உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை அடுத்த பாதூர் கிராமத்தில் அமைந்துள்ள பூரணி பொற்கலை அயய்னார் கோவில் ஊரணி பொங்கல் மற்றும் சுவாமி குதிரை சவாரி ஊர்வலம் நடந்தது.
இதற்கான விழா கடந்த 10ம் தேதி காப்பு கட்டுதலுடன் துவங்கியது. தொடர்ந்து 20ம் தேதி இரவு அய்யனார் சுவாமி கலரிக்கு கொண்டு வரப்பட்டு தீபாரதனையும், 21ம் தேதி இரவு சிறப்பு பூஜையை தொடர்ந்து கடந்த 12 நாட்களும் தினசரி இரவில் சுவாமி வீதியுலா நடைபெற்றது. 13ம் நாளான நேற்று முன்தினம் (செப்., 2ல்) காலை 8:00 மணிக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை, பக்தர்கள் ஊரணி பொங்கலிட்டு பூஜை செய்தனர். மாலை 3:30 மணிக்கு அய்யனார் சுவாமி மண்டபத்தில் வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகளுடன் ஊர்வலம் நடந்தது. பக்தர்கள் வீடு தோறும் சுவாமிக்கு மாலை அணிவித்து வழிபட்டனர்.
தொடர்ந்து மாலை 5.30 மணிக்கு ஏரியிலுள்ள அய்யனார் மண்டபம் அருகே குதிரை சவாரி வலமும், பாரி ஓட்டம் நடந்தது. அப்போது திரண்டிருந்த பக்தர்கள் தங்களது வேண்டுதல் நிறைவேற்றுவதற்காக வேர்க்கடலை கம்பு உள்ளிட்ட தானிய வகை பயிர்களையும், காசுகளை வீசி நேர்த்தி கடனை செலுத்தினர்.