பதிவு செய்த நாள்
09
பிப்
2012
11:02
ஓட்டப்பிடாரம்:புளியம்பட்டி புனித அந்தோணியார் ஆலயத் திருவிழா நேற்றுமுன்தினம் நடந்தது. இதில் தமிழகமெங்கும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
பாளையங்கோட்டை மறைமாவட்டத்திற்குட்பட்ட புளியம்பட்டி புனித அந்தோணியார் ஆலய திருவிழா கடந்த ஜனவரி மாதம் 26-ம் தேதி பாளை மறைமாவட்ட ஆயர் ஜூடு பால்ராஜ் தலைமையில் கொடியேற்றத்துடன் துவங்கியது. அன்று முதல் 4ம் தேதி வரை காலை 6 மணி, நண்பகல் 12 மணி, மாலை 6.30 மணியளவில் திருப்பலி, செப வழிபாடு, நவநாள் செபம், மறையுரை, நற்கருணை ஆசீர் நடந்தது.
5ம் தேதி மாலையில் பெங்களூர் தூய பேதுரு குருத்துவக் கல்லூரி அருள்தந்தை அந்தோணி தலைமையில் திருப்பலியும், நற்கருணைப் பவனியும் நடந்தன. 6ம் தேதி மாலை பாளை மறைமாவட்ட பங்குத்தந்தை ஞானப்பிரகாசம் தலைமையில் திருப்பலியும், தூத்துக்குடி மறைமாவட்ட பங்குத்தந்தை ஸ்டார்வினின் மறையுரையும் நடந்தது. இரவு புனித அந்தோணியார் சப்பரப் பவனியுடன் வீதியுலா நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். நேற்று முன்தினம் ஆலயத் திருவிழா நடந்தது.
அதிகாலையில் பங்குத் தந்தைகள் ஜேம்ஸ் தலைமையில் திருப்பலியும், வியாகப்பராஜின் மறையுரையும், பின்னர் சத்தியநேசன் தலைமையில் திருப்பலியும், ஜெயநாதனின் மறையுரையும், தொடர்ந்து அந்தோணிகுரூஸ் தலைமையில் திருப்பலியும், அம்புரோஸின் மறையுரையும் நடந்தது. காலை அருள் தலைமையில் குணமளிக்கும் வழிபாடு நடந்தது. நண்பகலில் பாளை மறைமாவட்ட முதன்மைக்குரு ஜோமிக்ஸ் தலைமையில் சிறப்பு கூட்டுத் திருப்பலியும், மாலையில் பாளையங்கோட்டை தூய சவேரியார் கலைமனைகள், அருள்பணியாளர்கள் திருப்பலியும் நடந்தது. நேற்று (8ம் தேதி) அதிகாலை திருப்பலியும், காலையில் திருப்பலியைத் தொடர்ந்து புனிதரின் திருக்கொடி இறக்கமும் நடந்தது. விழா ஏற்பாடுகளை புளியம்பட்டி புனித அந்தோணியார் திருத்தலப் பங்குத் தந்தையர்கள் மோயூசன், ஜேம்ஸ், இம்மானுவேல் ஜெகன்ராஜா ஆகியோர் செய்திருந்தனர். விழாவையொட்டி முக்கிய நகரங்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.