பதிவு செய்த நாள்
06
அக்
2018
11:10
மதுரை: சபரிமலை ஐயப்பன் கோயிலில் பெண்களை அனுமதித்ததை உச்ச நீதிமன்றம் மறுசீராய்வு செய்ய வேண்டும் என வலியுறுத்தி முதல்முறையாக மதுரையில் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளோம், என பக்தர் கண்ணன் கூறினார்.உண்ணாவிரதத்தை துவக்கி வைத்து கண்ணன் பேசியதாவது:48 நாட்கள் விரதம் இருந்து இருமுடி சுமந்து ஐயப்பனை பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர்.
மண்டல விரதம் இருப்பது 10 வயதுக்கு மேற்பட்ட 50 வயதுக்கு உட்பட்ட பெண்களால் இயலாது. இதை கேரள பெண் பக்தர்கள் உணர்ந்துள்ளனர். ஐயப்பன் கோயிலுக்கு செல்ல மாட்டோம் என கோயில்களில் சத்தியம் செய்து வருகின்றனர். ஐயப்பன் மீது நம்பிக்கை வைத்துள்ள நம் பெண்கள் செல்ல மாட்டார்கள். சிவகாசி, சென்னையில் உண்ணா விரதம் நடக்கவுள்ளது. உச்ச நீதிமன்றம் தனது உத்தரவை மறுசீராய்வு செய்ய வேண்டும், என்றார். சுப்பையா, சுப்பிரமணியன், ஹரிஹரன், ரவி, லோகிதாஸ் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
மதுரை பக்தர்கள் கூறியதாவது:தவிட்டுச்சந்தை அலமேலு: எனக்கு 54 வயதாகிறது. பேரன், பேத்திகள் உள்ளனர். சிறு வயதில் இருந்தே ஐயப்பன் கோயிலுக்கு செல்ல வேண்டும் என்ற ஆசை இருந்தது. 50 வயது கடந்த பிறகு தான் செல்ல வேண்டும் என பெரியோர் கூறினர். அதற்கு கட்டுப்பட்டு 50 வயது பூர்த்தியானதும் கடந்த மூன்று ஆண்டுகளாக கோயிலுக்கு சென்று வருகிறேன். கோயில் ஐதீகத்தை மதிக்க வேண்டும்.
ஜெய்நகர் குருசாமி கருப்பையா: கார்த்திகையில் மாலை அணிந்து, ஒரு வேளை உணவு மட்டுமே உண்டு, கட்டாந்தரையில் துண்டை விரித்து உறங்கி, அதிகாலை எழுந்து நீராடி, ஐயப்பனை வழிபடுவதில் இருக்கும் பேரானந்தம் பக்தர்களுக்கே உரித்தானது. சன்னியாச கோலத்தில் வீற்றிருக்கும் ஐயப்பனை பெண்கள் வழிபடக்கூடாது என்றில்லை. ஆகம விதிகள் படி அதற்கான வயதை எட்டியதும் வழிபடலாம்.
நடராஜ் நகர் உஷா: என் கணவர் ஐயப்ப பக்தர். ஆண்டு தோறும் விரதம் இருந்து சபரிமலை செல்கிறார். விரதம் இருக்கும் 48 நாட்களும் ஐயப்பனே வீட்டில் தங்கியிருப்பது போன்ற உணர்வு ஏற்படும். எனக்கும் தரிசிக்க வேண்டும் என்ற ஆவல் உள்ளது. 50 வயது கடந்தபின் ஐயப்பனை காண செல்வேன் அதற்காக காத்திருப்பது ஐப்பனே விடுத்த கட்டளை என்பதை உணர்ந்துள்ளேன். இவ்வாறு கூறினர்.