பதிவு செய்த நாள்
05
அக்
2018
10:10
திருவனந்தபுரம் : சபரிமலை விவகாரத்தில், உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து, மறு சீராய்வு மனு தாக்கல் செய்யப் போவதில்லை என, கேரள அரசு அறிவித்துள்ளதற்கு, பா.ஜ., - காங்., கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. கேரளாவில், முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான, இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. இங்கு, பத்தனம்திட்டா மாவட்டத்தில், பிரசித்தி பெற்ற, சபரிமலை அய்யப்பன் கோவில் உள்ளது. இங்கு, அனைத்து வயது பெண்களும் வழிபட உரிமை உள்ளது என, உச்ச நீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பு அளித்தது; இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இந்த தீர்ப்பை எதிர்த்து, மறு சீராய்வு மனு தாக்கல் செய்யப் போவதில்லை; சபரிமலையில், அக்., ௧௬ முதல், பெண்கள் அனுமதிக்கப்படுவர் என, முதல்வர் பினராயி விஜயன், நேற்று முன்தினம் அறிவித்தார். சபரிமலை கோவிலை நிர்வகிக்கும், திருவாங்கூர் தேவசம் போர்டும், மறு சீராய்வு மனு தாக்கல் செய்யப் போவதில்லை என, அறிவித்துள்ளது. இந்நிலையில், கேரள அரசின் அறிவிப்புக்கு, பா.ஜ., மற்றும் காங்., கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. மாநில, பா.ஜ., தலைவர், ஸ்ரீதரன் பிள்ளை கூறியதாவது: சபரிமலை கோவிலின் புகழ் மற்றும் பெருமையை சீர்குலைக்க, இடதுசாரி கட்சியினர் தொடர்ந்து முயற்சித்து வருகின்றனர். அய்யப்ப பக்தர்களின் நம்பிக்கையை, முதல்வர் பினராயி விஜயன் அவமதித்துள்ளார். இந்த விவகாரத்தில், பக்தர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, பிடிவாதம் பிடிக்காமல், உச்ச நீதிமன்றத்தில் மறு சீராய்வு மனுவை, கேரள அரசு தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
காங்., மூத்த தலைவர், ரமேஷ் சென்னிதாலா கூறியதாவது: சபரிமலை விவகாரத்தில், பக்தர்களின் நம்பிக்கைக்கு, காங்., மதிப்பளிக்கிறது. இந்த விஷயத்தில், பா.ஜ., மற்றும் ஆர்.எஸ்.எஸ்., அமைப்புக்கு உண்மையான அக்கறையிருந்தால், மத்திய அரசை அணுகி, உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக, சட்டம் இயற்ற வேண்டும். பக்தர்களின் உண்ர்வுகளை, மாநில அரசு மதிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். இதற்கிடையே, கேரளாவில், உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. திருவனந்தபுரத்தில் உள்ள திருவாங்கூர் தேவசம் போர்டு அலுவலகம் முன், பா.ஜ., மகளிர் அணியினர், முற்றுகை போராட்டம் நடத்தினர். அலுவலகத்திற்குள் நுழைய விடாமல், அவர்களை போலீசார் தடுத்தனர். இதையடுத்து, அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.