பதிவு செய்த நாள்
19
செப்
2018
11:09
யாவத்மால்:மஹாராஷ்டிர மாநிலத்தில், மத நல்லிணக்கத்தை போற்றும் வகையில், விநாயகர் சிலையும், மொகரம் பண்டிகைக்கான பொருட்களும், ஒரே இடத்தில் வைத்து வழிபாடு செய்யப்பட்டன.
மஹாராஷ்டிர மாநிலத்தின், யாவத்மால் மாவட்டத்தில், விதுல் என்ற கிராமம் உள்ளது. இங்கு, ஹிந்துக்களும், முஸ்லிம்களும் சகோதரர்களாக பழகி வருகின்றனர்.சமீபத்தில், நாடு முழுவதும், விநாயகர் சதுர்த்தி பண்டிகை கொண்டாடப்பட்டது. முஸ்லிம் பண்டிகையான மொகரமும் விரைவில் வரவுள்ளது.இந்த இரு பண்டிகைகளையும், ஒரே நேரத்தில் நடத்த, மாவட்ட, எஸ்.பி., மேக்நாதன் ராஜ்குமார் விரும்பினார். இதை, கிராம மக்களிடம் கூறினார். அவர்களும், அதற்கு சம்மதம் தெரிவித்தனர்.
இதையடுத்து, கிராமத்தில் உள்ள கோவில் அருகே பந்தல் அமைத்து, விநாயகர் சிலையும், மொகரம் பண்டிகைக்கான பொருட்களும், ஒரே இடத்தில் வைத்து வழிபாடு செய்யப்பட்டன.
இதற்கு தேவையான ஏற்பாடுகளை, போலீசார் செய்திருந்தனர். ஹிந்து மற்றும் முஸ்லிம் மதங்களைச் சேர்ந்தவர்கள் வழிபாடு செய்ய, தனித்தனியாக நேரம் ஒதுக்கப்பட்டு இருந்தது. இந்த சம்பவம், நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.