பதிவு செய்த நாள்
13
செப்
2018
12:09
நாகப்பட்டினம்: இயற்கை சீற்றங்களில் இருந்து பாதுகாக்கவும், தங்களை வாழவைக்கும் கடல் அன்னைக்கு மரியாதை செலுத்தும் விதமாக, நாகையில் மீனவ கிராம பெண்கள், கடல் நீரில் பாலுாற்றி,பூஜை பொருட்களை விட்டு, நீராடி வழிபட்டனர். கடலில் மீன்பிடிக்கச் செல்லும் தங்கள் குடும்பத்தினர் பாதுகாப்பாக கரை திரும்பவும், தங்களுக்கு வாழ்வளிக்கும் கடல் அன்னைக்கு மரியாதை செலுத்தும் விதமாக, நாகை, அக்கரைப்பேட்டை மீனவப் பெண்கள் ஆண்டுதோறும், சமுத்திர ராஜ வழிபாடு நிகழ்ச்சியை நடத்துவது வழக்கம்.நிகழ்ச்சியை முன்னிட்டு, நாகை, அக்கரைப்பேட்டை முத்துமாரியம்மன் கோவிலில் சப்தகன்னிகளுக்கும், சந்தனம், பால், இளநீர், தயிர்,வெண்ணெய்,விபூதி, நாணயங்கள் மற்றும் பல்வேறு மங்கள பொருட்களால் அபிஷேகம் மற்றும் தீபாராதனை செய்யப்பட்டது. பின் கோவிலில் இருந்து மீனவர்களும், மீனவப் பெண்களும், பூஜை பொருட்கள் மற்றும் பழங்களுடன், ஊர்வலமாக கடல் பகுதிக்கு சென்றனர். அங்கு கடல் நீரில், பாலுாற்றி அபிஷேகம் செய்து, மங்கள பொருட்கள், பழங்களை கடலில் விட்டு, நீராடி, பக்தி பரவசத்துடன் சமுத்திர ராஜ வழிபாடு நடத்தி, கடல் அன்னையை வழிபட்டனர்.