பதிவு செய்த நாள்
31
ஆக
2018
01:08
திருப்பூர் : விநாயகர் சிலைகளுக்கு அனுமதி பெற, ஒற்றைச்சாளர முறையில் இயங்கும், சிறப்பு பிரிவு துவக்கப்பட்டுள்ளதாக, மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. விநாயகர் சதுர்த்தி விழா விசர்ஜன ஊர்வலத்தில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்த ஆய்வுக்கூட்டம் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கலெக்டர் பழனிசாமி தலைமை வகித்தார். போலீஸ் கமிஷனர் மனோகரன், எஸ்.பி., கயல்விழி, துணை கமிஷனர் உமா, டி.ஆர்.ஓ., பிரசன்னா ராமசாமி முன்னிலை வகித்தனர். வரும், 13ம் தேதி நடக்கும், விநாயகர் சதுர்த்தி விழாவை, சிறப்பாக கொண்டாடுவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
கலெக்டர் பேசியதாவது: சப்--கலெக்டர் அல்லது ஆர்.டி.ஓ., மற்றும் போலீஸ் உதவி கமிஷனர்களிடம், தடையில்லா சான்று பெற்று, விநாயகர் சிலைகளை நிறுவ வேண்டும். ஒவ்வொரு சிலைக்கும், 15 நபர்கள் கொண்ட பாதுகாப்பு குழு அமைக்கப்பட வேண்டும். குறைந்தபட்சம், ஐந்து பிரதிநிதிகளை, சிலைகளுக்கு பொறுப்பாளராக அமைக்க வேண்டும். சிலை பொறுப்பாளர்கள், பேட்ஜ் அணிந்திருக்க வேண்டும். அவர்களது பட்டியலை, முன்கூட்டியே போலீஸ் மற்றும் வருவாய்த்துறையில் ஒப்படைக்க வேண்டும். பொறுப்பாளர் பெயர்களை, சிலை அருகே, அனைவருக்கும் தெரியும் வகையில் வைக்க வேண்டும். பிரதிஷ்டை செய்யப்படும் சிலைகளின் உயரம், பீடத்துடன் சேர்த்து, 10 அடிக்கு மேல் இருக்க கூடாது. விழாவில், சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில், களி மண்ணால் செய்த சிலைகளை மட்டும் பயன்படுத்த வேண்டும். ரசாயணபூச்சு மற்றும் பிளாஸ்டர் ஆப் பாரிஸ் கலவையில் செய்த சிலைகளை பயன்படுத்தக்கூடாது. சிலை வைக்கும் இடத்தில், எளிதில் தீ பிடிக்கும் வகையில், மேற்கூரைகள், பக்கவாட்டு தடுப்புகள் அமைக்க கூடாது. விசர்ஜன ஊர்வலம், போலீசார் அனுமதித்த வழிகளில் மட்டும் செல்ல வேண்டும். தவறினால், சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்.
ஊர்வலத்தில், பட்டாசு, வெடி வைக்க கூடாது; அனுமதியில்லாத இடங்களில், ஊர்வலத்தை நிறுத்தக்கூடாது; பிற மதத்தினர் மனம் புண்படும் வகையில் செயல்படக்கூடாது. போக்கு வரத்துக்கோ, பொதுமக்களுக்கோ, இடையூறு ஏற்படாத வகையில், ரோட்டின் இடதுபுறமாக, ஊர்வலம் செல்ல வேண்டும்.ஊர்வலத்தில், எவ்வித ஆயுதங்களையும் எடுத்துவரக்கூடாது. விநாயகர் ஊர்வலத்தில், மது அருந்தியவர்களை அனுமதிக்க கூடாது. அசம்பாவிதம் ஏற்படாமல், அமைதியான முறையில் ஊர்வலம் நடத்தி முடிக்கப்பட வேண்டும். பொறுப்பாளர்களே, முழு பொறுப்பையும் ஏற்க வேண்டும். விநாயகர் சிலைக்கு, தேவையான மின்வசதியை செய்துகொள்ள வேண்டும். ஊர்வலத்தில், போக்குவரத்துக்கோ, பொது சொத்துக்கோ சேதம் விளைவித்தால், அமைப்பாளர்கள்தான் முழு பொறுப்பு ஏற்க நேரிடும். அனுமதி வழங்கிய நேரத்திற்குள், சிலைகளை உரிய இடத்தில் விசர்ஜனம் செய்ய வேண்டும்.
நான்கு சக்கர வாகனங்களான, மினிலாரி, டிராக்டர் போன்றவற்றில் மட்டுமே சிலைகள் எடுத்துச்செல்ல வேண்டும். மாட்டுவண்டி மற்றும் மூன்று சக்கர வாகனங்களில், சிலைகளை எடுத்துச்செல்லக்கூடாது. விநாயகர் சிலை நிறுவ, ஒற்றைச்சாளர முறையில், தடையின்மை சான்று பெற, உதவி போலீஸ் கமிஷனர், டி.எஸ்.பி., அலுவலகங்களில், போலீஸ், மின்வாரியம், தீயணைப்புத்துறை அடங்கிய சிறப்பு பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது. இவ்வாறு, கலெக்டர் பேசினார். சப்-கலெக்டர் ஷ்ரவன்குமார், இந்து முன்னணி, இந்து இயக்கங்களின் பொறுப்பாளர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.