்டுள்ள யாழ்போலவே இருந்திருத்தல் வேண்டும் என்பது தேற்றம். தவத்திரு விபுலானந்த அடிகளார் வளைந்த காம்பையுடைய அகப்பை வடிவில் சித்திரித்துக் காட்டுகின்ற யாழ் உறையிற் புகுத்திப் பார்க்குமிடத்து யாதானுமொரு மூடையின் வடிவமாகத் தோன்றுவதல்லது மணமகளிரின் கோலம்போல் வனப்புடைத்தாகக் காணப்படா தென்பதனை அவர் யாழ் நூலிற் காட்டியுள்ள யாழ் வடிவங்களை நோக்கியுணர்க. பேரறிஞர் ஒருவர் பெரிதும் முயன்று ஆராய்ந்து எழுதிய பாணர் கைவழி என்னும் யாழ் நூலில் சிலப்பதிகாரக் காலத்து யாழ் இற்றை நாளிற் காணப்படும் யாழ் போலவே இருந்தது என முடிவு செய்துள்ளார். அவர்க்குத் தமிழுலகம் பெரிதும் நன்றி செலுத்தற் பாலதாம். அறிய விரும்புவோர் அந்நூலையோதி அறிக. ஈண்டுரைப்பின் உரை விரியுமென்றஞ்சி விடுத்தோம்.

இனி, அடிகளார் கூறியாங்கே முடத்தாமக் கண்ணியார் என்னும் நல்லிசைப்புலவர் தாமும் மணங்கமழ் மாதரை மண்ணி யன்ன அஃதாவது புதுமணக் கோலம் பொலிவுபெற்ற மாதரை ஒப்பனை செய்து கண்டாலொத்த வனப்புடைய யாழ் என ஓதியுள்ளார் (பொருநராற்றுப் படை-19)

1. சித்திரப்படம் - ஓவியம் பொறித்த வண்ணத் துகிலாலியன்ற உறை. இதற்கு மணமகளிர் உடுத்திய பூந்துகில் உவமை. கோடு யாழ்த்தண்டு. கோட்டின் உச்சியில் மலர்புனைந்து என்றவாறு. 3. பத்தர் முதலிய நான்கும்யாழின்கட் சிறந்த உறுப்புக்களாதலான் அவற்றையே கூறி யொழிந்தார். யாழ் உறுப்புக்கள் பத்தர் முதலாகப் பதினெட்டுள என்ப. பத்தர் - பத்தல்; இக்காலத்தார் குடம் என்பர். நரம்பினது ஒலியைப் பெருக்கிப் பெரிதும் இனிமையுடையதாய்ச் செய்யும் உறுப்பாகலின் இது சிறந்த உறுப்பாயிற்று கோடு - தண்டு. இஃது அழகினாற் சிறந்திருத்தலைச் செழுங்கோடு என்பதனாற் குறித்தார். என்னை? நுணங்கா நுவரிய நுண்ணீர் மாமைக் களங்கனி யன்ன கதழ்ந்து கிளர்உருவின் வணர்ந்தேந்து கோடு என்பவாகலின் (மலைபடு 35-37) என்க.

ஆணி யாழில் துரப்பமை ஆணி யென்றும் சுள்ளாணி என்றும் இருவகை ஆணிகள் உள, ஈண்டுக் கூறியது நரம்புகளை முடுக்கும் துரப்பாணியை. அளைவாழ் அலவன் கண்கண்டன்ன துளைவாய்தூர்ந்த துரப்பமை ஆணி எனப் பொருநராற்றுப் படையிற் கூறப்படும் ஆணியும் இது. நரம்பு - இசையைப் பிறப்பிக்கும் யாழ் நரம்புகள். இவ்வுறுப்புக்கள் குற்றமுடையனவாயின் இன்னிசை பிறவாது. இவற்றின் குற்றம் குண முதலியன அரங்கேற்று காதைக்கண் கூறப்பட்டன. யாழின்கண் மாதங்கி என்னும் கலைத்தெய்வம் வீற்றிருக்கும் கலைவாணர் கொள்கை ஆதலின் 4. தொழுது வாங்கினள் என்க.

மாதவி எண்வகையால் இசைநலன் ஆராய்தல்

5-9 : பண்ணல் ............. பரிவுதீர்ந்து

(இதன்பொருள்:) பண்ணல் பரிவட்டணை ஆராய்தல் தைவரல் கண்ணியசெலவு விளையாட்டுக் கையூழ் நண்ணிய குறும்போக்கு என்று நாட்டிய - இசை நூலோரால் பண்ணல்முதலாகக் குறும் போக்கு ஈறாக நூலிற் கூறி நிறுவிய; எண்வகையால் இசை எழீஇ - எண்வகைச் செயலால் அந்த யாழ் நரம்பினை ஆராய்ந்து பண்ணுறுத்தி நரம்புகளிலே இசைகளைப் பிறப்பித்து; பண்வகையால் பரிவுதீர்ந்து - நால்வகைப் பண் வகைகளானும் குற்றமின்மை தெளிந்து; என்க.

(விளக்கம்) 5-8. பண்ணல் முதலிய தொழில்கள் எட்டும் யாழ் நரம்புகளில் இசை பிறப்பிக்குந் தொழில்களாம். அவற்றுள்,

(1) பண்ணலாவது - பாடநினைத்த பண்ணுக்கு இணைகிளை பகை நட்பான நரம்புகள் பெயரும் தன்மை மாத்திரை அறிந்து வீக்குதல்.

(2) பரிவட்டணையாவது - அங்ஙனம் வீங்கின நரம்பை அகவிரலாலும் புறவிரலாலும் கரணஞ்செய்து (வருடி) தடவிப் பார்த்தல்.

(3) ஆராய்தலாவது - ஆரோகண அவரோகண வகையால் இசையைத் தெரிவது.

(4) தைவரலாவது - அநுசுருதி யேற்றுதல் (வழியிசை சேர்த்தல்).

(5) செலவாவது - ஆளத்தியிலே (இராக ஆலாபனத்தில்) நிரப்பப் பாடுதல்.

(6) விளையாட்டாவது - பாட நினைத்த வண்ணத்தில் சந்தத்தை விடுதல்.

(7) கையூழாவது - வண்ணத்திற் செய்த பாடலெல்லாம் இன்பமாகப் பாடுதல்.

(8) குறும்போக்காவது - குடகச் செலவும் துள்ளற் செலவும் பாடுதல். இவை சிந்தாமணியில் 657 ஆம் செய்யுள் உரையில் ஆசிரியர் நச்சினார்க்கினியர் தந்த விளக்கங்களாம். இனி, நிரலே இவற்றிற்குச் சிலப்பதிகார அரும்பதவுரையாசிரியர் தரும் நூற்பாக்கள் வருமாறு :

வலக்கைப் பெருவிரல் கால் கொளச் சிறுவிரல். விலக்கின்றிளி வழி கேட்டும் ..... இணைவழி யாராய்ந்து, இணை கொள முடிப்பது பண்ணலாகும் எனவும், பரிவட்டணையி னிலக்கணந் தானே. மூவகை நடையின் முடிவிற்றாகி. வலக்கை யிருவிரல் வனப்புறத் தழீஇ, இடக்கை விரலி னியைவதாகத் தொடையொடு தோன்றியும் தோன்றாதாகியும் நடையொடு தோன்றும் நயத்த தாகும் எனவும், ஆராய்தலென்ப தமைவரக் கிளப்பிற் - குரன்முத லாக இணைவழி கேட்டும் - இணையிலாவழிப் பயனொடு கேட்டும் - தாரமும் உழையுந் தம்முட்கேட்டும் - குரலும் இளியும் தம்முட் கேட்டும் துத்தமும் விளரியும் துன்னறக் கேட்டும் விளரி கைக்கிளை விதியுளிக் கேட்டும் தளராதாகிய தன்மைத்தாகும் எனவும், தைரைலென்பது சாற்றுங் காலை மையறு சிறப்பின் மனமகிழ் வெய்தித் தொடையொடு பட்டும் படாஅ தாகியும் நடையொடு தோன்றி யாப்புநடை யின்றி ஓவச் செய்தியின் வட்டணை யொழுகிச் சீரேற் றியன்றும் இயலா தாகியும் நீரவாகும் நிறைய வென்க எனவும், செலவெனப் படுவதன் செய்கை தானே - பாலை பண்ணே திறமே கூடமென - நால்வகை யிடத்து நயத்த தாகி - இயக்கமும் நடையும் எய்திய வகைத்தாய்ப் - பதினோராடலும் பாணியுமியல்பும் - விதிநான்கு தொடர்ந்து விளங்கிச்செல் வதுவே எனவும், கையூழென்பது கருதுங் காலை - எவ்விடத் தானு மின்பமுஞ் சுவையும் - செவ்விதிற் றோன்றிச் சிலைத்துவர லின்றி - நடை நிலை திரியாது நண்ணித் தோன்றி - நாற்பத் தொன்பது வனப்பும் வண்ணமும் பாற் படத் தோன்றும் பகுதித் தாகும். எனவும், துள்ளற் கண்ணும் குடக்குத் துள்ளும் தள்ளா தாகிய வுடனிலைப் புணர்ச்சி - கொள்வன வெல்லாம் குறும்போக் காகும். எனவும் வரும். 9. கண்ணிய - கருதிய (செலவு) ; 7. நண்ணிய - அணுகிய. (குறும் போக்கு)

9. பண்வகை - ஈரிரு பண்ணும் எழுமூன்று திறனும் பிறவுமாம். பரிவு - குற்றம். தீர்ந்து - தீர்ந்துள்ளமை தெரிந்து என்றவாறு.

இசையோர் வகுத்த எண்வகை இசைக்கரணங்கள்

10-16 : மரகதமணி ............. செவியினோர்த்து

(இதன்பொருள்:) மரகதமணித் தாள் செறிந்த மணிக்காந்தள் மெல்விரல்கள் - மரகதமணி அழுத்திய கடைசெறி என்னும் மோதிரஞ் செறிக்கப்பட்ட அழகிய காந்தட் பூப்போலும் மெல்லிய விரல்கள்; பயிர் வண்டின் கிளைபோல - இசை முரலாநின்ற வண்டினம் போன்று ; பல் நரம்பின் மிசைப்படர - பலவாகிய இசை நரம்புகளின் மேலே அங்குமிங்குமாய்த் திரியாநிற்ப; வார்தல் வடித்தல் உந்தல் உறழ்தல் சீருடன் உருட்டல் தெருட்டல் அள்ளல் ஏருடைப்பட்டடை என - வார்தலும் வடித்தலும் உந்தலும் உறழ்தலும் தாளத்தோடே உருட்டலும் தெருட்டலும் அள்ளலும் எழுச்சியுடைய பட்டடையும் என்று ; இசையோர் வகுத்த எட்டுவகையின் இசைக்கரணத்து - இசைநூலோர் வகுத்துக் கூறிய எட்டுவகையினையுடைய இசைத் தொழில்களாலே; பட்டவகை தன் செவியின் ஓர்த்து - பிறந்த இசைவகையினைத் தன் எஃகுச் செவியாலே கேட்டுணர்ந்து ; என்க.

(விளக்கம்) 10. மரகதமணித்தாள் என்பது ஒருவகை மணிமோதிரம். இதனியல்பினை முன்னைக் காதையில் 97 வாங்குவில் வயிரத்து மரகதத் தாள்செறி என அடிகளார் கூறியதனையும் அதன் உரையையும் நோக்கி யறிக. 11. பயிர் வண்டின் : வினைத்தொகை. பயிர்தல்-ஈண்டு இசைமுரலுக லென்க. கிளை - இனம். பதினான்கு நரம்புகளாகலின் பன்னரம்பு என்றார் (நரம்பு - ஈண்டு மெட்டு.)

12. 14. வார்தல் - சுட்டுவிரற் செய்தொழில்; வடித்தல் - சுட்டுவிரலும்பெருவிரலும் கூட்டிநரம்பை அகமும் புறமும் ஆராய்தல்; உந்தல் நரம்புகளைத் (தெறித்து) உந்தி வலிவிற்பட்டதும், மெலிவிற்பட்டதும், நிரல்பட்டதும், நிரலிழிபட்டதும் என்றறிதல். உறழ்தல் - ஒன்றிடையிட்டும் இரண்டிடையிட்டும் ஆராய்தல். உருட்டல் - இடக்கைச் சுட்டுவிரல் தானே யுருட்டலும், வலக்கைச் சுட்டுவிரல் தானே யுருட்டலும், சுட்டொடு பெருவிரற் கூட்டி யுருட்டலும், இருவிரலும் இயைந்துடன் உருட்டலும் ஆம். தெருட்டல் - உருட்டி வருவதொன்றேயாம். இங்ஙனம் கூறுவர் அரும்பதவுரையாசிரியர். அள்ளல் பட்டடை என்பனவற்றிற்கு விளக்கம் கிடைத்தில. ஆயினும், பட்டடை என்பது இளிக்கிரமத்தில் இசையை வைப்பது எனலாம். என்னை? வண்ணப்பட்டடை யாழ் மேல் வைத்து (63) எனவரும் அரங்கேற்றுகாதைக்கண் இளிக்கிரமத்தினாலே பண்களை யாழ் மேல் வைத்து எனப் பழைய உரையாசிரிய ரிருவரும் கூறுவராதலின் என்க.

மாதவி வேண்டுகோட் கிணங்கிக் கோவலன் யாழ் வாசித்தல்

17-20: ஏவலன்..............தொடங்குமன்

(இதன்பொருள்:) அன்பின் பணி யாது ஏவல் என - பின்னர்க் கோவலனை நோக்கி இனி அன்புடையீர்! யான் செய்யக்கடவ பணி யாதோ? ஏவி யருள்க என்று கூறுவாளாய் மாதவி; யாழ் கோவலன் கை நீட்ட - அத்திருந்துகோல் நல்யாழினைக் கோவலன் கையிற் கொடாநிற்ப; அவனும் - அக்கோவலன்றானும் ஆர்வத்துடன் யாழை வாங்கியவன்; மாதவி மனமகிழக் காவிரியை நோக்கினவும் கடற்கானல்வரிப் பாணியும் வாசித்தல் தொடங்கும் மன் - அம் மாமலர் நெடுங்கண் மாதவியினது நெஞ்சம் பெரிதும் மகிழ்தல் வேண்டிக் காவிரியைக் கருதிய வரிப்பாடல்களையும் கடற்கானலைக் கருதிய வரிப்பாடல்களையும் யாழ்மேல் வைத்து இசைக்கத் தொடங்கினான்; என்க.

(விளக்கம்) 17. அன்பின் பணியாது ஏவல் என மாறுக. அன்பே! நின் பணி யாது என்றவாறு. முன்னிலைக்கண் படர்க்கை வந்தது. ஏவல் - ஏவுக: அல்லீற்று வியங்கோள் உடம்பாட்டின்கண் வந்தது; மக்கட் பதடி எனல் என்புழிப் போல, ஏவலன் பின்பணி யாதென கண்ணழித்துக் கொண்டு அரும்பதவுரையாசிரியர் இப்பொழுது இதனை வாசியென்று விதிக்கின்றேனல்லேன்; வாசிக்குந்தாள மியாதென்று யான் அறியலுறுகின்றேன் என்பாள் போலக்கொடுத்தாள் என்க, எனவும் ஏவலன் : தன்மை ஒருமை என்றும் விளக்கினர். மேலும், கோவலன் கை யாழ் நீட்ட என்பதற்கு யாழைத் திருத்தித் தான் முற்பட வாசியாதே அவன் தலைமை தோன்றக் கொடுத்தாள் எனவும் நுண்ணிதின் விளக்கினர்.

கோவலன் பாடிய வரிப்பாடல் (காவிரியைக் கருதியவை)

ஆற்றுவரி

(2) திங்கள்மாலை ........ காவேரி

(இதன்பொருள்:) காவேரி - காவிரி நங்காய்! நீதானும் ; திங்கள் மாலை வெண்குடையான் - முழு வெண்டிங்கள் போன்ற (தும்) வாகைமாலை சூட்டப்பட்டதுமாகிய கொற்ற வெண்குடையை யுடைய நின்கணவனாகிய; சென்னி - சோழமன்னன்; செங்கோல் அது ஓச்சி-செங்கோன்மை பிறழாது அரசியல் நடாத்தி; கங்கை தன்னைப் புணர்ந்தாலும் - கங்கை என்னும் மற்றொரு நங்கையைப் புணர்தல் அறிந்திருந்தும்; புலவாய் - அவனொடு ஊடுகின்றிலை; கங்கை ......... புலவாதொழிதல் - அவன் அவ்வாறு மற்றொருத்தியைப் புணர்ந்தமை அறிந்துழியும் நீ அவனோடு ஊடாதிருத்தலாலே; மங்கை மாதர் பெருங்கற்பு என்று அறிந்தேன் - இது நங்கையரின் உயரிய கற்பிற்கியற்கையான பெருந்தன்மையாகும் என்று அடியேன் அறிந்துகொண்டேன் காண்!; காவேரி வாழி - இத்தகைய பெருந்தகைக் கற்புடைய எங்கள் காவிரி நங்காய் ! நீ நீடூழி வாழ்வாயாக! என்க.

(3) மன்னுமாலை ................ காவேரி

(இதன்பொருள்:) கயற் கண்ணாய் - கயலாகிய கண்ணை யுடைய காவிரி நங்காய்! நீதானும்; மன்னும் மாலை வெண்குடையான் வளையாச் செங்கோல் அதுவோச்சி - எஞ்ஞான்றும் நிலைபேறுடைய வாகைமாலையையுடைய கொற்ற வெண்குடை நிழற்றும் நின் கணவனாகிய சோழமன்னன் ஒருபொழுதும் முறை பிறழாத செங்கோல் செலுத்துபவன்; கன்னி தன்னைப் புணர்ந்தாலும் - நின்னைப் பிரிந்துபோய்க் கன்னி என்னும் மற்றொரு நங்கையைப் புணர்தலை நீ அறிந்திருந்தேயும் ; புலவாய் வாழி - நீ அவனோடு ஊடுகின்றிலை நீ வாழ்வாயாக! கன்னிதன்னை ........... புலவாதொழிதல் - அங்ஙனம் அவன் மற்றொருத்தியை மருவுதல் கண்டும் நீ ஊடாமையாலே; மாதர் மன்னும் பெருங்கற்பு என்று அறிந்தேன் - இது காதல் நிலைபெற்ற கற்பிற் கியற்கையான பெருந்தன்மை என்று அடியேன் அறிந்துகொண்டேன் காண்!; காவேரி வாழி - இத்தகைய பெருந்தகைக் கற்புடைய காவிரி நங்காய் நீ நீடூழி வாழ்வாயாக ! என்க.

