பதிவு செய்த நாள்
09
பிப்
2012
11:02
சென்னிமலை: சென்னிமலை முருகன் கோவில் தேர், நான்கு ரதவீதிகள் வழியாக வலம் வந்து, நேற்று மாலை நிலை வந்தடைந்தது. முக்கிய விழாவான மஹாதரிசனம், 11ம் தேதி நடக்கிறது.
ஈரோடு மாவட்டத்தில் புகழ் பெற்ற முருகன் தலமாக திகழும் சென்னிமலையில் பல்வேறு விழாக்கள் கொண்டாடப்பட்டாலும், தைப்பூச விழா மிகச் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. 15 நாட்கள் நடக்கும் இந்த விழாவில் கரூர், திருப்பூர், கோவை உட்பட பல மாவட்டங்களில் இருந்தும் குடும்பம் குடும்பமாக காவடி, பால், தயிர் ஆகியவை சுமந்து வருவர். பக்தி பரவசத்துடன், மேளதாளம் முழங்க, சென்னிமலை நகரை வலம் வந்து சென்னிமலை மலை மீதுள்ள முருகனை வணங்கி செல்வர்.
நடப்பாண்டு தைப்பூச விழா ஜனவரி 30ம் தேதி துவங்கியது. அன்று முதல் பல்வேறு வாகனங்களில் முருகப்பெருமான் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தேரோட்டம் நேற்று முன்தினம் காலை துவங்கியது. சென்னிமலை நகரில் நான்கு ரத வீதிகளையும் திருத்தேர் வலம் வந்து, நேற்று மாலை நிலை சேர்ந்தது. இன்று இரவு பரிவேட்டை குதிரை வாகன காட்சி நடக்கிறது. வெள்ளிக்கிழமை இரவு தெப்போற்சவம் பூதவாகனக் காட்சி நடக்கிறது.
வரும் 11ம் தேதி மஹாதரிசனம் நடக்கிறது. அன்று காலை வள்ளி, தெய்வானை சமதே முத்துகுமாரசாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. இரவு 7 மணிக்கு நடராஜப் பெருமானும். சுப்பிரமணிய ஸ்வாமியும் முறையே வெள்ளி விமானம், வெள்ளி மயில் வாகனத்தில் எழுந்தருளி, திருவீதி உலா வருவர். இதைக் காண சென்னிமலையில் லட்சக்கணக்காண பக்தர்கள் கூடுவர். அன்று அதிகாலை 5 மணி வரை ஸ்வாமி திருவீதி உலா நடக்கும். 16ம் தேதி மஞ்சள் நீர் அபிஷேகத்துடன் விழா நிறைவு பெறுகிறது.
விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் தனபாலன் , செயல் அலுவலர் பசவராஜன் மற்றும் அர்ச்சகர்கள், பணியாளர்கள் செய்து வருகின்றனர்.