ராமேஸ்வரம் : தைப்பூசத்தை முன்னிட்டு ராமேஸ்வரம் கோயில் லெட்சுமணேஸ்வரர் தீர்த்த குளத்தில் சுவாமி அம்பாள் தெப்ப உற்சவம் நடந்தது. ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் நேற்று முன்தினம் பிள்ளையார் தெப்பம் நடந்தது. நேற்று அதிகாலை 3 மணிக்கு கோயில் நடை திறந்து 3.30 முதல் 4.30 மணி வரை ஸ்படிகலிங்க பூஜை நடந்தது. பின் ஐந்து கால பூஜைகள் முடிந்து காலை 10.30க்கு மேல் ராமநாதசுவாமி, பர்வதவர்த்தனி அம்பாள் தங்க ரிஷப வாகனத்தில் பஞ்ச மூர்த்திகளுடன் வீதிஉலா வந்து லெட்சுமணேஸ்வரர் தீர்த்தக் கோயிலுக்கு எழுந்தருளினார். பகல் 12 மணிக்கு தீர்த்தவாரி உற்சவம் நடந்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. மாலை 6 மணிக்கு சுவாமி, அம்பாள் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் எழுந்தருளி, 11 முறை குளத்தில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அறநிலையத்துறை உதவி கோட்டப்பொறியாளர் மயில்வாகனன், கோயில் கண்காணிப்பாளர் வெங்கட்ராமன் உட்பட பலர் பங்கேற்றனர். பின் சுவாமி அம்பாளுக்கு தீபாராதனை நடைபெற்றதை தொடர்ந்து பஞ்சமூர்த்திகள் புறப்பாடாகி நகரின் முக்கிய வீதியில் உலா வந்து கோயிலை சென்றடைந்ததும் அர்த்தஜாம பூஜை மற்றும் பள்ளியறை பூஜை நடந்தது. தெப்ப உற்சவத்தையொட்டி நேற்று காலை 10 முதல் இரவு 9 மணி வரை கோயில் நடை சாத்தப்பட்டது. பக்தர்கள் தீர்த்தமாடவும் அனுமதிக்கப்படவில்லை.