பதிவு செய்த நாள்
08
பிப்
2012
12:02
அவிநாசி :தண்டுக்காரன்பாளையம் ஊராட்சி, தொட்டியனூரில் குட்டைக்குள் பஞ்சலோக சிலைகள் புதைத்திருப்பதாக அக்கிராம மக்கள் கூறி வருகின்றனர். அச்சிலைகளை தோண்டி எடுக்க கிராம மக்கள் முயற்சி செய்தனர். அரசின் அனுமதியின்றி, குட்டையை தோண்டக்கூடாது என, தாசில்தார் தடை விதித்தார். அவிநாசி ஒன்றியம், தண்டுக்காரன்பாளையம் ஊராட்சி, தொட்டியனூரில் முத்துக்கிராயப் பெருமாள் கோவில் உள்ளது. அக்கோவிலுக்கு சொந்தமான ஆறு ஏக்கர் நிலமும் உள்ளது. 60 ஆண்டுக்கு முன், தினமும் பூஜை, ஆண்டுதோறும் திருவிழா நடத்தப்பட்ட அக்கோவிலில், தற்போது ஒரு கால பூஜை மட்டுமே நடக்கிறது; நாளடைவில் திருவிழாவும் நிறுத்தப்பட்டு விட்டது. கடந்த 25 ஆண்டுக்கு முன், கோவிலை நிர்வகித்து வந்தவர்கள் இடையே ஏற்பட்ட கோஷ்டி சண்டையில், கோவிலில் இருந்த பெருமாள், கருடன் மற்றும் ஆஞ்சநேயர் சிலைகளை, ஒருவர், அருகிலுள்ள கிணற்றில் போட்டுள்ளார். அதன்பின், அக்கிணறு மூடப்பட்டு விட்டது; அங்கு குட்டையும் உருவாகி விட்டது; மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. ஒரு கால பூஜை திட்டத்தில், முத்துக்கிராயப் பெருமாள் கோவிலுக்கு தமிழக அரசு சார்பில் வழங்கப்பட்டு வந்த நிதி ஓராண்டாக நிறுத்தப்பட்டு விட்டது. இந்நிலையில், கோவிலை புனரமைத்து, கும்பாபிஷேகம் செய்ய, தொட் டியனூர் கிராம மக்கள் முடிவு செய்தனர். அதனால், குட்டையிலுள்ள கிணற்றில் புதைந்துள்ள சிலைகளை தோண்டி எடுக்க முடிவு செய்தனர். ஒரு வாரத்துக்கு முன், பொக்லைன் மூலம் குட்டையில் 10 அடி ஆழத்துக்கு தோண்டினர்; சிலைகள் கிடைக்கவில்லை. இத்தகவல் தாசில்தாருக்கு சென்றது. தாசில்தார் பூங்காவன் மற்றும் அதிகாரிகள், தொட்டியனூருக்கு சென்று ஆய்வு செய்தனர். அங்கிருந்த பொதுமக்கள், "பெருமாள் கோவில் சிலைகள் குட்டைக்குள் உள்ளன; அதை எடுத்து கும்பாபிஷேகம் செய்ய வேண்டும். குட்டையை தோண்ட அனுமதிக்க வேண்டும், என்றனர். அதற்கு தாசில்தார் அனுமதிக்க மறுத்து, குட்டையை மேற்கொண்டு தோண்டக்கூடாது என்று எச்சரித்து சென்றார்.
தண்டுக்காரன்பாளையம் முன்னாள் ஊராட்சதி தலைவர் பழனிசாமியிடம் கேட்ட போது, ""முத்துகிராயப் பெருமாள் கோவிலை நிர்வகித்து வந்தவர்கள் இடையே ஏற்பட்ட பிரச்னை காரணமாக, பஞ்சலோக சிலைகளை தூக்கி கிணற்றில் போட்டு விட்டனர். தற்போது கிணறும் மூடப்பட்டு, அங்கு குட்டையும் உருவாகி விட்டது. அதில், சிலைகள் இருப்பதாக ஊர் பெரியவர்கள் இன்றும் கூறுகின்றனர். அந்த இடத்தில் தோண்டினால் சிலைகள் கண்டிப்பாக கிடைக்கும். இதுதொடர்பாக அரசு அதிகாரிகளிடம் மனு அளிக்க உள்ளோம், என்றார். குட்டைக்குள் சிலைகள் இருப்பது குறித்து தாசில்தார் பூங்காவனிடம் கேட்ட போது, ""தொட்டியனூர் குட்டையில் சிலைகள் இருப்பதாக தெரியவில்லை. யாரோ சொன்ன தகவலை வைத்து தோண்டியுள்ளனர். நாங்கள் சென்று ஆய்வு செய்தோம். அங்கு பஞ்சலோக சிலைகள் இருப்பதற்கான எவ்வித ஆதாரமும் கிடையாது. அரசின் அனுமதியின்றி எக்காரணத்தை முன்னிட்டும் குட்டையை தோண்டக்கூடாது என்று எச்சரித்து விட்டு வந்தோம், என்றார்.