Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
28. நடுகற் காதை 30. வரம் தரு காதை
முதல் பக்கம் » சிலப்பதிகாரம்
29. வாழ்த்துக் காதை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

31 ஜன
2012
05:01

உரைப் பாட்டு மடை

அஃதாவது-இதன்கண் சேரன் செங்குட்டுவன் கண்ணகித் தெய்வத்திற்குக் கடவுள் மங்கலம் செய்த பின்னர், முன்னரே மாடல மறையோன் வாயிலாகக் கோவலனுக்கும் கண்ணகிக்கும் நிகழ்ந்த துயரச் செய்திகளை அறிந்தவருள் துன்பம் பொறாமல் இறந்தொழிந்ததோரொழிய எஞ்சிய கண்ணகியின் செவிலியும் தோழியாகிய தேவந்தியும் புகார் நகரத்தினின்றும் புறப்பட்டு மதுரைக்கு வந்து அங்கு மாதரியின் மகளாகிய ஐயையைக் கண்டு அவளோடும் மதுரையினின்றும் புறப்பட்டு வையைக் கரையின் வழியே மலை நாட்டை அடைதலும், அங்குக் கண்ணகிக்குத் திருக்கோயிலெடுத்துக் கடவுட் படிமம் வைத்துக் கடவுள் மங்கலம் நிகழ்வித்து விழாக் கண்டிருந்த செங்குட்டுவனுக்குத் தேவந்தி முதலியோர் தம்மை அறிவித்துக் கண்ணகியை நினைந்து அரற்றுதலும் தேவந்தி கண்ணகித் தெய்வத்திற்கு ஐயையைக் காட்டி அரற்றியவுடன் அங்கிருந்த செங்குட்டுவன் காணும்படி கண்ணகித் தெய்வம் மின்னல் போன்று விண்ணின்கண் தனது கடவுள் நல் அணி காட்டியதும், அக் காட்சியைக் கண்டு செங்குட்டுவன் பெரிதும் வியத்தலும், வஞ்சி மகளிர் கண்ணகித் தெய்வத்தைப் பாடுதலும், தமிழ்நாட்டு மூவேந்தரையும் வாழ்த்துதலும், கண்ணகித் தெய்வம் செங்குட்டுவனை வாழ்த்துதலும் கூறப்படும். இவ்வாற்றால் இக் காதை இப் பெயர்பெற்றது.

குமரியொடு வட இமயத்து ஒருமொழி வைத்து உலகு ஆண்ட
சேரலாதற்குத் திகழ் ஒளி ஞாயிற்றுச் சோழன் மகள் ஈன்ற மைந்தன்,
கொங்கர் செங் களம் வேட்டு, கங்கைப் பேர் யாற்றுக் கரை போகிய
செங்குட்டுவன், சினம் செருக்கி வஞ்சியுள் வந்து இருந்த காலை;
வட ஆரிய மன்னர், ஆங்கு ஓர் மடவரலை மாலை சூட்டி
உடன் உறைந்த இருக்கை தன்னில், ஒன்று மொழி நகையினராய்,
தென் தமிழ் நாடு ஆளும் வேந்தர் செரு வேட்டு, புகன்று எழுந்து,
மின் தவழும் இமய நெற்றியில் விளங்கு வில், புலி, கயல், பொறித்த நாள்,
எம் போலும் முடி மன்னர் ஈங்கு இல்லை போலும் என்ற வார்த்தை,
அங்கு வாழும் மாதவர் வந்து அறிவுறுத்த இடத்து ஆங்கண்,
உருள்கின்ற மணி வட்டைக் குணில் கொண்டு துரந்ததுபோல்,
இமய மால் வரைக் கல் கடவுள் ஆம் என்ற வார்த்தை இடம் துரப்ப;
ஆரிய நாட்டு அரசு ஓட்டி, அவர் முடித்தலை அணங்கு ஆகிய
பேர் இமயக் கல் சுமத்தி, பெயர்ந்து போந்து; நயந்த கொள்கையின்,
கங்கைப் பேர் யாற்று இருந்து, நங்கை-தன்னை நீர்ப்படுத்தி,
வெஞ்சினம் தரு வெம்மை நீங்கி; வஞ்சி மா நகர் புகுந்து;
நில அரசர் நீள் முடியால் பலர் தொழு படிமம் காட்டி,
தட முலைப் பூசல் ஆட்டியைக் கடவுள் மங்கலம் செய்த பின்னாள்-
கண்ணகி-தன் கோட்டத்து மண்ணரசர் திறை கேட்புழி-
அலம்வந்த மதி முகத்தில் சில செங் கயல் நீர் உமிழ,
பொடி ஆடிய கரு முகில் தன் புறம் புதைப்ப, அறம் பழித்து;
கோவலன், தன் வினை உருத்து, குறுமகனால் கொலையுண்ண;
காவலன்-தன் இடம் சென்ற கண்ணகி-தன் கண்ணீர் கண்டு,
மண்ணரசர் பெரும் தோன்றல் உள் நீர் அற்று, உயிர் இழந்தமை
மா மறையோன் வாய்க் கேட்டு; மாசாத்துவான் தான் துறப்பவும்,
மனைக்கிழத்தி உயிர் இழப்பவும், எனைப் பெரும் துன்பம் எய்தி,
காவற்பெண்டும், அடித் தோழியும்,
கடவுள் சாத்தனுடன் உறைந்த தேவந்தியும் உடன் கூடி
சேயிழையைக் காண்டும் என்று, மதுரை மா நகர் புகுந்து;
முதிரா முலைப் பூசல் கேட்டு, ஆங்கு, அடைக்கலம் இழந்து, உயிர் இழந்த
இடைக்குல மகள் இடம் எய்தி; ஐயை அவள் மகளோடும்
வையை ஒருவழிக்கொண்டு; மா மலை மீமிசை ஏறி,
கோமகள்-தன் கோயில் புக்கு; நங்கைக்குச் சிறப்பு அயர்ந்த செங்குட்டுவன் திறமுரைப்பர் மன்; 1

முடி மன்னர் மூவரும் காத்து ஓம்பும் தெய்வ
வட பேர் இமய மலையில் பிறந்து,
கடு வரல் கங்கைப் புனல் ஆடிப் போந்த
தொடி வளைத் தோளிக்குத் தோழி நான் கண்டீர்,
சோணாட்டார் பாவைக்குத் தோழி நான் கண்டீர்.  2

மடம் படு சாயலாள் மாதவி-தன்னைக்
கடம்படாள், காதல் கணவன் கைப் பற்றி,
குடம் புகாக் கூவல் கொடுங் கானம் போந்த
தடம் பெரும் கண்ணிக்குத் தாயர் நான் கண்டீர்,
தண் புகார்ப் பாவைக்குத் தாயர் நான் கண்டீர்.  3

தற்பயந்தாட்கு இல்லை; தன்னைப் புறங்காத்த
எற்பயந்தாட்கும் எனக்கும் ஓர் சொல் இல்லை;
கற்புக் கடம் பூண்டு, காதலன் பின் போந்த
பொற்றொடி நங்கைக்குத் தோழி நான் கண்டீர்;
பூம் புகார்ப் பாவைக்குத் தோழி நான் கண்டீர்.  4

செய் தவம் இல்லாதேன் தீக் கனாக் கேட்ட நாள்,
எய்த உணராது இருந்தேன், மற்று என் செய்தேன்?
மொய் குழல் மங்கை முலைப் பூசல் கேட்ட நாள்,
அவ்வை உயிர் வீவும் கேட்டாயோ, தோழீ?
அம்மாமி-தன் வீவும் கேட்டாயோ, தோழீ? 5

கோவலன்-தன்னைக் குறுமகன் கோள் இழைப்ப,
காவலன் தன் உயிர் நீத்தது-தான் கேட்டு, ஏங்கி,
சாவது-தான் வாழ்வு என்று, தானம் பல செய்து,
மாசாத்துவான் துறவும் கேட்டாயோ, அன்னை?
மாநாய்கன் தன் துறவும் கேட்டாயோ, அன்னை?  6

காதலன் தன்-வீவும், காதலி நீ பட்டதூஉம்,
ஏதிலார் தாம் கூறும் ஏச்சு உரையும் கேட்டு, ஏங்கி,
போதியின் கீழ் மாதவர்முன் புண்ணிய தானம் புரிந்த
மாதவி-தன் துறவும் கேட்டாயோ, தோழீ?
மணிமேகலை துறவும் கேட்டாயோ, தோழீ? 7

ஐயம் தீர் காட்சி அடைக்கலம் காத்து ஓம்ப
வல்லாதேன் பெற்றேன் மயல் என்று உயிர் நீத்த
அவ்வை மகள் இவள்-தான், அம் மணம் பட்டிலா,
வை எயிற்று ஐயையைக் கண்டாயோ, தோழீ?
மாமி மட மகளைக் கண்டாயோ, தோழீ?  8

என்னே! இஃது என்னே! இஃது என்னே! இஃது என்னே கொல்!
பொன் அம் சிலம்பின், புனை மேகலை, வளைக் கை,
நல் வயிரப் பொன் தோட்டு, நாவல் அம் பொன் இழை சேர்,
மின்னுக் கொடி ஒன்று மீவிசும்பில் தோன்றுமால்!  9

தென்னவன் தீது இலன்; தேவர் கோன்-தன் கோயில்
நல் விருந்து ஆயினான்; நான் அவன்-தன் மகள்
வென் வேலான் குன்றில் விளையாட்டு யான் அகலேன்;
என்னோடும், தோழிமீர்! எல்லீரும், வம், எல்லாம். 10

வஞ்சியீர், வஞ்சி இடையீர், மற வேலான்
பஞ்சு அடி ஆயத்தீர்! எல்லீரும், வம், எல்லாம்;
கொங்கையால் கூடல் பதி சிதைத்து, கோவேந்தைச்
செஞ் சிலம்பால் வென்றாளைப் பாடுதும்; வம், எல்லாம்.
தென்னவன் தன் மகளைப் பாடுதும் வம், எல்லாம்
செங்கோல் வளைய, உயிர் வாழார் பாண்டியர் என்று
எம் கோ முறை நா இயம்ப, இந் நாடு அடைந்த
பைந் தொடிப் பாவையைப் பாடுதும்; வம், எல்லாம்;
பாண்டியன்-தன் மகளைப் பாடுதும்; வம், எல்லாம்.  11

வானவன், எம் கோ, மகள் என்றாம்; வையையார்
கோன்-அவன்-தான் பெற்ற கொடி என்றாள்; வானவனை
வாழ்த்துவோம் நாமாக, வையையார் கோமானை
வாழ்த்துவாள் தேவ மகள்.   12

தொல்லை வினையான் துயர் உழந்தாள் கண்ணின் நீர்
கொல்ல, உயிர் கொடுத்த கோவேந்தன் வாழியரோ!
வாழியரோ, வாழி, வரு புனல் நீர் வையை
சூழும் மதுரையார் கோமான்-தன் தொல் குலமே!  13

மலையரையன் பெற்ற மடப் பாவை-தன்னை
நில அரசர் நீள் முடிமேல் ஏற்றினான் வாழியரோ!
வாழியரோ, வாழி, வரு புனல் நீர் ஆன்பொருநை
சூழ்தரும் வஞ்சியார் கோமான்-தன் தொல் குலமே!  14

எல்லா! நாம்-
காவிரி நாடனைப் பாடுதும்; பாடுதும்,
பூ விரி கூந்தல்! புகார்.   15

வீங்குநீர் வேலி உலகு ஆண்டு, விண்ணவர் கோன்
ஓங்கு அரணம் காத்த உரவோன் யார், அம்மானை?
ஓங்கு அரணம் காத்த உரவோன் உயர் விசும்பில்
தூங்கு எயில் மூன்று எறிந்த சோழன்காண், அம்மானை;
சோழன் புகார் நகரம் பாடேலோர், அம்மானை.  16

