பதிவு செய்த நாள்
04
அக்
2018
12:10
காஞ்சிபுரம்: நவராத்திரி விழாவையொட்டி, காஞ்சிபுரத்தில் கொலு பொம்மை விற்பனை, களை கட்டியுள்ளது. உள்ளூர், வெளியூர், வெளிமாநிலங்களை சேர்ந்தோர் தங்களுக்கு தேவையான பொம்மைகளை தேர்வு செய்து வாங்கிச் செல்கின்றனர்.நாடு முழுவதும், நவராத்திரி விழா, அக்., 10ல் துவங்குகிறது.
விழாவையொட்டி கோவில்களிலும், பலரது வீடுகளிலும் கொலு பொம்மை வைக்கும் பழக்கம் இருந்து வருகிறது. இதற்காக மதுரை, கடலூர், புதுச்சேரி, கும்பகோணம் உள்ளிட்ட பகுதிகளில் கொலு பொம்மை தயார் செய்யப்படுகிறது.இதில், பாரம்பரிய பட்டு நெசவுக்கு புகழ்பெற்ற காஞ்சிபுரத்தில், கலைநயமிக்க நவராத்திரி கொலு பொம்மைகளை தயாரிக்கும் கலைஞர்களும் உள்ளனர்.இந்தாண்டு நவராத்திரிக்காக, கடந்த ஆண்டே பணியை துவக்கிய இவர்கள், இரவு, பகலாக பொம்மை தயாரிப்பில் தீவிரம் காட்டி வருகின்றனர்.விற்பனைக்கு தயாராக உள்ள பொம்மைகளை உள்ளூர், வெளியூர், ஆந்திரா, கர்நாடகா என, வெளிமாநிலங்களை சேர்ந்தவர்கள், காஞ்சிபுரத்திற்கு வந்து, தங்களுக்கு தேவையான பொம்மைகளை தேர்வு செய்து, வாங்கிச் செல்கின்றனர்.
இதுகுறித்து பொம்மை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள, காஞ்சிபுரம் அஸ்தகிரி தெருவை சேர்ந்த, சி.கோபிநாத் கூறியதாவது:மண் பாண்டங்கள் செய்யும் குலாலர் மரபை சேர்ந்த நாங்கள், முதலில் மண்பாண்டம் மட்டுமே செய்து வந்தோம்.
நாகரிக வளர்ச்சியால் மண் பாண்டங்கள் போதுமான வியாபாரம் ஆகவில்லை.இதனால், நவராத்திரி கொலு பொம்மை, விநாயகர் சதுர்த்தி, கிருஷ்ண ஜெயந்தி, கார்த்திகை மாத அய்யப்ப சீசனுக்கேற்ற பொம்மைகள் செய்கிறோம். எங்களைப்போன்று, காஞ்சிபுரத்தில், 15க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன.
நவராத்திரி முடிந்து, 10 முதல், 20 நாட்கள் ஓய்வு எடுப்போம். அதன் பின், அடுத்த ஆண்டுக்கான, பொம்மை தயாரிப்பை துவக்குவோம்.சீசனுக்கேற்ப, விநாயகர், கிருஷ்ணர், அய்யப்பன் பொம்மைகளை அதிகளவில் தயார் செய்வோம். ஆண்டுதோறும், புதுவிதமான செட்களை அறிமுகம் செய்துவருகிறோம்.
கல்யாணம், சீமந்தம், காஞ்சி வரதர் கருடசேவை, ஜோதிர்லிங்கம், ஆழ்வார்கள், நவநரசிம்மர் என, 80க்கும் மேற்பட்ட செட் பொம்மைகள் உள்ளன.
நவராத்திரிக்கு கொலு வைக்க குறைந்த பட்சம், 10 ஆயிரம் ரூபாய் முதல், மூன்று லட்சம் ரூபாய் வரை கொலு பொம்மை செட் உள்ளன.அவரவர் வசதி விருப்பத்திற்கேற்ப பொம்மைகள் வாங்கிச் செல்கின்றனர்.
ஒவ்வொரு ஆண்டும் புதுப்புது செட்களை அறிமுகம் செய்கிறோம். இந்தாண்டு, திருப்பதி வெங்கடேச பெருமாள், வியாழக்கிழமையில், புடவை, ஜடை அணிந்து காட்சி தரும், நேத்ர தரிசன பெருமாளை அறிமுகம் செய்துள்ளோம். இங்கிருந்து சர்வோதயா சங்கம் மற்றும் அமெரிக்கா, மலேஷியா, சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்கிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.
குழந்தைகளை கவரும், சோட்டா பீம் செட்கொலு வைப்பதற்கு பலவிதமான பொம்மை இருந்தாலும், குழந்தைகளை மிகவும் கவர்வது பறவைகள், விலங்குகள், பழங்கள், காய்கறிகள், கார்ட்டூன் பொம்மைகள் தான். இதில், சோட்டா பீம் செட்டை குழந்தைகளுக்காக விரும்பி வாங்கிச் செல்கின்றனர்.
இந்த செட்டில், சோட்டா பீம், சுட்கி, ராஜூ, ஜக்கு, இந்துமதி, காலியா, போலு, டோலு என, சோட்டாபீம் கேரக்டர் பொம்மைகள் இடம் பெற்றுள்ளன.