நபிகள் நாயகத்தை பார்க்க ஒரு பெண் பழங்கள் கொண்டு வருவாள். அதில் ஒன்றிரண்டை எடுத்து விட்டு மற்றதை சீடர்களிடம் கொடுப்பார்.
’அன்புடன் தருவதைச் சாப்பிடாமல் சீடர்களுக்கு கொடுக்கிறாரே...’ என்ற வருத்தம் ஏற்பட்டது. தான் வருவதை விரும்பவில்லையா அல்லது பழங்களில் சுவை இல்லையா என சிந்தித்தாள். ஒருநாள் திராட்சைப் பழங்களுடன் வந்தாள். ஆசி பெற்றாள். அதில் இரண்டை எடுத்து சுவைத்தார் நாயகம். மீதியை சீடர்களிடம் கொடுப்பார் என நினைத்தாள். ஆனால் அவரே தொடர்ந்து சாப்பிட்டார். இதைக் கண்ட அவள் மகிழ்ந்தாள். ’நான் கொடுப்பதை விருப்பமுடன் ஏற்றுத்தான் வந்திருக்கிறார். உண்மையை உணராமல் நான் தான் தவறாக கருதி விட்டேன்’ என நினைத்தாள். அவளுடன் பேசிக்கொண்டே பழங்கள் முழுவதையும் சாப்பிட்டார். மகிழ்ச்சி தாங்கவில்லை அவளுக்கு. மீண்டும் ஆசி பெற்று விடை பெற்றாள். “ஐயா....பேருக்கு ஒன்று இரண்டை எடுத்து விட்டு, மீதியை எங்களுக்கு கொடுப்பீர்களே... ஆனால் இன்று மட்டும் முழுவதையும் சாப்பிட்டு விட்டீர்களே...” என சீடர்கள் கேட்க நாயகம் சிரித்தார். “வழக்கமாக உங்களின் வயிற்றுப்பசியை ஆற்ற விரும்புவேன். இன்று அவளின் மனப்பசியை ஆற்றினேன்” என்றார் நாயகம். சீடர்களுக்கு ஒன்றும் புரியவில்லை. “சரி. உங்களுக்கு புரியும்படி சொல்கிறேன். அவள் கொடுத்த பழங்கள் மிக புளிப்பானவை. அதை வாயில் வைத்ததும் துப்பி விடுவீர்கள். அதைக் கண்டால் அவள் வருந்துவாள். இவ்வளவு நாள் கொடுத்ததற்கும் அர்த்தம் இல்லாமல் போகும். நான் சாப்பிடவில்லையே எனக் கருதும் அவளின் சந்தேகமும் தீர்ந்தது” என்றார். நாயகத்தின் பெருந்தன்மை கண்டு சீடர்கள் வியந்தனர். தற்செயலாக அவள் வாசலில் மறைந்து நின்று கேட்க நேர்ந்தது. அவளையும் அறியாமல் கன்னத்தில் கண்ணீர் வழிந்தது.