புறவு நிறை புக்கு, பொன்னுலகம் ஏத்த,
குறைவு இல் உடம்பு அரிந்த கொற்றவன் யார், அம்மானை?
குறைவு இல் உடம்பு அரிந்த கொற்றவன் முன் வந்த
கறவை முறை செய்த காவலன் காண், அம்மானை;
காவலன் பூம் புகார் பாடேலோர், அம்மானை.  17

கடவரைகள் ஓர் எட்டும் கண் இமையா காண,
வடவரைமேல் வாள் வேங்கை ஒற்றினன் யார், அம்மானை?
வடவரைமேல் வாள் வேங்கை ஒற்றினன் திக்கு எட்டும்
குடை நிழலில் கொண்டு அளித்த கொற்றவன்காண், அம்மானை
கொற்றவன் பூம் புகார் பாடேலோர், அம்மானை.  18

அம்மனை தம் கையில் கொண்டு, அங்கு அணி இழையார
தம் மனையில் பாடும் தகையேலோர், அம்மானை;
தம் மனையில் பாடும் தகை எலாம் தார் வேந்தன்
கொம்மை வரி முலைமேல் கூடவே, அம்மானை;
கொம்மை வரி முலைமேல் கூடின், குல வேந்தன்
அம் மென் புகார் நகரம் பாடேலோர், அம்மானை  19

பொன் இலங்கு பூங்கொடி! பொலம் செய் கோதை வில்லிட,
மின் இலங்கு மேகலைகள் ஆர்ப்ப ஆர்ப்ப, எங்கணும்,
தென்னவன் வாழ்க, வாழ்க! என்று சென்று பந்து அடித்துமே;
தேவர் ஆர மார்பன் வாழ்க! என்று, பந்து அடித்துமே. 20

பின்னும் முன்னும், எங்கணும், பெயர்ந்து; உவந்து, எழுந்து, உலாய்;
மின்னு மின் இளங் கொடி வியல் நிலத்து இழிந்தென,
தென்னவன் வாழ்க, வாழ்க! என்று சென்று, பந்து அடித்துமே;
தேவர் ஆர மார்பன் வாழ்க! என்று பந்து அடித்துமே.  21

துன்னி வந்து கைத்தலத்து இருந்ததில்லை; நீள் நிலம்-
தன்னில்-நின்றும் அந்தரத்து எழுந்ததில்லை-தான் என,
தென்னவன் வாழ்க, வாழ்க! என்று சென்று, பந்து அடித்துமே;
தேவர் ஆர மார்பன் வாழ்க! என்று, பந்து அடித்துமே. 22

வடம் கொள் மணி ஊசல் மேல் இரீஇ, ஐயை
உடங்கு ஒருவர் கைநிமிர்த்து-ஆங்கு, ஒற்றை மேல் ஊக்க,
கடம்பு முதல் தடிந்த காவலனைப் பாடி
குடங்கை நெடுங் கண் பிறழ, ஆடாமோ ஊசல்;
கொடு வில் பொறி பாடி, ஆடாமோ ஊசல்.  23

ஓர் ஐவர் ஈர்-ஐம்பதின்மர் உடன்று எழுந்த
போரில், பெருஞ்சோறு போற்றாது தான் அளித்த
சேரன், பொறையன், மலையன், திறம் பாடி,
கார் செய் குழல் ஆட, ஆடாமோ ஊசல்;
கடம்பு எறிந்த வா பாடி, ஆடாமோ ஊசல். 24

வன் சொல் யவனர் வள நாடு, வன் பெருங்கல்,
தென் குமரி, ஆண்ட; செரு வில், கயல், புலியான்
மன்பதை காக்கும் கோமான், மன்னன், திறம் பாடி;
மின் செய் இடை நுடங்க, ஆடாமோ ஊசல்;
விறல் வில் பொறி பாடி, ஆடாமோ ஊசல்.  25

தீங் கரும்பு நல் உலக்கை ஆக, செழு முத்தம்
பூங் காஞ்சி நீழல், அவைப்பார் புகார் மகளிர்;
ஆழிக் கொடித் திண் தேர்ச் செம்பியன் வம்பு அலர் தார்ப்
பாழித் தட வரைத் தோள் பாடலே பாடல்;
பாவைமார் ஆர் இரக்கும் பாடலே பாடல்.  26

பாடல்சால் முத்தம் பவழ உலக்கையால்
மாட மதுரை மகளிர் குறுவரே;
வானவர் கோன் ஆரம் வயங்கிய தோள் பஞ்சவன்-தன்
மீனக் கொடி பாடும் பாடலே பாடல்;
வேப்பந்தார் நெஞ்சு உணக்கும் பாடலே பாடல்  27

சந்து உரல் பெய்து, தகைசால் அணி முத்தம்,
வஞ்சி மகளிர் குறுவரே, வான் கோட்டால்
கடந்து அடு தார்ச் சேரன் கடம்பு எறிந்த வார்த்தை
படர்ந்த நிலம் போர்த்த பாடலே பாடல்
பனந்தோடு உளம் கவரும் பாடலே பாடல்  28

ஆங்கு, நீள் நில மன்னர், நெடு வில் பொறையன் நல்
தாள் தொழார், வாழ்த்தல் தமக்கு அரிது; சூழ் ஒளிய
எம் கோமடந்தையும் ஏத்தினாள், நீடூழி,
செங்குட்டுவன் வாழ்க! என்று.   29

உரை

உரைப் பாட்டு மடை

1: குமரியொடு...........திறமுரைப்பர் மன்

(இதன் பொருள்) குமரியொடு வட இமயத்து ஒருமொழி வைத்து உலகு ஆண்ட சேரலாதற்குத் திகழ் ஒளி ஞாயிற்றுச் சோழன் மகள் ஈன்ற மைந்தன் கொங்கர் செங்களம் வேட்டுக் கங்கைப் பேர்யாற்றுக் கரை போகிய செங்குட்டுவன் சினம் செருக்கி வஞ்சியுள் வந்திருந்த காலை-தமிழ்நாட்டுத் தென் திசைக்கு எல்லையாகிய தென்குமரி தொடங்கி நாவலம் தண்பொழிலுக்கு வடக்கு எல்லையாய் அமைந்த இமைய மலைகாறும் தனது ஆணையாகிய ஒரு மொழியையே வைத்து உலகினை ஆட்சி செய்த சேரலாதன் என்னும் சேர மன்னனுக்குரிய தேவியருள் விளங்குகின்ற ஒளியை உடைய ஞாயிற்றின் மரபில் தோன்றிய சோழ மன்னனுடைய மகளாகிய கோப்பெருந்தேவி செஞ்சடை வானவன் திருவருளாலே ஈன்றருளிய மைந்தன் கொங்கரொடு குருதியாற் சிவந்த களத்தின்கண் பகைவரை நூழிலாட்டி மறக்கள வேள்வி செய்து வாகை சூடிக் கங்கை என்னும் பேரியாற்றின் தென்கரை வரையில் சென்ற செங்குட்டுவன், எஞ்சிய பகைவர்பாலும் தனது சினத்தை மிகுத்தவனாய் மீண்டும் தனது வஞ்சி நகரத்தினுள் வந்திருந்த காலத்தே; வட ஆரிய மன்னர் ஆங்கு ஓர் மடவரலை மாலை சூட்டி உடன் உறைந்த இருக்கை தன்னில்-வட நாட்டின்கண் ஆட்சி செய்கின்ற அரசர்கள் அவ் வடநாட்டின்கண் ஓர் அரசன் மகளுக்கு மாலை சூட்டும் மண விழாவின் பொருட்டு ஒரு திருமண மன்றத்தின்கண் எல்லோருள் ஒருங்கு குழுமியிருந்த அக் கூட்டத்தின்கண்; ஒன்று மொழி நகையினராய் தென் தமிழ்நாடு ஆளும் வேந்தர் செருவேட்டு புகன்று எழுந்து மின் தவழும் இமய நெற்றியில் விளங்குவில் புலி கயல் பொறிந்த நாள் எம்போலும் முடிமன்னர் ஈங்கு இல்லைபோலும் என்ற வார்த்தை-ஒரு கருத்தையே எல்லோரும் ஒத்துக்கொண்டு பேசுகின்ற பேச்சினையும் அப் பேச்சின்கண் தோன்றும் நகைப்பினையும் உடையராய்த் தமக்குள்ளே சொல்லாடிக்கொண்டிருப்பவர்-இந் நாவலம் தீவின் தென்திசைக் கண்ணதாகிய தமிழ்நாட்டை ஆளுகின்ற சேர சோழ பாண்டிய மன்னர்கள் போர்த் தொழிலைப் பெரிதும் விரும்பிப் படையொடு வந்து மின்னல் தவழ்தற்கிடனான நமது இமய மலையினது நெற்றியின்கண் இற்றை நாளும் விளங்கும்படி தமது வெற்றிக்கு அறிகுறியான தமதிலச்சினைகளாகிய வில்லையும் புலியையும் கயல்மீனையும் தனித்தனியே பொறித்து வைத்துப்போன அந்தக் காலத்திலே நம்மைப் போன்ற பேரரசர்கள் இவ் வடநாட்டின்கண் இல்லைபோலும், என்று கூறி நகைத்த மொழியை; அங்கு வாழும் மாதவர் வந்து அறிவுறுத்தவிடத்து ஆங்கண்-அம் மணவிழாவிலே அவ்வரசர்கள் கூறிய அம் மொழியை அவ் வடநாட்டின்கண் வாழ்கின்ற முனிவர்கள் வந்து செங்குட்டுவனுக்கு அறிவுறுத்திய பொழுதாகிய அச் செவ்வியிலேயே;

உருள்கின்ற மணிவட்டைக் குணில் கொண்டு துரந்ததுபோல் இமயமால்வரைக் கல் கடவுள் ஆம் என்ற வார்த்தை இடம் துரப்ப-தானே உருளும் இயல்புடைய மணியாலியன்ற வட்டினைக் குறுந்தடினைக் கைக்கொண்டு தாக்கிச் செலுத்துவதுபோலே கண்ணகித் தெய்வத்திற்கு இமயம் என்னும் பெரிய மலையின்கண் அமைந்த கல்லே கடவுள் படிமம் சமைத்தற்குத் தகுதியாகும் என்று தன் அவைக்களத்து நூலறி புலவர் கூறிய மொழி அவ்விடத்தினின்றும் தன்னைச் செலுத்துதலாலே; ஆரியநாட்டு அரசு ஓட்டி அவர் முடித்தலை அணங்கு ஆகிய பேர் இமயக்கல் சுமத்திப் பெயர்ந்து போந்து-படையெடுத்துச் சென்று அவ் வடவாரிய நாட்டு அரசராகிய கனகவிசயரும் உத்திரனும் முதலிய அரசர்களைப் போர்க்களத்தின்கண் புறங்கொடுத் தோடச்செய்து அவருள் கனகவிசயர் என்னம் அரசருடைய முடிக்கலன் அணிதற்குரிய தலையின்கண் கடவுள் படிமமாதற் பொருட்டுக் கைக்கொண்ட பெரிய அவ்விமய மலையினது கல்லைச் சுமத்தி மீண்டு வந்து; நயந்த கொள்கையின் கங்கைப் பேர்யாற்று இருந்து நங்கை தன்னை நீர்ப்படுத்தி வெம்சினம் தரும் வெம்மை நீங்கி வஞ்சிமாநகர் புகுந்து நீள் முடியால் நில அரசர் பலர் தொழும் படிமம் காட்டி தடமுலைப் பூசலாட்டியைக் கடவுள் மங்கலம் செய்த பின்நாள்-தான் விருபியம் கோட்பாட்டிற் கிணங்கச் கங்கை யென்னும் அப் பேரியாற்றின் கரையின்கண் இருந்து பத்தினித் தெய்வத்திற்குரிய அக்கல்லினை நீர்ப்படை செய்து பண்டு அவ் வடவாரிய மன்னர்பால் எழுந்த வெவ்விய வெகுளி உண்டாக்கிய வெப்பம் தணியப்பெற்று அங்கிருந்து புறப்பட்டுத் தனது வஞ்சிமாநகரத்தின்கண் புகுந்து தமது நீண்ட முடியைத் தாழ்த்தி நிலத்தை ஆளுகின்ற அரசரும் பிறருமாகிய பலராலும் தொழுதற்குரிய கடவுட் படிமமும் சமைத்து அப் படிமத்தின்கண் பெரிய முலையினால் பூசல் விளைத்த கண்ணகித் தெய்வத்தை மறைமொழியினால் கடவுள் மங்கலமும் செய்தருளிய நாளின் வழி நாளின் கண்;