(4) உழவரோதை ...........காவேரி

(இதன்பொருள்:) காவேரி உழவர் ஓதை மதகு உடைநீரோதை தண்பதம் கொள் விழவர் ஓதை சிறந்துஆர்ப்ப நடந்தாய் - காவிரி நங்காய் நின் கணவனோடு நீ காரண முள்வழியும் ஊடாதொழிதலேயன்றியும் உழவர் ஏர்மங்கலம் பாடும் ஆரவாரமும் மதகுகள் முழங்கும் ஆரவாரமும் கரையை உடைத்துப் பாயும் நீரினது ஆரவாரமும் விழாவெடுப்போர் நீராடுதலால் எழும் ஆரவாரமும், மேன்மேலும் சிறந்து ஆரவாரிக்கும்படி; நடந்தாய் - நின் கடமையாகிய நல்லொழுக்கத்தின்கண் சிறிதும் மாற்றமின்றி ஒழுகாநின்றனை; இத்தகைய பெருங்கற்புடைய நீ; வாழி - நீடூழி வாழ்வாயாக; விழவர் ........ நடந்த வெல்லாம் - நீ நின் கணவன்பாற் புலவாமல் நின் கடமையிற் கருத்தூன்றி ஒழுகும் இந்நல்லொழுக்கத்தால் உண்டாகும் பயனெல்லாம்; வாய் காவா மழவர் ஓதை வளவன்றன் வளனே - தங்கள் வாயை அடக்குதலில்லாத மறவர் ஆரவாரித்தற்குக் காரணமான சோழ மன்னனுடைய வளமல்லவோ? அவ்வாறு அவனை வளஞ்செய்தலுமுடையை காண்; காவேரி - ஆதலால் அத்தகைய பெருங்கற்புடைய நீ; வாழி நீடூழி வாழ்க! என்க.

(விளக்கம் ) திங்கள் மாலை என்னும் இப்பாடல் முதலாகக் கோவலன் பாடுகின்ற பாடல்களும் பின்னர் மாதவி பாடும் பாடல்களும் இசைத்தமிழ்ப் பாடல்கள். இவற்றிற்குப் பண் தாளம் முதலியனவும் உள. அவற்றை ஆராய்ந்து கண்டு இசை அரங்குகளிலே பாடிக்காட்டி இவற்றின் இனிமையை மக்கட்குணர்த்தித் தமிழ்மொழியை வளம் படுத்துதல் இசையறி புலவர் கடமையாம். ஈண்டு இவற்றை இயற்றமிழ்ச் செய்யுண் மாத்திரையாகவே கொண்டு பொருள் கூறுகின்றாம் என்றுணர்க.

இனி, இசைத்தமிழின் பாற்பட்ட இவற்றை இசை நூலோர் உருக்கள் என்றும் கூறுவர். திங்கள்மாலை என்னும் செய்யுள் முதலிய இம்மூன்றும் ஒரு பொருண்மேல் அடுக்கி, கந்தருவ மார்க்கத்தால் இடை மடக்கி வந்தன. இம்மூன்று வரிப்பாடலும் காவிரியாற்றைக் கருதிப் பாடப்பட்டமையின் ஆற்றுவரி எனப்பட்டன. அரும்பதவுரையாசிரியர் வரிப் பாடல்பற்றித் தரும் விளக்கம் வருமாறு :

இனி, வரிப்பாடலாவது - பண்ணும் திறமும் செயலும் பாணியும் ஒரு நெறியின்றி மயங்கச் சொல்லப்பட்ட எட்டனியல்பும் ஆறனியல்பும் பெற்றுத் தன் முதலும் இறுதியுங் கெட்டு இயல்பும் முடமுமாக முடிந்து கருதப்பட்ட சந்தியும் சார்த்தும் பெற்றும் பெறாதும் வரும். அதுதான் தெய்வஞ் சுட்டியும் மக்களைப் பழிச்சியும் வரும்.

அவற்றுள் தெய்வஞ் சுட்டிய வரிப்பாட்டு வருமாறு:

அழலணங்கு தாமரை யருளாழி யுடையகோ னடிக்கீழ்ச் சேர்ந்து
நிழலணங்கு முருகுயிர்த்து நிரந்தலர்ந்து தோடேந்தி நிழற்றும் போலும்
நிழலணங்கு முருகுயிர்த்துநிரந்தலர்ந்து தோடேந்திநிழற்றுமாயின்
தொழிலணங்கு மன்புடையார் சூழொளியும் வீழ்கரியுஞ் சொல்லாவன்றே

இது கூடைச் செய்யுள் கூடையென்பது கூறுங் காலை நான்கடி யாகி இடையடிமடக்கிநான்கடி அஃகி நடத்தற்கு முரித்தே வாரமென்பது வகுக்குங் காலை நடையினு மொலியினு மெழுத்தினு நோக்கித் தொடையமைந் தொழுகுந் தொன்மைத் தென்ப இவை அடிவரை யிட்டன.

இனி, மக்களைச் சுட்டிய வரிப்பாட்டு வருமாறு : திங்கள்மாலை.. காவேரி என்பது போல வருவது எனவரும்.

இனி, ஈண்டுக் கோவலன் மாதவி மனமகிழ யாழ் மேலிட்டுத் திங்கள்மாலை வெண்குடையான் என்று தொடங்கி ஒருபொருள்மேல் அடுக்கி வரும் மூன்று ஆற்றுவரிப் பாடலும் இங்ஙனமே மாதவி பின்னர் (25) மருங்குவண்டு என்பது தொடங்கிப் பாடுகின்ற ஆற்று வரிப்பாடலும் தெய்வஞ் சுட்டிய வரிப்பாடல்களேயாம். என்னை? இந் நூலாசிரியர் இறைவனை அவன்றன் படைப்புப் பொருள்களுள் வைத்துக் கடவுட் பண்புமிக்கு விளங்குகின்ற பொருள்களிலேகண் கூடாகக்கண்டு வணங்குங் கோட்பாடுடையார் என்பதனை நூற்றொடக்கத்தே மங்கல வாழ்த்துப் பாடலின்கண் திங்கள் ஞாயிறு மழை முதலிய பொருள்களை வாழ்த்துமாற்றால் பெற்றாம். ஈண்டும் கோவலனும் மாதவியும் கடவுட் பண்புமிக்கு விளங்கும் காவிரியையும் அப்பேரியாறூட்டும் நாட்டின்கண் வளையாச் செங்கோல் அதுவோச்சும் மன்னனை வஞ்சப் புகழ்ச்சியாகவும் வைத்துப் பாடுகின்ற இப்பாடல்களும் அந்த யாற்றையும் அரசனையும் இறைவனாகக் கருதி வாழ்த்தியபடியேயாம் என நுண்ணிதின் உணர்க. அங்ஙனம் பாடுங்கால் தான் பாடக் கருதிய அகப்பொருள் மரபிற்கேற்ப அரசனையும் ஆற்றினையும் கடவுட் காதலராக வைத்து வியத்தகு முறையில் பாடி வாழ்த்தினன் என்க. இங்ஙனம் கூறாக்கால் யாழ் வாசிக்கத் தொடங்குவோர் கடவுள் வாழ்த்துப்பாடும் மரபினைக் கைவிட்டதாகி இழுக்காம் என்று முணர்க.

இனி, இவை அகப்பொருள் பொதிந்த பாடலாயினும் சென்னி என்றும் காவேரி என்றும் தலைவன் தலைவியர் பெயர் சுட்டிக் கூறப்படுதலான் அகப்புறப் பாடலாயின. அவற்றுள்ளும் காமப்பகுதி கடவுளும் வரையார் என்னும் புறப்பொருட் பாடாண் திணையில் புரைதீர் காமம் புல்லிய வகையில் பாடப்பட்ட அமரர்கண் முடியும் அறுவகையுள் இவை வாழ்த்தியல் என்பதன்கண் அடங்கும் என்க.

இனி, இவற்றிற்கு அகப்பொருண் மருங்கில் திணையுந் துறையும் கூறுமிடத்து, உறலருங் குரைமையின் ஊடல் மிகுத்தோளைப் பிறபிற பெண்டிரிற் பெயர்த்தற் கண்ணும் (தொல். கற். 5) எனவரும் துறை கொள்க. என்னை? தலைவனும் தலைவியும் நீராடச் சென்றிருந்தாராக ஆற்றங்கரையில் தலைவிக்குப் பாங்காயினார் நின் கணவன் நெருநல் பரத்தையரொடு நீராடினன் என்று கூறக்கேட்டுத் தலைவி அவனோடு ஊடி முகங் கொடாளாயினள். ஆகவே, அவன் தலைவியின் ஊடல் தீர்த்தற்கு அவள் முன்பு தன் பிழையை ஒப்புக்கொண்டு கணவன்மார் தவறு செய்துழியும் பெருங்கற்புடைய மகளிர் அது பொறுத்து அக் கணவனுக்கு இயைந் தொழுகுவர்காண் என அறிவுறுத்துப் பணிமொழி கூறுபவன் இக்கருத்தைக் காவிரியின் மேலிட்டுத் தலைவி கேட்பக் கூறியது என நுண்ணிதின் உணர்க.

இக்கருத்து இப்பாடலின்கண் அமைதலானன்றோ மற்று இக் கோவலனும் மற்றொருத்திமேன் மனம் வைத்து ஒழுகுகின்றான்போலும் அவ்வொழுக்கம் யாமறிய வெளிப்பட்டக்கால் யாம் ஊடாதிருத்தற் பொருட்டு வருமுன் காக்கும் உத்தியால் இங்ஙனம் பாடினன் என்று ஊழின் சூழ்ச்சியால் பிறழவுணர்ந்து மாதவி ஊடியதூஉம் என்க.

(2) திங்கள் மாலை என்று தொடங்கியது மங்கலச் சொல்லால் தொடங்கும் மரபு கருதித் தொடங்கியவாறாம். மாலை - வாகைமாலை. மாலை - இயல்புமாம். சென்னி - சோழமன்னன். செங்கோலதுவோச்சி என்றது முறைசெய்து காப்பாற்றுபவனே முறைபிறழ்ந்தான் எனச் சோழனுடைய பிழையைமிகுத்துக் காட்டும் குறிப்பேதுவாம் பொருட்டு. அடுத்த பாடலில் வளையாச் செங்கோலது வோச்சி என்பதுமது. ஆற்றை நங்கையாக உருவகிப்பவன் அதன்கண்ணுள்ள கயலையே கண்ணாகவும் உருவகித்தான். ஆறென்னின் கயலாகிய கண் எனவும் நங்கையெனின் கயல் போன்ற கண்ணெனவும் பொருள் தருதலுணர்க. கயற்கண்ணாய் என்றது அவளது அருள்பண்பை விதந்தவாறுமாம். மாதர் மங்கை என மாறுக. மாதர் - காதல். இது பெருங்கற்புடைமைக்குக் குறிப்பேதுவாம்.

(3) வளையாச் செங்கோல் என்றது ஒருகாலத்தும் கோடாத செங்கோல் என்றவாறு. 4. தண்பதம் கொள் விழவர். புதுப்புனலாடும் விழாக்கொண்டாடுவோர். வாய்காவா மழவர் என்பது வாயடங்கி நிற்றற்குரிய விடத்தும் அவ்வாறு அடங்காது மறவுரை பேசும் போர்மறவர் என்றவாறு. இதனை மறமுல்லை என்ப. அஃதாவது வெள்வாள் வேந்தன் வேண்டிய தீயவும் - கொள்ளா மறவன் கொதிப்புரைத் தன்று. இது கொளு. வரலாறு:

வின்னவில் தோளானும் வேண்டியகொள் கென்னும்
கன்னவில் திண்டோட் கழலானும் - மன்னன்முன்
ஒன்றான் அழல்விழியா ஒள்வாள் வலனேந்தி
நின்றான் நெடிய மொழிந்து  (புறப்பொரு. வெண். 181)

எனவரும்.

கங்கை - கங்கையாறு. (கங்கை என்னும் நங்கை) அவளைப் புணர்தலாவது: வடநாட்டை வென்றடிப்படுத்துக் கங்கையைத் தனதாக்கி அதன்கண் ணீராட்டயர்தல். கன்னி - குமரி. இதற்கும் அவ்வாறு கூறிக்கொள்க. இவை வஞ்சப்புகழ்ச்சி என்னும் அணி. நடந்ததனால் விளைவன எல்லாம் வளவன்றன் வளனே யன்றோ என்றவாறு. நின் கணவன் நீ பிணங்குதற்கியன்ற தீயவொழுக்கமுடையவனாகவும் நீ அச்சிறுமை கருதாது நினக்கியன்ற நல்லொழுக்கந் தலைநின்று அவனுக்கு வளம் பெருக்குகின்றனை. இத்தகைய பெருந்தகைக் கற்புடைய நீ நீடூழி வாழ்க என்று வாழ்த்தியபடியாம்.

சார்த்துவரி

(5) கரியமலர் ....... எம்மூர்

(இதன்பொருள்:) கரியமலர் நெடுங்கண் காரிகைமுன் கடல் தெய்வம் காட்டிக் காட்டி - கருங்குவளை மலர்போலும் அழகுடைய நெடிய கண்ணையுடைய எம்பெருமாட்டியின் முன்னிலையில் கடலாகிய இத்தெய்வத்தைச் சுட்டிப் பன்முறையும் காட்டிச் சொன்ன; அரிய சூள் பொய்த்தார் - பொய்த்தற்கரிய கடிய சூண்மொழியைப் பொய்த்தொழுகினர், இவர்தாம்; அறன் இலர் என்று ஏழையம் யாங்கு அறிகோம் - அறநெறி நில்லாதவர் ஆவர் என்று பேதையேம் ஆகிய யாங்கள் முன்னரே எவ்வாறு அறியவல்லுநமாவேம்; அறிந்திலேங்காண்! ஐய - பெருமானே!; எம்மூர் - எம்முடைய ஊர்தான்; விளங்கும் வெள்ளைப் புரிவளையும் முத்தும் கண்டு விரிகதிர் வெண்மதியும் மீன்கணமும் ஆம் என்றே - விளங்குகின்ற வெண்ணிறமுடைய முறுக்குடைய சங்கையும் முத்துக்களையும் கண்டு, இவை விரிகின்ற நிலாவினையுடைய வெள்ளிய திங்களும் விண்மீன்களும் ஆகுமென்று மயங்கி; ஆம்பல் பொதி அவிழ்க்கும் புகாரே - ஆம்பலின் அரும்புகள் இதழ்விரித்து மலர்தற்கிடனான பூம்புகாரன்றோ? என்க.

(6) காதலராகிக் ............ எம்மூர்

(இதன்பொருள்:) காதலர் ஆகி - எம்மிடத்தே பெரிதும் காதலுடையவராய்; கையுறை கொண்டு - எமக்குக் கொடுக்கக் காணிக்கையையும் கையிற் கொண்டு; எம்பின் வந்தார் - முன்பு மகளிரேமாகிய எம்மைப் பின்தொடர்ந்து வந்தவர்தாமே; ஏதிலர்தாம் ஆகி - இப்பொழுது எமக்கு நொதுமலாளராகி; யாம் இரப்ப நிற்பதை - யாங்களே இரந்து வேண்டாநிற்பவும் இரக்கமின்றி நிற்றலை; ஐய யாங்கு அறிகோம் - ஐயனே ஏழையுமாகிய யாங்கள் எங்ஙனம் முன்னரே அறியவல்லுநமாவேம், அறிந்திலேங்காண்! எம் ஊர் - யாங்கள் வாழுகின்ற எம்முடைய ஊர்தான்; மாதரார் கண்ணும் நீர் மதிநிழல் இணைகொண்டு மலர்ந்த நீலப்போதும் அறியாது - மகளிருடைய கண்ணையும் நீரினூடே தோன்றும் திங்களின் நிழலைக் கண்டு இணைந்து நின்று மலர்ந்த நீலமலரும் இன்னதிதுவென்று அறிந்துகொள்ள மாட்டாமல்; வண்டு ஊசலாடும் புகார் - வண்டுகள் அங்குமிங்குமாய்த் திரிதற்கிடனான பூம்புகாரன்றோ காண்! என்க.

(7) மோதுமுது ............ எம்மூர்

(இதன்பொருள்:) ஐய - ஐயனே; எம்மூர் - எம்மூரானது; மோது முதுதிரையால் மொத்துண்டு போந்து அசைந்த முரல் வாய்ச் சங்கம் - மோதா நின்ற பெரிய அலைகளாலே தாக்கப்பட்டு வந்து நகர்கின்ற ஒலிக்கும் வாயையுடைய சங்கானது; மாதர் வரிமணல் மேல் வண்டல் உழுது அழிப்ப மாழ்கி - மகளிர் வரிவரியாய்க் கிடக்கின்ற அலைவாய்மணற்பரப்பிலே தாம் கோலிய மணல்வீட்டினை அழித்தலாலே வருந்தி; கோதை பரிந்து - தமது மலர்மாலையை அறுத்து; அசைய - அச்சங்கு அப்பால் நகர்ந்து போம்படி; ஓச்சுங் குவளைமாலைப் போது - எறியும் கருங்குவளை மலராற் புனைந்த இணைமாலையின் கண்ணதாகிய மலர்கள்; சிறங்கணிப்ப - சிறங்கணித்துப் பார்த்தாற்போல் கிடப்ப; போவார்கண் போகாப் புகார் - அங்குச் செல்வோர் அவற்றைத் தம்மை நோக்கும் பிறர் கண்கள் என்று கருதி அப்பாற் போகாமைக்கிடனான பூம்புகாரன்றோ? என்க.

(விளக்கம்) 5. கரிய மலர் - கருங்குவளை மலர்; காரிகை என்றது தலைவியை. கடல் தெய்வம் - கடலாகிய தெய்வம், வருணன் எனினுமாம். அரிய சூள் - சொல்லுதலரிய சூள் எனினுமாம். தப்பிய வழி கேடு பயத்தலின் யாவரும் சொல்லவஞ்சுதலின் சொல்லற்கரிய சூள் என்க. தெய்வஞ் சுட்டிச் செய்த சூள் பொய்ப்பின் அத்தெய்வம் தீங்கியற்றும் என்பதொரு நம்பிக்கை. காட்டிக் காட்டி என்னும் அடுக்குப் பன்மைமேற்று. இதனைத் தீராத் தேற்றம் என்பர். தலைவன் தலைவியின் ஆற்றாமை தீர்தற்கு, இயற்கைப் புணர்ச்சியின் பின்னர்த் தெய்வத்தொடு சார்த்திச் சூள் மொழிவன். அங்ஙனம் சூள் செய்தவர் பொய்த்தார்; அப்பொழுது இவர் அறவோர் என்றிருந்தேம். பேதையமாகலின் அறனிலர் என்றறியேமாயினேம். இங்ஙனம் மடம் படுதல் எமக்கேயன்றி எம்மூர்க்கும் இயல்பாயிற்று என்று நொந்து கூறுவாள் விரிகதிர்...... எம்மூர் என்றாள். இது பின்வருவனவற்றிற்கும் கொள்க.

6. முன்னர்க் காதலராகி எம்பின் வந்தார் அவரே இப்பொழுது ஏதிலராகி யாமிரப்பவும் இரங்காராய் நின்றார். இவர் இங்ஙனம் நிற்பார் என்பதனை ஏழையேம் எங்ஙனம் அறியவல்லேம் அறியாதொழிந்தோம் என்று நொந்து கூறியபடியாம். நீருட்டோற்றும் மதியொளி கண்டு மலர்ந்து இணைந்திருந்த நீலத்தை மாதர் கண்ணென்றும் மாதர் கண்ணை நீலமென்றும் அங்குமிங்கும் அலைகின்ற வண்டு என்க. ஈண்டு நீலமும் மடம்பட்டு மலர்ந்தமையும் வண்டுகள் மடம்பட்டமையு முணர்க.

