பதிவு செய்த நாள்
04
அக்
2018
10:10
திருவனந்தபுரம் : சபரிமலை அய்யப்பன் கோவிலுக்குள், அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்ற, உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து, சீராய்வு மனு தாக்கல் செய்யப் போவதில்லை என, கேரள அரசும், திருவாங்கூர் தேவசம் போர்டும் தெரிவித்துள்ளன. தீர்ப்பை எதிர்த்து, மேல்முறையீடு செய்யப் போவதாக, ஏற்கனவே அறிவித்திருந்த தேவசம் போர்டு, திடீரென, பல்டி அடித்திருப்பது, சபரிமலை பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அனுமதி மறுப்பு : கேரளாவில், முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான, இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. இந்த மாநிலத்தின், பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள சபரிமலையில், பிரசித்தி பெற்ற அய்யப்பன் கோவில் உள்ளது. ஆண்டுதோறும், மகர விளக்கு பூஜை காலத்தில், இந்த கோவிலுக்கு, லட்சக்கணக்கான பக்தர்கள், 48 நாட்கள் விரதம் இருந்து, இருமுடி கட்டிச் சென்று, அய்யப்பனை வழிபட்டு வருகின்றனர். எனினும், இந்த கோவிலில், 10 - 50 வயது வரை உள்ள பெண்கள் வழிபடு வதற்கான தடை, பல ஆண்டுகளாக உள்ளது. இந்த வயதுக்கு உட்பட்ட காலத்தில், பெண்கள், மாதவிடாய் நிலையை எதிர்கொள்வதால், சபரி மலையில், பிரம்மச்சாரி கோலத்தில் உள்ள அய்யப்பனை தரிசிக்க, அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு வந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, இந்திய இளம் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த, ஐந்து நீதிபதிகள் அடங்கிய அமர்வு, சபரிமலையில் அனைத்து வயது பெண்களும் வழிபட அனுமதி உண்டு என, சமீபத்தில் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்புக்கு, கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்த தீர்ப்பை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்யப் போவதாக, சபரிமலை கோவிலை நிர்வகிக்கும், திருவாங்கூர் தேவசம் போர்டு, ஏற்கனவே தெரிவித்திருந்தது.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக, கேரள முதல்வர் பினராயி விஜயன், திருவனந்தபுரத்தில் நேற்று கூறியதாவது: சபரிமலை கோவிலுக்குள், அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்ற, உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து, கேரள அரசு சார்பில், மறு சீராய்வு மனு தாக்கல் செய்யப் போவதில்லை. திருவாங்கூர் தேவஸ்வம் போர்டும், மறு சீராய்வு மனு தாக்கல் செய்யாது. தீர்ப்பை முழு மனதுடன் ஏற்கிறோம்.
பாதுகாப்பு: உச்ச நீதிமன்ற தீர்ப்பை செயல்படுத்த வேண்டியது, அரசின் கடமை. சபரிமலை கோவிலுக்கு செல்லும் பெண்களுக்கு, தேவையான பாதுகாப்பு வழங்கப்படும்.கோவிலுக்குள் பெண்கள் சென்று வழிபடுவதை தடுக்க, யாருக்கும் உரிமையில்லை. சட்டம் - ஒழுங்கு பிரச்னையை ஏற்படுத்தினால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இது தொடர்பாக, கோவில் நிர்வாகத்துக்கு, ஏற்கனவே உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார். உச்ச நீதிமன்ற தீர்ப்பு குறித்து, திருவாங்கூர் தேவசம் போர்டின் தலைவர், பத்மகுமார் கூறுகையில், சபரிமலை கோவிலுக்கு பெண்களை அனுமதிக்கும் விவகாரத்தில், உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, சீராய்வு மனு தாக்கல் செய்யும் திட்டம் எதுவும் இல்லை, என்றார்.