பதிவு செய்த நாள்
03
செப்
2018
01:09
ராஜபாளையம்: மகாவிஷ்ணுவின் 9-வது அவதாரமான கிருஷ்ணர் பிறந்த தினத்தை கிருஷ்ண ஜெயந்தியாக கொண்டாடப்படுகிறது. ராஜபாளையம் சுற்று வட்டாரப்பகுதி வீடுகள், கோயில்கள், பள்ளிகளில் இதையொட்டி சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. வீடுகளில் குழந்தையின் பாத சுவடுகளை தெருவில் இருந்து வீட்டுக்குள் வருவது போன்று வரைந்திருந்தனர். கிருஷ்ணர் நள்ளிரவில் பிறந்ததாக புராண வரலாறுகளில் கூறப்பட்டுள்ளபடி, இரவில் ஆரம்பித்த கொண்டாட்டம் அதிகாலை வரை தொடர்ந்தது. ராஜபாளையம் சொக்கலிங்காபுரம் கிருஷ்ணன் கோயில் சார்பில், அலங்கரிக்கப்பட்ட சப்பரம் ஊரைச்சுற்றி வர, பெண்கள் கோலாட்டத்துடன் ஆரத்தி விளக்கு ஏந்தி வந்து வழிபட்டனர். ஊர்வலத்தை அடுத்து, கிருஷ்ணர் வேடமிட்ட இளைஞர் உறியடியில் பங்கேற்று பானை உடைத்தார். வழுக்குமரம் ஏறும் கொண்டாட்டத்தில் திரளான இளைஞர்கள் பங்கேற்று கொண்டாடினர். இதே போல் மீனாட்சிபுரம், கலங்காப்பேரி எஸ்.ராமலிங்காபுரம் கிராமப்பகுதிகளிலும் விமரிசையாக கொண்டாடப்பட்டது.
* ராஜபாளையம் நவபாரத் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளி, எஸ்.ராமலிங்காபுரம் நவபாரத் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் குழந்தைகள் விதவிதமாக கிருஷ்ணர் ராதை வேடமிட்டு வந்து கலை நிகழ்ச்சிகள் நடத்தினர். நிகழ்ச்சிக்கு பள்ளி தாளாளர் நாராயணராஜா தலைமை வகித்தார். மெட்ரிக் பள்ளி முதல்வர் ஜெயலட்சுமி வரவேற்றார். சிறப்பாக வேடமிட்டு கலை நிகழ்ச்சிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு டிரஸ்டி கணேசன் பரிசு வழங்கினர்.
* கலங்காபேரி ஸ்ரீ அய்யன் கேந்திர வித்யாலயா பள்ளியில் மழலையர் வகுப்பு மாணவர்களால் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப்பட்டது. அனைவரும் கிருஷ்ணர், ராதை உடையணிந்து வந்து, ஆடி, நடித்துக்காட்டினர். விழாவில் மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள், உறியடித் திருவிழா நடந்தது. பள்ளி தாளாளர் பால்கண்ணன், செயலாளர் காளிமுத்து ராமானுஜதாசர் தலைமை வகித்தனர். முதல்வர் கார்த்திகேயன், ஒருங்கிணைப்பாளர் பிருந்தா ஏற்பாடுகளை செய்தனர்.
* ராஜபாளையம் என்.ஏ.ராமச்சந்திரராஜா குருகுலப் பள்ளயில் நடந்த விழாவிற்கு மம்சாபுரம் சிவந்திபட்டி நாடார் பள்ளி தலைவர் வடிவேல் தலைமை வகித்தார். பள்ளி தலைவர் கிருஷ்ணமூர்த்தி ராஜா, தாளார் மஞ்சுளா முன்னிலை வகித்தனர். பஜனை, மாறுவேடப்போட்டி, கிருஷ்ணர், ராதை வேடங்கள் அணிந்து மழலையர் தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் சத்யாவித்யாலயா பள்ளியில் கிருஷ்ணஜெயந்தி விழா, தாளாளர் குமரேசன் தலைமையில் நடந்தது. மாணவர்கள் கிருஷ்ணன், ராதை வேடமிட்டு பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடத்தினர். ஆசிரியை தேவி பேசினார். இயக்குனர்கள் டாக்டர் சித்ரா, அரவிந்த், ஆலோசகர் பாரதி, முதல்வர் முருகதாசன், துணை முதல்வர் சத்தியமூர்த்தி, நிர்வாக அலுவலர் அமுதா மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.
* ஸ்ரீவில்லிபுத்துார் ஒயிட்பீல்டு பள்ளியில் தாளாளர் ராஜாராம் தலைமையில் கிருஷ்ணஜெயந்தி விழா நடந்தது. முதல்வர் வனிதா, உதவி முதல்வர் தேவி மற்றும் ஆசிரியர்கள், பள்ளி அலுவலர்கள், மாணவர்கள் பங்கேற்றனர். மாணவர்கள் கண்ணன், ராதை வேடமிட்டிருந்தனர்.