7. முதுதிரை - பெரிய அலைகள். வல்லுடம்பு பெற்ற சங்கினை மலரை எறிந்து ஓச்சுதலும் மடமையாத லுணர்க. முரல்வாய் : வினைத்தொகை. மாதர் - ஈண்டுப் பேதைப் பருவத்து மகளிர். வண்டல் - மணலாற்கோலிய விளையாட்டுவீடு. உழுதல் - ஊர்ந்து நிலத்தைக் கீறிப்போதல். சிறங்கணித்தல் - இமையைச் சுருக்கிப் பார்த்தல். போவார் - ஆண்டுத் தங்காரியத்தின்மேற் போகும் மாந்தர். போவார் கண் அவற்றை நோக்குதலன்றி விட்டுப் போகாமைக்குக் காரணமான மடமையுடைய புகார் என்றவாறு.

இவை மூன்றும் ஒரு பொருண்மேல் மூன்றடுக்கிவந்த வரிப்பாடல். இனி, அரும்பதவுரையாசிரியர் சார்த்துவரி என்பதற்குக் கூறும் விளக்கம் வருமாறு - பாட்டுடைத் தலைவன் பதியொடும் பேரோடும் சார்த்திப் பாடிற் சார்த்தெனப் படுமே அதுதான் முகச் சார்த்து, முரிச் சார்த்து, கொச்சகச்சார்த்து என மூவகைப்படும். அவற்றுள் முகச்சார்த்து : மூன்றடிமுதல் ஆறடி யீறாக முரிந்த வற..... குற்றெழுத்தியலாற் குறுகிய நடையால் பெற்றவடித் தொகை மூன்று மிரண்டும் குற்றமில்லெனக் கூறினர் புலவர். கொச்சகச் சார்த்து : கொச்சகம் போன்றுமுடியும். இவற்றுள் இவை மூன்றும் முகச்சார்ந்து எனவரும். இவை, (1) தோழி தலைமகன் முன்னின்று வரைவு கடாயவை. (2) கையுறை மறையெனினும் அமையும் என்ப.

இவற்றிற்கு வரைவுடன் பட்டோர் கடாவல் வேண்டினும் எனவரும் (தொல் - களவியல். 23.) விதி கொள்க.

முகமில்வரி

(8) துறைமேய் ............. தீர்க்கும்போலும்

(இதன்பொருள்:) துறை மணல் தோய்ந்துமேய் வலம்புரி உழுத தோற்றம் மாய்வான் - கடற்றுறையிடத்தே மணலின்கண் அழுந்தி இரைதேருகின்ற வலம்புரிச் சங்கு உழுது சென்றமையால் உண்டான சுவடுமறைந்து போகும்படி; பொறை மலி பூம்புன்னைப் பூவுதிர்ந்து நுண் தாது போர்க்குங்கானல் - மிக்க சுமையாக மலர்ந்த மலர்களையுடைய புன்னையினது அம்மலர்களினின்றும் உதிர்ந்து நுண்ணிய தாதுக்கள் மூடுதற்குக் காரணமான இக் கடற்கானலிடத்தே நிற்கின்ற இத்தலைவியினது; நிறைமதிவாள் முகத்து கயல் நேர்கண் செய்த - கலைகள் நிறைந்த திங்கள் போன்ற ஒளிதவழும் முகத்தின்கண்மைந்த கயல்மீன் போன்ற கண்களாலே எம்பெருமானுக்குச் செய்யப்பட்ட; மலி உறை உய்யா நோய் - மிக்க மருந்துகளாலும் போக்க முடியாத நோயை ; சுணங்கு ஊர் மெல்முலையே தீர்க்கும் போலும் - தேமல் படர்ந்த இவளுடைய மெல்லிய முலையே தீர்க்கவல்லனவாம்; என்க.

(விளக்கம்) 8. துறை - கடற்றுறை. மேய்தல் - இரை தேர்தல். மாய்வான் - மறையும்படி. பொறை - சுமை சுமையாமளவு மிக்கபூ என்க. பூவினின்றும் உதிர்ந்து போர்த்தல் - மூடுதல். இத்தலைவியினுடைய என வருவித்தோதுக. கயல் நேர் கண் என்க. இனி, ஒன்றனோடு ஒன்று எதிர்கின்ற கயல்கள் போலும் கண்கள் எனினுமாம். உறை - மருந்திற்கு ஆகுபெயர். மலி உறை என மாறுக. உய்த்தல் - போக்குதலாகலின் உய்யா என்பது அதன் எதிர்மறையாய்ப் போக்க முடியாத எனப் பொருள் தந்தது. சுணங்கு - தேமல். போலும் : ஒப்பில்போலி.

மணலின்மேல் சங்கு செய்த சுவட்டினைப் பூந்தாது மறைப்பது போல இவள் கண் செய்த நோயை முலையே தீர்க்கும் என்றிதன்கண் உள்ளுறை காண்க.

இது குறியிடத்துச் சென்ற பாங்கன் தலைவியின் காதன் மிகுதி குறிப்பினான் அறிந்து கூறியது என்ப. இதனை, பேராச்சிறப்பின் என்னும் மிகையால் (தொல் - களவு. 11) அமைத்துக் கொள்க.

கானல்வரி

(9) நிணங்கொள் .......... மன்னோ

(இதன்பொருள்:) நிணம் கொள் புலால் உணங்கல் நின்று புள் ஓப்புதல் தலைக்கீடு ஆக - புலர்கின்ற நிணத்தையுடைய மீன் வற்றலின் மருங்கே நின்று அவற்றைத் தின்னவருகின்ற பறவைகளை ஓட்டும் செயலை ஒரு காரணமாகக்கொண்டு; கணங்கொள் வண்டு ஆர்த்து உலாம் கன்னி நறுஞாழல் கையில் ஏந்தி - கூட்டமான வண்டுகள் தம்மிசையாலே ஆரவாரித்துத் திரிதற்குக் காரணமான இளமையுடைய நறிய ஞாழலினது பூங்கொம்பைத் தன் கையிலே பிடித்து; மணம் கமழ் பூங் கானல் மன்னி - மணங் கமழாநின்ற மலர்களையுடைய இக் கடற்கரைச் சோலையிடத்தே நிலைபெற்று; ஆண்டு ஓர் அணங்கு உறையும் என்பது அறியேன் - அவ்விடத்தே ஒரு தெய்வம் இருக்கும் என்னுமிச் செய்தியை யான் முன்பு அறிந்திலேன்காண்; அறிவேனேல் அடையேன் மன்னோ - முன்னரே அறிந்துளேனாயின் அங்குச் செல்லேன்மன் என்க.

(10) வலைவாழ்நர் ............ மன்னோ

(இதன்பொருள்:) அலைநீர்த் தண் கானல் - அலைநீர் புரளுகின்ற குளிர்ந்த இக் கடற்கரைச் சோலைக்கண்ணமைந்த; வலைவாழ்நர் சேரி வலை உணங்கு முன்றில் - வலை கருவியாக வாழ்க்கை நடத்துகின்ற இப்பரதவர் சேரியின்கண் வலைகள் புலர்த்தப்பட்ட ஓரில்லினது முற்றத்திலே; விலைமீன் உணங்கல் பொருட்டாக - விற்கும் மீன்வற்றலின்கண் வீழும் பறவைகளை ஓட்டுதலை ஒரு காரணமாகக் காட்டி ; மலர் கை யேந்தி - தனக்குரிய கயிறும் கணிச்சியுமாகிய வலிய படைக்கல மேந்தாமல் மெல்லிய மலர்க் கொம்பை ஏந்திக் கொடு; வேறு ஓர் கொலை வேல் நெடுங்கண் கூற்றம் வேண்டுருவம் கொண்டு வாழ்வது - தன் செயலாகிய கொலைத் தொழிலைச் செய்யவல்ல வேல்போலும் நீண்ட கண்களை யுடைய தாய்த் தன்றொழில் நடத்தற்கு வேண்டிய மகளாய் உள்வரிக் கோலம்பூண்டு மற்றொரு கூற்றுவன் வந்து வாழ்வதனை; அறியேன் - யான் முன்னரே அறிந்திலேன்காண்! அறிவேனேல் அடையேன் மன் - முன்னரே அறிந்துளேன் ஆயின் யான் அங்குச் செல்லேன்மன்; என்க.

(விளக்கம்) ஈண்டுக் கோவலனும் மாதவியும் பாடும் பாடல் அனைத்தும் கானல் வரிப்பாடல்களே ஆயினும் ஆற்றுவரி முதலிய வெவ்வேறடை மொழி பெற்று வருவது ஆறு முதலிய பொருட் சிறப்புப்பற்றிப் போலும். அனைத்தும் கானல்வரிப் பாடல்களே என்பதனை அடிகளார் இப்பகுதிக்குக் கானல்வரி எனக் குறியீடு செய்தமையாற் பெற்றாம்.

9. புலால் - மீன்: ஆகுபெயர். உணங்கல் - வற்றல். தலைக்கீடு - போலிக் காரணம். கன்னி - ஈண்டு இளமை. ஞாழல் - புலிநகக் கொன்றை. ஈண்டு ஞாழலின் பூங்கொம்பு. மற்று : வினைமாற்று. மன்: ஒழியிசை. அறியாமையால் கேடெய்தினேன் என்பதுபட நிற்றலின் என்க. ஓ : அசைச் சொல்.

10. வலைவாழ்நர் - வலை கருவியாக வாழ்பவர். அவராவார் - பரதவர். மலர்கை யேந்தி என்றது தனக்குரிய கயிறு கணிச்சிக் கூர்ம்படை முதலியன துரந்து மெல்லிய மலர்க்கொம்பேந்தி என்பது பட நின்றது. வேண்டுருவம், தன் தொழில் தடையின்றி நிகழ்தற்கியன்ற உருவம். அஃதாவது - பெண்ணுருவம். இதனோடு கன்னி நீர் ஞாழல் கமழ்பூங் கானல் யான்கண்ட பொன்னங் கொடியை யீன்றார் இல்லை போலுமால் - மன்னன் காக்கும் மண்மேற் கூற்றம் வரவஞ்சி இன்னதொன்று படைத்த தாயின் எவன் செய்கோ? எனவரும் பழம்பாடலை ஒப்பு நோக்குக. இந்திரவிழவூ ரெடுத்தகாதைக் கண், மன்னவன் செங்கோலஞ்சி ....... பெண்மையிற் றிரியும் பெற்றியு முண்டென எனவரும் அடிகள் ஈண்டு நினைவிற் கொள்ளற் பாலனவாம். இவ்வாறும் ஒரு கூற்றம் உளது போலும் அதுவுமறியேன் என்பான் மற்றோர் கூற்றம் என்றான்.

இவையிரண்டும் கழற்றெதிர்மறை என்னும் ஒரு பொருண்மேல் அடுக்கி வந்தன. அஃதாவது - தலைவன் இயற்கைப் புணர்ச்சிக்குப் பின்னர்த் தலைவியை நினைந்து ஆற்றானாய் மெய்வேறுபாட்டான் பாங்கன்பால் உற்றதுரைப்ப அவன் நின் பெருந்தகைமைக்கு இஃதிழுக்காம் என்றிடித்துரைப்ப அதற்குத் தலைவன் பாங்கனை நோக்கி நீ அவளைக் கண்டாயேல் இங்ஙனம் கூறாய் என எதிர்மறுத்துக் கூறியது என்றவாறு. அத்துணைப் பெருந்துன்பம் செய்வன அவள் உறுப்புகள் என்பான் அணங்கு என்றும் கூற்றம் என்றும் உருவகித்தான். அணங்கு - தீண்டி வருத்தும் தெய்வம் ; கூற்றம் - காலன்.

நிலைவரி

(11) கயலெழுதி ......... வாழ்வதுவே

(இதன்பொருள்:) கயல் எழுதி வில் எழுதிக் கார் எழுதிக் காமன் செயல் எழுதித் தீர்ந்த முகம் - கண்கள் என்று சொல்லி இரண்டு கயல் மீன்களையும் எழுதிப் பின் புருவம் என்று சொல்லி இரண்டு குனித்த விற்களையும் எழுதிப் பின்னர் இவற்றிற்கு மேலே கூந்தல் என்று சொல்லி முகிலையும் எழுதி அதன் பின்னர் எழுதொணாத காமவேளின் செயலையும் எழுதிச் சிறிதும் பணிக்குறையின்றி முடித்த அவள் முகத்தை முகம் என்று கூறுதலும் பேதைமை காண்! ஓ - திங்களே காணீர் - அவ்வோவியங்களைத் தன்மேல் வரைந்து கொண்ட திங்கள் மண்டிலமே, ஐயமின்று நீயிரே சென்று காண்பீராக! ஓ திங்களே காணீர் - தேற்றமாக அது திங்கள் மண்டிலமே சென்று காண்மின்! திங்களாயின் எற்றிற்கிங் குற்றது எனின்; அங்கண் வானத்து நேர் அரவு அஞ்சி - அழகிய இடத்தையுடைய வானத்தே தன்னை எதிர்ப்படும் பாம்பை அஞ்சி; திமில் வாழ்நர் சீறூர்க்கே வாழ்வதுவே - திமில் கொண்டு வாழ்கின்ற இப்பரதவருடைய சிறிய ஊரின்கண் வந்து அவ்வாறுள்வரிக் கோலங்கொண்டு வாழ்வதாயிற்றுப் போலும் என்க.

(12) எறிவளை ............. மகளாயதுவே

(இதன்பொருள்:) எறிவளைகள் ஆர்ப்ப - இவ்வுருவம் அறுத்தியற்றிய தன் கை வளையல்கள் ஒலித்தற்கே மருண்டு ; இருமருங்கும் ஓடும் - வலமும் இடமுமாகிய இரண்டு பக்கங்களினும் பிறழ்ந்து ஓடாநின்ற ; கறை கெழுவேல் - குருதிக் கறைபடிந்த வேல் போன்ற; கண்ணோ கண்ணையுடைய காரிகையோ? இல்லை! இல்லை! கடுங்கூற்றம் காணீர் - கடிய கூற்றுவனே ஐயமில்லை நீயிரே சென்று காண்மின்; கடுங் கூற்றம் - கடுந்தொழிலையுடைய மன்னவன் செங்கோல் மறுத்தல் அஞ்சி; கடல் வாழ்நர் சீறூர்க்கு - கடலில் மீன்படுத்து வாழ்கின்ற பரதவருடைய இச்சிறிய ஊரிடத்தே வாழுமொரு; மடங்கெழு மெல் சாயல் மகள் ஆயது காணீர் - தனது மறங்கெழுவு வல்லுருவம் மறைத்து மடம் பொருந்திய மெல்லியல்புடைய ஒரு நுளைச்சியாயுள் வரிக்கோலம் பூண்டுளது நீயிரே சென்று காண்மின்; என்க.

(13) புலவுமீன் ............. பெண்கொண்டதுவே

(இதன்பொருள்:) புலவுமீன் வெள் உணங்கல் புள் ஓப்பி - புலானாறும் மீனினது வெள்ளிய வற்றலில் வீழ்கின்ற பறவைகளை ஓட்டி; கண்டார்க்கு அலவ நோய் செய்யும் இது - தன்னைக் கண்டவர் அலந்தலைப்படுதற்குக் காரணமான நோயைச் செய்கின்ற இந்த வுருவம் பெண் அன்று; ஓ அணங்கு காணீர் - தேற்றமாகத் தீண்டி வருத்தும் ஒரு தெய்வமேயாம். இவ்வுண்மையை நீயிரும் ஆராய்ந்து காண்மின்; இஃது அணங்கு காணீர்; தேற்றமாக இஃது அணங்கே காண்மின்; (அணங்கு எற்றிற்கு இங்குற்ற தென்பீரேல்; தானுறையும் காட்டிற்கு வருவார் யாருமின்மையின்) அடும்பு அமர் தண் கானல் பிணங்கு நேர் ஐம்பால் ஓர் பெண் கொண்டது-அடும்பு தங்குதற்குக் காரணமான குளிர்ச்சியையுடைய இக் கடற்கரைச் சோலையிடத்தே பெரிதும் (மக்கள் வழக்குண்மை கருதி) செறிந்த நுண்ணிய கூந்தலையுடைய ஒரு பெண்ணாக உள்வரிக் கோலங் கொண்டுளது இதுவே உண்மை என்க.

(விளக்கம்) நிலைவரியாவது:

முகமும்முரியுந் தன்னொடு முடியும்
நிலையை யுடையது நிலையெனப் படுமே

எனவரும் நூற்பாவான் உணர்க.

11. காமனாகிய ஓவியப் புலவன் கயல் முதலியவற்றையும் தன் செயலையும் எழுதி முடித்த முகம் எனினுமாம். தெய்வப் புலவனாகலின் எழுதொணாத தன் செயலையும் எழுதினான் என்க. முகம் முகமன்று திங்களே காணீர் என்றவாறு. ஓகாரங்கள் வியப்பு. திங்களாயின் அது வானத்தை விட்டு இங்கு வருவதேன்? என்னும் கடாவிற்கு விடையாக அங்கண் வானத்து நேர் அரவஞ்சி ஈண்டுவந்து வாழ்வது என்றவாறு. அங்கண் வானத்து நேர் அரவு அஞ்சி என மாறுக.

12. வளைகள் என்றது தலைவியின் கையிற் சங்குவளையலை. எறிவளை யென்றது பொருட்கேற்ற அடை புணர்த்தவாறு. தன் கை வளையல் ஆர்த்தற்கே மருண்டு இருமருங்கும் ஓடும் கண் என்க. கறை கெழுவேற்கண்: பன்மொழித் தொகை. தலைவிக்குப் பெயராய் நின்றது. கடல் வாழ்நர் கடலில் மீன்படுத்து அதனால் வாழ்கின்ற பரதவர். சீறூர்க்கு: உருபுமயக்கம். கடுங்கூற்றம் தன் கடுங்குணங்களை மாற்றி மடங்கெழு மென்சாயல் மகள் ஆயது என்க.

13. புலவு - புலானாற்றம், அலவநோய் - அலைந்தலைப்படுதற்குக் காரணமான காமநோய். அணங்கு - தீண்டி வருத்தும் தெய்வம். அடும்பு - நெய்தனிலத்துள்ள ஒருவகை மரம். இது குளிர்ந்த நிலத்தினும் நீர்மருங்கும் வளர்ந்து தழைக்கும் ஆதலின் அடும்பு நிற்றற்குக் காரணமான தண்மையையுடைய கானல் எனத் தண்மையை ஏதுவாக்குக. பிணங்குதல்-செறிதல். நேர் - நுண்மை. பெண் - பெண்ணுருவம். கொண்டது - உள்வரிக் கோலங்கொண்டது ஏகாரம் : தேற்றம். இவை மூன்றும் ஒரு பொருண்மே லடுக்கி வந்தன.

இவை மூன்றும் தமியளாக இடத்தெதிர்ப்பட்ட தலைவியை நோக்கித் தலைமகன் கூறியவை, என்பர் அரும்பதவுரையாசிரியர்.

இயலிடம் கூறல் என்னுந் துறையாகக் கோடலே பெரிதும் பொருந்துவதாம். அஃதாவது-கழற்றெதிர் மறுத்த தலைவனுக் கிரங்கி எவ்விடத்து எத்தன்மைத்து நின்னாற் காணப்பட்ட உரு என வினவிய பாங்கனுக்கு இன்னவிடத்து இத்தன்மைத்து என்னாற் காணப்பட்ட உருவம் எனத் தலைவன் கூறுவதாம்.

