பதிவு செய்த நாள்
17
செப்
2018
01:09
திருப்பூர்: திருப்பூர் ஷீரடி சாய் பீடம் கோவிலில், சாய்பாபா புனித பாதுகையை திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். இறைவனை தரிசிக்கும் போது திருவடி தொடங்கி திருமுடி வரை தரிசிக்க வேண்டும் என்பர். இறைவனின் திருவடிகளுக்கு அத்தனை உயர்வு. தீட்சைகளிலேயே திருவடி தீட்சைதான் மிகவும் உயர்வானதாக கூறப்படுகிறது. நம்பிய அடியவர்களை காக்கும் கண்கண்ட தெய்வமாம், ஸ்ரீ ஷீரடி சாய் பாபா மஹாசமாதி அடைந்து நுாறாண்டு ஆகிறது.
இருப்பினும், அவரின் அருள் சக்தி நாள்தோறும் பல்கி பெருகி அடியவர்களை காத்து வருகிறது. எனவே, ஸ்ரீ ஷீரடி சாய்பாபாவின் மஹாசமாதி நுாற்றாண்டு என்பதை முன்னிட்டு அனைத்து பாபா ஆலயங்களிலும், சிறப்பான வழிபாடுகள் மற்றும் உற்சவம் நடத்தப்படுகிறது. அவ்வகையில், திருப்பூர், யுனிவர்சல் தியேட்டர் அருகிலுள்ள ஸ்ரீ ஷீரடி சாய் பீடம் கோவிலில், சாய்பகவானின் திருப்பாதுகைகளை எழுந்தருளச் செய்து, பக்தர்களின் தரிசனத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்காக, மகாராஷ்டிரா மாநிலம், ஷீரடி சாய்பாபா கோவிலில் இருந்து, அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் சாய் பகவானின் பாதுகைகள், நேற்று திருப்பூருக்கு வருகை தந்தது. வேத மந்திரங்கள் ஒலிக்க பாதுகைகளை எடுத்து சென்று, சாய்பாபா கோவில் அருகேயுள்ள ஆலயத்தில் வைக்கப்பட்டது.
காலை, 6:00 மணிக்கு விேஷச பூஜை நடத்தப்பட்டு, பக்தர்கள் தரிசனத் துக்கு, அனுமதிக்கப்பட்டது. கோவிலை ஒட்டிய பகுதியில், மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, ஆலயம், பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. இரவு, 7:00 மணி வரை, பல ஆயிரக்கணக்கான பக்தர்கள், நீண்ட வரிசையில் காத்திருந்து, பாதுகையை தரிசனம் செய்தனர். சாய் பக்தர்கள் சிலர் கூறுகையில், ‘காணக்கிடைக்காத அரிய பொக்கிஷம் சாய்பகவானின் திருப்பாதுகை, திருப்பூருக்கு வந்தது, அனைவரும் செய்த புண்ணியும்’, என்று நெகிழ்ந்தனர். எங்கும் கீர்த்தனை பாடல்கள் ஒலிக்க, பக்தர்களுக்கு, பூஜை செய்யப்பட்ட கயிறு, கற்கண்டு பிரசாதம் வழங்கப்பட்டது. அலைமோதிய பக்தர்கள் கூட்டத்தை, போலீசார் ஒழுங்குபடுத்தினர். பாபாவின் அருள் மற்றும் சிறப்புகளை எடுத்துரைக்கும் வகையில், அபிேஷக் வீரமணி, கோவை நாகசாயி இன்னிசை இடம்பெற்றன. மேலும், ஸ்ரீநிதியின் பரத நாட்டிய நிகழ்ச்சியும் நடந்தது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை திருப்பூர் ஷீரடி சாய் பீடம் டிரஸ்ட் தலைவர் அரிஸ்டோ ரவி, செலாளர் ஏ.சக்திவேல், இணை செயலாளர் எஸ்.சக்திவேல், பொருளாளர் செந்தில் நாராயணன் ஆகியோர் செய்திருந்தனர்.