கண்ணகி திருக்கோயிலின் பந்தரிடத்திருந்து அச் செங்குட்டுவன் நிலத்தை ஆளும் அரசர்கள் தனக்கு அளித்த திறைப் பொருள் பற்றி அக் கோத் தொழிலாளரிடத்து வினவி இருந்த பொழுது; கோவலன் தன் வினை உருத்துக் குறு மகனால் கொலை உண்ண-கோவலனுடைய பழவினை உருத்து வந்து ஊட்டியது காரணமாகப் பொய்த் தொழிற் கொல்லனாகிய ஒரு சிறுமையுடையோனால் கொலையுண் டிறந்துபட்டமையாலே; அலம் வந்த மதிமுகத்தில் சில செங்கயல் நீர் உமிழப் பொடியாடிய கருமுகில் தன் புறம் புதைப்ப அறம் பழித்து காவலன் தன் இடம் சென்ற கண்ணகி தன் கண்ணீர் கண்டு-சிலம்பு மாறச் சென்ற கணவன் வந்திலாமையால் சுழற்சியுற்ற திங்களை ஒத்த தனது முகத்தின் கண் அமைந்த சில சிவந்த கயன்மீன்கள் போன்ற கண்கள் நீர் உமிழா நிற்பவும்  புழுதி படிந்த கரிய முகில் போன்ற தன் கூந்தல் சரிந்து முதுகை மறைப்பவும் அரசனுடைய செங்கோல் அறத்தைப் பழித்துக்கொண்டு அவ்வரசனாகிய பாண்டியன் அறத்தை பழித்துக்கொண்டு அவ்வரசனாகிய பாண்டியன் நெடுஞ்செழியன் அவைக்களத்து ஏறி முறை கேட்பச் சென்ற கண்ணகியினது கண்ணீரைக் கண்டபொழுதே; மண் அரசர் பெருந்தோன்றல் உள்நீர் அற்று உயிர் இழந்தமை மாமறையோன் வாய் கேட்டு-நிலத்தை ஆளுகின்ற அரசர் குடியினுள் வைத்துச் சிறந்த குடியில் தோன்றியவனாகிய நெடுஞ்செழியன் தனது நெஞ்சத்தின்கண் அறப்பண்பு அற்றொழிந்தமையின் உயிர் துறந்தமை முதலிய மதுரையில் நிகழ்ந்த இந் நிகழ்ச்சிகளை யெல்லாம் சிறந்த அந்தணனாகிய மாடலன் வாயிலாகக் கேட்டு; மாசாத்துவான் தான் துறப்பவும் மனைக்கிழத்தி உயிரிழப்பவும் எனைப் பெரும் துன்பம் எய்தி-கோவலன் தந்தையாகிய மாசாத்துவான் துறவறத்தை மேற்கொள்ளவும் தாயாகிய பெருமானைக் கிழத்தி உயிர் துறப்பவும் என்று இன்னோரன்ன பெருந்துன்பங்களை ஒன்றன்மேல் ஒன்றாக எய்தி; காவல் பெண்டும் அடித் தோழியும் கடவுள் சாத்தனுடன் உறைந்த தேவந்தியும் உடன் கூடிச் சேயிழையைக் காண்டும் என்று-புகார் நகரத்திலிருந்த கண்ணகி நல்லாளின் செவிலித்தாயும் கண்ணகியின் உசாஅத் துணைத் தோழியும் அவளுடைய பார்ப்பனத் தோழியாகிய கடவுளாகிய சாத்தனோடு வதிந்த தேவந்தியும் ஒருங்கு கூடி நம் சேயிழையாகிய கண்ணகி என்னாயினள் என யாம் அங்குச் சென்று காண்பே மென்றுட் கொண்டு;மதுரை மாநகர் புகுந்து முதிரா முலைப் பூசல் கேட்டு-மதுரை மாநகரத்திற்குச் சென்று அங்குக் கண்ணகி தனது இளமுலையைத் திருகி எறிந்து விளைத்த பூசலைக் கேள்வியுற்று; ஆங்கு அடைக்கலம் இழந்து உயிர் இழந்த இடைக்குல மகளிடம் எய்தி-அந் நகரின் புறஞ் சேரியின்கண் தான் பெற்ற அடைக்கலப் பொருளாகிய கண்ணகியை இழந்தமையாலே தனதுயிரைத் தீயினுள் புகுந்து போக்கிய இடைக்குலத்தில் பிறந்த முதுமகளாகிய மாதிரியின் இருப்பிடத்தை அடைந்து; அவள் மகள் ஐயை யோடும் வையை ஒரு வழிக் கொண்டு மாமலை மீமிசை ஏறி கோமகள் தன் கோயில் புக்கு-அங்குத் தாம் கண்ட அம் மாதிரியின் மகளாகிய ஐயை என்பவளோடும் கூடிப் பண்டு கண்ணகி சென்ற வழியாகிய வையையின் ஒரு கரையையே வழியாகக் கொண்டு சென்று ஆங்கு மலை நாட்டின்கண் தம்மெதிர் தோன்றிய பெரிய நெடுவேள் குன்றத்தின் மேலே மிகவும் ஏறிச் சென்று அங்கு இறைமகள் என்று தன்னைக் கூறிக்கொள்கின்ற கண்ணகியின் கோயிலின்கண் புகுந்து அவ்விடத்தே; நங்கைக்குச் சிறப்பயர்ந்த செங்குட்டுவற்குத் திறமுரைப்பர் மன்-அத் திருமா பத்தினிக்குத் திருவிழா நிகழ்த்திய செங்குட்டுவனைக் கண்டு அவனுக்குத் தம்முடைய தன்மையைக் கூறுவாராயினர் என்க.

(விளக்கம்) நாவலம் பொழில் முழுவதும் அவன் ஆணை சென்றமையின் குமரியொடு வடவிமயம் என எல்லை கூறினார். ஒரு மொழி என்றது ஆணையை ஞாயிற்றுச் சோழன்-ஞாயிற்று மரபில் பிறந்த சோழன் செங்குட்டுவன் முன்னொரு முறை வடதிசைக்கண் படையெடுத்துச் சென்றவன் கங்கையாற்றின் தென்கரைகாறும் சென்று மீண்டான் எனவும் அப்பொழுது தன் வரவு கேட்டு வந்தடி வணங்காமையின் அப்பாலுள்ள பகைவர் மேல் சினத்தை மிகுத்து மீண்டு வந்து வஞ்சியுள் இருந்தான் என்க. ஒன்று மொழி நகையினர்-ஒரு கருத்தையே எல்லோரும் ஒருமித்துக் கூறி எள்ளி நகைத்தவராய் என்றவாறு. அம் மொழியாவது இக் காலத்தே தமிழர் நம் வடநாட்டின்கண் வரின் அவரை யாம் வென்று புறமிட்டோடச் செய்வேம் என்பது. தமிழ் மன்னர்கள் தனித்தனியே வடதிசைக்கள் வந்து நம்மனோரை வென்று வாகை சூடிய பொழுது இந்த நாட்டின்கண் நம் போன்ற வீர மன்னர் இருந்திலர். இருந்தாராயின் அவர் இமய நெற்றியில் விற்புலி கயல் பொறித்துப் போதல் எங்ஙனம் என்று எள்ளியபடியாம். போலும்: ஒப்பில் போலி மணி வட்டு-மணி இழைத்த உருளை, உருண்டை வடிவமான வட்டுக் காயுமாம். வட்டு-சூதாடு கருவி. குணில் என்பது குறுந்தடி. நீண்முடியால் நீலவரசர் பலர் தொழும் படிவம் என்க. முலைப் பூசலாட்டி-கண்ணகி. அறம் பழித்து என்றதற்கு அறக்கடவுளைப் பழித்து எனினுமாம். குறுமகன்-பொற்கொல்லன். காவற் பெண்டு-செவிலித்தாயருள் ஒருத்தி. அடித்தோழி என்றது செவிலியின் மகளை. அடைக்கலமிழந்து உயிர் இழந்த இடைக்குல மகள் என்றது மாதிரியை. கண்ணகி பின்னர்த் தன்னைப் பாண்டியன் மகளாகக்கூறிக் கொள்ளுதலின் கோமகள் கோயில் என்றார். இனி மகளிர்கெல்லாம் கோவாகிய மகள் எனினுமாம் சிறப்பு-திருவிழா. மன்: அசைச் சொல்.

தேவந்தி சொல்

2: முடி மன்னர்.......கண்டீர்

(இதன் பொருள்) முடிமன்னர் மூவரும் காத்து ஓம்பும் தெய்வ வட பேர் இமய மலையில் பிறந்து-போந்தை வேம்பே ஆர் எனவரும் அடையாளப் பூ மாலையைச் சூடுகின்ற சேரர் பாண்டியர் சோழர் என்னும் மூன்று குலத்தில் பிறந்த முடிமன்னர் மூவராலும் நன்கு காக்கப்படுகின்ற தெய்வங்கள் உறைதற் கிடனான வடதிசைக் கண்ணதாகிய பெரிய இமயமலையிலே பிறந்து; கடுவரல் கங்கைப் புனல் ஆடிப் போந்த-விரைந்து வருதலையுடைய கங்கை யாற்றினது தெய்வத் தன்மையுடைய நீரின்கண் ஆடி இத்திருக்கோயிலின்கண் எழுந்தருளியுள்ள; தொடிவளைத் தோளிக்கு நான் தோழி கண்டீர்-தொடியையும் வளையையும் உடைய தோளை உடைய இக் கண்ணகிக்கு நான் தோழி கண்டீர்; சோணாட்டார் பாவைக்கு நான் தோழி கண்டீர்-சோழ நாட்டில் பிறந்தோர்க் கெல்லாம் மகளாகிய பாவைபோலும் இக் கண்ணகிக்கு அடிச்சியும் ஒரு தோழியாவேன் கண்டீர் என்றாள் என்க.