முரிவரி

(14) பொழில்தரு ........... செய்தவையே

(இதன்பொருள்:) பொழில்தரு நறுமலரே - தோழனே! எனக்கு இடர் செய்தது யாதென்கின்றனை கூறுவல் கேள். பொழில் வழங்க அவள் குடியிருந்த நறிய மலரென்கோ? புதுமணம் விரி மணலே - அவள் நின்ற நாண் மலரின் புதிய மணம் பரவுகின்ற மணற் பரப்பென்கோ?; பழுது அறு திருமொழியே - அவள் மிழற்றிய குற்றமற்ற அழகிய மொழி யென்கோ? பணை இளமுலையே - கணந்தொறும் பருக்கின்ற அவளது இளமையுடைய அழகிய முலை என்கோ?; முழுமதி புரை முகமே - நிறை வெண்டிங்களே போன்ற அவளுடைய முகம் என்கோ? முரி புரு வில் இணையே - வளைகின்ற அவளுடைய புருவம் என்கின்ற இரட்டை விற்கள் என்கோ? எழுதஅரு மின் இடையே-ஓவியர்க்கெழுத வொண்ணாத நுண்மையுடைய மின்னல் போன்ற அவளது இடை என்கோ?; இவை எனை இடர் செய்த - இவை அனைத்துமே என்னை வருத்தினகாண்; என்க.

(15) திரைவிரி...........செய்தவையே

(இதன்பொருள்:) திரைவிரி தருதுறையே - அவள் விளையாட்டயர்ந்த அலைகள் பரவுகின்ற கடற்றுறை யென்கோ? திருமணல் விரியிடமே - அழகிய மணல் பரப்ப இடம் என்கோ? விரை விரி நறுமலரே-அவள் சூடியிருந்த நறுமணம் பரப்பும் மலர் மாலையென்கோ? மிடைதரு பொழில் இடமே - அவள் புக்குநின்ற மரங்கள் செறிந்த பூம்பொழிலிடம் என்கோ? மரு விரி புரிகுழலே - மணங்கமழும் கை செய்யப்பட்ட குழன்ற அவள் கூந்தல் என்கோ? மதிபுரை திருமுகமே - திங்களை யொத்த அழகிய அவள் முகம் என்கோ? இரு கயல் இணைவிழியே - இரண்டு கயல் மீன்களையொத்த அவளுடைய இரண்டு கண்களும் என்கோ? எனை இடர் செய்தவையே - இவையனைத்தும் என்னை வருத்தினகாண் ! என்க.

(16) வளைவளர் ........... செய்தவையே

(இதன்பொருள்:) வளை வளர்தரு துறையே - அவளாடிய சங்குகள் வளர்தற்கிடனான கடற்றுறை யென்கோ? மணம் விரிதரு பொழிலே நறுமணம் பரப்புகின்ற பூம்பொழில் என்கோ? தளை அவிழ் நறுமலரே - கட்டவிழ்ந்து மலர்கின்ற அவள் சூடிய மலர்மாலை யென்கோ? அவள் தனி திரி இடமே அந்நங்கை தமியளாகத் திரிந்த இடம் என்கோ? முளைவளர் இளநகையே - முளைபோன்று வளர்கின்ற அவளுடைய எயிறென்கோ? முழு மதி புரை முகமே - நிறைத் திங்கள்போலும் அவளது திருமுகம் என்கோ? இளையவள் இணைமுலையே - இளமையுடைய அவளுடைய இணைந்த முலை என்கோ? எனை இடர் செய்தவை - இவையனைத்துமே என்னை வருத்தினகாண்! என்பதாம்.

(விளக்கம்) இம்மூன்றும் ஒரு பொருண்மேலடுக்கி வந்த வரிப்பாடல்கள். முரிவரியாவது: எடுத்த வியலும் இசையும் தம்மில் முரித்துப் பாடுதன் முரியெனப் படுமே என்ப. 14. ஏகாரங்களுள் ஈற்றில் வருவது  அசை; ஏனைய வினா. உன்னை இடர் செய்தது யாது? என வினாய பாங்கனுக்கு எனையிடர் செய்தது ஒன்றல்ல, பொழில் முதலிய அனைத்துமே இடர் செய்தனகாண் என இறுத்தவாறாம். புரு - புருவம்: விகாரம். நுண்மையால் எழுத வொண்ணாத மின்னிடை என்க.

15. மரு - மணம் இரண்டு கயல்கள் போன்று இணைந்த விழிகள் எனினுமாம். 16. வளை -சங்கு. தளை-கட்டு. முளை - விதையினின்றும் முளைத்த முளை. நகை - எயிறு.

இவை மூன்றும் தலைமகன் பாங்கன் கேட்ப உற்றதுரைத்தவை என்ப. அஃதாவது, தலைவனுடைய பிரிவாற்றாத் துயர்கண்டு நினக்குற்றதென்னை என்று வினவிய பாங்கனுக்குத் தலைவன் நெருநல் இத்தகையா ளொருத்தியை இன்னவிடத்தே கண்டே னுக்கு இங்ஙனம் இடர் எய்தியதுகாண் என்று அறிவுறுத்தது என்றவாறு.

திணை நிலைவரி

(17) கடல்புக் .............. கண்டாய்

(இதன்பொருள்:) நின் ஐயர் கடல்புக்கு உயிர் கொன்று வாழ்வர் - நங்காய்! நின் தமையன்மார் கடலில் புகுந்து அங்குள்ள உயிரினங்களைக் கொன்று அதனால் வரும் ஊதியத்தைக்கொண்டு தமது வாழ்க்கையை நடத்து மியல்புடையராவர்; நீயும் - நீதானும்; உடல்புக்கு உயிர் கொன்று வாழ்வைமன் - நீயோ அவரினும் காட்டிற் கொடுந் தொழில் செய்கின்றாய்! அஃதென்னெனின் நீ என் கண்வழியே என்னுடம்பினுட் புகுந்து அங்கு வாழும் என்னுயிரைக் கொன்று களித்து வாழ்கின்றாய் அல்லையோ? மிடல்புக்கு அடங்காத வெம்முலையோ பாரம் - மறத்தன்மையிலே புகுந்து கட்டுக் கடங்காது நிமிர்கின்ற நின்னுடைய வெவ்விய முலைகள் மிகவும் பெருஞ்சுமையா யமைந்தன காண்; அச்சுமை பொறாது; இடை இடர்புக்கு இடுகும் - நின்னிடை யானது இப்பொழுதே மெலிகின்றது; இழவல் கண்டாய் - நீ இயங்கின் அது முரிந்தொழிதல் தேற்றம் ஆதலின், இனி இயங்கி அவ்விடையை இழந்துவிடாதே கொள்! என்க.

(18) கொடுங்கண்..........கண்டாய்

(இதன்பொருள்:) உந்தை கொடுங்கண் வலையால் உயிர்கொல் வான்-உன் தந்தையோ வளைந்த கண்களையுடைய வலையினாலே உயிர்களைக் கொல்லும் கொடுந்தொழிலுடையான்; நீ - நீதானும் அவனினும் காட்டில் கொடுந்தொழிலையுடைய அஃதென்னெனின்; நீயும் நெடுங்கண் வலையால் உயிர் கொல்வைமன்-நீதானும் நின்னுடைய நெடிய கண் வலையாலே உயிர் கொல்கின்றனை யல்லையோ? வடங்கொள் முலையால் மழை மின்னுப் போல நுடங்கி உகும் மென் நுசுப்பு - நீ இனி இயங்காதே கொள், இயங்கின், தாமே பெருஞ்சுமையாகவும் அச்சுமையின் மேற் சுமையாய் முத்துவடத்தையும் ஏற்றியிருக்கின்ற நின்னினும் கொடிய நின்முலையாலே நின்னிடை முகிலிற் றோன்றும் மின்னல் போன்று வளைந்து முரிந்தொழிதல் தேற்றம் ஆதலின்; இழவல் - அவ்விடையை நீ இழந்துவிடாதே கொள்! என்க.

(19) ஓடுந்திமில்.................கண்டாய்

(இதன்பொருள்:) நின்ஐயர் ஓடும் திமில்கொண்டு உயிர் கொல்வர் - நங்காய்! நின்தமையன்மார் நீரில் இயங்குகின்ற படகினைக் கருவியாகக் கொண்டு கடலிற் சென்று அங்கு வாழும் உயிர்களைக் கொல்லா நிற்பர்; நீ அத்தொழிலில் அவர்களினுங் காட்டில் திறன் மிகவுடையை காண்! எற்றாலெனின்; பிறர் பீடும் எவ்வம் பாராய்-பிறருடைய பெருமையையும் துன்பத்தையும் பாராமல்; நீயும் கோடும் புருவத்து உயிர் கொல்வாய் அல்லையோ! ஆதலினாலே; முலைசுமந்து சிறு மென்மருங்கு வாடும்- இப்பொழுதே நினது பரிய முலைகளைச் சுமத்தலாலே நின்னுடைய சிறிய மெல்லிய இடை வருந்தி வாட்டமுடையதாகின்றது; இழவல் கண்டாய் - அதனையும் இழந்துவிடாதே கொள் என்க.

(விளக்கம்) இம்மூன்றும் ஒருபொருண்மே லடுக்கி வந்தன.

17. ஐயர் - தமையன்மார். வாழ்வைமன் என்புழி, மன்: ஒழியிசை. என்னை? இவ்வாறு பிறர்க்குக் கேடு சூழ்வார்க்குத் தங்கேடு தாமே வரும் என ஒழிந்த இசையெச்சப் பொருள் குறித்து நிற்றலின் என்க. அடுத்த பாட்டிற்கும் இஃதொக்கும். மிடல் - வலி. வன்செயலை மேற்கொண்டு என்பான் மிடல்புக்கு என்றான். அடங்காத என்றது கச்சின்கண் ணடங்காத என்றும் அடக்கம் என்னும் அறத்தினை மேற்கொள்ளாத என்றும் இருபொருளும் பயந்தது. வெம்முலை - வெவ்விய (கொடிய) முலை; விருப்பந்தரு முலை; என இருபொருளுங் காண்க. முலை பாரம் அதனைச் சுமக்கலாற்றாது இடர்புக்கு இடுகும் என்க. இடுகுதல் - மெலிதல். இழவல் என்பது நினக்கு இடை ஒன்றேயுளது. ஆதலால், அதனையும் இழந்துவிடாதே கொள் என்பட நின்றது. கண்டாய்: அசைச் சொல்.

18. கொடுங்கண் - வளைந்த கண்கள் (துளை) நெடிய கண்ணாகிய வலை. பாரமான முலை அச்சுமையின்மேற் சுமையாக வடமும் கொண்டது என்றவாறு.

19. திமில் கொண்டு செல்லும் நின்ஐயரினும் நீ சதுரப்பாடு மிகவு முடையை. நீ கோடும் புருவத்தாலேயே கொல்குவை அல்லையோ? என் றசதியாடியபடியாம். எவ்வமும் எனல் வேண்டிய எண்ணும்மை செய்யுள் விகாரத்தாற் றொக்கது. சிறுமென் மருங்கு என்றான் பெரிய மிடல்புக்கு அடங்காத வெம்முலை எனக் குறிப்பானுணர்த்தற்கு.

இவை மூன்றும் புணர்ச்சி நீட இடந்தலைப்பாட்டிற் புணர்தலுறுவான் ஆற்றாமை கூறியவை: பொய் பாராட்டல் என்பாருமுளர்.

இனி, இவற்றிற்கு அரும்பதவுரையாசிரியர் நின்தமரும் நீயுஞ் செய்கின்ற கொடுமையாலே இடைமுரியவுங் கூடும்; அதற்குட் பகையாய்த் துணைக்காரணமாகிய முலைகளு முளவாதலால் இடையைப் பரிகரி என்பதாம் எனவும்,

பீடு பிறர் எவ்வம் பார்த்தல் - உனக்குப் பெருமையாவது பிறர் எவ்வம் பார்த்தல் எனவும் குறிப்பர். பாரா என்பதும் பாடம். இதற்குப் பாராத முலை என்க. தான் பெருக்கமுறுமதனாற் பிறர் எவ்வம் பாராத முலை என்பது கருத்தாகக் கொள்க.

வேறு

20 : பவள ............... கொடிய

(இதன்பொருள்:) பவள உலக்கை கையால் பற்றித் தளைமுத்தம் குறுவாள் செங்கண் - பவளத்தாலியன்ற உலக்கையைக் கையினால் பற்றி வெள்ளிய முத்துக்களை அரிசியாகக்கொண்டு குற்றுமிவளுடைய சிவந்த கண்களைக் காண்மின்! தவள முத்தம் குறுவாள் செங்கண் குவளை அல்ல-செங்கழுநீர் மலர் என்பீராயின் பிழையாம்; எற்றாலெனின்; கொடிய - இவை மிகவும் கொடுந் தொழிலுடையன ஆதலால் என்க.

21 : புன்னை ............... கூற்றம்

(இதன்பொருள்:) புன்னை நீழல் புலவுத் திரைவாய் - புன்னை மரங்களின் நீழலையும் புலானாற்றத்தையும் உடைய அலைவாய்ப் பரப்பின் மேல் - அன்னம் நடப்ப நடப்பாள் செங்கண் - அன்னங்கள் தன்னடையைப் பார்த்து நடத்தற் பொருட்டு நடக்கின்ற இந்நங்கையின் சிவந்த கண், வாய்மையின் கண்ணன்று; அன்னம் நடப்ப நடப்பாள் செங்கண் - வேறென்னையோவெனின்; கொன் வெய்ய கூற்றம் கூற்றம் - தன்றொழிற்றிறத்தே மிகுந்த கொடிய கூற்றங்காண்! தேற்றமாக அவை கூற்றமேயாம்! என்க.

22 : கள்வாய் ............ வெய்ய

(இதன்பொருள்:) கள்வாய் நீலம் கையின் ஏந்தி உணங்கல் வாய்புள் கடிவாள் செங்கண் - தேன் பொருந்திய நீல மலரைக் கோலாகக் கையிற் பற்றி; மீன் வற்றலிடத்தே வீழும் பறவைகளை ஓட்டுமிவளுடைய சிவந்த கண்கள் - வாய்மையிற் கண்களல்ல; உணங்கல்வாய் புள் கடிவாள் செங்கண்(கள்); வெள்வேல் அல்ல-வெள்ளிய வேற்படைகள் என்பீரேல் அவைகளும் அல்ல எற்றாலெனின் ; வெய்ய வெய்ய - அவ்வெள்வேலினுங் காட்டில் இவை மிகவும் வெப்பமுடையன ஆதலால் என்க.

(விளக்கம்) இவை மூன்றும் ஒருபொருள் மேலடுக்கி வந்தன.

20. குறுவாள் - குற்றுவாள். குவளை என்றல் பொருந்தாது. எற்றாலெனின் இவை கொடுந் தொழிலையுடையனவாதலால் என்றவாறு.

21. திரைவாய் - அலைவாய்ப் பரப்பு. அன்னம் நடப்ப - அன்னம் இந்நடையொவ்வேமென அவ்விடத்தினின்றும் அகன்று போக எனினுமாம். கொன் - மிகுதி; கூர்மையுமாம். அவை கண்ணல்ல; கூற்றமே என்றவாறு. அடுக்கு - தெளிவுபற்றி வந்தது.

22. உணங்கல் வாய்ப்புள் கடிவாள் என மாறுக, வெள்வேலினும் இவை வெய்யவாதலின் வேலல்ல என்க.

வேறு

23 : சேரல் .............. ஒவ்வாய்

(இதன்பொருள்:) ஊர்திரை நீர் வேலி உழக்கித் திரிவாள் பின் - ஊருகின்ற அலைகளையுடைய கடலை வேலியாகவுடைய இவ்வுலகத்திலுள்ள மைந்தருடைய மனத்தைக் கலக்கித் திரிகின்ற அக்கன்னியின் பின் சென்று சேரல் மட அன்னம் - அவளைச் சேராதே கொள் (சேர்ந்தாயானால்); நடை ஒவ்வாய் - நடையினாலே நீ அவளை ஒவ்வாதொழிவாய்; சேரல் ...... ஒவ்வாய் - சேராதே கொள்! சேர்ந்தாயானால் நடை யொவ்வாமையால் வருந்துவாய் ஆதலாலே, தேற்றமாக அவளைச் சேராதேகொள் என்க.

(விளக்கம்) நடையால் ஒவ்வாய் அதனால் வருந்துவாய்! தேற்றமாக நடையொவ்வாய் அதனால் சேராதே கொள், என்க. சேரல்: வியங்கோள்.

மடவன்னம் - இளமையுடைய அன்னம். அறியாமையுடைய அன்னம் எனவும் ஒருபொருள் தோன்றிற்று.

இனி, அரும்பதவுரையாசிரியர் - விளையாட்டு விருப்பினால் ஓடுவாளைக் கண்டு நின்னடையுட னொக்குமென்று சொல்லுவர் புலவர்; ஆயினும், இவள் விளையாட்டொழிந்து தன்னியல் (பால்நடப்பாளாயின்) நீ ஒவ்வாய் அதனாலே சேராதே கொள் என விரிப்பர்.

இது காமஞ்சாலா இளமையோள் வயின் ஏமஞ்சாலா இடும்பை யெய்தியோன் சொல்லியது. அஃதாவது - காமக் குறிப்பிற்குத் தகுதியில்லாத பேதைப் பருவத்தாளொருத்தியின்பால் ஒரு தலைவன் இவள் எனக்கு மனைக் கிழத்தியாக யான் கோடல் வேண்டுமெனக்கருதி மருந்து பிறிதில்லாப் பெருந்துயரெய்தியவன் கூறியது என்றவாறு; எனவே இது கைக்கிளைக் காமம் என்பது பெற்றாம்.

நூலாசிரியர் கூற்று

கட்டுரை

24 : ஆங்குக் .............. தொடங்குமன்

(இதன்பொருள்:) ஆங்குக் கானல்வரிப் பாடல் கேட்ட - அவ்விடத்தே கோவலன் யாழிலிட்டுப் பாடிய கானல்வரிப் பாடல்களைப் பொருளுணர்ச்சியோடு கேட்டிருந்த; மான் நெடுங்கண் மாதவியும் - மானினது கண்போல நீண்ட கண்ணையுடைய மாதவி தானும்; மன்னும் ஓர் குறிப்புண்டு இவன் தன் நிலை மயங்கினான் என்று - இவன் பாடிய வரிப்பாடல்கள் அனைத்தினும் நிலைபெற்ற ஒரு குறிப்புப் பொருளும் உளது அஃதாவது, இவன் மயங்கித் தனது நிலையினின்றும் மாறுபட்டான் என்பதே அது, என்று கருதியவளாய், கலவியால் மகிழ்ந்தாள்போல்-அவனொடு கூடும் பொழுது மகிழும் அளவு அவன் பாடல் கேட்டு மகிழ்ந்தவள் போன்று புறத்தே காட்டி; புலவியால் யாழ் வாங்கி - அகத்தில் ஊடலோடு கோவலனிடமிருந்து யாழைத் தன் கையில் வாங்கி; தானும் ஓர் குறிப்பினள்போல் - தன்பால் பிறிதொரு மாறுபாடும் இல்லாதிருக்கவேயும் தானும் வேறு குறிப்புடையாள் போன்று கோவலனுக்குத் தோன்றுமாறு; கானல் வரிப் பாடல் பாணி - கானல்வரிப் பாடல் என்னும் இசைப்பாக்களை; நிலத் தெய்வம் வியப்பு எய்த - அந்நெய்தனிலத் தெய்வமாகிய வருணன் மிகவும் வியப்பெய்தவும்; நீள் நிலத்தோர் மனம் மகிழ-நெடிய நிலவுலகத்தே வாழ்கின்ற மாந்தர் மனம் மிகவும் மகிழவும்; கலத்தொடு புணர்ந்து அமைந்த கண்டத்தால் பாடத் தொடங்கும் மன் - தான் கைக்கொண்ட யாழிசையோடு இரண்டறக் கலந்து பொருந்திய இசை நலனுடைய தனது மிடற்றினாலே பாடத்தொடங்கினள் என்க.

