காஞ்சி மகாசுவாமிகளை தரிசிக்க வந்த பக்தர் கண்ணீருடன் “சுவாமி... எத்தனையோ கோயில்களுக்குப் போயும் என் கஷ்டம் தீர்ந்தபாடில்லை” என்றார். அருள் பொங்கும் கண்களால் பார்த்தபடி சுவாமிகள் “உன் குலதெய்வத்தை வழிபட்டாயா?” எனக் கேட்டார். “குலதெய்வமா... எதுவென்றே தெரியாதே” என்றார். “வயதான உறவினர்களை சந்தித்துப் பேசு. அவர்களுக்கு குலதெய்வம் எதுவென்று தெரிந்திருக்கும். அங்கு போனால் கஷ்டம் ’சூரியனைக் கண்ட பனி’யாக மறையும்” என்றார் சுவாமிகள்.
விடைபெற்ற பக்தர் சொந்த ஊரிலுள்ள பெரிய பாட்டனாரைச் சந்தித்து, குலதெய்வம் பேச்சியம்மன் என அறிந்தார். அம்மன் கோயிலில் பொங்கலிட்டு, “அம்மா! உன்னை தஞ்சமடைந்து விட்டேன். என் குறைகளைப் போக்கியருள்வாய்” என வேண்டினார். ஒருமாதம் கழிந்தபின் காஞ்சிபுரம் வந்த அவர் நெகிழ்ச்சியுடன், “சுவாமி... குலதெய்வ அருளால் என் கஷ்டங்கள் விலகுவதை உணர்கிறேன்” என்றார். “அடிபாகம் இல்லாவிட்டால் பாத்திரத்தில் தண்ணீர் நிற்குமா? எத்தனை தெய்வத்தை வழிபட்டாலும் குலதெய்வத்தை வழிபடாவிட்டால் பலனில்லை. தந்தைவழி முன்னோர்கள் வழிபட்ட தெய்வமே குலதெய்வம். எங்கும் கிடைக்காத நன்மை குலதெய்வத்தால் வந்தடையும். ஏன் தெரியுமா? குழந்தை பிராயத்தில் முடியிறக்கவும், உணவூட்டவும் குலதெய்வ கோயிலுக்கு பெற்றோர் அழைத்துச் சென்றிருப்பார்கள். அந்த நினைவு ஆழமாக மனதில் பதிந்திருக்கும்.
அங்கு நிற்கும் போது நம் பரம்பரையின் வரிசையில் நிற்பதாக அர்த்தம். சங்கிலியின் கண்ணியாக வரும் இந்த தொடர்பு வேறெங்கும் உண்டாகாது. கடவுளின் அருட்சக்தியும், முன்னோர்களின் ஆசியும் குலதெய்வத்தின் வடிவில் நம் குடும்பத்துக்கு கிடைக்க வேண்டும் என வழி செய்யப்பட்டிருக்கிறது என்பதால் குலதெய்வத்தை மறக்காதே” என சொல்லி பிரசாதம் கொடுத்தார் காஞ்சி மகாசுவாமிகள். திருப்பூர் கிருஷ்ணன்