பதிவு செய்த நாள்
10
செப்
2018
02:09
ஈரோடு: ஈரோடு இந்து முன்னணி, மாநகர் மாவட்டம் சார்பில், 30வது ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா, வரும், 13ல் கொண்டாடப்படுகிறது. இந்து முன்னணி சார்பில் மூன்று அடி முதல், 10 அடி வரையில், விநாயகர் சிலை தயாரிக்கும் பணி, சில மாதங்களாக நடந்தது. தற்போது பணி முடிந்து, நேற்று முதல் விற்பனை செய்யப்படுகிறது. முன்கூட்டி முன் பணம் அளித்தவர்களுக்கு மட்டும், சிலை வழங்கப் படுகிறது. பலர் நேற்றே சிலைகளை எடுத்து சென்றனர். சிவலிங்கம் வைத்திருக்கும் விநாயகர், குதிரை வாகன விநாயகர், ஜல்லிகட்டு விநாயகர் என பல்வேறு வகை சிலைகள் தயார் செய்து வைக்கப்பட்டுள்ளன. 10 அடி உயர விஸ்வரூப சிவசக்தி விநாயகர், ஈரோடு சம்பத் நகரில் வைக்கப்பட உள்ளது. மாநகரில் உள்ள, 60 வார்டுகளில், 220 சிலைகளும், ஒன்றிய பகுதியான கொடுமுடி, மொடக்குறிச்சி, பெருந்துறை, சென்னிமலையில் வைக்க, 300 சிலைகளும் தயார் நிலையில் உள்ளன. சிலைகள், 13ல் அமைக்கப்படும்; 15ல் ஊர்வலம் நடக்கும். காகித கூழ், கிழங்கு மாவினால் மட்டுமே சிலை தயாரிக்கப்பட்டுள்ளதாக, இந்து முன்னணி நிர்வாகிகள் தெரிவித்தனர்.