(விளக்கம்) கோவலன் பாடிய காவிரியை நோக்கினவும் கானல்வரிப் பாணியும் களவொழுக்கத்தே நின்ற தலைவன் கூற்றாக அமைதலின் இவன் தன்மேலன்பிலன்; மனமாறுபட்டு மற்றொருத்தியைக் காதலித்தமையால் அவ்வுணர்ச்சி காரணமாக இங்ஙனம் பாடினன் என்று மாதவி கருதினள். வாய்மையில் ஊழின் வலிமைக்கு இஃதொரு சிறந்த எடுத்துக்காட்டு. ஊழ்வினை உருத்து வந்தூட்டுங்காலத்தே ஊட்டப்படுபவர் மனத்தையே தன்வசமாக்கிக் கொள்ளும் என்பதனைப் பேதைப் படுக்கும் இழவூழ் எனவரும் திருவள்ளுவனார் செம்மொழியானும் உணரலாம்.

ஊழ்வயத்தானே நல்லவை யெல்லாம் தீயவாம் என்னும் அத்தெய்வப்புலவர் திருவள்ளுவனார் அறிவுரைக்கும் ஆற்றவும் இனியனவாகிய கோவலன் பாடிய உருக்களே அவ்விருவர்க்கும் ஆற்றொணா அல்லல் விளைக்கும் கருவியாகவும் மாறி விடுகின்ற இந்நிகழ்ச்சி சிறந்ததோர் எடுத்துக் காட்டாகவும் அமைவதறிக!

அளியளோ! அளியள்! மாமலர் நெடுங்கண் மாதவி. மாசு சிறிதேனும் இல்லாத பேரன்புடையள் கற்புடைத் தெய்வம்; இம்மாதவி, இத்தகைய தூய நெஞ்சுடையாள் தன்னைத் தானே தீயநெஞ்சுடையாளாகக் காட்டத் துணிந்துவிட்டாள்! இவ்வாறு துணிவித்தது அவளுடைய போகூழ், ஈண்டு,

ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
சூழினும் தான்முந் துறும்

எனவரும் அருமைத் திருக்குறள் நம்மனோராற் பன்முறை நினைந்து நினைந்து தெளியற் பாலது.

மாதவி ஊழ்வழி நின்று யாழோடு பாடுதல்

ஆற்றவரி

25 : மருங்கு .......... காவேரி

(இதன்பொருள்:) காவேரி - தெய்வக் காவிரி நங்காய் நீ! மருங்கு வண்டு சிறந்து ஆர்ப்ப மணிப்பூ ஆடையது போர்த்து - இரு பக்கங்களினும் வண்டுகள் மிக்குத் தம்மிசையால் ஆரவாரிப்ப அழகிய மலர்களாலியன்ற ஆடையைப் போர்த்துக்கொண்டு; கருங்கயல் கண் விழித்து ஒல்கி - கரிய கயல்மீனாகிய கண்களை விழித்துக் கொண்டு ஒதுங்கி நடவாநின்றனை; வாழி - நீ நீடுவாழ் வாயாக! இவ்வாறு நீ கருங்கயற் கண்விழித்து ஒல்கி; நடந்த எல்லாம் - பலகாலும் நடந்த நினது நன்னடைகட்கு எல்லாம் காரணமாவது; நின் கணவன் திருந்து செங்கோல் வளையாமை அறிந்தேன் - நின் கணவனாகிய சோழமன்னன் ஏந்திய மாந்தர் திருந்துதற்குக் காரணமான செங்கோலானது கோடாமையாகும் என்பதனை யான் அறிந்துளேன் காண்! காவேரி வாழி - காவிரி நங்காய் நீ நீடூழி வாழ்வாயாக! என்க.

26 : பூவர்சோலை ........... காவேரி

(இதன்பொருள்:) காவேரி - காவிரிநங்காய்! பூவர் சோலை மயில் ஆல குயில்கள் புரிந்து இசைபாட - மலர்கள் நிறைந்த சோலையாகிய கூத்தாட் டரங்குகளிலே மயில்களாகிய கூத்தியர் மகிழ்ந்து கூத்தாடாநிற்பவும்; அக்கூத்திற்கியன்ற தாள முதலியவற்றை உணர்ந்து அக்கூத்திற்கியையக் குயில்களாகிய பாண்மகளிர் இனிய இசையைப் பாடாநிற்பவும்; காமர் மாலை அருகு அசைய நடந்தாய் வாழி - நின்பா லன்புடையோர் விரும்பியிட்ட மலர் மாலைகள் நின்னிருமருங்கும் அசையாநிற்பவும் நீ பீடுபெற நடக்கின்றனை நீ நீடுவாழ்வாயாக ! காமர் ........ எல்லாம் - இவ்வாறு நீ காமர்மாலை அருகசையப் பல்லாண்டுகளாக நடந்த நடையெல்லாம்; நின் கணவன் நாமவேலின் திறங்கண்டே - நின் கணவனாகிய வளவன் ஏந்திய பகைவர்க்கு அச்சந்தரும் வேற்படையின் வெற்றித் திறத்தைக் கண்டதனால் அல்லவா? அறிந்தேன் காவேரி வாழி இவ்வுண்மையை யான் அறிந்துகொண்டேன் காண் நீ நீடூழி வாழ்வாயாக! என்க.

27 :  வாழியவன்றன் ............ காவேரி

(இதன்பொருள்:) காவேரி வாழி - காவிரிநங்காய் ! நீ நீடுவாழ்வாயாக; அவன்றன் வளநாடு மகவாய் வளர்க்குந் தாயாகி ஊழி உய்க்கும் பேருதவி யொழியாய் - நீதானும் வளையாச் செங்கோலும் வெற்றிவேலும் ஏந்திய நின் கணவனாகிய வளவன் காக்கும் வளமிக்க சோழனாடு நும்மிருவர்க்கும் மகவாக நீதான் அம்மகவினைப் பேணி வளர்க்கு நற்றாயே ஆகி ஊழிதோறும் நடத்தி வருகின்ற பேருதவியை ஒரு காலத்தும் தவிர்ந்திலை யல்லையோ? வாழி - நீ நீடூழி வாழ்வாயாக; நீ இவ்வாறு - ஊழி யுய்க்கும் பேருதவி ஒழியாது; ஒழுகல் அறிந்தேன் - நடத்தற்குரிய காரணத்தை யானும் அறிந்துளேன்காண்! அஃதியாதெனின்; உயிர் ஓம்பும் ஆழி ஆள்வான் பகல் வெய்யோன் அருளே - உயிர்களைப் புறங்காத்தோம்புகின்ற ஆணைச் சக்கரத்தை யுடையவனும் நடுவுநிலை யுடையவனும் யாவரானும் விரும்பப்படுபவனும் நின் கணவனுமாகிய சோழமன்னனது அருளுடைமையே யாம்; காவேரி வாழி - காவேரி யன்னாய் நீ ஊழ்தோறூழி வாழ்வாயாக; என்க.

(விளக்கம்) இவ்வுருக்கள் முன்னர்க் கோவலன் பாடிய ஆற்றுவரிக் கிணையாகப் பாடப்பட்டவை; ஆதலால் அவற்றோடு இவற்றை ஒப்புநோக்கி உணர்க. இதற்குப் பாடாண்டிணைக் கடவுள் வாழ்த்து என்னும் துறைகொள்க. இனி, இதற்கும் களவொழுக்கத்தினிற்கும் தலைவன் தான் குறிப்பிட்டவாறு வந்து ஒழுகுதலாலே ஏமஞ் சான்றவுவகை (தொல் - கள -20) யால் தலைவி அவனை நல்லன் அருளுடையன் என நயந்து தன்னயப்பினைக் காவிரியின் மேலிட்டுத் தலைவன் சிறைப்புறத்தானாக அவன் கேட்பக் கூறியது என்று நுண்ணிதின் உணர்க.

25 - மருங்கு - ஆற்றின் இரு பக்கங்கள். நங்கை என்புழி மருங்கு வண்டு - இரு பக்கங்களினும் அமைந்த கையின்கண் வளையல் என்க பூ ஆடை - ஆற்றிற்கு நீர் மேல் உதிர்ந்து ஆடை போன்று நீரை மறைத்துள்ள மலர்கள் நங்கைக்குப் பூத்தொழிலையுடைய மேலாடை என்க. கயற்கண் - ஆற்றிற்குக் கயலாகிய கண். நங்கைக்குக் கயல் போன்ற கண் என்க. இவை சிலேடை. கணவன் : சோழமன்னன். திருந்துதற்குக் காரணமான செங்கோல் என்க. அக்காரணத்தை யான் அறிந்தேன் என்க. இஃது அரசனுடைய அளிச்சிறப்பு.

26 - பூவர் சோலை என்புழி ஆர் - அர் எனக் குறுகியது செய்யுள் விகாரம் . மாலை - யாற்று நீரில் மலர்மாலையிட்டு வணங்குதல் மரபாகலின் அங்ஙனம் அன்புடையோர் இட்ட மாலைகள் என்க. இருமருங்கினும் மாலையிடப்படுதலால் மாலைஅருகு அசைய என்றாள். இவ்வாறு மலர் மாலையிட்டு யாற்றை வழிபடும் வழக்கம் உண்மையை,

மாலையுஞ் சாந்தும் மதமும் இழைகளும்
கோலங் கொளநீர்க்குக் கூட்டுவா ரப்புனல்
உண்ணா நறவினை ஊட்டுவார் ஓண்டொடியார்

எனவரும் பரிபாடலினும் (10-வையை: 92-4) காண்க. நாமவேல் நாம் என்னும் உரிச்சொல்லீறு திரிந்தது. நாம் - அச்சம். வேலின் திறம் - வெற்றி. இஃது அரசனுடைய தெறற் சிறப்பு.

27: அவன் : சோழமன்னன். வளநாடு நினக்கும் நின் கணவற்கும் மகவாக நீ நற்றாயாகி என்க. ஊழிதோறும் அவ்வறத்தை நடத்துதலால் ஊழியுய்க்கும் பேருதவி என்றாள். உயிரோம்பும் வெய்யோன் ஆழி ஆள்வானாகிய வெய்யோன் பகல் வெய்யோன் எனத் தனித் தனியீயையும். ஆழி - ஆணைச்சக்கரம். ஆழியாள்வான் என்பது சக்கரவர்த்தி என்னும் பெயர்போலப் பெயர்த்தன்மை பெற்றது நின்றது அதற்கு நேரிய தமிழ்மொழிபெயர்ப்பு எனலுமாம். சோழன் கதிரவன் மரபினன் என்பதுபற்றி அவனைக் கதிரவனாக உபசரித்த கருத்துத் தோன்றப் பகல் வெய்யோன் என்றார் என்க.

சார்த்துவரி

28 : தீங்கதிர் ............ எம்மூர்

(இதன்பொருள்:) ஐய - எம்பெருமானே! தீம் கதிர் வாள் முகத்தாள் செவ்வாய் மணி முறுவல் ஓவ்வாவேனும் - நீயிர் கொணருகின்ற இம் முத்துக்கள் காண்டற்கினிய நிலாவினையுடைய திங்கள் போன்ற ஒளியையுடைய திருமுகத்தையுடைய எம்பெருமாட்டியின் சிவந்த வாயகத்தே யமைந்த அழகிய எயிறுகளை ஒவ்வாதனவாகவும் நீயிர் அவற்றைப் பொருளாக மதித்து; மால் மகன் போல வைகலும் நீர் முத்து வாங்கும் என்று வருதிர் - பித்தேறி மயங்கிய ஒருவனைப்போல நாள்தோறும் நீங்கள் இம்முத்துக்களை வாங்கிக் கொண்மின்! என்று கூறிக்கொண்டு சில முத்துக்களைக் கொண்டு வருகின்றீர். யாம் அவற்றை ஏலோம். எற்றால் எனின்; வருதிரைய வீங்கு ஓதம் விளங்கு ஒளிய வெண்முத்தம் தந்து - ஒன்றன்பின் ஒன்றாய்! வருகின்ற அலைகளையுடைய பெருகுகின்ற இக்கடல் தானும் நாள்தோறும் தன்றிரைக்கையால் இவற்றினும் சிறப்ப ஒளியுடையவாகிய வெண்முத்துக்களை எமக்குக் கொணர்ந்து தந்து அவற்றிற்கு மாறாக; விரைசூழ் கானல் பூங்கோதை கொண்டு - நறுமணங் கமழ்கின்ற இக்கடற்கரைச் சோலையிடத்தே யாங்கள் கொய்து புனைந்த மலர்மாலையைப் பெற்றுக்கொண்டு; விலைஞர்போல் மீளும் புகாரே எம்மூர் - வணிகர்போல மீண்டு போதற்கிடனான இப் பூம்புகார் நகரம் எங்கள் ஊர் ஆதலாலே ; என்க.

29 : மறையின் ............. எம்மூர்

(இதன்பொருள்:) ஐய - எம்பெருமானே! வன்பரதர் பாக்கத்து மடவார் செங்கை இறைவளைகள் - வன்மையுடைய பரதவர் சேரியிலே பிறந்த மடப்பமுடைய மகளிரின் சிவந்த கையினது இறையின்கட் செறித்த வளையல்களே; மறையின் மணந்தாரைத் தூற்றுவதை - களவினாலே தமக்கியன்ற தலைவரைக் கூடிய காலத்தே அம்மகளிர் ஒழுக்கத்தைப் பலருமறியப் பழிதூற்றும் என்பதனை; ஏழையம் எங்ஙனம் யாங்கு அறிகோம் - முன்னரே பேதை மகளிரேமாகிய யாங்கள் எவ்வாறு எவ்விடத்தே அறிய வல்லுநமாவேம்; அறிந்திலேங்காண், அறிய மாட்டாமைக்குக் காரணமும் உளது, அஃதென்னெனின்; எம்மூர் - யாங்கள் பிறந்து வளர்ந்த ஊர்தான்; நீள் புன்னை அரும்பிப்பூத்த பொறைமலி பூங்கொம்பு அன்னம் ஏற - நீண்ட புன்னைமரமானது அரும்பெடுத்து மலர்தலாலே சுமைமிகுந்த அதன் மலர்க்கொம்பின் மேல் அன்னப் பறவை ஏறாநிற்ப; நிறைமதியும் மீனும் என அவ்வன்னத்தை முழுத்திங்கள் என்றும் மலர்களை விண்மீன்கள் என்றும் இஃது அந்திமாலைப் பொழுது போலும் என்றும் கருதி; ஆம்பல் வண்டு ஊதும் புகார் - மலர்ந்துள்ள ஆம்பல் மலரிற் சென்று வண்டுகள் தேனூதுதற்குக் காரணமான இப்புகார் நகரமே யாதலால்; என்க.

30 : உண்டாரை ............... எம்மூர்

(இதன்பொருள்:) வெல்நறா உண்டாரை ஊண் ஒளியாப் பாக்கத்து - கள்ளானது தன்னை உண்டுவைத்தும் உண்டமை புறத்தார்க்குப்புலப்படாமல் மறைப்பேம் என்னும் கோட்பாடுடையார் மனத்திட்பத்தைக் கெடுத்து வென்று தன்வயப்படுத்து அவரைக் கொண்டே தன்னையுண்டமையைப் புறத்தார்க்கு ஒளியாமல் தூற்றுவிக்கு மிடமான இப்பாக்கத்தின் கண்ணே; உறை ஒன்று இன்றித் தண்டாநோய் மாதர்தலைத் தருதி என்பது - மருந்து பிறிதொன்று மில்லாத் தீராத தொருநோயை நீ பேதை மகளிர்க்குத் தருகுவை என்பதனை; ஐய யாங்கு அறிகோம் - ஐயனே! ஏழையம்யாம் முன்னரே எங்ஙனம் அறியவல்லுநம் ஆவேம்; அறியா தொழிந்தேம் காண்! மேலும்; எம்மூர் - எமதூர்தானும்; வண்டால் திரை அழிப்ப - தாங்கள் கோலிய மணல் வீட்டைக் கடலினது அலைவந்து அழித்துப் போகாநிற்ப; மாதர் - எம்மினத்துப் பேதை மகளிர்; மதிமேல் நீண்ட புண்தோய் வேல் நீர்மல்க-திங்களின் மேலே நீண்டு கிடந்த பகைவர் குருதி தோய்ந்த வேல் போன்ற தங்கண்களினின்றும் நீர் பெருகாநிற்ப; கையால் மணல் முகந்து கடல் தூர்க்கும் புகாரே - தமது சிறிய கைகளாலே மணலை அள்ளிப் பெரிய கடலைத் தூர்த்தற்கு முயலுமிடமான இப்புகார் நகரமே யன்றோ? என்க.

(விளக்கம்) இவற்றோடு கோவலன் பாடிய கரியமலர் முதலிய மூன்று வரிப்பாடலையும் ஒப்பு நோக்குக. இவை அவற்றிற்கு இணையாகப் பாடப்பட்டவை.

28 : இது கையுறைமறை. அஃதாவது: களவொழுக்கத்தில் நிற்கும் தலைவன் தோழியை இரந்து பின்னிற்பவன் தலைவிக்குக் கொடுத்துக் குறைநயப்பித்தற்பொருட்டுக் கொணர்ந்த கையுறையைத் தோழி ஏற்றுக்கொள்ள மறுத்தது என்க. தீங்கதிர் - திங்கள்: அன்மொழித் தொகை. திங்கள் போலும் ஒளியுடைய முகத்தாள் என்க. அவளாவாள் தலைவி. கையுறையின் தகுதியின்மை தோன்றச் செவ்வாய் மணி முறுவல் இவை ஒவ்வா என்றாள். மான்மகன் - மால்+மகன் - பித்தேறி மயங்கியவன்; காமவேள் போல எனவும் ஒரு பொருள் தோன்றுதல் உணர்க. முறுவல் - எயிறு. வரைதற்கு முயல்கின்றிலீர் என்பாள் வைகலும் வருதிர் என்றாள். வீங்கு ஓதம் வெண்முத்தம் தந்து கோதை கொண்டு மீளும் என்றாள் இம்முத்து எமக்கு ஆற்றவும் எளிய என உணர்த்தற்கு. அரிய முத்தைத் தந்து எளிய கோதையை எம் முரிக் கடல் பெறுமாறு போல எளிய இம்முத்தைத் தந்து எம் பெருமாட்டியை நீயிர் நுகரக் கருதுதிர் என உள்ளுறை தோன்றிற்று. யாம் அதற்குடம்படேம் வரைந்து கொள்ளுதி என வற்புறுத்தற்கு இங்ஙனம் உள்ளுறுத்துக் கூறினள்.

