பதிவு செய்த நாள்
22
ஆக
2018
11:08
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் ஆவணி மூல திருவிழாவின் முக்கிய நிகழ்வான சுந்தரேஸ்வரர் பட்டாபிஷேகம் நேற்றிரவு (ஆகஸ்ட் 21)ல் நடந்தது.
வளையல் விற்ற திருவிளையாடலை முன்னிட்டு அம்மன், சுவாமி தங்கப்பல்லக்கில் மாலை 4:00 மணிக்கு புறப்பாடாகி மேலமாசி வீதி, மேலக் கோபுர தெரு, தானப்ப முதலியார் அக்ர ஹாரம், வடக்கு ஆவணி மூல வீதியில் எழுந்தருளினர். சுந்தரேஸ்வரர் பட்டாபிஷேகத்தை முன்னிட்டு சுவாமி சன்னதி ஆறுகால் பீடம் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. காப்பு கட்டிய சந்திரசேகர பட்டர் பூஜைகளை செய்வித்தார்.
சுவாமி கோயிலுக்குள் வந்தவுடன் சுந்தரேஸ்வரருக்கு இரவு 7:40 மணிக்கு பட்டாபிஷேகம் கோலாகலமாக நடந்தது.சர்வ தீபாராதனைகள் காண்பிக்கப்பட்டன. ரத்தினக்கற்களால் ஆன
செங்கோல் சுந்தரேஸ்வரர் சுவாமியிடம் சிவாச்சாரியார்கள் வழங்கினர்.
பின், சுவாமியிடம் இருந்து செங்கோல் பெற்று தக்கார் கருமுத்து கண்ணனிடம் வழங்கினர். அவர் செங்கோலை பெற்று சகல விருதுகளுடன் சுவாமி சன்னதி இரண்டாம் பிரகாரம் வலம் வந்து சுந்தரேஸ்வரர் திருக்கரத்தில் சேர்ப்பித்தார். சர்வ தீபாராதனைகள் முடிந்து
பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
நாளை (ஆகஸ்ட் 23ல்) பிட்டு திருவிழா:
பிட்டு உற்ஸவ வகையறா கட்டளை சார்பில் பிட்டு சொக்காநாதர் கோயிலில் நாளை (ஆக்., 23ல்) காலை 6:00 மணிக்கு மங்கள இசையுடன் பிட்டு திருவிழா துவங்குகிறது. காலை 6:30 மணிக்கு மாரியப்பன் செட்டியார் நினைவிடத்தில் பூஜை, காலை 10:00 மணிக்கு பிட்டு சொக்கநாதர் கோயிலில் பிரதோஷ கூட்டு வழிபாட்டு குழுவினரின் பஜனை, மதியம் 1:05 மணிக்கு பிட்டுக்கு மண் சுமந்து பிரம்படி பட்ட உற்ஸவம் மற்றும் மண் சாற்றுதல் நிகழ்ச்சி நடக்கிறது.
மாலை 3:00 மணிக்கு ரிஷப வாகனத்தில் மீனாட்சி சுந்தரேஸ்வரர், வந்தியம்மை பூப்பல்லக் குடன் புறப்பாடு, மாலை 5:00 மணிக்கு முருகபூபதி குழுவின் பக்தி பாடல் நிகழ்ச்சி நடக்கிறது. ஏற்பாடுகளை தக்கார், மண்டல இணை கமிஷனர் பச்சையப்பன், இணை கமிஷனர் நடராஜன் செய்துள்ளனர்.