(விளக்கம்) தமிழரசர் மூவரும் ஒவ்வொரு காலத்து அவ்விமய மலை வரையில் உள்ள அரசரையெல்லாம் அடிப்படுத்துத் தமது இலச்சினையையும் மலையிற் பொறித்துப் பேணுதலின் மூவருங் காத்து ஓம்பும் மலை என்றாள். மலையிற் பிறத்தலாவது அம் மலையிற் கொண்ட கல்லாலியற்றிய படிமத்தைத் தனதுருவமாகக் கொள்ளுதல். இனி வடபேரிமய மலையிற் பிறந்து அம் மலையிலேயே பிறந்து கடுவரற் கங்கைப் புனலாடிப் போந்த என இமயமலையிற் பிறத்தலைக் கங்கைக்கும் கண்ணகிக்கும் பொதுவாகக் கொள்க. சோழ நாட்டில் பிறத்தலின் அந் நாட்டினர் எல்லார்க்கும் மகளாகிய பாவைக்கு என்க. சேரணாட்டில் மக்கட் பிறப்பிற் பிறந்து மீண்டும் இமயமலையில் தெய்வப் பிறப்புப் பிறந்து போந்த பாவை என்பது கருத்தாகக் கொள்க.

காவற் பெண்டு சொல்

3. மடம்படு......கண்டீர்

(இதன் பொருள்) மடம்படு சாயலாள் மாதவி தன்னைக் கடம்படாள் காதற் கணவன் கைப்பற்றி-மடப்பம் பொருந்திய சாயலை உடையவளும் கோவலன் தன்னைப் பிரிதற்குக் காரணமான மாதவி தன்னையும் ஒரு சிறிது வெகுண்டு பேசாதவளும் அம் மாதவி மனையினின்றும் தன் மனைக்கு வந்த காதலையுடைய கணவனாகிய கோவலனைச் சிறிதும் வெறுக்காமல் அவன் கையைப் பற்றிக்கொண்டு; குடம்புகாக் கூவற் கொடுங்கானம் போந்த-நீரின்மையால்  குடம் புகுந்தறியாத வறிய கேணியை யுடைய கொடிய பாலை நிலத்திலே வந்த; தடம் பெருங் கண்ணிக்கு நான் தாயர் கண்டீர் தண் புகார்ப் பாவைக்கு நான் தாயர் கண்டீர்-மிகவும் பெரிய கண்களையுடைய இக் கண்ணகிக்கு அடிச்சி செவிலித்தாய் ஆவேன் கண்டீர்! குளிர்ந்த புகார் நகரத்திலே பிறந்த பாவை போல்வாளாகிய இக் கண்ணகிக்கு நான் செவிலித்தாய் கண்டீர் என்றான்; என்க.

(விளக்கம்) மடம்-பெண்மைக் குணங்களுள் ஒன்று. சாயல்-ஐம்பொறிகளாலும் நுகர்தற்கியன்ற மென்மை. சாயலாளும் போந்தவளுமாகிய கண்ணிக்கு என்க. கடம்படாள்-மிகவும்வெகுளாள். தவக்குத் தீமை செய்தமை பற்றி அம் மாதவியை ஒரு காலத்தும் வெறுத்துச் சினவாதவள் என்பது கருத்து. இது தீதும் நன்றும் பிறர் தர வாரா என்னும் மெய்யுணர்வுபற்றிப் பிறக்கும் தெளிவு. கணவனை வெறுமை கூற வேண்டாவாயிற்று. குடம் புகாக் கூவல் என்றது நீரின்மையாகிய காரணத்தை விளக்கி நின்றது. கண்ணகியின் பேரருள் தோன்றுதற்குத் தடம் பெரும் கண்ணி என்று விதந்தாள்.

அடித் தோழி சொல்

4. தற் பயந்தாட்கு............கண்டீர்

(இதன் பொருள்) தன் பயந்தாட்கு (ஓர் சொல்) இல்லை தன்னைப் புறங்காத்த என் பயந்தாட்கும் எனக்கும் ஓர் சொல் இல்லை-பூம்புகாரினின்றும் புறப்படும் பொழுது தன்னை ஈன்ற நற்றாய்க்கும் ஒரு சொல் சொன்னாளில்லை. அவ்வாறே பிறந்த நாள் தொடங்கி எடுத்துவளர்த்துப் புறம் புறமே நின்று பேணிய அவள் செவிலித்தாயாகிய என்னை ஈன்றவளுக்கும், பிறந்த நாள் தொடங்கி உடணுண்டு உடனுறங்கி உடன் வளர்ந்த உயிர்த் தோழியாகிய அடிச்சிக்கும் ஒரு சொல் சொன்னாளில்லை; கற்புக் கடம் பூண்டு காதலன் பின் போந்த பொன்தொடி நங்கைக்கு நான் தோழி கண்டீர்-தனக்குரிய கற்பறத்தைப் பேணுவதையே தனது தலையாய அறமாக மேற்கொண்டு தன் காதலன் எழுக என்றவுடன் மறுக்கும் சொல் ஒன்றும் இல்லாமல் அவனைப் பின் தொடர்ந்து வந்த பொன் வளையலணிந்த நங்கையாகிய இக் கண்ணகிக்கு அடிச்சி உயிர்த்தோழியாவேன் கண்டீர்; பூம்புகார்ப் பாவைக்கு நான் தோழி கண்டீர்-அழகிய புகார் நகரத்தே தோன்றிய இக் கண்ணகிக்கு அடிச்சி தோழியாவேன் கண்டீர் என்றாள் என்க.

(விளக்கம்) தற் பயந்தாள் என்றது கண்ணகியின் நற்றாயை. தோழி செவிலி மகளாதலின் அவளை எற்பயந்தாள் என்றாள். ஓர் சொல்-தனது பிரிவுபற்றிய ஏதேனும் ஒருசொல். கற்புக் கடம் பூண்டாளுக்குக் கணவனினும் சிறந்த கேளிர் இல்லையாதலினாலும் எமக்குச் சொன்னால் தன் போக்கிற்குச் சிறிது இடையூறு நேர்தல் கூடும் என்பதனாலும் சொல்லாது காதலன் பின் போயினள் என்றவாறு. இன்துணை மகளிர்க்கு இன்றியமையாக் கற்புக் கடம்பூண்ட இத் தெய்வமல்லது பொற்புடைத் தெய்வம் யாங் கண்டிலமால் எனக் கவுந்தியடிகளாரும் பாராட்டினமை நினைக. (எண் 15. 142-4)

தேவந்தி யரற்று

5. செய்தவம்......தோழி

(இதன் பொருள்) செய்தவம் இல்லாதேன் தீக்கனா கேட்ட நாள் எய்த உணராது இருந்தேன் மற்று என் செய்தேன்-தோழீ! முற்பிறப்பிலே தவஞ் செய்திலாத தீவினை யாட்டியேன், நீ என்னிடம் கண்ட தீக்கனாவைக் கூறிய அந்த நாளிலே அக் கனாப் பற்றி ஆழ்ந்து உணராதிருந் தொழிந்தேன் ஐயகோ என்ன காரியம் செய்துவிட்டேன்; மொய்குழல் மங்கை முலைப் பூசல் கேட்ட நாள்-செறிந்த கூந்தலையுடைய நங்காய் நீ மதுரையிற் செய்த முலைப் பூசலைக் கேட்டபொழுது; அவ்வை உயிர் வீவுங் கேட்டாயோ தோழீ-நின் அன்னை உயிர் நீத்த செய்தியையும் நீ யாரேனும் கூறக் கேட்டதுண்டோ? தோழீ; அம்மாமி தன்வீவுங் கேட்டாயோ-நின்னுடைய மாமியினது சாவினையும் நீ கேட்டதுண்டோ? என்று அழுதாள்; என்க.

(விளக்கம்) தேவந்தி முதலியோர் செங்குட்டுவனுக்குத் தம்மை அறிவித்த பின்னர்த் துன்பம் பொறாமல் கண்ணகியின் தெய்வப்  படிமத்தை நோக்கி இங்ஙனம் கூறி அழுகின்றனர் என்க. அரற்றுதல். வாய்விட்டுப் புலம்புதல். கண்ணகி தான் கண்ட தீக்கனாவைத் தேவந்திக்குக் கூறியதனைக் கனாத் திறமுரைத்த காதையில் காண்க. எய்த உணர்தல்-ஆழ்ந்து உணர்தல். அங்ஙளம் உணர்ந்திருந்தேனாயின் ஓரோவழி நீ மதுரைக்குப் போகாவண்ணம் தடை செய்திருப்பேன் என்று அன்பு மிகுதியால் தேவந்தி இங்ஙனம் கூறுகின்றனள் என்க. மங்கை: விளி; முன்னிலைப் புறமொழி எனினுமாம். அவ்வை-தாய். அம்மாமி என்பது ஒருசொல். அம்மான் என்னும் ஆண்பாலுக்குப் பெண்பாற் சொல் என்றறிக.

காவற் பெண்டரற்று

6: கோவலன்............வன்னை

(இதன் பொருள்) அன்னை கோவலன் தன்னைக் குறுமகன் கோள் இழைப்ப காவலன் தன் உயிர் நீத்தது நான் கேட்டு ஏங்கி-அன்னாய் நின் கணவனாகிய கோவலனைக் கீழ் மகனாகிய பொய்த் தொழில் கொல்லன் கொல்லும்படி செய்யப் பின்னர்த் தன் தவற்றினை உணர்ந்த பாண்டியன் நெடுஞ்செழியன் உயிர் நீத்த இச் செய்தியைக் கேட்டுத் துயரம் பொறாமல் ஏங்கி, சாவது தான் வாழ்வு என்று தானம் பல செய்து-இனி எனக்கு வாழ்க்கை என்பது இறந்துபடுதலேயாம் என்றுட்கொண்டு தன் வள நிதி அனைத்தையும் கொண்டு பலவேறு தானங்களையும் செய்துவிட்டு; மாசாத்துவான் துறவுங் கேட்டாயோ-நின் மாமனாகிய மாசாத்துவான் என்னும் பெரும் புகழ்படைத்த வாணிகன் துறவறம் மேற்கொண்டமையையும் கேட்டதுண்டோ; அன்னை மாநாய்கன் தன் துறவுங் கேட்டாயோ-அன்னாய் அங்ஙனமே நின் தந்தையாகிய மாநாய்கன் என்பானும் இச் செய்தி கேட்டு அங்ஙமே துறவறம் புகுந்தமையைக் கேட்டதுண்டேயோ! என்று சொல்லி அழுதாள் என்க,

(விளக்கம்) கோள்-கொலை. காவலன்: நெடுஞ்செழியன்.சாவது தான் வாழ்வென்றது இனி இவ்வுலகின்கண் தனக்கு வாழ்க்கை என்ப தொன்றில்லை என்று கருதியவாறாம். துறவு உலக வாழ்க்கையைத் துறத்த லாதலின் அதுவே சாவுமாயிற்று.

அடித்தோழியரற்று

7: காதலன்...........தோழி

(இதன் பொருள்) தோழீ காதலன் தன் வீவும் காதலி நீ பட்ட தூஉம் ஏதிலார் தாம் கூறும் ஏச்சு உரையுங் கேட்டு ஏங்கி தோழியே தனது பெருங்காதலுக்கிடனான கோவலனுடைய மறைவையும் அவனால் பெரிதும் காதலிக்கப்பட்ட நீ பட்ட பெரும் துன்பங்களையும் புகார் நகரத்திலுள்ள அயலோர் கூறும் பழிமொழிகளையும் கேட்டு இத் துன்பங்களைப் பொறாமல் பெரிதும் ஏக்கமெய்தி; போதியின்கீழ் மாதவர்முன் புண்ணிய தானம் புரிந்த-அரசமரத்தின்கீழ் இருந்து பெரிய தவத்தைச் செய்கின்ற துறவோர் முன்னிலையிலே தனது பொருளையெல்லாம் புண்ணிய தானமாக வழங்கிய; மாதவி தன் துறவும் கேட்டாயோ-அம் மாதவி தானும் துறவறம் புகுந்த செய்தியை நீ கேட்ட துண்டோ; தோழி மணிமேகலை துறவும் கேட்டாயோ-என் ஆருயிர்த் தோழி  நீ தான் நின் மகளாகிய மணிமேகலை ஆற்றவும் இளம் பருவத்திலேயே துன்பம் ஆற்றாதவாளாய்த் துறவறம் புகுந்த செய்தியைக் கேட்டதுண்டேயோ? என்று சொல்லி அழுதாள் என்க.