29 : மறை - களவு. வன்பரதர் பாக்கத்து மடவார் மறையின் மணந்தாரை அவர்தம் வளையே தூற்றும் என்பதனை யாங்கள் முன்பு அறிந்திலேம் என்றவாறு. செங்கை இறை - செங்கையாகிய இறை; இறை - முன்கை. வளைகள் தாம் கழன்றுகுவதனாலே தலைவியின் பிரிவாற்றாமைப் பிறர் அறியும்படி செய்தலை, வளைகள் தூற்றும் என்றாள். இஃது அலர் அறிவுறுத்து வரைவு கடாவியவாறாம். எம்மூரே பேதைமையுடைத்து ஆதலின், யாங்களும் பேதையரேம் ஆயினேம் என்பாள் எம்மூரில் புன்னைப் பூங்கொம்பில் அன்னத்தையும் பூவையும் கண்டு அவற்றைத் திங்களும் விண்மீனும் என்று எண்ணி ஆம்பல் மலரும் என்றாள்.

30: நறா-கள். அஃதுண்டாரை வெல்லுதலாவது - இதனை உண்டு பிறர் அறியாமல் மனத்திட்பத்தோ டிருப்பேமென் றுறுதிகொண்டு உண்டாருடைய அத்திட்பத்தை அழித்துத் தன்வயப்படுத்தி அவரைக் கொண்டே கள்ளுண்டமையைப் பிறர் அறியுமாறு வெளிப்படுத்தி விடுதல். இதனை,

ஒளித்தவர் உண்டு மீண்டிவ் வுலகெலாம் உணர வோடிக்
களித்தவர் (கிட்கிந்தை - 93)

எனவரும் கம்பர் வாக்கானு முணர்க. இதற்கு, களித்தறியேன் என்பது கைவிடுக நெஞ்சத் தொளித்ததூஉம் ஆங்கே மிகும் என வரும் (928)-திருக்குறளைக் காட்டுவாருமுளர். இதற்குப் பரிமேலழகருரை இவர் கருத்தை வலியுறுத்துமேனும் ஆசிரியர் திருவள்ளுவனார் கருத்தஃதன்று. மற்று அவர் கருத்து வருமாறு: யான் இப்பொழுது பெருந்துன்பத்திற்கு ஆளாகியுளேன் இத்துன்பத்தை மாற்றும் பொருட்டுக் கள்ளுண்டு அவற்றை அறியேனாகுவன் என்று சிலர் கருதிக் கள்ளுண்ணத் தலைப்படுதலுமுண்டு; அங்ஙனம் கருதியுண்பார்க்கும் அக்கள் உதவி செய்வதில்லை. மேலும் அவர் தம்மியற்கை யறிவாலே அமைதி கண்டுள்ள துன்பங்களையும் கள்வெறி கிளர்ந்தெழச் செய்து முன்னையினுங்காட்டில் மிகுவிக்கும். ஆதலால், அவ்வாற்றானும் கள்ளுண்டல் கூடாது என்பதேயாம். இங்ஙன மாகலின் அவ்வெடுத்துக் காட்டுப் போலி என்றொழிக.

இனிக் கடலைக் கையான் மணன் முகந்து தூர்க்கக் கருதுமளவு பெரும் பேதைமைத்து எம்மூர் அதன்கட் பிறந்து வளர்ந்த யாம் நின் போல்வார் மாதரைத் துன்புறுத்துவர் என்று எவ்வாறு அறிய மாட்டுவேம்: அறியேமாயினேம்: அறியின் இவ்வொழுக்கத்திற் கிசைந்திரேம் என்றவாறு.

இவையிரண்டும் தோழியிற் கூட்டங் கூடிப் பின்பு வாராவரைவல் என்றாற்குத் தோழி தலைவியின் ஆற்றாமை கூறி வரைவு கடாஅயவை என்க.

திணைநிலைவரி

31 : புணர்துணை...........உணரேனால்

(இதன்பொருள்:) வணர்சுரி ஐம்பாலோய் - வளைந்து சுருண்ட கூந்தலையுடைய எம்பெருமாட்டியே, ஈதொன்று கேள்; புணர்துணையோடு ஆடும் பொறி அலவன் நோக்கி - தான் புணர்ந்தின் புறுதற்குக் காரணமான தனது காதற்றுணைவியாகிய பெடை நண்டோடு விளையாடுகின்ற புள்ளிகளையுடைய ஆண்நண்டினைக் கூர்ந்து நோக்கிப் பின்னர், இணர்ததையும் பூங்கானல் என்னையும் நோக்கி - பூங்கொத்துக்கள் செறிந்த அழகிய சோலையிடத்தே நின்ற என்னையும் கூர்ந்து நோக்கி; உணர்வு ஒழியப் போன - தன்னுணர்ச்சி தன்னைக் கைவிட்டமையாலே ஏதோ கூறக் கருதி யவன் யாதொன்றும் கூறாமல் வாய்வாளாது போன; ஒலி திரை நீர்ச் சேர்ப்பன் - முழங்குகின்ற கடலையுடைய இந் நெய்தனிலத் தலைவன்; வண்ணம் உணரேனால் - நிலைமை யாதென்று யான் உணர்கின்றிலேன்; என்க.

இது - அறியேன் என்று வலிதாகச் சொல்லிக் குறை நயப்பித்தது. வலிதாகச் சொல்லுதலாவது - உணர்வொழியப் போன சேர்ப்பன் வண்ணம் உணரேன் எனவே; ஒரோவழி அவன் இறந்து படுதலும் கூடும் என்பதுபடக் கூறுதல். ஆகவே, தலைவிக்கு ஆற்றாமை மிக்குக் குறை நேர்வாளாம் என்க.

மேல்வரும் ஐந்து வரிப்பாடலும் இரங்கலும் அதன் நிமித்தமுமாய் நெய்தற்றிணை பற்றியே நின்றன. ஐந்தும் காமமிக்க கழிபடர் கிளவி என்னும் ஒரு துறை பற்றி அடுக்கி வந்தனவாம்.

32 : தம்முடைய ............. மாட்டேமால்

(இதன்பொருள்:) தம்முடைய தண் அளியும் தாமும் தம் மான் தேரும் - எம்பெருமான் தம்முடைய தண்ணிய அருளும் தாமும் தம்முடைய குதிரைகளையுடைய தேரும்; எம்மை நினையாது விட்டாரோ விட்டு அகல்க - அளியேமாகிய எம்மைச் சிறிதும் நினையாமல் கைவிட்டுப் போயினரோ? அங்ஙனம் போனாற் போயொழிக: அம்மெல் இணர அடும்புகாள் அன்னங்காள் - அழகிய மென்மையுடைய பூங்கொத்துக்களையுடைய அடும்புகளே! அன்னப் பறவைகளே! நம்மை மறந்தாரை நாம் மறக்க மாட்டோம் ஆல் - (தம்மை மறவாதேமைத் தாம் மறந்து போயினும்) அவரை யாம் மறந்தமைகிலேம் காண்; என்க.

(விளக்கம்) தம்முடைய தண்ணளியும் தாமும் தம் தேரும் விட்டனர் என்பது தலைமைப் பொருளையும் தலைமையில் பொருளையும் எண்ணித் தலைமைப் பொருட்கு வினை கொடுப்பவே தலைமையில் பொருளும் முடிந்தனவாவ தொரு முறைமை பற்றி வந்தது என்பர் சேனாவரையர். (தொல். சொல். 52. உரை.)

அடும்புகளும் அன்னங்களுமே இப்பொழுது தனக்குத் துணையாயினமைபற்றி அவற்றை விளித்து அவை கேட்பனபோலக் கூறினள். இவ்வாறு செய்யுள் செய்வது புலனெறி வழக்கம். இதனை, நோயும் இன்பமும் எனவரும் (தொல் - பொருள் - பொருளியல் - 2) சூத்திரத்தானும் ஞாயிறு திங்கள் எனவரும் (þ செய்யுளியல் 192) சூத்திரத்தானும் அறிக. மறக்க மாட்டேம் - மறவேம்; (ஒருசொல்)

33 : புன்கண் ............... கண்டறிதியோ

(இதன்பொருள்:) இன்கள்வாய் நெய்தால் - இனிய தேனூறும் வாயினையுடைய நெய்தற்பூவே! புன்கண் கூர் மாலை - துன்பமே மிகாநின்ற இந்த அந்திமாலைப் பொழுதிலேயே; புலம்பும் என் கண்ணே போல் துன்பம் உழவாய் - தனிமையால் வருந்துகின்ற என் கண் போன்று துன்பமடையாமல்; துயிலப் பெறுதி - இனிதே துயிலும் பேற்றையும் பெற்றுள்ளனை; நீ எய்தும் கனவினுள் - இப்பொழுது நீ கனவுகாண்குவை யன்றோ அங்ஙனம் நீ காணுகின்ற அந்தக் கனவிடத்திலேனும்; வன்கணார் - கண்ணோட்டமில்லாத எம்பெருமான்; கானல் வரக்கண்டு அறிதியோ - இந்தக் கடற்கரைச் சோலையிலே வர அவரை நீ கண்டறிகின்றாயோ? அறிந்தால் கூறுதி என்க.

(விளக்கம்) நெய்தால்: விளி. நீ என் கண் போலுதி ஆயினும் என் கண் போல் துன்பமுனக்கிலை; என் கண் துயில்கில; நீ துயிலுதி; அது நீ பெற்ற பேறு என்பாள் துயிலப் பெறுதி என்றாள். யான் அரிதில் எப்போதேனும் துயில் பெற்றால் அப்பொழுதே அவரை என்தோள் மேலராகக் கனவு காண்பேன். நீ துயில்கின்றா யாதலால் கனவு காண்டல் தேற்றம்; நீ எய்தும் அக் கனவினுள் அவர் வரக் காண்கின்றனையோ? என்று வினாயவாறு. அவர் கண்ணோட்டமில்லாதவர் ஆயினும், அவரைக் கண்டால் என்னிலை கூறுதி என்பது குறிப்பு.

இது குறிபிழைத்துழித் தன்வயின் உரிமையும் தலைவன்வழிப் பரத்தமையும் படக்கூறியது என்பர் நச்சினார்க்கினியர் ( தொல் களவு 16).

34 : புள்ளியன்மான் ............ என்செய்கோ

(இதன்பொருள்:) தெள்ளும் நீர் ஓதம் - தெளிந்த நீரையுடைய கடலே! நீதான்; புள் இயல் மான் தேர் ஆழிபோன வழி எல்லாம் சிதைத்தாய் - எம்பெருமான் ஊர்ந்த பறவை போன்று விரைந்து செல்லும் குதிரைகள் பூட்டிய தேரின் ஆழிகள் பதிந்த சுவடுகளையுடைய வழிமுழுதும் நினது அலைக்கைகளாலே அழித்தொழித்தாய்! என் செய்கோ - அவற்றைக் கண்டு ஆறுதல் பெறுகின்ற அளியேன் இனி என்செய்தாற்றுகேன்? தெள் - அவ்வாறு வழி சிதைத்த தெள்ளுநீர் ஓதமாகியகடலே நீதான்; எம்மோடு ஈங்குள்ளாரோடு உள்ளாய் - எம்மோடு இவ்விடத்தே இருந்தும் அலர்தூற்றி எமக்கின்னல் சூழ்வாரோடு நீயும் உறவு கொண்டுள்ளனை ஆதலால்; உணராய் சிதைத்தாய் - எமது வருத்தத்தைக் கருதாயாய் எமக்கின்னலாக அவ்வழியைச் சிதைத்தனை போலும்; என்செய்கோ - இனி யான் என்செய்தாற்றுகேன், என்க.

(விளக்கம்) புள்ளியற் கலிமா வுடைமை யான என்பது தொல்காப்பியம். (கற்பு 53) ஈங்குள்ளார் என்றது - அலர் தூற்றும் கொடிதறிமகளிரை. எம்மோடீங்குள்ளார் எம்நோயுணராராய் அலர்தூற்றி இன்னல் செய்தல்போன்று நீயும் உணராயாய் வழிசிதைத்து இன்னல் செய்குதி என்பது கருத்து. தெள்ளுநீர் ஓதம் - கடல் : அண்மைவிளி. என் செய்கு - என்செய்வேன். ஓகாரம் ஈற்றசை.

35 : நேர்ந்த ........... என்னீரே

(இதன்பொருள்:) நம் நேர்ந்த காதலர் - நம்மோடு பொருந்திய நங் காதலர்; நேமி நெடுந்திண்தேர் ஊர்ந்த வழி சிதைய ஊர்கின்ற ஓதமே - உருளையுடைய நெடிய நமது தேரினைச் செலுத்திய சுவடுகள் சிதைந்தொழியும்படி அவற்றின் மேலே செல்லா நின்ற கடலே; பூந்தண் பொழிலே புணர்ந்து ஆடும் அன்னமே - மலர்களையுடைய குளிர்ந்த புண்பொழிலே! பெடையுஞ் சேவலுமாய்ப் புணர்ந்து இன்புற்று விளையாடாநின்ற அன்னப் பறவைகளே; ஈர்ந்தண் துறையே - மிகவும் குளிர்ந்த கடற்றுறையே! இது தகாது என்னீரே - நீயிரெல்லாம் எம்மோ டீங்குள்ளீ ரல்லீரோ? அவர் ஈண்டு நின்றும் போம்பொழுது நீயிர் இவ்வாறு பிரிந்து போதல் நுமது பெருந்தகைமைக்குத் தகுதியாகாது என்று எம்பொருட்டு ஒரு மொழியேனும் கூறுகின்றிலீர் இது நுமக்கறமாமோ? என்க.

(விளக்கம்) நேர்ந்த - பாலதாணையால் நம்மைத் தலைப்பட்ட எனினுமாம். நேமி - உருளை. ஓதம் - கடல். கடலும் பொழிலும் அன்னமும் துறையும் தலைவனாற் காதலிக்கப்படுவன ஆதலின், அவற்றையும் உளப்படுத்தி நங்காதலர் என்றாள். தண் பொழிலாயிருந்தும் கூறுகின்றிலை. புணர்ந்தாடுவீராகவும் பிரிவுத்துயர் அறிகுதிர் அறிந்தும் அன்னங்காள் கூறுகின்றிலீர் என்பாள் புணர்ந்தாடும் அன்னமே! என்றாள். ஈர்ந்தண்துறை என்றாள் - ஈரிய அருளுடையையா யிருந்தும் தகாதென்றிலை எனற்கு.

36 : நேர்ந்து .......... கடலோதம்

(இதன்பொருள்:) கடல் ஓதம் - கடற்பெருக்கே! நேர்ந்த நம் காதலர் நேமி நெடுந் திண்தேர் ஊர்ந்த வழி சிதைய ஊர்ந்தாய் வாழி - நம்மோடு பொருந்தின நங் காதலர் ஆழியையுடைய நெடிய திண்ணிய தேரூர்ந்த சுவடும் சிதையும்படி ஊர்ந்தனை நீயே வாழ்ந்து போகுதி; கடல் ஓதம் மற்று எம்மோடு தீர்ந்தாய் போல் - கடற் பெருக்கே! நீதானும் எம்மோடு உறவொழிந்தாய்போல; ஊர்ந்த வழி சிதைய ஊர்ந்தாய் - அவர் தேரூர்ந்த சுவடு சிதையும்படி ஊர்ந்தனை; வாழி - நீ வாழ்ந்து போதி; தீர்ந்திலையால் - உறவொழிந்த நீ துவர ஒழிந்து போனாயுமல்லை. மீண்டும் நின் ஆரவாரத்தால் இன்னல் செய்கின்றனை, இஃதுனக்குத் தகுவதோ? என்க.

(விளக்கம்) தீர்ந்தாய் போல் தீர்ந்திலை என்பதற்கு உறவு போலிருந்து உறவாயிற்றிலை, காரியத்தால் வேறுபட்டாய் என்பர் அரும்பதவுரையாசிரியர். வாழி என்றது, குறிப்புமொழி. பரந்து கெடுவாய் என்னும் பொருட்டு.

மயங்கு திணைநிலை வரி

37 : நன்னித்திலத்தின் ........... என்செய்கோ

(இதன்பொருள்:) நல் நித்திலத்தின் பூண் அணிந்து நலஞ்சார் பவளக் கலை உடுத்துச் செந்நெல் பழனக் கழனிதொறும் திரை உலாவு கடல் சேர்ப்ப - அழகிய முத்தாகிய அணிகலனை அணிந்து அழகு பொருந்திய பவளமாகிய மேகலையையும் அணிந்து செந்நெற்பயிரையுடைய மருதப்பரப்பிலுள்ள வயல்கள் தோறும் தன் அலைகளோடே உலாவி வருகின்ற கடல் சார்ந்த நெய்தனிலத் தலைவனே! புன்னைப் பொதும்பர் மகரத்திண் கொடியோன் எய்த புதுப்புண்கள் - புன்னை மரச் சோலையினூடே மகர மீன் வரைந்த கொடியையுடைய காமவேள் தன் மலர்க்கணையாலே எய்யப்பட்ட புதிய புண்கள்தாம்; என்னைக் காணாவகை மறைத்தால் என்னை அடையாளம் காணமாட்டாதபடி மறைத்தால்; அன்னை காணின் என்செய்கு - இவ்வேறுபாட்டினை எம்முடையதாய் காண்பாளாயின்; யான் என் செய்துய்குவேன்? உய்யேன்காண்! என்க.

38 : வாரித் .................. என்செய்கோ

(இதன்பொருள்:) வண்பவளவாய் மலர்ந்து வாரித் தரள நகை செய்து பரதர்சேரி வலைமுன்றில் திரை உலாவு கடல் சேர்ப்ப - வளவிய சிவந்த பவளமாகிய வாயைத் திறந்து முத்தாகிய புன்முறுவல் காட்டிப் பரதவர் சேரிக்கண் வலை உணங்கும் முற்றத்தே சென்று அலைகள் உலாவுதற்குக் காரணமான கடலையுடைய நெய்தற் பரப்பின் தலைவனே; மடவாள் மாரிப் பீரத்து அலர்வண்ணம் கொள்ள எம்பெருமாட்டி நின் பிரிவாற்றாது கார்காலத்தே மலரும் பீர்க்கம்பூப் போன்ற நிறம் உடையாளாக; அன்னை கடவுள் வரைந்து ஆர் இக் கொடுமை செய்தார் என்று அறியின் என்செய்கு - அதுகண்டு எம்முடைய தாயானவள் முருகனுக்கு வெறியாட்டயர்ந்து என் மகட்கு இந்நோய் செய்தார் யார் என்று வேலனை வினாவி அறிவாளாயின் அப்பொழுது யான் என்செய்வேன்; என்க.

39: புலவுற்று ............... என்செய்கோ

(இதன்பொருள்:) புலவு உற்று இரங்கி அது நீங்க பொழில் தண் தலையில் புகுந்து உதிர்ந்த செம்மல் கலவை மணம் கமழத் திரை உலாவு கடல் சேர்ப்ப - தன்மீது புலானாற்றம் பொருந்த அதற்கு வருந்தி அந்நாற்றம் தீர்தற்பொருட்டுப் பூம்பொழிலின்கீழ்க் குளிர்ந்த இடத்தே புகுந்து ஆண்டுதிர்ந்து கிடக்கும் பல்வேறு வகையான பழம்பூக்களின் கலப்புற்ற நறுமணம் தன்மேற் கமழ்தல் கண்டு அலையானது மகிழ்ந்துலாவா நிற்றற்குக் காரணமான கடலையுடைய நெய்தற் றலைமகனே! மடவாள் பலவுற்று ஒருநோய் துணியாத படர்நோய் தனி உழப்ப - எம்பெருமாட்டி ஆராய்வார்க்குப் பற்பல நோயாகக் காணப்பட்டு இஃதின்ன நோய் என்று தெளியவொண்ணாத மனநோயாகிய இக்காம நோயைத் தமியளாக நுகராநிற்ப; அறியா நோய் அலவுற்று இரங்கி அன்னை அறியின் என் செய்கோ - இன்ன நோய் என்று அறியப்படாத இந்நோயை அலந்தலைப்பட்டு வருந்தி எம் அன்னை தான் அறிவாளாயின் யான் அவட்கு என் சொல்லுகேன் என்க.

