மதுரைக்கு விழாநகரம் எனச் சிறப்புப் பெயர் உண்டு. நாள்தோறும் ஏதேனும் ஒருவிழா யாதேனும் ஒரு காரணம் பற்றி எங்கேனும் ஒரு மூலையில், ஒரு தெருவில், சாலைக்கோயிலில் நடைபெற்றுக் கொண்டே இருக்கும் தகுதி நோக்கி இச்சிறப்புப்பெயரை மதுரை மாநகரம் பூண்டது. இவ்விழாக்களுள், மதுரை பிரதானக் கோயிலான ஸ்ரீ மீனாக்ஷி திருக்கோயிலின் ""எழுநாளத் திருவிழா மிகக்சிறப்புடைய விழாவாகப் பண்டைக்காலத்தில், மதுரை நகரில் கொண்டாடப்பட்டதாய் இலக்கியங்களின் மூலம் அறிகிறோம். இவ்விழா ஏழு நாட்கள் மதுரையில் தொடர்ந்து நடைபெறுவதால் இப்பெயர் பெற்றது. இவ்விழாவிற்கு ""கணம் என்ற வேறு பெயரும் உண்டு.