(விளக்கம்) இருவர்க்கும் காதலன் ஆதலின் பொதுவாகக் காதலன் என்றாள். மாதவியைத் துறந்தவுடன் கண்ணகியின்பால் எய்துதலின் அவனது காதல் புலப்படுதலின் அவன் காதலியாகிய நீ பட்டதுவும் என்றாள் என்க. பட்டது-பட்ட துன்பம். ஏதிலார்-அயலோர். ஏச்சுரை-பழிச்சொல். மாதவர்-ஈண்டு அறவணவடிகளார். மணிமேகலை துறவும் என்புழி மணிமேகலை துறவும் என்று எடுத்தோதி இரக்கச்சுவை உடையதாக்குக.

தேவந்தி ஐயையைக் காட்டி அரற்றியது

8: ஐயந்தீர்..........தோழீ

(இதன் பொருள்) ஐயந்தீர் காட்சி அடைக்கலம் காத்து ஓம்பவல்லாதேன்-தவத்தோர் அடைக்கலம் தான் சிறிது ஆயினும் மிகப் பேரின்பம் தரும் என்பதன்கண் சிறிதும் ஐயமில்லாது தெளிந்த மெய்க்காட்சியோடு ஏற்றுக்கொண்ட அடைக்கலப் பொருளை நன்கு காத்துப் பேணுதற்கு வன்மையில்லாத நான்; பெற்றேன் மயல்-இப்பொழுது பித்துற்றொழிந்தேன் என்று அரற்றியவளாய்; உயிர்நீத்த அவ்வை மகள் இவள் தான்-தீப்பாய்ந்து உயிர்விட்ட தாயன்புடைய மாதரியின் மகள் இதோ நிற்கும் இவள்தான்; தோழீ அம் மணம் பட்டிலா வை எயிற்று ஐயையை கண்டாயோ-தோழீ அழகிய திருமணம் நிகழ்த்தப் பெறாத கூரிய எயிற்றையுடைய நின் நாத்தூண் நங்கையாகிய ஐயையைப் பார்த்தனையோ; மாமி மடமகளைக் கண்டாயோ தோழீ-நின்னுடைய மாமியின் இளமகளாகிய இவளைப் பார்த்தனையோ என்று சொல்லி அழுதாள் என்க.

(விளக்கம்) ஐயந்தீர் காட்சி என்பதனை ஆகுபெயராகக்கொண்டு கவுந்தியடிகள் என்பர் அரும்பதவுரை யாசிரியர். மயல்-பித்து அவ்வை என்றது எவ்வுயிரிடத்தும் தாயன்புடைமை கருதி. மாதரி என்க. அம் இசை நிறை எனினுமாம். மணம்பட்டிருக்க வேண்டும் ஆயினும் அவ்வை உயிர்நீத்தலால் மணம்பட்டிலாள் என்றிரங்கிய படியாம். மாமி என்றது நின் மாமி என்றவாறு.

(தேவந்தி முதலியோர் பெரிதும் துன்பமுற்று இங்ஙனம் அழுது புலம்பியபோது வானத்தின்கண் கண்ணகித் தெய்வம் தோன்றுதல்)

செங்குட்டுவன் கூற்று

9: என்னே...............தோன்றுமால்

(இதன் பொருள்) என்னே இஃது என்னே இஃது என்னே இஃது என்னே கொல்(விண்ணின்கண் கண்ணகியின் கடவுள் உருவினைக் கண்ட செங்குட்டுவன் பெரிதும் வியப்பெய்தி) இஃது என்னையோ! இஃது என்னையோ!!! இஃது என்னையோ!!! இஃது என்னையோ! மீ விசும்பின்-வானத்தின் மிக உயர்ந்த விடத்தே; பொன் அம் சிலம்பின் புனை மேகலை வளைக்கை நல் வயிரப் பொன் தோட்டு நாவலம் பொன் இழை சேர்-பொன்னால் இயற்றிய சீறடிச் சிலம்பினோடும் இடையில் அணியப்பட்ட மேகலையோடும் வளையல் அணிந்த கைகளோடும் அழகிய வைரம் வைத்திழைத்த பொன்னோடு கூடிய தோடணிந்த செவிகளோடும் சாம்பூந்தம் என்னும் சிறந்த பொன்னால் இயற்றிய அணிகலன் பிறவும் அணிந்துகொண்டுள்ள; மின்னுக்கொடி ஒன்று தோன்றுமால்-கொடி மின்னல்போலும் ஒரு பொண்ணுருவம் தோன்றுகின்றதே; என்று சொல்லி(செங்குட்டுவன்) வியந்தான் என்க.

(விளக்கம்) வியப்பு மிகுதிபற்றி வந்தது. என்னே இஃது என்பது நான்குமுறை அடுக்கி வந்தது. அவ்வுருவம் இன்னதென்று அறியாமையால் இஃது என்னும் அஃறினைச் சொல்லால் சுட்டினான். இதனால் கண்ணகித் தெய்வம் அணிகலன்கள் பலவற்றோடும் மின்னற் கொடி போன்று செங்குட்டுவனுக்கு வானின்கட் காட்சி அளித்தமை பெற்றாம்.

செங்குட்டுவற்குக் கண்ணகியார் கடவுணல்லணி காட்டியது

(குறிப்பு: இத் தலைப்பு மேலுள்ள ஒன்பதாம் செய்யுளுக்கு உரியதாய்ச் செங்குட்டுவன் கூற்று என்பதற்கு முன்னர் இருப்பது பொருத்தமாகத் தோன்றுகின்றது)

கண்ணகித் தெய்வத்தின் கூற்று

10: தென்னவன்................வம்மெல்லாம்

(இதன் பொருள்) தோழிமீர் எல்லீரும் என்னோடு லம் எல்லாம் அன்புடைய என்னுடைய தோழியர் எல்லோரும் என்னோடு வாருங்கள்; தென்னவன் தீது இலன் தேவர்கோள் தன் கோயில் நல்விருந்து ஆயினான்-தென்னாட்டு அரசனாகிய பாண்டிய மன்னன் பிழை செய்தானாயினும் அறிந்து செய்திலன் ஆதலின் அவன் தீவினை சிறிதும் இல்லாதவன் ஆயினன். அறியாது தான் செய்த தவற்றினுக்கு அதுவே கழுவாகிய அவன் இப்பொழுது தேவேந்திரனுடைய அரண்மனையின்கண் நல்ல விருந்தாளன் ஆயினான்; நான் அவன் தன் மகள்-யான் இப்பொழுது என் மக்கட் பிறப்பு மாறி அப் பாண்டியன் காரணமாகத் தெய்வப் பிறப்பு எய்தினமையால் யான் அவனுடைய மகளாவேன்; வென் வேலான் குன்றில் விளையாட்டு யான் அகலேன்-வென்றியையுடைய வேலை ஏந்திய முருகனுடைய இக் குன்றின்கண் யான் இனி விளையாடுதலை ஒருடொழுதும் ஒழியேன் என்றாள் என்க.

(விளக்கம்) தென்னவன்: நெடுஞ்செழியன். வென்வேலான் : முருகன். யான் விளையாட்டு அகலேன் ஆதலின் என் தோழிமீர் எல்லாம் என்னோடு வந்து விளையாடுமின் என்பது கருத்து. குன்று செங்கோடு என்பது அரும்பதவுரை. 

வஞ்சி மகளிர் சொல்

11: வஞ்சியீர்........வம்மெல்லாம்

(இதன் பொருள்) வஞ்சியீர்-வஞ்சி நகரத்து மகளிர்களே; வஞ்சி இடையீர்-வஞ்சிக் கொடி போலும் மெலிந்து துவளும் இடையை உடையீர்; மற வேலான் பஞ்சு அடி ஆயத்தீர் எல்லீரும் வம்மெல்லாம்-வீர வேலேந்திய செங்குட்டுவனுடைய அலத்தகமூட்டிய சிற்றடியை உடைய ஆய மகளிர் எல்லோரும் வாருங்கள், எற்றுக் கெனின்; கொங்கையால் கூடல் பதி சிதைத்துக் கோவேந்தைச் செஞ்சிலம்பால் வென்றாளைப் பாடுதும் வம்மெல்லாம்-தனது கொங்கையினாலே மதுரை மாநகரத்தை அழித்து வேந்தர் வேந்தனாகிய பாண்டியனைச் செம் பொன்னால் இயன்ற சிலம்பினாலே வென்ற வீர பத்தினியைப் பாடுவோம், எல்லீரும் வாருங்கள்; தென்னவன் தன் மகளைப் பாடுதும் வம்மெல்லாம்-அப் பாண்டியனுடைய மகளாகிய இக் கற்புக் கடவுளைப் புகழ்ந்து பாடுவோம் எல்லீரும் வாருங்கள்; பாண்டியர் செங்கோல் வளைய உயிர் வாழார் என்று எங்கோ முறைநா இயம்ப-பாண்டிய மன்னர்கள் தமது செங்கோல் ஊழ்வினையால் வளைந்த விடத்தும் உயிர் துறப்பதன்றி வாழ்கின்ற சிறுமையுடையோர் அல்லர்; என்று பெரிதும் புகழ்ந்து நம் அரசனாகிய செங்குட்டுவனுடைய முறைமை தவறாத செந்நாவினாலே பாராட்டும்படி; இந் நாடு அடைந்த பைந்தொடிப் பாவையைப் பாடுதும் வம்மெல்லாம்-இந்தச் சேர நாட்டை விரும்பி வந்து சேர்ந்த பசிய வளையலை அணிந்த பாவை போல்வாளாகிய இக் கற்புக் கடவுளைப் புகழ்ந்து பாடுவோம் எல்லீரும் வாருங்கள்; பாண்டியன் தன் மகளைப் பாடுதும் வம்மெல்லாம்-பாண்டிய மன்னனுடைய மகளாகிய இக் கற்புத் தெய்வத்தைப் பாடுவோம் எல்லீரும் வாருங்கள் என்றார் என்க.

(விளக்கம்) வஞ்சியீர்-வஞ்சி நகரத்துள்ளீர் எனவும் வஞ்சிக் கொடிபோலும் இடையீர் எனவும் கூறிக்கொள்க. வடவாரியரை வென்றமை கருதி மறவேலான் என்றார்: அவன் செங்குட்டுவன் பஞ்சு-செம்பஞ்சுக் குழம்பு. வம்மெல்லாம் என்றது வம்மின் என்னும் துணையாய் நின்றது. மேல் வருவனவற்றிற்கும் இஃது ஒக்கும். தண்டமிழ் ஆசான் சாத்தன் வாயிலாக நெடுஞ்செழியன் உயிர்நீத்த செய்தியைச் செங்குட்டுவன் அறிந்தபொழுது,

எம்மோ ரன்ன வேந்தற் குற்ற
செம்மையி னிகந்தசொல் செவிப்புலம் படாமுன்
உயிர்பதிப் பெயர்த்தமை உறுக ஈங்கென
வல்வினை வளைத்த கோலை மன்னவன்
செல்லுயிர் நிமிர்த்துச் செங்கோ லாக்கியது டு(காட்சி 95-99

என்று நெஞ்சாரப் பாராட்டியதைக் கருதிச் செங்கோல்............இயம்ப என்றவாறு.