(விளக்கம்) 37 - நல் நித்திலம் - அழகிய முத்து. கலை - மேகலை. உலாப் போவார் அணிகலன் அணிந்து போதல் உண்டாகலின் இங்ஙனம் கூறினள். பழனம் - ஈண்டு மருத நிலம் என்னும் பொருட்டு. ஈண்டு மருதமும் நெய்தலும் மயங்குதலறிக. புன்னைப் பொதும்பர் இயற்கைப் புணர்ச்சி யெய்தியவிடமாகலின் காமவேள் கணை எய்த இடமாகக் குறித்தாள். மகரத் திண்கொடியோன் - காமவேள். அவன் மேலும் மேலும் வருத்துவதனைப் புதுப் புண்கள் என்றாள். காணாவகை மறைத்தலாவது அடையாளந் தெரியாதபடி உடம்பு மாறுபடுதல். இவ்வாறு மெலிவதனை அன்னை காணின் என் செய்வேன் என்றவாறு. என் செய்வேன் என்றது கையறுநிலை. என்னைக் காணாவகை என்றது தலைவியைக் காணாதபடி என்றவாறு. ஈண்டுத் தலைவியைத் தோழி தானாகக் கொண்டு கூறுகின்றாள். இவ்வாறு கூறும் புலனெறி வழக்கம் உண்மையை, தாயத்தின் அடையா என வரும் தொல்காப்பியச் சூத்திரத்தால் (பொருளியல் - 27) அறிக. என் தோள் எழுதிய தொய்யில் என்று தோழி தலைவியின் தோளைத் தன்றோள் என்பது (கலி - 18) இதற்கு எடுத்துக்காட்டு.

38 : வாரித்தரளம் என்புழி வாரி வாளா அடைமாத்திரையாய் நின்றது. கடல் முத்து, பவளவாய் மலர்ந்து தரள நகை செய்து என மாறுக. நகை செய்தலாவது - எயிறு தோன்றப் புன்முறுவல் பூத்தல். உலாப்போவார் பிறர் முன்றிலில் செல்லுங்கால் அங்குள்ளாரைக் கண்டு மகிழ்ந்து வாய் மலர்ந்து முறுவலிப்பதுண்மையின் இங்ஙனம் கூறினள். பீரம் - பீர்க்கு. அலர் - மலர், இதனிறம் பசலைக்குவமை. நின்னை அறியாது தெளிந்தவள் என்பாள் தலைவியை மடவாள் என்றாள். கடவுள் வரைதல் - முருகக் கடவுட்கு வழிபாடு செய்து வினாதல். செய்தார் யார் என்று வினவி அறியின் என்க.

இனி, இம் மூன்றும் வரைவுகடாஅதல் என்னும் ஒரு பொருண்மேல் அடுக்கி வந்த வரிப்பாடல்கள் (உருக்கள்). இவற்றினுள், 37- நெய்தனிலத்து அலை மருத நிலத்து வந்துலாவும் என்னும் கருப்பொருளில் நீதானும் வரைந்து கொள்ளாமல் இன்னும் ஏதிலனாகவே வந்து மீள்கின்றனை என உள்ளுறை காண்க.

38 - திரை தனக்குரிய கடலை விட்டுப் பரதர் முன்றிலில் வந்து வாளா வாய் மலர்ந்து முறுவலித்து மீண்டும் தன் கடலுக்கே போதல் போன்று நீயும் தலைவியைக் கூடி மகிழ்தற் பொருட்டன்றி அவளை வரைந்து கொண்டு நின் மனைக்கு அழைத்துப் போக நினைக்கின்றிலை என்று உள்ளுறை காண்க.

39. இதன்கண் - அலைதனக்கெய்தியபுலால் நாற்றம்தீரப்பொழிற்றண்டலை புகுந்து கலவை மணங்கமழ உலாவினாற்போல நீயும் இக்களவொழுக்கத்தால் எய்திய பழி தீர வரைவொடு வந்து இவள் வளமனை புகுந்து வதுவை செய்து புகழ் பரவ இல்லறம் நிகழ்த்தல் வேண்டும் என்பது உள்ளுறை என்க.

40 : இளையிருள் ........... மருண்மாலை

(இதன்பொருள்:) எல் செய்வான் மறைந்தனனே இளை இருள் பரந்ததுவே - கதிரவன்றானும் மேலைக்கடலிலே மூழ்கி மறைந்தனனே! அந்தோ அந்திமாலைக்குரிய இளமையுடைய இருள் உலகெங்கும் வந்து பரவிவிட்டதே; கண் களைவு அரும் புலம்பு நீர் பொழீஇ உகுத்தன - என் கண்கள் தாமும் பிறிதோ ருபாயத்தானும் நீக்குதற்கரிய எனது தனிமைத் துயர் காரணமாகப் பெருகிய துன்பக் கண்ணீரை மிகுதியாகச் சொரியலாயினனே! தளை அவிழ் மலர்க்குழலாய் - கட்டவிழ்ந்து மலர்ந்த மலரணிந்த கூந்தலையுடைய என் தோழியே! வளை நெகிழ எரிசிந்தி வந்த இம் மருள் மாலை - என்னுடைய வளையல்கள் நெகிழும்படி காமத்தீயைத் சிதறிக்கொண்டு இங்குவந்த இந்த மயக்கந் தருகின்ற அந்திமாலைப் பொழுது; தணந்தார் நாட்டு உளதாங் கொல் -நம்மைப் பிரிந்துறைகின்ற அவ்வன்கண்ணர் வதிகின்ற அந்நாட்டினும் உளதாமோ உரைத்தி! என்க.

41 : கதிரவன் ............. மருண்மாலை

(இதன்பொருள்:) கதிரவன் மறைந்தனனே - அந்தோ கதிரவன் குடதிசைக் கடலில் மூழ்கி மறைந்தொழிந்தானே! கார் இருள் பரந்ததுவே - உலகெங்கும் கரிய இருள் வந்து பரவிவிட்டதே; எதிர் மலர் புரை உண்கண் - இவ்வந்திமாலையை எதிர்கொள்கின்ற கருங்குவளை மலர்கள் போன்ற என் மையுண்ட கண்கள் தாமும்; எவ்வநீர் உகுத்தனவே - துன்பக் கண்ணீரைச் சொரியலாயினவே; புதுமதி புரை முகத்தாய் - புதிய திங்கள் ஒத்த முகத்தையுடைய தோழியே! மதி உமிழ்ந்து கதிர் விழுங்கி வந்த இம் மருள் மாலை - நெருநல் விழுங்கிய திங்களை உமிழ்ந்துவிட்டு அதற்கீடாக இற்றைநாட் கதிர்மண்டிலத்தை விழுங்கி இங்கு வந்த இம்மருட்சி தருகின்ற அந்திமாலைப் பொழுதுதான்; போனார்நாட்டு உளதாங்கொல் - நம்மைப் பிரிந்துபோன அவ்வன்கண்ணர் வதிகின்ற நாட்டினும் உளதாமோ? உரையாய்! என்க.

42 : பறவை ........ மருண்மாலை

(இதன்பொருள்:) பகல் செய்வான் மறைந்தனனே எனக்கு ஆற்றுந் துணையாகிய பகற்பொழுதைச் செய்கின்ற ஞாயிற்றுத் தேவனும் இப்பொழுது அது செய்யாது மறைந்து போயினன்; பறவை பாட்டு அடங்கின - ஓரோவழி எனக்கு ஆறுதலாகப் பாடிய பறவைகளும் குடம்பை புகுந்து பாட்டடங்கிப் போயினவே; நிறைநிலா நோய்கூர - தன்உறுப்புகள் முழுதும் நிறைந்த திங்கள்தானும் என் நோயை மிகுவியா நிற்றலாலே; நெடுங்கண் - என் நெடிய கண்கள் அந் நோயாற்றாமல்; நீர் உகுத்தனவே -துன்பநீரைச் சொரிகின்றனகாண்; துறுமலர் அவிழ் குழலாய் - செறித்த மலர்கள் மலராநின்ற கூந்தலையுடைய தோழியே! மறவையாய் என் உயிர் மேல்வந்த - மறத்தன்மை யுடையதாய் எனதுயிரைப் பருகுதற்குக் குறிக்கொண்டுவந்த; இம்மருள்மாலை - இந்த மருள் தருகின்ற அந்திமாலைப் பொழுது; துறந்தார் நாட்டு உளது ஆங்கொல் - நம்மைத் துறந்துபோனவன்கண்ணர் வதிகின்ற அந்நாட்டினும் உளது ஆகுமோ? உரைத்தி என்க.

(விளக்கம்) 40. இளைய விருள் - இளையிருள் என விகார மெய்தியது. எல்+செய்வான்-பகல் செய்வான்; ஞாயிறு. களைவு களைதல். புலம்பு - தனிமைத் துன்பம். பொழீஇ - பொழிந்து கண் உகுத்தன என்க தணந்தார்: வினையாலணையும் பெயர் தணந்தார் நாட்டினும் உளதாயின் அவர் நம்மை மறந்துறையார். அங்கில்லை போலும் என்றவாறு. பின்வருவனவற்றிற்கும் இஃதொக்கும். எரி - காமத் தீ. மருள் தருகின்ற மாலை.

42. எதிர் மலர் - மலரும் பொழுதை எதிர்கொண்ட மலர் - எதிராகப் பிணைத்த மலருமாம். புரை உவமவுருபு. எவ்வநீர் - துன்பக் கண்ணீர் ஒளி மிகுதி பற்றிப் புதுமதி புரை - முகம் என்றாள். போனார் - பெயர். மதியுமிழ்ந்து கதிர் விழுங்கி வந்த விம்மருண்மாலை எனவரும் அடியினது அழகும் அணியும் நினைந்தின்புறுக. மாலையின் கொடுமை மிக்க ஆற்றல் கூறியவாறு. நிறை நிலா - நிறுத்த நில்லா வாய் என்பது அரும்பதவுரை. துறுமலர் - செறித்த மலர் - செருகிய மலர். மறவையாய் - மறத்தன்மையுடையதாய் உயிர் மேல் வருதல் - உயிரைப் பருக வேண்டும் என்று வருதல். மாலையோ வல்லை மணந்தார் உயிருண்ணும் வேலைநீ வாழி பொழுது என வரும் திருக்குறளும் (1211) ஈண்டு நினைக.

(37) நன்னித்திலத்தின் என்பது முதல் (42) பறவை பாட்டடங்கினவே என்பதீறாக வரும் ஆறு வரிப்பாடலும் மயங்குதிணை நிலைவரி. செந்நெற் பழனத்துக் கழனிதொறும் திரையுலாவும் என வருவது திணைமயக்கமாம்.

சாயல்வரி

43 : கைதை .............. அல்லர்

(இதன்பொருள்:) ஒருவர் கைதை வேலிக் கழிவாய் வந்து எம்பொய்தல் அழித்துப் போனார் - யாரோ ஒருவர் யாம் விளையாட்டயர்ந்த தாழை வேலியையுடைய கடற்கழி மருங்கே தாமே வந்து யாம் மணலாற் கோலிய எமது சிற்றிலைச் சிதைத்துப் போயினர்காண்; பொய்தல் அழித்துப் போனார் - அவர் எமது சிற்றிலை அழித்துப் போனாரேனும்; அவர் நம் மையல் மனம் விட்டு அகல்வார் அல்லர் - அவர்தாம் இன்னும் எம்முடைய மயக்கமுடைய நெஞ்சத்தைவிட்டுப் போனாரல்லர்காண் !  இந் நெஞ்சம் அவரையே இடையறாது நினைகின்றது, என் செய்கோ என்க.

44 : கானல் ........... அல்லர்

(இதன்பொருள்:) ஒருவர் கானல் வேலிக் கழிவாய் வந்து - யாரோ ஒரு ஆடவர் யாம் விளையாடிய கடற்கரைச் சோலையை வேலியாக வுடைய கழியிடத்தே தாமாகவே வந்து; நீ நல்கு என்றே நின்றார் - நங்கையே நீ எனக்கு அருள் தருதி என்று எம்மையிரந்து நின்றார்; நீ நல்கு என்றே நின்றார் அவர் நம் மான் நோக்கம் மறப்பார் அல்லர் - அங்ஙனம் கூறிநின்ற அவர்தாம் நம்முடைய மானநோக்கம் போன்ற நோக்கத்தை மறந்தொழியார் போலும்; அவர் மீண்டும் மீண்டும் வருகுவர்காண்! என்க.

45 : அன்னம் ........... அல்லர்

(இதன்பொருள்:) நென்னல் ஒருவர் (கழிவாய் வந்து ஆங்கு) அன்னம் துணையோடு ஆடக் கண்டு - (யாம் விளையாடும் கழியிடத்தே வந்து) நேற்று ஓராடவர் அன்னச்சேவல் தன்பெடையோடு கூடி விளையாடுதலைக் கண்டு; நோக்கி நின்றார் - அக்காட்சியைக் கூர்ந்து நோக்கி நின்றனர். நென்னல் நோக்கி நின்றார் அவர் நேற்று அங்ஙனம் நோக்கிநின்ற அவ்வாடவர். நம் பொன் ஏர் சுணங்கின் போவாரல்லர் - நம்முடைய பொன்போன்ற நிறமுடைய சுணங்கு நம்மைவிட்டுப் போகாதது போன்று நம்மை விட்டுப் போகார் போல்கின்றார். மீண்டும் மீண்டும் வருவர்காண்; என்க.

(விளக்கம்) இவை மூன்றும் மெலிதாகச் சொல்லிக் குறை நயப்பித்தல்: அஃதாவது - தலைவியைத் தன்னொடு கூட்டுமாறு தோழியைத் தலைவன் இரந்துபின்னிற்க அவனுக்கிரங்கிய தோழி அவன் குறையைத் தலைவிக்கு மென்மொழியாற் கூறி அவளை உடம்படுத்தல் என்றவாறு. மென்மொழியாற் கூறலாவது - தலைவி குறிப்பாலுணர்ந்து கொள்ளுமாறு பிறிதொன்று கூறுவாள் போற் கூறுதல்.

இனி இவை மூன்றும் தோழியும் தலைவியும் தம்முள் உறழ்ந்து கூறியவை எனக் கொண்டு முன்னிரண்டடியில் தோழி தலைவனை இயற்பழிக்கப் பின்னிரண்டடிகளில் அது பொறாத தலைவி இயற்பட மொழிந்தது எனவும் கொள்ளக்கூடும் என்ப. 43 - பொய்தல் அழித்து என்பதற்கு விளையாட்டை மறப்பித்து எனினுமாம். தம்முள் வேற்றுமையின்மையால் தலைவியை உளப்படுத்தி நம் மனம் நம் நோக்கம் நம் சுணங்கு என்றாள்.

43-44-45 - இம்மூன்றுஞ் சாயல் வரி என்ப.

முகமில்வரி

46: அடையல் ......... கானல்

(இதன்பொருள்:) குருகே எங்கானல் அடையல் குருகே எங்கானல் அடையல் - அன்னமே நீ எம்முடைய கடற்கரைச் சோலைக்கு வாராதே கொள்! அன்னமே! ......... வாராதே கொள்! எற்றுக்கெனின்; உடைதிரை நீர்ச் சேர்ப்பற்கு உறுநோய் உரையாய் - நீதான் கரையைக் குத்தி உடைக்கின்ற அலையையுடைய நெய்தற் றலைவனாகிய எம்பெருமான் பாற் சென்று யான் பிரிவாற்றாமையாலெய்துகின்ற மிக்க நோய் நிலையைக் கூறுகின்றிலை; குருகே எங்கானல் அடையல் அடையல் - ஆதலால் இனி எம்முடைய கானலுக்கு வாராதே கொள்! வாராதே கொள்!

(விளக்கம்) இது காமமிக்க கழிபடர் கிளவி. குருகு - நாரையுமாம். அடுக்கு வெறுப்பின்கண் வந்தது.

கட்டுரை

நூலாசிரியர் கூற்று

47 : ஆங்கனம் .................. பெயர்த்தாள்

(இதன்பொருள்:) ஆங்கனம் பாடிய ஆயிழை - அக்கோவலன் பாடினாற் போலக் காவிரியை நோக்கினவும் கடற்கானல் வரிப்பாணியும் பாடிய ஆராய்ந்தணிந்த அணிகலன்களையுடைய அம் மாதவி மடந்தை ; காந்தள் மெல் விரல் கைக்கிளை சேர்குரல் தீம் தொடைச் செவ்வழிப்பாலை இசை எழீஇ - காந்தட்பூப் போன்ற மெல்லிய விரல்களாலே; கைக்கிளை என்னும் இசை குரலாகிய இனிய இசைநிரலையுடைய செவ்வழிப்பாலை என்னும் இசையைப் பிறப்பித்துப் பாங்கினில் பாடி அம்முறைமையினாலே மிடற்றுப் பாடலையும் பாடி; ஓர் பண்ணுப் பெயர்த்தாள் - பின்னரும் மற்றொரு பண்ணைப் பாடினாள் என்க.

(விளக்கம்) ஆங்கனம் பாடிய - அவன் பாடினாற் போன்று ஆற்றுவரி முதலிய வரிப்பாடல்களைப் பாடிய. கைக்கிளைசேர் குரல் தீந்தொடை என்றது - கைக்கிளைக் குரலாகிய அஃதாவது கைக்கிளையை ஆதார சுருதியாகக் கொண்ட இசைநிரல் என்றவாறு. எனவே செவ்வழிப்பாலை கைக்கிளையைக் குரலாகக் கொண்டு பாடப்படும் என்பது பெற்றாம். இக்காலத்தார் இதனைச் சுத்ததோடி என்பர். அந்தர காந்தாரத்தை ஆதார சுருதியாகக் கொள்ளுமிடத்துச் சுத்ததோடி என வழங்கும் செவ்வழிப்பாலை தோற்றும் என்பர் விபுலானந்த அடிகளார். (யாழ் நூல் பண்ணியல் - பக்கம் 159) இசை எழீஇ அப்பாங்கினில் மிடற்றுப் பாடலும் பாடி என்றவாறு. ஓர் பண்ணுப் பெயர்த்தான் - பின்னரும் வேறொரு பண்பாடினான் என்றவாறு.

முகமில்வரி

48 : நுளையர் ........... பாலை

(இதன்பொருள்:) மாலை - மாலைப் பொழுதே நீ; நுளையர் நொடிதரும் விளரித் தீம்பாலை - நுளையர்க்குரித்தாகிய விளரி என்னும் இனிய பாலைப்பண்ணை யாழிலிட்டுப் பாடுங்கால்; இளி கிளையில்- கொள்ள - இளியென்னும் நரம்பினைத் தடவுதற்கு மாறாக மயங்கி அதன் பகை நரம்பாகிய கைக்கிளை என்னும் நரம்பினைத் தடவுமாறு; இறுத்தாயால் - நீ வந்து உலகின்கண் உறைவாயாயினை; நீ இளி கிளையில் கொள்ள இறுத்தாய் மன் - நீ தான் மயங்கி என்கை சென்று இளிக்கு மாறாகக் கைக்கிளையைத் தடவும் படி ஈண்டு வந்து தங்கினையல்லையோ? அஃதெற்றிற்கு என் உயிர் பருகுதற் கன்றோ? கொளை வல்லாய் மாலை - பிரிந்துறைவார் உயிரைக் கொள்ளை கொள்வதில் வல்லமையுடைய மாலையே நீ இனி; என் ஆவி கொள் - என் உயிரைக் கைக்கொள் பின்னர்; வாழி - நீ நீடூழி வாழ்ந்து போதி; என்க.

