பதிவு செய்த நாள்
06
பிப்
2012
11:02
பூதப்பாண்டி: பூதப்பாண்டி பூதலிங்கசுவாமி சிவகாமியம்பாள் கோயில் தேர் திருவிழா நேற்று நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பூதப்பாண்டி பூதலிங்கசுவாமி சிவகாமியம்பாள் கோயில் தை பெரும் திருவிழா கடந்த மாதம் 29ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழா நாட்களில் தினமும் சுவாமியும் அம்பாளும் காலை மற்றும் இரவு நேரங்களில் பூங்கோயில் வாகனம், காமதேனு வாகனம், வெள்ளி ரிஷப வாகனம், பூத வாகனம், சிங்க வாகனம், அன்னவாகனம், கைலாசபர்வத கற்பக விருட்ச வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனவங்களில் வீதி உலா வந்தனர். நான்காம் திருவிழா முதல் எட்டாம் திருவிழா வரை தினமும் மாலை யானை ஸ்ரீபலி நடந்தது. விழா நாட்களில் தினமும் மாலை சமய சொற்பொழிவு, பட்டிமன்றம், பரதநாட்டியம், இன்னிசை, மெல்லிசை கச்சேரிகள், சொல்லரங்கம், தாதஸ்வர கச்சேரி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன. ஒன்பதாம் நாள் விழாவான நேற்று காலை தேர்த்திருவிழா நடந்தது. சுவாமியும் அம்பாளும் தேரில் அமர்ந்து வீதி உலா வந்தனர். நிகழ்ச்சியை தமிழக வனத்துறை அமைச்சர் பச்சைமால் தேர் வடம் பிடித்து இழுத்து துவக்கி வைக்கிறார். மின்வாரிய தலைமை பொறியாளர் பகவதியப்பன், தோவாளை தாசில்தார் வசந்தராஜன், தோவளை பஞ்., யூனியன் தலைவர் பூதலிங்கம்பிள்ளை, பூதப்பாண்டி பஞ்., தலைவர் கரோலின் ஆலிவர் தாஸ், மாவட்ட பஞ்., உறுப்பினர் தாணுபிள்ளை மற்றும் குமரி மாவட்ட திருக்கோயில்கள் அதிகாரகள் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் விழாவில் என்றுமில்லாதத அளவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் என ஏராளமானோர் தேர் இழுத்தனர். பகல் 12.30 மணியளவில் தேர் நிலைக்கு வந்தது. அதன்பின் அன்னதானம் நடந்தது. விழாவையொட்டி நாகர்கோவிலில் இருந்து புத்தேரி, இறச்சகுளம், திட்டுவிளை வழியாக செல்லும் அனைத்து பஸ்களும் பூதப்பாண்டி வழியாக விடப்பட்டது. பஸ்களில் காலையில் இருந்தே மக்கள் கூட்டம் கூட்டமாக வந்தனர். தேர் நிலைக்கு வந்த பின்னரும் ஏராளமான பக்தர்கள் வந்தனர். கடந்த காலங்களில் தேர் நிலைக்கு வர இரண்டு அல்லது மூன்று நாட்கள் ஆனது. கடந்த ஐந்து ஆண்டுகளாக சுமார் மூன்று மணி நேரத்தில் தேர் நிலைக்கு வந்துகொண்டிருக்கிறது. இரவு சுவாமியும், அம்பாளும் வெள்ளி ரிஷப வாகனத்தில் வீதி பவனி வந்தது. அதைத்தொடர்ந்து சப்தாவர்ணம் நடந்தது. தேர்திருவிழாவையொட்டி ரதவீதிகள் மற்றும் முக்கிய தெருக்களில் திருவிழா கடைகள் வைக்கப்பட்டிருந்தன. பக்தர்களுக்கு மோர், தண்ணீர் வழங்கப்பட்டது. பாதுகாப்பிற்காக ஏராளமான போலீசார் நிறுத்தப்பட்டிருந்தனர். பத்தாம் திருவிழாவான இன்று காலை ஆறாட்டு, தெப்பத்திருவிழா நடக்கிறது. விழா ஏற்பாடுகளை குமரி மாவட்ட திருக்கோயில்கள் அதிகாரிகள் மற்றும் பக்தர்கள் சேவா சங்கம் இணைந்து செய்தனர்.