ஆயத்தார் சொல்

12: வானவன்...................மகள்

(இதன் பொருள்) நாம் வானன் எம் கோமகள் என்றாம்-யாம் சேரனாகிய எங்கள் மன்னனுடைய மகள் என்று கூறிப் பாராட்டினோம்; தான் வையையார் கோன் பெற்ற கொடி என்றாள்-கற்புக் கடவுளாகிய அவளோ தான் வையைப் பேரியாறு புனல் பரப்பும் பாண்டிய நாட்டு மன்னனாகிய அந் நெடுஞ்செழியன் ஈன்றெடுத்த மகள் என்று கூறிக்கொள்கின்றாள்; நாம் வானவனை வாழ்த்துவோம் ஆக-வஞ்சி நகரத்து மகளிராகிய நாம் இக் கற்புக் கடவுளுக்குத் திருக்கோயில் எடுத்துத் தெய்வப் படிமம் சமைத்து நிறுவி வேள்விச் சாந்தியும் செய்தருளிய நங்கள் மன்னனாகிய சேரனை வாழ்த்துவோம்; தேவமகள்-தெய்வமாகிய கண்ணகி; வையையார் கோமானை வாழ்த்துவாள்-அப் பாண்டிய மன்னனைத் தானே வாழ்த்துவாளாக என்றார் என்க.

(விளக்கம்) வானவர்-சேரன். வானவனாகிய எங்கோ என்க. தான் கோனவன் பெற்ற கொடி என்றாள் என மாறுக. நாம் என்பதை முன்னும் கூட்டி நாம் வானவன் மகள் என்றாம் எனக் கூட்டுக. ஆதலால் நாம் வானவனை வாழ்த்துவோம் தேவ மகள் கோமானை வாழ்த்துவான் என ஏதுக் கூறியபடியாம்.

வாழ்த்து

13: தொல்லை.........தொல்குலமே

(இதன் பொருள்) தொல்லை வினையால் துயர் உழந்தாள் கண்ணின் நீர் கொல்ல உயிர் கொடுத்த கோவேந்தன் வாழியரோ-முற்பிறப்பில் செய்த தீவினை காரணமாகத் துன்பமுற்ற கண்ணகியினது கண்ணில் நின்றும் உகுகின்ற நீரானது தன்னைக் கொல்லா நிற்பத் தன் உயிரைக் கொடுத்த அரசனாகிய பாண்டிய மன்னன் புகழ் நீடூழி வாழ்வதாக; வருபுனல் நீர் வையை சூழும் மதுரையார் கோமான தன் தொல்குலம்-இடையறாது வருகின்ற புனலாகிய தண்ணீரையுடைய வையைப் பேரியாற்றினால் சூழப்பெற்ற மதுரை மாநகரத்தில் வாழ்வோருடைய கோமானாகிய அப் பாண்டியனுடைய பழைய குலந்தானும்; வாழியர் வாழி-வழிவழிச் சிறந்து நீடூழி வாழ்வதாக; என்றார் என்க.

(விளக்கம்) தொல்வினை-பழவினை. துயருழந்தாள்: கண்ணகி கண்ணின் நீர் கண்டளவே தோற்றான் உயிர் என வழக்குரை காதையின்கண்ணும் வருதல் உணர்க. அக் குலத்தில் பிறந்தோரும் அறவோராயிருந்து உலகத்தைக் காப்பார் என்பது பற்றிக் குலத்தையும் வாழ்த்தினர். தொல்குலம்-படைப்புக் காலந்தொட்டு மேம்பட்டு வருகின்ற பாண்டியர் குலம். வையையார் கோமானைத் தேவமகள் வாழ்த்துவாள் எனக் கூறினாரேனும் கடவுள் வாழ்த்தாமை கண்டு அப் பாண்டியனை வஞ்சி மகளிர் தாமே வாழ்த்தியபடியாம் இது.

14: மலையரையன்..............தொல்குலமே

(இதன் பொருள்) மலையரையன் பெற்ற மடப்பாவை தன்னை நீலவரசர் நீள் முடிமேல் ஏற்றினான் வாழியர்-மலைகளுக்கெல்லாம் அரசாகிய இமயமலை ஈன்றெடுத்த மடப்பமுடைய திருமா பத்தினியை வடநாட்டினை ஆளும் கனகவிசயர் என்னும் அரசருடைய நெடிய முடியின்மேல் ஏற்றிக்கொணர்ந்த ஆற்றலுடைய நம் மன்னர் பெருமான் நீடூழி வாழ்க; வருபுனல் நீர் ஆன் பொருநை சூழ் தரும் வஞ்சியார் கோமான் தன் தொல் குலம்-பொதியமலையினின்றும் வருகின்ற புனலாகிய புண்ணிய நீரையுடைய ஆன்பொருநை என்னும் யாறு சுழன்று வருகின்ற வஞ்சி நகரத்தே வாழ்வோருடைய அரசனாகிய சேரன் செங்குட்டுவனுடைய பழைய மன்னர் குலம்; வாழியர் வாழி-வழி வழிச் சிறந்து நீடூழி வாழ்வதாக என்றார் என்க.

(விளக்கம்) மலையரையன் என்றது இமயத்தை. அம் மலையின்கண் கற்கொண்டு அமைக்கப்பட்ட கடவுட் படிமத்தில் கண்ணகி எழுந்தருளியிருத்தலின் அத் தெய்வத்தை மலையரையன் பெற்ற மடப்பாவை என்றார். அரசர்: கனகவிசயர்.

15: எல்லா நாம்............புகார்

(இதன் பொருள்) எல்லா நாம் காவிரி நாடனைப் பாடுதும் பூவிரி கூந்தல் புகார் பாடுதும்-தோழி இனி யாம் காவிரி நாட்டையுடைய சோழ மன்னனையும் பாடுவோமாக, அஃது எற்றுக்கெனின்; பூவிரி கூந்தல் புகார்-பூமலர்ந்த கூந்தலையுடைய இக் கண்ணகித் தெய்வம் தோன்றுதற்கிடனாயிருந்தது அம் மன்னனுடைய பூம்புகார் நகரம் அன்றோ? ஆதலால் அந் நகரத்தை பாடுவேம் என்றார் என்க.

(விளக்கம்) எல்லா-விளி, தோழீ என்றவாறு. காவிரி நாடன்: சோழன் பூவிரி கூந்தல்: கண்ணகி. கண்ணகி பிறந்தது அவன் நகரமாதலின் அவனையும் அந் நகரத்தையும் பாடுவோம் என்பது கருத்து செங்கோல் மன்னர் நாட்டிலேதான் இத்தகைய பத்தினி மகளிர் பிறத்தல் கூடும். ஆதலால் கண்ணகியின் புகழில் அம் மன்னனுக்கே முதற் கூறு உரித்தாம் என்பது கருத்து. இக் கருத்தேபற்றி மேல் வருகின்ற பாடல்களிலும் சோழனே முதலிடம் பெறுதல் அறிக.

அம்மானை வரி

அஃதாவது அம்மானை என்பது மகளிர் விளையாட்டினுள் ஒன்று. வரி-பாடல். அம்மானை ஆடுமகளிர் வினாவும் செப்புமாகப் பாடுவது மரபு.

16: வீங்குநீர்..............அம்மானை

(இதன் பொருள்) அம்மானை வீங்குநீர் வேலி உலகு ஆண்டு விண்ணவர் கோன் ஓங்கு அரணம் காத்த உரவோன் யார்-அன்னையே! பெருகுகின்ற நீரையுடைய கடல் சூழ்ந்த இந் நிலவுலகத்திலே பிறந்து செங்கோன்மை பிறழாது அரசாட்சியும் செய்து மேலும் அமரர் கோமானாகிய இந்திரனுக்கு உதவியாகச் சென்று அவனுடைய உயர்ந்த மதில் அரணையுடைய அரண்மனையையும் காத்தருளிய பேராற்றல் உடைய அரசன் யார், நீ அறிவாயோ; அம்மானை ஓங்கு அரணம் காத்த உரவோன் உயர் விசும்பில் தூங்கு எயில் மூன்று எறிந்த சோழன்காண்-தாயே! யான் நன்கு அறிவேன். அவ்வாறு ஓங்கு அரணம் காத்த உரவோன் உயர்ந்த விண்ணின்கண் இயங்கிக்கொண்டிருந்த அசுரர்களுடைய மதில்கள் மூன்றனையும் தகர்த்தெறிந்த சோழனை காண்; அம்மானை சோழன் புகார் நகரம் பாடல்-தாயே அங்ஙனமாயின் அச் சோழனுடைய பூம்புகார் நகரத்தை இனி வாழ்த்திப் பாடுவோமாக என்க.

(விளக்கம்) அம்மானை தாயென்னும் பொருளுடையது. அம்மானை ஆடுவோர் ஒருவரை ஒருவர் அன்னையே என்று விளித்து வினாவியும் செப்பியும் பாடுவாராகக் கொள்க. பாடல்-வியங்கோள்; தன்மையில் வந்தது. ஓர் இசை நிறை.

17: புரவுநிறை.............அம்மானை

(இதன் பொருள்) அம்மானை புறவு நிறை புக்கு பொன் உலகம் ஏத்த குறைவு இல் உடம்பு அரிந்த கொற்றவன் யார்-அன்னையே ஒரு புறாவினது எடையைச் சமமாக்கப் புகுந்து வானுலகத்தோர் புகழும்படி உறுப்புக் குறைபாடில்லாத தனது உடம்பின்கண் தசையை எல்லாம் அரிந்து துலாவின்கண் வைத்தருளிய அற வெற்றியை உடைய அரசன் யார் நீ அறிவையோ; அம்மானை குறைவில் உடம்பரிந்த கொற்றவன் முன்வந்த தன் அரண்மனை முன் வந்து ஆராய்ச்சி மணியே அசைத்த கறவை முறை செய்த காவலன் காண்-கற்றாவிற்குத் தன் அரும் பெறல் மகனை ஆழியில் மடித்துச் செங்கோன் முறைமை செய்தவனாகிய சோழ மன்னன்காண்; காவலன் பூம்புகார் பாடல்-அத்தகைய சிறப்புடையோனாயின் அம் மன்னனையும் அவனது பூம்புகார் நகரத்தையும் இனி யாம் பாடுவோமாக.

(விளக்கம்) புறவு-புறா. பொன்னுலகம். வானுலகத்தில் வாழ்வோர்; ஆகுபெயர். குறைவில் உடம்பரிந்த என்பதற்கு; புறவின் நிறைக்குத் தன் தசை குறையும்பொழுதெல்லாம் உடம்பின் தசையை அரிந்த வைத்த கொற்றவன் எனினுமாம். கறவை-கறக்கும் பசு. எனவே கன்றையுடைய பசு என்பதாயிற்று; பாடல்-வியங்கோள் தன்மைப்பன்மையில் வந்தது.

18: கடவரைகள்................அம்மானை

(இதன் பொருள்) அம்மானை கடவரைகள் ஓர் எட்டும் கண்இமையா காண-அன்னையே! மதம் பொழிகின்ற மலைகளை யொத்த திசையானைகள் எட்டும் வியப்பினால் தம் கண்களை இமையாதனவாய் நின்று கூர்ந்து காண எட்டுத் திசைகளையும் வென்று அவ் வெற்றிக்கு அறிகுறியாக; வடவரை மேல் வாள் வேங்கை ஒற்றினன் யார்? வடக்கின்கண்ணதாகிய இமயமலையின் நெற்றிமிசை வாள் போன்ற கோடுகள் அமைந்த புலிப்பொறியை ஒற்றி வைத்தவன் யாரென்று நீ அறிவாயோ; அம்மானை வடவரை மேல் வாள் வேங்கை ஒற்றினன் திக்கு எட்டும்-அன்னாய்! அங்ஙனம் வடவரை மேல் வாள் வேங்கை ஒற்றியவன் திக்கு எட்டனையும் தனது ஒரு குடை நிழலின்கண் அடங்கும்படி அடிப்படுத்திக் கொண்டருளிய சோழ வேந்தன் காண்; கொற்றவன் பூம்புகார் பாடல் அத்தகைய புகழ்வாய்ந்த வேந்தனுடைய பூம்புகார் நகரத்தை யாம் பாடுவோமாக.