49 : பிரிந்தார் ........... மாலை

(இதன்பொருள்:) மாலை - மாலையே நீ; பிரிந்தார் பரிந்து உரைத்த பேரருள் நீழல் - தம்மைப் பிரிந்து சென்ற தலைவர் தமக்கிரங்கி வருந்தற்க! இன்ன காலத்தே மீண்டும் நும்பால் வருகுவேம் என்று கூறிப்போந்த பெரிய அருளாகிய நீழலிலே ஒதுங்கி; ஏங்கி இருந்து வாழ்வார் உயிர்ப் புறத்தாய் - அக்காலத்தை நோக்கிய வண்ணம் ஒருவாறு ஏங்கி இருந்து உயிர்வாழ்கின்ற எளிய மகளிருடைய உயிரைப் புறஞ் சூழ்ந்தனை; நீ உயிர்ப்புறத்தாய் ஆகில் - ஈண்டு நீ மகளிருடைய உயிரைப் புறஞ் சூழ்ந்தனையானால்; ஆற்றா உள்வேந்தன் - தன் பகைவனுக்கு ஆற்றாமல் அரணுள்ளே பதுங்கியிருக்கின்ற நொச்சி வேந்தனுடைய, எயிற் புறத்து வேந்தனோடு - மதிலைப் புறஞ்சூழ்ந்து முற்றியிருக்கின்ற வேந்தனாகிய எம்பெருமானுக்கு நீ; என ஆதி - எத்தன்மை யுடையையா யிருக்கின்றாய்? அதனைக் கூறுதி! என்க.

50 : பையுணோய் .............. மாலை

(இதன்பொருள்:) மருள் மாலை - மயக்கந் தருகின்ற மாலைக் காலமே நீதான்; பகல் செய்வான் போய் வீழ பையுள் நோய் கூர - பகற் பொழுதைச் செய்கின்ற ஞாயிற்றுத் தேவன் மேற்றிசையிலே போய்க் கடலில் வீழ்ந்து மறைதலாலே உலகின் கண் தனித்துறைவோருடைய துன்பமிக்க காமநோய் மிகா நிற்பவும்; வையம் கண்புதைப்ப - நீ செய்யும் கொடுமையைக் காணப் பொறாமல் நிலமகள் தன் கண்களைப் புதைத்துக் கொள்ளவும்; வந்தாய் - ஈண்டு வந்தனை; மாலை நீ ஆயின் - மாலையை நீதான் இத்தன்மையுடையையாயின்; அவர் மணந்தார் ஆயின் - அவ்வன்கண்ணர் எம்மை மணந்த காதலராயினக்கால்; ஓ மாலை ஓ மாலையே! ஞாலம் நல்கூர்ந்தது வாழி - இந்த வுலகமானது பெரிதும் நல்குரவுடைத்துக் காண்! என்க.

(விளக்கம்) 48 - நுளையர் பாலை நொடிதரும் விளரிப்பாலை எனத் தனித்தனி இயையும். விளரி - நெய்தற்பண் ஆகலின் நுளையர் பாலை என்றார். நொடிதருதல் - சொல்லல் - ஈண்டுப் பாடுதல். தனித்துறையும் மகளிர் அத்தனியை தீரயாழிசைப்பர். அவ்விசையின்கண்மனம் பற்றாது மயங்குதலின் அவர்கை இளிக்கு மாறாக அதன் பகையாகிய கைக்கிளையைத் தடவும் என்றவாறு. அங்ஙனம் மயங்குமாறு வந்திறுத்தாய் என்க. நின்ற நரம்பிற்கு ஆறாநரம்பு பகை. இளிக்குக் கைக்கிளை ஆறாம் நரம்பாகும். நீ இவ்வாறு இறுத்தற்குக் காரணம் என் உயிரைக் கொள்ளை கொள்வதேயன்றோ. அக்காரியத்தை இப்போதே செய்! என வேண்டிக் கொண்டபடியாம். என்னை? இறந்துழித் துன்பமும் ஒழியுமாதலின் இங்ஙனம் வேண்டினள். கொளை - கொள்ளை.

49 - பிரிந்தார்: தலைவன். உரைத்தது - இன்ன காலத்தே வருகுவம் என்று கூறிய தேற்றுரை. உயிரை முற்றுகையிட்டுள்ளாய் என்பாள் உயிர்ப் புறத்தாய் என்றாள். பிரிந்துறையும் மகளிர் என உலகின் மேல் வைத்துரைத்தாள் பிரிந்துறையும் மகளிர்க்கெல்லாம் இத் துன்பம் உண்மையின். நீயாகில் என்றது தனித்துறையும் மகளிர் உயிரைச் சூழ்கின்ற வன்கண்மையுடைய நீ என்பது படநின்றது. நின்னைப் போலவே வன்கண்மையுடையவன் என் கணவன் என்பான் உள்ளாற்றா வேந்தன் எயிற்புறத்து வேந்தன் என்றாள். கணவன் என்னாது அவனது ஏதின்மை தோன்ற வேந்தன் என்றாள். என்னாதி என்றது. என்ன உறவுடையை என்றவாறு. இருவர் தன்மையும் ஒன்றாயிருத்தலின் நீயிரிருவீரும் உடன் பிறந்தீரோ என்று வினவிய படியாம்.

ஆற்றா உள்வேந்தன் - நொச்சியான். எயிற்புறத்து வேந்தன் உழிஞையான்.

50. வையம் நின் கொடுமைகண் டாற்றாது கண்புதைத்தது என்றவாறு. ஞாலம் தன்கண் வாழும் இத்தகைய மகளிரை ஓம்புதற்குப் பிறிதொன்றும் இல்லாதிருத்தலின் நல்கூர்ந்தது என்றாள்.

அரும்பதவுரையாசிரியர் ஞாலம் நல்கூர்ந்ததென்றாள் தன்னோய் எல்லார்க்கும் ஒக்குமாகத் தனக்குத் தோற்றுதலால் தான்சாக உலகு கவிழும் என்னும் பழமொழிபோல என்பர்.

இவை மூன்றும் மாலைப் பொழுதுகண்டு தலைவி கூறியவை

51 : தீத்துழைஇ................வணங்குதும்

(இதன்பொருள்:) தீ துழைஇ வந்த - நெருப்பினுட் புகுந்து துழாவி அதன் வெம்மையைத் தானேற்றுக்கொண்டு உலகின்கண் வந்த; இச் செல்லல் மருள்மாலை தூக்காது - இத்தகைய துன்பத்தையும் மயக்கத்தையும் செய்கின்ற கொடிய மாலைப் பொழுதும் ஒன்றுண்டென்று ஆராயாமல்; துணிந்த இத்துயர் எஞ்சு கிளவியால் - எம்பெருமானால் துணிந்து கூறப்பட்ட நின்னில் பிரியேன் என்னும் இந்தத் துன்பம் நீங்குதற்குக் காரணமான தேற்றுரையோடு; பூக்கமழ் கானலில் - மலர்மணங் கமழா நின்ற கடற்கரைச் சோலையிடத்தே நின்னைச் சுட்டிக்காட்டிச் செய்த; பொய்ச் சூள பொறுக்க என்று - பொய்சூளின் பொருட்டு (அவரை ஒறுக்காமல்) பொறுத்தருளக என்று வேண்டி; மா கடல் தெய்வம் - பெரிய கடலுக்குத் தெய்வமாகிய வருணனே! நின் மலர் அடி வணங்குதும் - நின்னுடைய மலர் போன்ற திருவடிகளை அடியேம் வணங்குகின்றேங்காண்; என்க.

(விளக்கம்) தீயினுட்புகுந்து குடைந்தாடி அதன் வெம்மை முழுதும் ஏற்றுக் கொண்டு வந்த இம் மருள்மாலை என்க. செல்லல் - துன்பம். இத்தகைய மாலைக்காலம் என்பது ஒன்றுண்டு அதுதான் பிரிந்துறையும் மகளிர் உயிருண்ணும் என்று ஆராயாமல்; தலைவன் கானலில் கூறிய பொய்ச் சூள் என்க. பொய்ச்சூள் பொறுக்க என்றாளேனும் சூள் பொய்த்தமை பொறுக்க என்பது கருத்தாகக் கொள்க.

இயற்கைப் புணர்ச்சிக்குப் பின்னர்ப் பிரிவஞ்சும் தலைவியைத் தேற்றுதற்குத் தலைவன் கடற்றெய்வங் காட்டிக் காட்டி அரிய சூள் செய்தனன், அதனை இப்பொழுது பொய்த்தான், அங்ஙனம் பொய்த் தானேனும் அதன் பொருட்டுத் தெய்வமே அவனை ஒறுத்திடேல்! பொறுத்தருள்க! என்று தலைவி கடற் றெய்வத்தை வேண்டுகின்றனள் என்க.

கடற்றெய்வம் - வருணன். வருணன் மேய பெருமண லுலகம் என்பது தொல்காப்பியம். (அகத்திணையியல் - 5.)

இனி கோவலன் பாடிய திங்கள் மாலை வெண்குடையான் என்பது தொடங்கி தீத்துழைஇ என்னும் மாதவி பாடிய இப்பாட்டீறாக அனைத்தும் முகநிலைவரி முரிவரி முதலிய பல்வேறு உறுப்புக்களையுடைய கொச்சகக்கலி என்னும் இசைத்தமிழாலியன்ற கானல் வரிப் பாடலாகும். கொச்சகக் கலி வெண்பாவானாதல் ஆசிரியத்தானாதல் முடிதல் வேண்டும் என்பது விதி ஆகலின், இக்கோவலன் தொடங்கிய கானல்வரியை மாதவி ஈண்டுக் கடவுள் வாழ்த்தோடு முடித்தனள். இனிக்கட்டுரை இடையிட்டுவந்த பாட்டுடைச் செய்யுளாகிய இக் கொச்சகத்தை அடிகளார் இயற்றமிழின் பாற்படுத்து ஆசிரியத்தான் முடிப்பர்.

இனி யாமறிந்த புலவரிலே கம்பனைப்போல் வள்ளுவர் போல் இளங்கோவைப் போல். பூமிதனில் யாங்கணுமே பிறந்த திலை எனவும், நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரம் என்றோர் மணியாரம் படைத்த தமிழ்நாடு என்றும் கவிஞர் பெருமான் சுப்பிரமணிய பாரதியார் நெஞ்சாரப் புகழ்ந்து போற்றுதல் ஒரு சிறிதும் மிகையன் றென்பதற்கு அடிகளார் ஈண்டுப் பாடிய கானல் வரிப் பாடல்கள் சிறந்த சான்றாக நின்று திகழ்வதனை உணர்வுடையோர் உணர்தல் கூடும்.

கட்டுரை

நூலாசிரியர் கூற்று

52 : எனக்கேட்டு ................ அகவையா னெனவே

(இதன்பொருள் :) எனக்கேட்டு என்று மாமலர் நெடுங்கண் மாதவி பாடி முடித்ததனைக் கேட்டு; யான் கானல் வரி பாட - யான் அவள் மனம் மகிழவேண்டும் என்று கருதி அவள் குறிப்பின் படிக் கானல்வரி என்னும் உருக்களைப் பாடாநிற்ப; மாயத்தாள் தான் ஒன்றின்மேல் மனம் வைத்து - பொய்ம்மையுடைய கணிகை யாதலின் தான் யான் மகிழ்தலைக் குறிக்கொள்ளாளாய்; பிறிதொரு பொருள்மேல் தன் மனத்தை வைத்துத் தான் விரும்பியபடி பாடாநின்றனள்; என - என்று கருதி; தன் ஊழ்வினை யாழ் இசைமேல் வைத்து - தான் முற்பிறப்பிலே செய்த பழவினையாகிய ஊழ்வினை மாதவி பாடிய யாழினது இனிய இசையைத் தலைக்கீடாகக் கொண்டு; உருத்தது ஆதலின் - அவ்விசை யுருவமாக வந்து தன் பயனை நுகர்விக்கத் தொடங்கியதாதலானே; கோவலன் தான் - அதன் வயப்பட்ட அக்கோவலன்றானும்; உவவு உற்ற திங்கள் முகத்தாளை - உவவுநாள் பொருந்திய முழுத்திங்கள் போன்ற முகமுடைய அம்மாதவி நங்கையை; கவவுக்கை ஞெகிழந்தனனாய் - தனது நெஞ்சத்தினூடே கொண்டொழுகும் தனது ஒழுக்கத்தை நெகிழவிட்டவனாகி; ஈங்குப் பொழுது கழிந்தது ஆதலின் எழுதும் என்று உடன் எழாது - இற்றைப் பொழுது போயிற்றாதலால் இனியாம் மனைக்கு எழுந்து - செல்வேம் என்று அளியள அம்மாதவிக்குக் கூறி அவளும் எழத்தான் அவளோடெழாமல் தானமட்டுமே எழுந்து; ஏவலாளர் உடன் சூழ்தர - தனது ஏவலர் தன்னைச் சூழ்ந்துவர அவருடனே; போன பின்னர் - அக் கடற்கானலிடத்தினின்றும் வாய் வாளாது போன பின்னர்; மாதவி கையற்ற நெஞ்சினளாய் தாது அவிழ் மலர்ச்சோலை ஆயத்து ஒலியவித்து - மாதவியானவள் யாதொன்றுஞ் செய்யத் தோன்றாத மம்மர் கொள் நெஞ்சத்தவளாய் ஆங்குப் பூந்துகள் சொரியும் மலர்கள் நிரம்பிய அக்கடற்கரைச் சோலையினிடத்தே ஆரவாரஞ் செய்துநின்ற தன் தோழியர் ஏவன்மகளிர் முதலியோரைக் கை கவித்து அவர்தம் ஆரவாரத்தை அடக்கியவளாய்த் தானும் வாய் வாளாது; வையத்தின் உள்புக்கு - தான் ஊர்ந்துவந்த பண்டியின் அகத்தே புகுந்து; காதலன் உடன் அன்றியே - தனதாருயிர்க் காதலன் தன்னுடன் வரப்பெறாது நல்கூர்ந்து; தன் மனை - தனதில்லத்திற்குச் சென்று; மா இரு ஞாலத்து அரசு தலைவணக்கும் - மிகப் பெரிய இவ்வுலகத்திலுள்ள மன்னரை யெல்லாம் தனக்குத் தலை வணங்கும்படி செய்யும் பேராற்றல் வாய்ந்த; சூழி யானைச் சுடர்வாள் செம்பியன் - முகபடாமணிந்த யானையையும் ஒளி வீசும் கொற்றவாட் படையையும் உடைய தங்கள் மன்னனாகிய சோழன்; ஆழி மால்வரை அகவையா - சக்கரவாளம் என்னும் மலையும் தன்னகத்ததாகும்படி மாலை வெள் குடை கவிப்ப - வாகை மாலையினையுடைய தனது கொற்ற வெண்குடையைக் கவித்து நீடூழி வாழ்வானாக! என - என்று வாழ்த்தி; புக்காள்-புகுந்தனள் என்பதாம்.

அடிகளார் இக் கொச்சகக்கலியை ஆசிரியத்தான் முடித்தனர்.

(விளக்கம்) மாயத்தாளாகலின் தான் ஒன்றின் மேல் வைத்துப் பாடினாள் என்று அவள் மனம் மாறுபட்டாளாகக் கருதிய கோவலன், அவள் கணிகையாதலை நினைவு கூர்ந்து அவட்கிஃதியல்பு என வெறுத்துக் கூறினன். அடிகளார் இஃது அவன் பிழையன்று ஊழின்பிழையே என்றிரங்குவார் ஊழ்வினை வந்துருத்தது ஆகலின் என்று ஏதுவை விதந்தோதினர். மற்று மாதவிதான் அளியள் தான் ஒன்றின் மேல் மனம் வைத்தாள் போலத் தனதிசையாலே காட்டினள் அன்றி அவள் நெஞ்சம் சிறிதும் மாறுபட்டாளில்லை என அறிவுறுத்துவார் அவளை உவவு உற்ற திங்கள் முகத்தாள் என்று விதந்தெடுத்தோதுமாற்றால் காதலின் நிறைவைக் காட்டினர். மற்று அடிகளார் ஊழ்வினை உருத்துவந்தூட்டும் என்பதைக் கோவலன் மேல் வைத்துக் காட்டும் கருத்தினால் மாதவி குற்றமற்ற கோவலன் வரிப் பாடலில் அவனுக்கேலாத மறுவொன்று கண்டமைக்குக் காரணம் அவளுக்கும் ஊழ்வினை வந்துருத்ததே ஆகும் என யாம் ஊகித்துக் கோடல் அடிகளார் திருவுளத்திற்கும் ஒக்கும் என்க.

இனி இக்கானல் வரியை :

மாதவி குற்ற நீங்கிய யாழ் கையில் வாங்கி, எண்வகையால் இசை எழீஇத் தீர்ந்து, ஓர்த்துக் கோவலன் கைநீட்ட அவனும் நோக்கினவும் பாணியும் வாசித்தல் தொடங்கும், ஆங்குப் பாடல் கேட்ட மாதவியும் இவன் தன்னிலை மயங்கினான் என வாங்கி, கானல்வரிப் பாடற்பாணி வியப்பெய்த மகிழப் பாடத் தொடங்கும். (தொடங்கியவள்) வணங்குதும் எனக் கேட்டு மாயத்தாள் ஒன்றின் மேல் மனம் வைத்துப் பாடினாள் என உருத்ததாகலின் உடனெழாது கோவலன் போன பின்னர் ஆயத்து ஒலியவித்துப் புக்கு மாதவி தன்மனை வணக்கும் செம்பியன் கவிப்ப என வாழ்த்திப் புக்காள் என்று வினை முடிவு செய்க.

கானல் வரி முற்றிற்று.

 
மேலும் சிலப்பதிகாரம் »
temple

தமிழில் முதலில் தோன்றிய காப்பியம் சிலப்பதிகாரம் ஆகும். சிலப்பதிகாரத்தை இயற்றியவர் சேரன் ... மேலும்

 
temple

1. மங்கல வாழ்த்துப் பாடல்

(சிந்தியல் வெண்பாக்கள்)

திங்களைப் போற்றுதும் திங்களைப் ... மேலும்

 

(நிலைமண்டில ஆசிரியப்பா)

உரைசால் சிறப்பின் அரைசுவிழை திருவின்
பரதர் மலிந்த பயம்கெழு ... மேலும்

 

(நிலைமண்டில ஆசிரியப்பா)

அஃதாவது - கண்ணகியும் கோவலனும் இல்லறம் நிகழ்த்தி வருங்காலத்தே புகார் ... மேலும்

 

(நிலைமண்டில ஆசிரியப்பா)

அஃதாவது - கோவலன் மாமலர் நெடுங்கண் மாதவிக்கு அவள் பரிசிலாகப் பெற்ற மாலைக்கு ... மேலும்

 

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2019 www.dinamalar.com. All rights reserved.