தேனியில் 300 டன் கோயில் கருவறை ஜாக்கிகளால் 3.15 அடி உயர்த்தப்பட்டது
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01செப் 2018 11:09
தேனி, தமிழகத்தில் முதல்முறையாக தேனி வயல்பட்டியில் 300 டன் எடையுள்ள அனுமந்த சேவிதராய பெருமாள் கோயில் கருவறை கட்டடம் , ஆகம விதிப்படி 3.15 அடி உயரத்திற்கு ஜாக்கிகள் மூலம் உயர்த்தப்பட்டது.200 ஆண்டுகால பழமை வாய்ந்த இக்கோயில் மூலஸ்தான கருவறையானது சமதளத்திற்கு கீழ் அமைந்துள்ளது. இதனால் ஆகம விதிப்படி திருப்பணிக் குழுவினர் அக்கட்டடத்தை மட்டும் தரைத்தளத்தில் இருந்து 3.15 அடி உயர்த்த திட்டமிட்டனர்.
24 அடி நீளம், 12 அடி அகலம் கொண்ட கருவறையானது முற்றிலும் கருங்கற்களால் கட்டப்பட்டது.இதன் மொத்த எடை 300 டன் (3 லட்சம் கிலோ). ஹரியானா மாநிலம் யமுனாநகரை சேர்ந்த எம்.சி.எம்.டி., இன்ஜினியரிங் ஒர்க்ஸ் தனியார் நிறுவனம் கருவறையை உயர்த்தும் பணியில் ஈடுபட்டது. 24 நாட்களுக்கு முன் பணியை துவக்கிய 10 ஊழியர்கள், 200 ஜாக்கிகளை வைத்து, கருங்கற்கள் அடங்கிய கருவறையை உயர்த்தினர். 36 அடி உயரமுள்ள கருவறை கட்டடம் 3.15 அடி உயர்த்தப்பட்டு மொத்தம் 39.15 அடியில் நிலைநிறுத்தப்பட்டது.இந் நிறுவனத்தின் சார்பில் தமிழகத்தில் கடந்த மூன்றரை ஆண்டுகளில் 1,074 கட்டடங்கள் அடித்தளத்தோடு உயர்த்தப்பட்டுள்ளன. அதில் அதிகபட்சமாக 13 அடி வரை கட்டடம் உயர்த்தப்பட்டுள்ளது. சமீபத்தில் மதுரையில் உள்ள புனித தோமஸ் சர்ச் குருசடை கோபுரம் 4 அடி உயரம் உயர்த்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் இந்து கோயில் கருவறை கட்டடம் உயர்த்தப்படுவது தேனியிலேயே முதல் முறையாகும்.கோயில் திருப்பணிக்குழுத் தலைவர் குபேந்திரபாண்டியன் கூறியதாவது:கோயில் கருவறை சமதளத்திற்கு கீழ் சென்றதால் உயர்த்தப்பட்டது. அனைத்துப் பணிகளும் முடிந்து கும்பாபிஷேக தேதி முடிவு செய்யப்படும். நிறுவனத்தினர் கருங்கற்கள் சேதமடையாதபடி பணி செய்கின்றனர், என்றனர்.