(விளக்கம்) கடவரை-யானை; வெளிப்படை எட்டும் என்றதனால் திசையானைகள் என்பது பெற்றாம். எட்டுத் திக்குகளையும் வென்றமையால் அவை வியந்து கண் இமையாமல் நோக்கின என்பது கருத்து. வடவரை- இமயம் எட்டுத்திசை அரசர்களையும் வென்றமையினால் அவற்றையும் தன் குடைநிழலில் கொண்டு அளித்தான் என்பது கருத்து.

19: அம்மனை...........அம்மானை

(இதன் பொருள்) அம்மானை அம்மனை தம் கையிற்கொண்டு அங்கு அணியிழையார் தம்  மனையில் பாடும் தகை-அன்னாய் அம்மனைக் காயைத் தம் கையிலே ஏந்திக்கொண்டு அவ்விடத்தே அழகிய அணிகலன் அணிந்த மகளிர் தமது மனையின்கண் இருந்தே பாடுகின்ற தன்மை எற்றிற்கு; அம்மானை தம் மனையில் பாடும் தகை எலாம் தார் வேந்தன் கொம்மை வரி முலைமேற் கூடவே-அன்னாய்! அங்ஙனம் அணியிழையார் தம் மனையில் பாடும் தன்மை எல்லாம் வெற்றி மாலை அணிந்த அச் சோழ மன்னன் தமது பருத்த தொய்யிலெழுதப் பெற்ற கொங்கைகளின் மேல் முயங்கித் தம்மைக் கூடுதற் பொருட்டேயாம்; அம்மானை கொம்மை வரிமுலைமேற் கூடின்-அன்னாய்! அங்ஙனம் அவ்வரசன் தன்னைப் பாடும் மகளிர் கொம்மை வரிமுலை  மேல் கூடுவானாயின்; குலவேந்தன் அம் என் புகார் நகரம் பாடல்-யாமும் அந்தச் சோழர்குல வேந்தனையும் அவனது அழகு தானாயிருக்கின்றதென்று சொல்லத் தகுந்த அவனுடைய புகார் நகரத்தையும் வாழ்த்திப் பாடுவோமாக என்க.

(விளக்கம்) அம்மனை ஈண்டு அம்மனை ஆடுவார் கையில் உள்ள காய். பாடுந்தகையேல் என்றது குறிப்பாக வினவியபடியாம். கொம்மை-பருமை வரி-தொய்யில், தேமலுமாம். அம்மானை வரி நான்கினும்(1) அரணம் காத்தவன் முசுகுந்தன்; (2) உடம்பரிந்தவன் சிபி;(3) வடகரை மேல் வேங்கை ஒற்றியவன் கரிகாலன்; என்க.

கந்துக வரி

20: பொன்னிலங்கு...............பந்தடித்துமே

(இதன் பொருள்) பொன் இலங்கு பூங்கொடி பொலம் செய்கோதை வில்லிட-பொன் நிறம் விளங்குகின்ற மலர்க்கொடி போன்ற தோழியே! யாம் நமது பொன்னால் இயன்ற மாலை ஒளி வீசவும்; மின் இலங்கு மேகலைகள் ஆர்ப்ப ஆர்ப்ப-மின்னல் போல் விளங்குகின்ற நமது மேகலை அணிகள் ஆரவாரிக்க ஆரவாரிக்க; எங்கணும் சென்று-இக் களத்தில் எவ்விடத்தும் போய்ப் போய்; தென்னன் வாழ்க வாழ்க என்று பந்து அடித்தும்-பாண்டியன் வாழ்க வாழ்க என்று வாழ்த்திப் பந்தடித்து ஆடுவோமாக; தேவர் ஆர மார்பன் வாழ்க என்று பந்து அடித்தும்-தேவர்களுக்கியன்ற மணியாரத்தைத் தாங்கிய வலிய மார்பையுடைய அப் பாண்டிய மன்னன் வாழ்க என்று சொல்லிப் பந்தினை அடித்திடுவோம் என்றாள் என்க.

(விளக்கம்) பூங்கொடி: அன்மொழித் தொடர் கொடிபோல்வாய் எனத் தோழியை விளித்தவாறு. பொலம்-பொன் . வில்-ஒளி தென்னன்-பாண்டியன். அடித்தும்: தன்மைப்பன்மை. தேவேந்திரன் தான் இட்ட ஆரத்தின் பொறை தாங்காது இவன் அழிந் தொழிக என்று கருதி ஒரு மணியாரத்தை இட்டானாக பாண்டியன் மிக எளிதாகவே அதனைச் சுமந்தான்: ஆதலால் அந் நிகழ்ச்சி அவன் மார்பிற்குப் புகழாயிற்று என்று கொள்க.

21: பின்னும்.............அடித்தும்

(இதன் பொருள்) பின்னும் முன்னும் எங்கணும் பெயர்ந்து வந்து எழுந்து உலாய்-பின்பக்கமும் முன்பக்கமுமாகிய எவ்விடத்தினும் சென்று வந்தும் இருந்தும் எழுந்தும் உலாவியும்; மின்னும் மின் இளங்கொடி வியல் நிலத்து இழிந்து என-ஒளி விடுகின்ற மின்னலாகிய கொடிகள் பெரிய நில உலகத்தின்கண் இறங்கி ஆடுமாப்போலே; சென்று தென்னன் வாழ்க வாழ்க என்று பந்தடித்தும்-அங்குமிங்கும் சென்று பாண்டியன் வாழ்க வாழ்க என்று பாடிப் பந்தடித்து ஆடுவோமாக; தேவர் ஆரமார்பன் வாழ்க என்று பந்தடித்தும் -தேவருக்குரிய மணியாரத்தைப் பூண்ட மார்பினையுடைய பாண்டியன் வாழ்க என்று சொல்லிப் பந்தடித்து ஆடுவோமாக என்க.

(விளக்கம்) எழுந்து என்றமையால் இருந்தும் எழுந்தும் எனக் கொள்க. மின்னு-ஒளி. மின்னிளங்கொடி-கொடி மின்னல்.

22. துன்னி..............அடித்துமே

(இதன் பொருள்) துன்னி வந்து கைத்தலத்து இருந்தது இல்லை நீள்நிலம் தன்னில் நின்றும் அந்தரத்து எழுந்தது இல்லைதான் என-நமது பந்தாட்டத்தைக் காண்பவர் இப் பந்துகள் நெருங்கிவந்து நமது கையிடத்தே இருந்ததும் இல்லை, நீண்ட நிலத்தினின்றும் வானத்தே எழுந்ததும் இல்லை என்று கூறி மருளும் படி; தென்னன் வாழ்க வாழ்க என்று சென்று பந்தடித்துமே; தேவர் ஆரமார்பன் வாழ்க என்று பந்து அடித்துமே என்க; 

(விளக்கம்) காண்பவர் பந்துகள் நிலத்தில் இருக்கின்றனவா அல்லது வானத்திலேயே நிற்கின்றனவா அல்லது இப் பெண்களின்  கையின்கண் இருக்கின்றனவா என்று அறியாதவண்ணம் அத்துணை விரைவாகச் சென்று பந்தடிப்போம் என்றவாறு.

ஊசல் வரி

23: வடங்கொண்மணி..............ஊசல்

(இதன் பொருள்) வடங்கொள்மணி ஊசல் மேல் இரீஇ-கயிறுகளைக்கொண்ட அழகிய ஊசலின் மேல் ஏறி இருந்து; ஐயை உடங்கு ஒருவர் கை நிமிர்த்து ஆங்கு ஒற்றை மேல் ஊக்க- நிலத்தில் நிற்கின்ற ஐயையுடனே நிற்பாருள் யாரேனும் ஒருவர் தமது கையை உயர்த்தி ஒற்றைத் தாளத்தை ஒற்றி அக் கையை மேலே தூக்கும்படியாய்; கடம்பு முதல் தடித்த காவலனைப் பாடி பகைவருடைய காவல் மரமாகிய கடம்பினை வேரோடு வெட்டி வீழ்த்திய சேர மன்னனுடைய புகழ்களைப் பாடிக்கொண்டு; குடங்கை நெடுங்கண் பிறழ ஊசல் ஆடாமோ-உள்ளங்கை அளவிற்றாகிய நமது நெடியகண் பிறழும்படி யாம் ஊசலாடுவோம்; கொடுவில் பொறிபாடி ஊசல் ஆடாமோ-அவ்வரசர் பெருமான் தனது இலச்சினையாகிய வில்லை இமய நெற்றியில் பொறித்த புகழைப் பாடிக்கொண்டு யாம் ஊசல் ஆடுவோம்.

(விளக்கம்) வடம்-ஊசலின் கயிறு. மணி-அழகு. மணிபதித்த ஊசல் எனினுமாம். இரீஇ-இருந்து. உடங்கொருவர்-உடன் நிற்பாரில் ஒருவர். ஒற்றை-ஒற்றைத் தாளம். முதல்-வேர். குடங்கை-உள்ளங்கை. இது கண்ணின் அகலத்திற்கு உவமை. ஆடாமோ: ஓகாரம் வினா. அஃது உடன்பாட்டுப் பொருளை வற்புறுத்தி நின்றது. விற் பொறி-வில்லைப் பொறித்தமை.

24: ஓரைவர்............ஊசல்

(இதன் பொருள்) ஓர் ஐவர் ஈர் ஐம்பதின்மர் உடன்று எழுந்த போரில்-பாண்டவர் ஐவரும் கவுரவர் நூற்றுவரும் தம்முள் கலாய்த்தமையால் தோன்றிய பாரதப் போரின்கண்; போற்றாது பெருஞ்சோறு தான் அளித்த சேரன் பொறையன் மலையன் திறம் பாடி-பொருள் மிகுதியாகச் செலவாகிவிடுமே என்று கருதி அவற்றைப் பேணிக்கொள்ளாமல் போர் முடியுந்துணையும் இரு திறத்துப் படைகளுக்கும் மிக்க உணவினைத் தான் ஒருவனே வழங்கிய வள்ளலாகிய சேரன் பொறையன் மலையன் என்னும் திருப் பெயர்களையுடைய சேரலாதனுடைய பெருந்தகைமையைப் பாடிக்கொண்டு; கார் செய்குழல் ஆட ஊசல் ஆடாமோ கடம்பு எறிந்த ஆ பாடி ஊசல் ஆடாமோ-முகில் போன்ற நமது கூந்தல் ஆடும்படி யாம் ஊசலாடுவோம் அம் மன்னர் பெருமான் பகைவர் கடம்பினை வெட்டி வீழ்த்திய போர் நெறியினைப் பாடிக்கொண்டு ஊசல் ஆடுவோமாக என்க.

