பதிவு செய்த நாள்
24
அக்
2018
11:10
செஞ்சி: செஞ்சி அருகே, ஜெயின் கோவிலில் நடந்த பஞ்சலோக சிலைகள் திருட்டு வழக்கில், ஒருவனை போலீசார் பிடித்துள்ளனர். விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அடுத்த பெரும்புகை கிராமத்தில், பழமையான மல்லிநாதர் ஜெயின் கோவில் உள்ளது.
இக்கோவிலில், செப்., 15 ம் தேதி இரவு, மர்ம கும்பல், பஞ்சலோக சுவாமி சிலைகளை திருடி சென்றது. கோவில் நிர்வாகத்தினர், ஆறு சிலைகள் திருடு போனதாக புகார் செய்தனர்.கடந்த, 11ம் தேதி, செஞ்சியில் இருந்து அனந்தபுரம் செல்லும் வழியில், காரை காப்பு காட்டில் சாக்கு பையில் சிலைகள் கிடப்பதாக, சுரேஷ், 30, என்ற பழ வியாபாரி, போலீசுக்கு தகவல் தெரிவித் தான்.அங்கு சென்ற போலீசார், சாக்கு பையில் இருந்த ஒரு மல்லிநாதர் சிலை, இரண்டு பார்சுவநாதர் சிலை, ஒரு பாவை விளக்கை எடுத்து வந்தனர். இதில், புகாரில் தெரிவித்த மல்லிநாதர் சிலை மட்டும் இருப்பதாகவும், மேலும் ஐந்து சிலைகள் கிடைக்கவில்லை எனவும், கோவில் நிர்வாகிகள் தெரிவித்தனர்.
ஏற்கனவே தகவல் கொடுத்த சுரேஷை பிடித்து விசாரித்தனர். அவனது தகவலின்படி, காரை காப்புக் காட்டில் உள்ள குளத்தில் இருந்து தரனேந்திரன், பத்மாவதி, பார்சுவநாதர், மல்லிநாதர் சிலைகளை மீட்டனர். அதே நேரம், கோவில் நிர்வாகத்தினர் கொடுத்த புகாரில் இருந்த ஜ்வாலாமாலினி சிலை இதிலும் இல்லை.முதலில், ஆறு சிலைகள் திருடு போனதாக தெரிவித்தனர். இப்போது வரை, எட்டு சிலைகள் கிடைத்துள்ளன. ஆனாலும், ஜ்வாலாமாலினி சிலை இல்லை என்பதால், திருடு போன சிலைகளின் எண்ணிக்கையில் தொடர்ந்து குழுப்பம் நிலவுகிறது. தொழிலுக்கு புதியவர்களா?சிலைகளை திருடியவர்கள், அவற்றை யாரிடம் விற்பது என தெரியாமல், வைத்திருந்துள்ளனர். சிலையின் பழமை, அதன் மதிப்பு தெரியாமல், சிலைகளின் ஒரு பகுதியை வெட்டி எடுத்து, தங்கத்தின் அளவை சோதித்து பார்த்துள்ளனர். எனவே திருட்டில் ஈடுபட்ட கும்பல், புதிதாக சிலை திருட்டில் ஈடுபடுபவர்களாக இருக்கலாம் என தெரிகிறது.