பதிவு செய்த நாள்
01
செப்
2018
11:09
சென்னிமலை: சென்னிமலை அருகே, 108 வலம்புரி சங்கு பூஜை, கூட்டு வழிபாடு நடந்தது. சென்னிமலை அருகே, கிழக்கு புதுப்பாளையத்தில், கன்னிமார் சுவாமிகள் மற்றும் கருப்பணசாமி கோவில் உள்ளது. இங்கு ஆண்டு தோறும், ஆவணி மாதத்தில் மூன்று நாட்கள், திருவிழா மற்றும் கூட்டு வழிபாடு நடக்கும். நடப்பாண்டு வழிபாடு, நேற்று காலை தொடங்கியது. மூலஸ்தான இடத்தில் பூஜை, கணபதி ?ஹாமம், 108 திருவிளக்கு பூஜை, 108 வலம்புரி சங்கு பூஜை, லஷ்மி பூஜை, காயத்ரி பூஜை, கோமாத பூஜைகள் நடந்தன. மதியம் பிரசாதம் வழங்கப்பட்டது. இன்று காலை, 8:00 மணிக்கு, கன்னிமார் சுவாமிக்கு தங்க நகை மற்றும் வெள்ளி கவசத்துடன் மஹா தீபாரதனை நடக்கிறது. அதை தொடர்ந்து அன்னதானம் வழங்கப்படுகிறது. சிறப்பு பூஜையில் ஈரோடு, கரூர், திருப்பூர், திண்டுக்கல், தஞ்சாவூர், கோவை, நீலகிரி மாவட்டங்களில் இருந்து, ஆயிரக்காணக்கான பக்தர்கள் கலந்து கொள்வர். இதனால் சென்னிமலை பஸ் ஸ்டாண்டில் இருந்து, சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. நாளை காலை, 9:00 மணிக்கு, மஞ்சள் நீர் அபிஷேகத்துடன் மூன்று நாட்கள் கூட்டு வழிபாடு நிறைவடைகிறது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாக கமிட்டி தலைவர் மாணிக்கமுதலியார், செயலாளர் சுவாமிநாதன் தலைமையில் நிர்வாகிகள் செய்துள்ளனர்.