(விளக்கம்) ஐவர்-பாண்டவர். ஈரைம்பதின்மலர்-கவுரவர்கள். இவை எண்ணால் வருபெயர். போற்றாது-பொருளினைப் போற்றிக் கொள்ளுவோம் என்று நினையாமல் எனினுமாம். இருவர் படைக்கும் வழங்குதலின் பெருஞ்சோறு எனல் வேண்டிற்று. இங்ஙனம் செய்தவன் பெருஞ் சோற்றுதியன் நெடுஞ்சேரலாதன் என்னும் சேரன் என்க. கார் செய்-என்புழி. செய்-உவமவுருபு. எறிந்தவாறு என்பதன் ஈறு தொக்கது.

25: வன்சொல்...................ஊசல்

(இதன் பொருள்) வன்சொல் யவனர் வளநாடு வன் பெருங்கல் தென்குமரி ஆண்ட-வன்சொல்லையுடைய யவனருடைய வளமிக்க நாட்டினையும் வலிய பெரிய மலையாகிய இமயமலை தொடங்கித் தென்திசைக்கண்ணதாகிய குமரித்துறை வரையில் ஆட்சி செய்தமையால்; செருவில் கயல் புலியான்-போர்க் கருவியாகிய வில்லும் கயல்மீனும் புலியும் ஆகிய முத்தமிழ் வேந்தர்க்குமுரிய இலச்சினைகள் மூன்றனையும் தன்னுடையனவாகக் கொண்டவனும்; மன்பதை காக்கும் கோமான் மன்னன் திறம் பாடி-மக்கள் இனத்தைச் செங்கோன்மை பிறழாமல் காவல் செய்கின்ற மன்னனும் ஆகிய நம் சேரர் பெருமானுடைய செங்கோன்மையைப் புகழ்ந்து பாடிக்கொண்டு; மின்செய் இடை நுடங்க ஊசல் ஆடாமோ விறல்வில் பொறி பாடி ஊசல் ஆடாமோ-மின் போன்ற நம்மிடை துவள யாம் ஊசலாடுவோம். வெற்றி தருகின்ற அவனது வில் இலச்சினையையும் புகழ்ந்து பாடி யாம் ஊசல் ஆடுவோம் என்க.

(விளக்கம்) வன் சொல்-இயல்பாகவே வல்லோசையை உடைய மொழி என்க. வன் பெருங்கல்-இமயம். இமயம் முதல் குமரி வரையில் ஆட்சி செய்தமையின் முத்தமிழ் வேந்தர்க்கும் உரிய மூன்றிலச்சினைகளையும் தனக்கே உரியனவாக்கிக் கொண்டவன் என்பார் செருவில் கயல் புலியான் என்றார். மன்பதை-மக்கள் தொகுதி.

26: தீங்கரும்பு..........பாடல்

(இதன் பொருள்) தீங்கரும்பு நல் உலக்கையாக செழு முத்தம் பூங்காஞ்சி நீழல் அவைப்பார் புகார் மகளிர்-இனிய கரும்புகளையே அழகிய உலக்கைகளாகக் கையிற் கொண்டு வளவிய முத்துக்களாகிய அரிசியை அழகிய காஞ்சி மரத்தின் நீழலின் கீழே குற்றுபவராகிய பூம்புகார் நகரத்து மகளிர்; ஆழிக் கொடித்திண் தேர்ச் செம்பியன்-உருளைகளையும் கொடியையுமுடைய திண்ணிய தேரை உடைய சோழ மன்னனுடைய; வம்பு அலர்தார்ப் பாழித் தடவரைத் தோள் பாடலே பாடல்-புதிதாக மலர்ந்த ஆத்தி மாலையை உடைய விரிந்த பெரிய மலைபோன்ற தோள்களைப் புகழ்ந்து பாடுகின்ற பாடல்களே சிறந்த பாடல்களாம்; பாவைமார் ஆரிக்கும் பாடலே பாடல்-அப் புகார் நகரத்து அம் மகளிர் அங்ஙனம் பாடி ஆரவாரிக்கின்ற பாடல்களே சிறந்த பாடல்களாம் என்க.

(விளக்கம்) வள்ளைப்பாட்டு-உலக்கைப் பாட்டு. அவைப்பார்-குற்றுபவர். ஆழி-தேரினது உருள். கொடி-புலிக்கொடி. வம்பு. புதுமை. தார்-ஈண்டு ஆத்தித்தார். பாழி-அகலம். பாடலே என்புழி ஏகாரம் பிரிநிலை. ஆரிக்கும்: விகாரம். ஆரவாரிக்கும் என்க.

27: பாடல்...............பாடல்

(இதன் பொருள்) பாடல்சால் முத்தம் பவழ உலக்கையால் மாட மதுரை மகளிர்-புலவருடைய பாடலுக்கமைந்த முத்துக்களைப் பவழமாகிய உலக்கையைக் கொண்டு மாடமாளிகைகளையுடைய மதுரை மாநகரத்து மகளிர் குற்றி விளையாடுவர், அங்ஙனம் விளையாடுபவர்; வானவர் கோன் ஆரம் வயங்கிய தோள் பஞ்சவன் தன் மீனக்கொடி பாடும் பாடலே பாடல்-தேவேந்திரன் இட்ட மணியாரம் விளங்குகின்ற தோளையுடைய பாண்டியனுடைய கயல் மீன்கொடியைப் புகழ்ந்து பாடுகின்ற பாடல்களே சிறந்த பாடல்களாம்: வேப்பந்தார் நெஞ்சு உணக்கும் பாடலே பாடல்-அவன் அணிந்துள்ள வேப்பமாலை தமது நெஞ்சினை வருத்தும் தன்மையைப் பாடுகின்ற பாடலே சிறந்த பாடலாம் என்க.

(விளக்கம்) முத்துக்களுள் பாண்டியனுடைய கொற்கை முத்தே புலவர் பாடுதற்கமைந்த சிறப்புடையதாதலின் அதனையே பாடல் சால் முத்தம் என்றார். குறுவர்-குற்றவார். அங்ஙனம் குற்றுபவர் எனச் சில சொல் பெய்து கொள்க. மீனம்-கயல் மீன். உணக்கும் உலர்த்தும் என்றது வருத்தும் என்றவாறு.

28: சந்துரல்...............பாடல்

(இதன் பொருள்) சந்து உரல் பெய்து தகை சால் அணி முத்தம் வான் கோட்டால் வஞ்சி மகளிர் குறுவர்-சந்தன மரத்தால் இயன்ற உரலின்கண் பெய்து அழகமைந்த முத்துக்களை யானையினது வெள்ளிய மருப்பாகிய உலக்கையால் வஞ்சி நகரத்து மகளிர் குற்றி விளையாடுபவர், அங்ஙனம் ஆடுங்கால் அம் மகளிர் பாடுகின்ற; கடந்து அடு தார்ச் சேரன் கடம்பு எறிந்த வார்த்தை படர்ந்த நிலம் போர்த்த பாடலே பாடல்-பகைவரை வஞ்சியாமல் எதிர்நின்று வெல்லுகின்ற வாகை மாலையையுடைய அச் சேர மன்னன் பகைவருடைய கடம்பினை வெட்டி வீழ்த்திய புகழானது அகன்ற இந் நிலவுலகத்தை முழுவதும் மூடிக்கொண்டமையைப் பாடுகின்ற பாடலே சிறந்த பாடலாம்; பனந்தோடு உளங்கவரும் பாடலே பாடல்-அம் மகளிர் அவன் குடியுள்ள பனம்பூ மாலையானது தமது நெஞ்சினைக் கவருகின்ற தன்மையைப் பாடுகின்ற பாடலே சிறந்த பாடல் ஆம்; என்க.

(விளக்கம்) சந்து-சந்தனம். சந்தன மரத்தால் செய்த உரல் என்க. முத்தமாகிய அரிசியைப் பெய்து என்க. வான்கோடு என்றது யானை மருப்பினை. அதனை உலக்கையாகக் கொண்டு குறுவர் என்க, வார்த்தை-புகழ். படர்ந்த நிலம்-விரிந்த நிலம். கவரும் தன்மையைப் பாடும் பாடல் என்க.

கண்ணகித் தெய்வம் செங்குட்டுவனை வாழ்த்துதல்

29: ஆங்கு..............என்று

(இதன் பொருள்) ஆங்கு-அவ்வழி; நீள் நில மன்னர்-நெடிய இந் நிலவுலகத்தை ஆளுகின்ற மன்னருள் வைத்து; நெடுவில் பொறையன் நல் தாள் வாழ்த்தல்-நீண்ட விற் பொறிமையுடைய சேரனுடைய நல்ல திருவடிகளை வாழ்த்துதல்; தாள் தொழார் தமக்கு அரிது-அவனுடைய திருவடிகளை வணங்காத பகை அரசர்களுக்கு மட்டுமே அரியாதொரு செயலாம். ஏனைய மன்னரெல்லாம் வாழ்த்துதல் இயல்பேயாகும், அது கிடக்க; சூழ் ஒளிய எங்கோ மடந்தையும்-தன்னைச் சூழ்ந்துள்ள ஒளி வட்டத்தோடு கூடிய எங்கள் சேரன் மகளாகிய கற்புக் கடவுள் தானும் செங்குட்டுவன் நீடூழி வாழ்க என்று ஏத்தினாள்-செங்குட்டுவன் இவ்வுலகில் நீடூழி வாழ்கவென்று சொல்லித் தன்னுடைய தெய்வ மொழியினால் வாழ்த்தினாள் என்பதாம்.

(விளக்கம்) செங்குட்டுவனுடைய அடிகளை வாழ்த்துவோர் இவ்வுலகத்து மன்னருள் பலர் உளர். அவ் வாழ்த்துப் பெறுதல் அவனுக்கு எளிது. இக் கற்புக் கடவுளின் வாழ்த்தே பெறற்கரிய பேறாம். அத்தகைய பேற்றினை எங்கள் அரசன் பெற்றான் எனக் கண்ணகியின் வாழ்த்துப் பெற்றபின் ஆயமகளிர் தம்முள் உவந்து கூறியவாறு. அத் தெய்வம் தன்னை வையையார் கோமான் மகள் என்றாலும் யாங்கள் எங்கள் சேரன் மகள் என்றே கொள்கின்றேம் என்பது தோன்ற எங்கோ மடந்தையும் ஏத்தினள் என்றார். இங்ஙனம் அக் கற்புக் கடவுள் வாழ்த்தினமையாலே அச் செங்குட்டுவனுடைய புகழ் உலகம் உள்ள துணையும் உளதாம் எனபதில் ஐயமில்லை.

பா. கொச்சகக் கலியால் இயன்ற இசைப் பாடல்கள்

வாழ்த்துக் காதை முற்றிற்று.

 
மேலும் சிலப்பதிகாரம் »
temple news
தமிழில் முதலில் தோன்றிய காப்பியம் சிலப்பதிகாரம் ஆகும். சிலப்பதிகாரத்தை இயற்றியவர் சேரன் ... மேலும்
 
temple news
1. மங்கல வாழ்த்துப் பாடல் (சிந்தியல் வெண்பாக்கள்) திங்களைப் போற்றுதும் திங்களைப் ... மேலும்
 
(நிலைமண்டில ஆசிரியப்பா) உரைசால் சிறப்பின் அரைசுவிழை திருவின்பரதர் மலிந்த பயம்கெழு மாநகர்முழங்குகடல் ... மேலும்
 
(நிலைமண்டில ஆசிரியப்பா) அஃதாவது - கண்ணகியும் கோவலனும் இல்லறம் நிகழ்த்தி வருங்காலத்தே புகார் நகரத்தே ... மேலும்
 
(நிலைமண்டில ஆசிரியப்பா) அஃதாவது - கோவலன் மாமலர் நெடுங்கண் மாதவிக்கு அவள் பரிசிலாகப் பெற்ற மாலைக்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar