உளுந்துார்பேட்டை: உளுந்துார்பேட்டை அடுத்த பாதுார் அகத்தீஸ்வரர் சமேத பிரத்தியங்கராதேவி அம்மன் கோவிலில்மகாளய அமாவாசையொட்டி நிகும்பலா யாகம் நடந்தது.அதனையொட்டி நேற்று காலை 10.30 மணிக்கு சிறப்பு யாகம் வளர்க்கப்பட்டது. தொடர்ந்து யாக குண்டத்தில் பழங்கள், நெய் ஊற்றப்பட்டு யாகம்வளர்க்கப்பட்டது. கோவில் பரம்பரை அறங்காவலர் அருணாச்சல குருக்கள் ஆசியுடன் 5 குருக்கள் வேத மந்திரங்கள் முழங்க யாக குண்டத்தில் மிளகாய் வற்றல் கொட்டப்பட்டு யாகம் வளர்க்கப்பட்டது.
பக்தர்கள் தங்களது வேண்டுதலை நிறைவேற்ற கோரி எழுதிய வெற்றிலையை யாக குண்டத்தில் கொட்டினர். பின்னர் யாக குண்டத்தில் புடவையும், தாலி, வளையல்கள் சாற்றப்பட்டன. தொடர்ந்து பழவகைகள், பால், தயிர், நெய் யாக குண்டத்தில் கொட்டி தீபாரதனை நடந்தது. நிகும்பலா யாகத்தையொட்டி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.கள்ளக்குறிச்சி:எம்.ஆர்.என்., நகர் பத்ரகாளியம்மன் கோவிலில் நேற்று மகாளய அமாவாசையையொட்டி பத்ர காளியம்மன், பெரியநாயகி அம்மனுக்கு மலர்களால் அலங்காரம் செய்து சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. பெண்கள் குங்குமார்ச்சனை செய்தனர். கோவிலில் நாகாத்தம்மன், சக்தி அம்மன், காட்டேரி அம்மன் சாமிகளுக்கு சிறப்பு ஆராதனைகள் செய்யப்பட்டது. தொடர்ந்து ஒரு மணி நேரம் நடந்த நிகும்பலா யாகத்தில் மிளகாய் நெடி சிறிதும் இன்றி பக்தர்கள் தோஷ நிவர்த்தி செய்து பத்ரகாளியம்மனை வழிபட்டனர்.