Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
நாயக்கர்களின் அரசாட்சி மீனாக்ஷி திருக்கோவில் நிர்வாகச் ...
முதல் பக்கம் » ஸ்ரீ ராஜ மாதங்கி » 26. நாயக்கர் வரலாறு
மன்னர் திருமலை திருப்பணி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 செப்
2018
02:09

திருமலை நாயக்கர் பொதுவாக திருப்பரங்குன்றத்து முருகப்பெருமான் திருக்கோயில், திருமாலிருஞ்சோலை கள்ளழகர் கோயில், ஸ்ரீ வில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில், திருவரங்கம் பெரிய கோயில், திருவானைக்காவில் இருக்கும் சிவன் கோவில், திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில் ஆகிய இக்கோவில்களிலும் திருப்பணிகள் செய்திருப்பினும் மிகச்சிறப்பாக மதுரை நகரில் இருந்து மீனாக்ஷி அம்மன் திருக்கோயிலுக்குச் செய்த திருப்பணிகளே அளப்பற்கரியவை. அற்புதமானவை. இவர் மீனாக்ஷி அம்மன் சன்னிதியில் உள்ள சங்கிலி மண்டபத்தை கட்டினார். இது கிளிகளை வைத்திருந்த இடத்திற்கு தெற்கு வடக்காய் உள்ளது. இது மீனாக்ஷி சுந்தரேஸ்வரர் கோயிலில் இருந்து சிதைந்துபட்ட கரிய மாணிக்கப் பெருமாள் கோயில் தூண்களைக் கொண்டு அமைக்கப்பட்டது. கி.பி. 7ஆம் நூற்றாண்டில் நிகழ்ந்த சமண சைவ சமயப் பூசல்களுக்குப் பின், வைணவ-சைவப் பூசல்கள் நிகழ்ந்தன. இச் சைவ-வைணவப் போராட்டங்களுக்குப் பின் சிவன் கோவில்களில் பெருமாள் சன்னிதிகளையும் அûத்தற்குரிய இயக்கம் நலிவுற்ற காலத்தில் சிதம்பரத் தில்லை கூத்தப்பெருமான் திருக்கோவில் மதுரை மீனாக்ஷி சுந்தரர் முதலிய பெரும்கோயில்களில் இருசமய ஒருமைப்பாடு ஏற்படப் பெருமாள் சன்னிதிகள் ஏற்பட்டன.

இம்முறையில் மதுரை மீனாக்ஷி சுந்தரர் கோயிலிலும் கரிய மாணிக்கப் பெருமாள் சன்னிதி ஏற்பட்டது. இது மாலிக்காபூர் படையெடுப்பிலும் பின்வந்த வேறு இரண்டு படையெடுப்பிலும் மதுரை நாட்டில் நடைபெற்ற சுல்தான் காலத்திலும் அழிந்து போய்விட்டது. இடிந்து போய்க்கிடந்த இச்சன்னிதியில் இருந்த தூண்களைக் கொண்டே சங்கிலி மண்டபம் கட்டப்படட்தென்பது வரலாறு மேலும் அம்மண்டபத்தூண்களிலும் அனுமார் பஞ்ச பாண்டவர் உருவங்களே இத்தூண்கள் கரிய மாணிக்கப்பெருமாள் சன்னிதியில் இருந்து எடுக்கப்பட்டவை என்பதற்கு போதிய சான்றாகும்.

சிதைந்த கரிய மாணிக்கப் பெருமாள் சன்னிதி பிற்காலத்தில் ஒருவாறு செப்பனிடப்பட்டது. ஆயினும் கரிய மாணிக்கப் பெருமாள் உருவச்சிலை இப்போது அதில் இல்லை. கரிய மாணிக்கப் பெருமாள் சன்னிதி மண்டபம் கூட்டு வழிபாடு நடத்தப்பயன்பட்டிருக்கிறது. இதற்கு வடக்காடி வீதியில் உள்ள திருவள்ளுவர் கழகத்திற்கு பக்கத்தில் இருக்கும் மொட்டைக் கோபுரம் எனும் வடக்குக் கோபுரம் வாயிலுக்கு எதிரில் ஒரு பெரிய வாயில் இருப்பதைக் காணலாம்.

மேற்கண்ட மண்டபத்திற்கு திருப்பணி செய்ததோடு திருமலை மன்னர் பின்னும் ஸ்ரீ மீனாக்ஷி அம்மன் திரு முன்பு அறுகாற் பீடத்தில் இருபெருவாயிற் காவலர் துவார பாலகர் உருவங்களையும் சொக்கநாதர் முன்பு அறுகாற் பீடத்தில் மேலும் இருபெரு வாயிற் காவலர் உருவங்களையும் செய்து வைத்தார். அந்த இரண்டு இடங்களிலும் பலி பீடங்களையும் கொடிக் கம்பங்களையும் துவஜஸ்தம்பங் களையும் அமைத்து அவற்றை பொன்னால் கசவம் செய்து மாட்டி அழகு பார்த்தார். இத்திருப்பணிச் செய்திகளை மதுரைக் கோயில் திருப்பணிமாலைச் செய்யுட்கள் தெரிவிக்கின்றன.

தெப்ப விழா

திருமலை பூபதி வைணவராயினும் சோம சுந்தரப்பெருமான் மீது ஆழ்ந்த பக்தி கொண்டிருந்தார். அவருக்கு நெடுநாள் இருந்த மண்டைச் சளி நோய் சோம சுந்தரப் பெருமான் திருவருளால் நீங்கியது என்பதே இதற்குக் காரணம். ஆதலால் அவர் மீனாக்ஷி யம்மன் கோவில் ஆட்சியை அபிஷேகப் பண்டாரம் என்பவரிடமிருந்து பணமும் நிலமும் கொடுத்து ஏற்றுக்கொண்டு அக்கோயிலில் பற்பல சீர்திருத்தங்களையும் தனிச்சிறப்புகளையும் செய்யலானார். அவர் கோயிலுக்கும் 12,000 பொன் 24,000 ரூபாய் வருமானம் கொடுக்ககூடிய ஐராவத நல்லூர் அயிலனூர், வலையபட்டி, வலையன்குளம், தொட்டியபட்டி, நெடுமதுரை, கொம்படி, பெரிய ஆலங்குளம், ஒற்றை ஆலங்குளம், சொக்கநாதன் பட்டி, ஆண்டிப்பட்டி, தாதன்பட்டி, சின்னமநாயக்கன் பட்டி, போடி நாயக்கன் பட்டி கொண்டையம்பட்டி, தும்பிச்சி நாயக்கன் பட்டி, சம்பைக்குளம், விராலிபட்டி, கிண்ணியம்பட்டி, சடைச்சிபட்டி முதலிய கிராமங்களை விட்டுக்கொடுத்து தம்பெயரால் ஒரு கட்டளை ஏற்படுத்தினார். இக்கட்டளை வருவாயில் மீனாக்ஷி யம்மனுக்கு முக்கால வழிபாடுகளும் சொக்கநாதப் பெருமானுக்கு உச்சி வேளை வழிபாடும் இளவேனிற்கால விழாவும் வசந்தோற்சவம் தெப்பத் திருவிழாவும் நடத்தப்படுகின்றன.

கோவில் வழிபாடு நடத்தி வந்தவர்களான விக்கிரம பாண்டியர் பட்டர் வகைக்கும், குலசேகர பாண்டியர் வகைக்கும் நீண்ட நாளாய்ச் சச்சரவு இருந்து வந்தது. கோவில் வழிபாடு செம்மையான முறையில் நடைபெற வேண்டுமானால் இச்சச்சரவு நீங்க வேண்டும் ஆதலால் திருமலை நாயக்கர் இன்ன இன்ன வகையினர் இன்னவை இன்னவை செய்ய வேண்டுமென்று திட்டம் போட்டுக் கொடுத்து தக்க முறையில் எல்லாம் நடைபெறுமாறு ஏற்பாடு செய்தார். இவ்வேற்பாட்டால் கோயில் ஆட்சியில் ஒழுங்கும் அமைதியும் உண்டாயின.

நிர்வாகம் ஒழுங்கு: திருமலை இவ்வாறு பட்டர்கள் நிர்வாகத்தை ஒழுங்கு செய்த பின்பு சாத்திர வல்லுநரும் தமக்கு அமைச்சருமாக இருந்த நீலகண்டதீட்சிதருடன் ஆராய்ந்து நான்கு பெரு விழாக்களையும் திருவிளையாடல் புராணத்தில் கூறப்பட்டுள்ள சில திருவிளையாடல்களை விழாக்களாக்கி அவைகளையும் நடத்த ஏற்பாடு செய்தார். அவ்விழாக்களுக்கு வேண்டிய திருவாபரணங்களையும் செய்து வைத்தார். குதிரை வாகனத் தலைமுடிப்பாகை, இரத்தினக்கொண்டை திருக்கல்யாண முடி, நீல நாயக பதக்கம், குதிரை ரத்தின அங்க வடி, வீரகண்டை, இருதலைபட்சி பதக்கம், இரத்தின சூரியகாந்திப்பூ, இரத்தின வெண்டயம், நாகர் ஒட்டியாணம், குசாந்திர பதக்கம், துரைப்பதக்கம், இரத்தினச் செங்கோல், பள்ளியறை காலாங்கி, சொர்ணக்கும்பா, பவளக்கொடி மாலை ஆகியவை திருமலை நாயக்கர் செய்துகொடுத்தவற்றுள் சிலவாம்.

இச்செய்திகளை மதுரை தூய மரியன்னை உயர்நிலைப்பள்ளியில் தமிழாசிரியராய் இருந்த மு. கோவிந்தசாமி அய்யர் அவர்களால் முன்பு ஆராய்ச்சி செய்து 1922ல் வெளியிட்ட திருமலை நாயக்கர் சரித்திரம் எனும் நூலில் கூறப்பட்டிருப்பதாய் அறியலாகும். மாசித்திங்களில் ஸ்ரீ மீனாக்ஷியம்மன் திருக்கல்யாண விழாவும் தேரோட்ட விழாவும் நடந்து வந்தன. இம்மாசித் திங்கள் அறுவடை காலமாக இருந்ததால் திருமலை நாயக்கர் செய்து கொடுத்த தேர்களை இழுக்க ஆட்கள் கிடைப்பது அரிதாய் இருந்தது. அக்காலத்தில் திருமாலிருஞ்சோலை மலையில் இருந்து கள்ளழகர் எழுந்தருளி மதுரைக்கு மிக அருகிலிருக்கும் தேனூர் வரை சித்ரா பௌர்ணமியன்று வந்துபோவது வழக்கமாய் இருந்தது. இவ்விழாவிற்கு மக்கள் ஆயிரக்கணக்காய் வருவதைக் கண்ட திருமலை மாசித்திங்களில் நடந்து வந்த திருக்கல்யாண விழாவையும், தோரோட்டத்தையும், சித்திரை திங்களில் நடக்கவும், சித்திரையில் நடந்து வந்த விழாக்களை மாசியில் நடக்கவும் மாற்றியமைத்தார்.

ஸ்ரீ மீனாக்ஷியம்மன் கோயில் பெருவிழாவை ஒட்டி கள்ளழகர் தேனூர்க்குப் போவதை விட்டு மதுரை வண்டியூர் வரைக்கும் வருமாறு செய்தார். சைவத்திற்கு நகராய் விளங்கி வந்த பெருமை மிக்க திருமதுரையில் சைவக்கோவில் பெருவிழாவும் திருமாலிருஞ்சோலை வைணவத் திருவிழாவும், அடுத்தடுத்து வரச்செய்ததால் இரு சமய ஒற்றுமைக்கும் பெருந்திரளாக மக்கள் கூடுவதற்கும் வழி செய்து விட்டார். இன்றும் சித்ரா பௌர்ணமி பெருவிழா இலட்சகணக்கான மக்களைக் கவரும் விழாவாக இருந்து வருகிறது.

திருவிளையாடல்கள்

திருவிளையாடல் புராணத்தில் கூறியுள்ள திருவிளையாடல்களை விழாக்களாக மீனாக்ஷியம்மன் கோவிலில் நடைபெறவும் செய்தார் மன்னர் திருமலை. ஆதலால் திருவிளையாடல் விழாக்களுள் சில திங்கள் தோறும் இன்றும் நடைபெற்று வருவதைக் காணலாம். புரட்டாசித் திங்களில் அரண்மனையில் நவராத்திரி விழா சிறப்பாய் நடைபெற்றதைப் போல் மதுரைக் கோயிலிலும் நடைபெற திருமலை மன்னர் ஏற்பாடு செய்தார். இந்த விழா புரட்டாசித் திங்களில் இன்றும் வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் திருமலை பூபதி தாம் பிறந்த தை மாத பூச நட்சத்திரத்தைக் கொண்டாடும் வகையில் வண்டியூர் மாரியம்மன் கோவிலுக்கு எதிரில் பெரிய தெப்பக்குளத்தை வெட்டுவித்து அதில் அழகிய மைய மண்டபத்தை அமைத்து அப்புறத்தில் தெப்பத்திருவிழா நடைபெற ஏற்பாடு செய்தார். இத்தைப்பூசத் திருவிழா மிகச்சிறப்பாக திருமலை பிறந்த நாள் ஒட்டி சித்திரைத் திருவிழாவுக்கு அடுத்த பெருவிழாவாக ஆயிரக்கணக்கான மக்கள் கூடி தரிசிக்கும் விழாவாக இன்றும் தைத்திங்களில் நடந்து வருகிறது.

புது மண்டபம்

திருமலை மேலும் சுந்தேரஸ்வரர் சன்னதிக்கு எதிரில் மிக அழகிய சிற்ப வேலைகள் அமைந்த புது மண்டபத்ததைக் கட்டி அதில் வசந்த விழா நிகழ்த்தி நடத்தி வைத்தார். இப்புதுமண்டபத்தைக் கட்டிய சிற்பி சுந்தர மூர்த்தி ஆச்சாரி ஆவார். இப்புதுமண்டபத்தின் தூண்களில் திருமலை நாயக்கர் உருவமும் அவருக்கு முன்னிருந்தோர் உருவங்களும் செதுக்கப்பட்டுள்ளன. புது மண்டபத்தைக் கட்டி சில நாட்களில் திருமலை அவர்கள் ஆவணி மூல வீதியைக் கோவிலுடன் சேர்த்து அதையும் ஒரு பிரகாரமாக் கருதி மேற்படி ஆவணி மூல வீதியினைச் சுற்றி மதில் எடுத்தும் புது மண்டபத்திற்கு எதிரில் ராயக்கோபுரம் கட்ட எண்ணி கி.பி 1684ல் நந்தன ஆண்டில் வேலையைத் துவக்கினார். இதைப்போலவே இராயகோபுரம் கட்டத் துவங்கப்பட்டது. மதுரை இராய கோபுரம் ஏறக்குறைய 60 அடி உயரம் உள்ளது. இக்கோபுரம் முடிந்திருந்தால் இந்தியாவில் இருக்கும் மிகச்சிறந்த கட்டிடங்களில் இதுவும் ஒன்றாக விளங்கியிருக்கும் என மதுரை நகரவை ஆணையராக இருந்த ஜீபியர் ஷெனாய் ஐ.ஏ.எஸ் - பார் அட் லா அவர்கள் தமது கோயில் நகரம் மதுரை எனும் சிறந்த நூலில் குறிப்பிட்டிருக்கிறார்கள். இந்த இராய கோபுர வேலை 64 ஊர்களிலும் நடைபெறாமல் நின்று விட்டது. மீனாக்ஷி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலை தமிழகத்தில் உள்ள மற்றைய கோயில்களை விட மிகமிகச் சிறந்த கோயிலாக மாற்றிய பெருமை திருமலை மன்னர்க்கே உரியதாகும்.

விஜயரங்கச் சொக்கநாத நாயக்கர் வில்லாபுரத்தில் மீனாக்ஷி யம்மமனும் சொக்கநாதரும் எழுந்தருளுகிற போது தங்கியிருக்க வசதியாய் இருக்கும் பொருட்டு எழில் மண்டபம் ஒன்று அமைத்தார். இதையும் மதுரைக் கோயில் திருப்பணி மாலைச் செய்யுள் குறிப்பிடுகிறது. இவ்வாறு மதுரை நாயக்கர்கள் கோயில்களைக் கட்டி மதுரை ஸ்ரீ மீனாக்ஷி அம்மன் கோயிலில் பலப்பல திருப்பணிகள் செய்து விழாக்களை நடத்தி மக்கள் மனதில் இறைப்பற்று நீங்காது நின்று எழும்புமாறு செய்தார்கள். மதுரை நாட்டில் நாயக்கர் ஆட்சி இல்லாமல் இருந்தால் சுல்தான் ஆட்சியே நீடித்திருந்தால் சைவமும் வைணவமும் என்னவாயிருக்கும்?

தமிழர் பண்பாடு எத்தகைய அவல நிலையுற்றிரு க்கும்? கற்பனைக் கண்ணால் சற்று எண்ணிப்பார்க்க வேண்டும்! எனவே இந்து சமயத்தையும் நம்தமிழர் பண்பாட்டையும் மதுரை நாயக்கர்கள் கோயில் திருப்பணிகளாலும் கோயில் விழாக்களாலும் பாதுகாத்து வந்ததை நன்றியுடன் தமிழர்கள் மறவாது நினைக்க கடமைப்பட்டவர்கள் ஆவார்கள். நாயக்கர் மன்னர்களுள் 8-வது மன்னராகப் பட்டத்திற்கு வந்தவர் திருமலைநாயக்கர். கி.பி. 1623-1659 காலத்தில் மதுரைக் கோவிலின் வளர்ச்சியை, திருப்பணியை மேம்படுத்தியவர்களுள் நாயகமாக விளங்கியவர் என்பது மிகையாகாது. மன்னர்களில் மகத்தானவராய்த் திகழ்வதற்கு அவருடைய மனத்தின்கண் ஆழ வேர்விட்டிருந்த ஆன்மீக உணர்வின்கண் தழைத்த இறை உணர்வுப் பண்பே காரணமாகும்.

திருநெல்வேலி நெல்லையப்பர் திருக்கோவிலும், திருச்சிராப்பள்ளியைச் சேர்ந்த அகிலாண் டேஸ்வரி திருக்கோவில், திருவரங்கப் பெருமானின் வைணவப் பெரிய கோவில், ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோவில், மதுரையைச்சேர்ந்த கள்ளழகர் திருக்கோவில், திருப்பரங் குன்றத்துப் பெருமான் முருகவேள் கோவில் என திருப்பணிகளை மேற்க்கொண்டாரெனினும், மதுரை ஸ்ரீ மீனாக்ஷி யம்மன் திருக்கோவிலின் மீது திருமலைமன்னர் கொண்ட அளவிடற்கரிய ஈடுபாட்டின் காரணமாய் தன் தலைநகரை திருச்சிராப்பள்ளியிலிருந்து மதுரைக்கு மாற்றினார். மேலும் அவரது நெடுநாளைய நோய் அன்னையை வேண்டிக் கொண்டதால் நீங்கியது. அதன் காரணமாயும் அன்னை மீது அளவற்ற ஆழ்ந்த பக்தியும், நம்பிக்கையும், கொண்டவரானார்.

 
மேலும் ஸ்ரீ ராஜ மாதங்கி 26. நாயக்கர் வரலாறு »
காலம்        -    –    நாயக்க மன்னர்களின் பெயர்கள்கி.பி.1404        –    இலட்சுமண ... மேலும்
 
மதுரை நாயக்கர்கள் மதுரைப் பெருநாட்டை கி.பி. பதினாறாம் நூற்றாண்டின் துவக்கத்தில் இருந்து கி.பி. ... மேலும்
 
கி.பி. 1529-1564ல் மன்னர் விஸ்வநாத நாயக்கர் கோவில் நிர்வாகத்தை அபிஷேகப் பண்டாரம் வசம் ஒப்படைத்திருந்தார். ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar