பதிவு செய்த நாள்
08
அக்
2018
12:10
நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு, திருவல்லிக்கேணி, மயிலாப்பூர் மாட வீதிகளில், கொலு பொம்மைகள் விற்பனை களை கட்டியுள்ளது.பராசக்தி சண்டிகா தேவி, மகிஷா சுரமர்த்தினியாக அவதரித்து, அசுரனை வீழ்த்திய விழாவே, நவராத்திரி மகோற்சவம். நவராத்திரி விழாவை, உ.பி.,யில் ராம்லீலா, வங்காளத்தில் காளிபூஜை, துர்கா பூஜையாகவும், கர்நாடகத்தில் தசராவாகவும் கொண்டாடுகின்றனர்.
தமிழகத்தில், நவராத்திரி விழா, 10 நாட்கள் விமர்சையாக கொண்டாடப்படும். இந்த ஆண்டிற் கான நவராத்திரி விழா, 10ம் தேதி துவங்குகிறது.நவராத்திரியின் போது, வீடுகளில் கொலு வைத்து, பெண்களை அழைத்து, தாம்பூலம் தருவது பாரம்பரியமாக உள்ளது. ஒவ்வொரு நவராத்திரிக்கும், புதிய பொம்மைகள் வாங்கி, கொலுவில் வைப்பதும் வழக்கத்தில் உள்ளது.நவராத்திரிக்கு சில நாட்களே இருப்பதால், திருவல்லிக்கேணி, மயிலாப்பூர் மாட வீதிகள், மேற்கு மாம்பலம், நங்கநல்லூர் உள்ளிட்ட இடங்களில், கொலு பொம்மைகள் விற்பனை சூடுபிடித்துள்ளது.மேலும், பூம்புகார், காதிபவன், காதிகிராப்ட் ஆகியவற்றிலும், கொலு பொம்மை விற்பனை கண்காட்சி நடந்து வருகிறது. தனியார் கைத்திறத் தொழில் நிறுவனங்களும், ஆங்காங்கே கடைகள் விரித்துள்ளன.மண், பீங்கான், ரப்பர், டெரக்கோட்டா ஆகியவற்றால் ஆன, பிரதான தெய்வங்கள், தசாவதார செட், கும்பகர்ணன், சீதா கல்யாணம், திருமண செட், விளையாட்டு போட்டிகள், கைவினைஞர்கள், அரசியல் தலைவர்கள், விலங்குகள், பறவைகள் என சகல உயிரினங்களும், பொம்மைகளாக காட்சியளிக்கின்றன.
கொலு பொம்மைகள் குறைந்த பட்சம், 20 ரூபாயில் இருந்து, 2,000 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகின்றன.