பதிவு செய்த நாள்
31
ஆக
2018
11:08
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் வளாகத்தில், பக்தர்கள் காத்திருப்பு அறை கட்ட வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது. அப்பர், சுந்தரர், சம்பந்தர், மாணிக்கவாசகர் ஆகிய நால்வராலும், தேவாரப்பாடல் பெற்ற திருத்தலமான, காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலுக்கு, தினமும் உள்ளூர், வெளியூர் பக்தர்களும், வெளிநாட்டு சுற்றுலா பயணியரும் வந்து செல்கின்றனர்.
காலை , 6:00 மணி முதல், பகல், 12:30 மணி வரையும், மாலை, 4:00 முதல், 8.30 மணி வரை கோவில் நடை திறந்திருக்கிறது. மாலை தரிசனத்திற்காக, 12:30 மணிக்கு மேல் வரும் வெளியூர் பக்தர்கள், கோவில் வளாகத்தில் ஓய்வெடுக்க, நிழல் தரும் இடவசதிஎதுவும் இல்லை. இதனால், கோவிலில் பிரதான ராஜகோபுரத்தின் கீழ் பகுதியில்தரையில் அமர்ந்து ஓய்வெடுக்கின்றனர். பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் போது நிற்பதற்கு கூட இடமில்லாமல் உள்ளது. கோவில் வளாகத்தில் நிழற்கூரையுடன், மின்விசிறி, பொழுது போக்க, ‘டிவி’ மற்றும் இருக்கையுடன் காத்திருப்பு அறை கட்டித்தர வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.