பதிவு செய்த நாள்
10
செப்
2018
02:09
ஈரோடு: விநாயகர் சிலைகளை, வாய்க்கால்களில் கரைக்க கூடாதென, ஈரோடு கலெக்டர் எச்சரித்துள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கை: சதுர்த்தி விழாவை ஒட்டி, ஈரோடு மாவட்டத்தில், விநாயகர் சிலை வைக்க திட்டமிட்டுள்ள பொறுப்பாளர்கள், சிலை வைக்கும் இடத்தின் உரிமையாளர், ஒலி அமைக்க உரிய அலுவலர் மற்றும் தீயணைப்பு துறையினரிட மிருந்தும் தடையின்மை சான்று பெற்றபின், அரசால் பரிந்துரைக்கப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்து, சம்பந்தப்பட்ட டி.எஸ்.பி.,யிடம் சமர்ப்பிக்க வேண்டும். சிலை அமையவுள்ள இடத்தை, எஸ்.பி.,யால் தணிக்கை செய்து, ஆர்.டி.ஓ.,வுக்கு பரிந்துரை செய்வார். அதன்பின் சிலை வைக்க அனுமதிக்கப் படும். பிளாஸ்டர் ஆப் பாரிஸ், தடைசெய்யப்பட்ட வர்ணங்களை, சிலை தயாரிக்க பயன்படுத்த கூடாது. சுத்தமான களிமண், இயற்கை வர்ண பொருட்களால் செய்திருக்க வேண்டும். அருகாமையில் உள்ள ஆறுகளில் மட்டுமே, சிலைகளை கரைக்க வேண்டும். விவசாயத்துக்கு பயன்படுத்தப்படும் வாய்க்கால்களில் கரைக்ககூடாது. உரிய அனுமதியின்றி விநாயகர் சிலை நிறுவப்பட்டால், சிலையின் உரிமையாளர் அல்லது பொறுப்பாளர் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும். வாய்க்கால்களில் கரைத்தாலும், நடவடிக்கை பாயும். இவ்வாறு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.