பேரூர் ஆதினம் சாந்தலிங்க ராமசாமி அடிகள் முக்தியடைந்தார்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01செப் 2018 11:09
கோவை, கோவை பேரூர் ஆதினம் சாந்தலிங்க ராமசாமி அடிகள் நேற்று முக்தியடைந்தார். தமிழகத்தின் பழமையான ஆன்மிக அமைப்பான பேரூர் ஆதினத்தின் மடாதிபதி சாந்தலிங்க ராமசாமி அடிகள், 94, உடல்நிலை பாதிக்கப்பட்டு 10 நாட்களாக சிகிச்சை பெற்று வந்தார். நேற்று காலை உடல்நிலை மோசமடைந்து மதியம் 12:15 மணிக்கு முக்தியடைந்தார். ஆதின வளாகத்தில், அவரது உடலுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. அவரது உடலுக்கு ஆன்மிகவாதிகள், மடாதிபதிகள், அரசியல் கட்சியினர் அஞ்சலி செலுத்தினர். இரவு 7:00 மணிக்கு ஆதின வளாகத்தினுள் உடல் சமாதி செய்யப்பட்டது.பேரூர் ஆதினம் சாந்தலிங்க ராமசாமி அடிகள் கோவை மாவட்டம் அன்னுார் முதலிபாளைத்தை சேர்ந்த சிவராமசாமி அடிகள், கற்பினி அம்மையார் தம்பதியருக்கு 1925ம் ஆண்டு பிறந்தார். 15 வயதில் திருமடப்பணிகளில் ஈடுபடுத்தி கொண்டார். பேரூர் ஆதினத்தின் குருவாக இருந்த ஆறுமுக அடிகள் இவரை இளைய பட்டமாக நியமித்தார். 1967ல் ஆதினத்தின் மடாதிபதியாக நியமித்தார்.ஏழை மாணவர்களின் கல்வி மேம்பாட்டுக்காக பல்வேறு பணிகளை மேற்கொண்டார். தமிழ் அர்ச்சனை முறை, தமிழ்முறைப்படி குடமுழுக்கு ஆகியவற்றை மக்கள் இடையே கொண்டு சென்றார். தாய்மொழி வழிக்கல்வியை வலியுறுத்தினார்.