பதிவு செய்த நாள்
06
பிப்
2012
11:02
திசையன்விளை:உவரி அந்தோணியார் திருத்தல பெருவிழா நடந்தது. தென்மாவட்டங்களில் உள்ள மிகவும் பிரசித்தி பெற்ற கிறிஸ்தவ ஆலயங்களில் ஒன்றான கோடி அற்புதர் என அழைக்கப்படும் உவரி அந்தோணியார் திருத்தல பெருவிழா கடந்த மாதம் 24ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நேற்று வரை 13 நாட்கள் நடந்தது. விழாவில் முதலாம் திருவிழாவில் மதுரை உயர் மறைமாவட்ட பேராயர் பீற்றர் பர்னாந்து அடிகள் புதிய கொடிமரத்தை மந்திரித்து கொடியேற்றி திவ்ய நற்கருணை ஆசீர் வழங்கினார். இரண்டாம் திருவிழாவில் தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் இவோன் அம்புரோஸ் அடிகள் திருத்தலத்தில் புதிய வளர்ச்சி பணிகளை ஆசீர்வதித்து மறையுரை நற்கருணை ஆசீர் வழங்கினார். திருவிழா நாட்களில் தினமும் பல்வேறு திருப்பலிகளும், ஜெபமாலை, மறையுரை, நற்கருணை ஆசீர் மற்றும் நிகழ்ச்சிகளும் நடந்தது.12ம் திருவிழாவான நேற்று முன்தினம் காலையில் பக்தர்கள் வெளியூர் திருப்பயணிகள் முதல் திருப்பலி, எட்வர்ட் லியோன்தாஸ் அடிகள் தலைமையில் திருப்பவனி திருப்பலி நடந்தது. மாலையில் உவரி பங்கு ஆலயத்திலிருந்து சிவகங்கை மறைமாவட்ட முன்னாள் ஆயர் எட்வர்ட் பிரான்சிஸ் அடிகளாரை அலங்கார ஊர்தியில் வாணவேடிக்கை, பேண்டு வாத்தியம் முழங்கிட பல்வேறு பக்த சபையாரும், ஊராரும் பவனியாக அந்தோணியார் திருத்தலத்திற்கு அழைத்து வந்தனர். அங்கு அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து ஆயர் தலைமையில் புனிதரின் பெருவிழா மாலை ஆராதனை நடந்தது. பவளம்கலை தொடர்பு பணிக்குழு இயக்குநர் ஜெரால்டுரவி அடிகள் மறையுரையாற்றினார். 13ம் திருவிழாவான நேற்று அதிகாலையில் முதல் திருப்பலியும், தொடர்ந்து ஆயர் எட்வர்ட் பிரான்சிஸ் தலைமையில் புனிதரின் பெருவிழா கூட்டுத் திருப்பலியும் நடந்தது. இதில் பல்வேறு ஊர்களை சேர்ந்த பங்கு தந்தையர்களும், நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் தமிழகம், கேரளாவை சேர்ந்த திரளான பக்தர்களும் கலந்து கொண்டனர். காலையில் மலையாள திருப்பலியும், புனித அந்தோணியார் திருஉருவ சப்பர பவனியும், மாலையில் திவ்ய நற்கருணை ஆசீரும் நடந்தது. விழா ஏற்பாடுகளை திருத்தல தந்தையர்கள் பர்னபாஸ் அடிகள், லாரன்ஸ் அடிகள், சந்தீஷ்டன் அடிகள், திருத்தல நிதிக்குழுவினர், திருத்தல வளர்ச்சி பணிக்குழு, பக்த சபையினர், பங்கு மக்கள் செய்திருந்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை உவரி போலீசார் செய்திருந்தனர். விழாவிற்கு பல்வேறு ஊர்களில் இருந்து உவரிக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டிருந்தது.