பதிவு செய்த நாள்
21
அக்
2018
02:10
காஞ்சிபுரம்: ஏகாம்பரநாதர் கோவில் புதிய தங்க உற்சவர் சிலை செய்ததில் முறைகேடு நடந்துள்ளது என ஆய்வு செய்ய, போலீசார், ஆய்வுக்கு எடுத்து செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.காஞ்சிபுரம், ஏகாம்பரநாதர் கோவிலில், பழைய உற்சவர் சிலை சேதம் அடைந்ததால், அதற்கு பதிலாக புதிய சிலை, 2015ல் செய்யப்பட்டது. அதில், 5.75 கிலோ தங்கம் சேர்ப்பதாக கூறப்பட்டது. ஆனால், அதை ஆய்வு செய்த சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார், சிலையில் துளி கூட தங்கம் சேர்க்கப்படவில்லை என, கூறினர்.இந்த வழக்கு சம்பந்தமாக, கோவில் செயல் அலுவலர் மற்றும் அர்ச்சகர்கள் மீது வழக்குப் பதிவு செய்து, போலீசார் விசாரித்தனர். இந்த சிலை தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளது.இந்நிலையில், ஏகாம்பரநாதர் கோவில் புதிய உற்சவர் சிலையை, சென்னை அல்லது கும்பகோணம் கொண்டு சென்று முழுமையான ஆய்வு செய்ய, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார், அறநிலைய துறையிடம், கடந்த மாதம் அனுமதி கேட்டதாக கூறப்படுகிறது.இந்நிலையில், புதிய சிலையை வெளியில் கொண்டு செல்ல வேண்டு மானால், அதற்கான ஆகம விதிப்படி பூஜைகள் செய்து, எடுத்து செல்வதற்கான வேலைகள் இன்று நடப்பதாக கூறப்படுகிறது.