பதிவு செய்த நாள்
12
செப்
2018
02:09
நாமக்கல்: சதுர்த்தியை முன்னிட்டு, மாவட்டம் முழுவதும், 622 இடங்களில், விநாயகர் சிலை வைக்க போலீசார் அனுமதி அளித்துள்ளனர்.
நாடு முழுவதும், விநாயகர் சதுர்த்தி விழா நாளை (செப்., 13), கோலாகலமாக கொண்டாடப் படுகிறது. அதையடுத்து, ஆங்காங்கே தெரு, சாலை மற்றும் வீடுகளில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு நடத்துவது வழக்கம். நாமக்கல் மாவட்டத்தில், இந்து முன்னணி உள்ளிட்ட அமைப்புகள், பொதுமக்கள் சார்பில், 622 இடங்களில் சிலை வைத்து வழிபாடு நடத்த போலீசார் அனுமதி அளித்துள்ளனர். அரசு விதிமுறைப்படி சிலைகளை பாதுகாப்பாக வைக்க ஏற்பாடு செய்வதுடன், ஊர்வலத்தின் போதும், எவ்வித அசம்பாவிதமும் ஏற்படாத வகையில் விதிமுறைளை கடைபிடிப்பதுடன், அவற்றை மீறக்கூடாது என, சிலை வைப்பவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. சதுர்த்தி நெருங்கி விட்டதால், நாமக்கல் மற்றும் சுற்று வட்டாரங் களில், விநாயகர் சிலை விற்பனை சூடுபிடித்துள்ளது. அரை அடி முதல், ஐந்து அடி உயரம் வரை உள்ள பல்வேறு வடிவங்களில் உருவாக்கப்பட்டுள்ள சிலைகளை, பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கிச் செல்கின்றனர். அவற்றின் விலை, 30 முதல், 3,000 ரூபாய் வரை உள்ளது. மேலும், களிமண்ணால் செய்யப்பட்ட, ரசாயன வர்ணங்கள் பூசப்படாத சிலைகள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பபை பெற்றுள்ளது.