ராஜபாளையம்: ராஜபாளையத்தில் உள்ள இந்து அறநிலைய துறைக்கு உட்பட்ட அஞ்சல் நாயகி உடனுறை, மாயூரநாதர் திருக்கோயிலில் மாவட்ட நீதிபதி முத்துசாரதா ஆய்வு மேற்கொண்டார்.இந்து அறநிலையத்துறைக்கு பாத்தியப்பட்ட கோயில்களில் உள்ள பாதுகாப்பு, சுற்று சூழல் மற்றும் பக்தர்களுக்கு செய்யப்பட்டுள்ள வசதிகள் குறித்து மாவட்ட நீதிபதிகள் ஆய்வு செய்ய உயர் நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவின்படி, ராஜபாளையம் மாயூரநாதர் திருக்கோயிலில் விருதுநகர் மாவட்ட முதன்மை நீதிபதி முத்துசாரதா நேற்று முன் தினம் இரவில் ஆய்வு மேற்கொண்டார். குடிநீர் வசதிகள் குறித்து ஆய்வு செய்த நீதிபதி தண்ணீரை குடித்து பார்த்து உறுதி செய்தார். அன்னதான மண்டப சமையலறை சுத்தம், காய்கறிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். ஊழியர்கள், காலிப்பணியிடங்கள், பண்டிகை நாட்களில் ஏற்பாடு குறித்து கேட்டறிந்தார். ஊழியர்கள் அடையாள அட்டை அணியவும், கோயில் வளாகம் சுத்தமாக இருக்க, பக்தர்கள் வசதிக்காக கூடுதலாக பாதுகாப்பு, கோயில் பிராகரம் மற்றும் சுற்றுப்பகுதியில் மின் விளக்கு வசதி ஏற்படுத்தவலியுறுத்தினார்.
சாத்துார்: சாத்துார் வெங்கடாசலபதி கோயிலில் மாவட்ட முதன்மை நீதிபதி முத்துசாரதா தலைமையில சாத்துார் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் மாவட்ட உரிமையியல் நீதிபதிகள் கீதா, சண்முகவேலு ஆய்வு செய்தனர்.
சிவகாசி: சிவகாசி சிவன் கோயில், திருத்தங்கல் நின்ற நாராயண பெருமாள் கோயிலில் நீதிபதி ஆய்வு செய்தார்.