பதிவு செய்த நாள்
24
அக்
2018
12:10
மதுரை:கம்பனை பற்றி அறிய ஒரு பிறவி போதாது; பல பிறவிகள் எடுத்து கற்றாலும் முழுமையாக அறிவது கடினம், என பேராசிரியர் சாலமன் பாப்பையா புகழாரம் சூட்டினார்.
மதுரை கம்பன் கழகம் சார்பில் கம்ப ராமாயண வார வகுப்புகளின் 14வது ஆண்டு நிறைவு விழா நடந்தது. செயலர் புருஷோத்தமன் வரவேற்றார். தலைவர் சங்கர சீத்தாராமன் தலைமை வகித்தார்.
நிறுவனர் சாலமன் பாப்பையா பேசியதாவது: 750 வாரங்களாக கம்ப ராமாயண வகுப்புகள் நடந்துள்ளன. கம்பனை பற்றி நன்றாக கற்று தேர்ந்த தமிழறிஞர்கள் 27 பேர், வாரம்தோறும் வகுப்புகள் நடத்தினர். கம்பனை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என நீண்ட நாட்களாக நினைத்திருந்தேன். திரு.வி.க., மூலம் கம்பரை பற்றி நான் தெரிந்து கொண்டேன்.
கம்பனை கற்றவர் சமய வேறுபாடுகளை தூக்கி எறிந்து விடுவர். ஆன்மாக்கள் ஒன்றிணைந்து ஓரிடத்தில் கூடி, ஒருவரையொருவர் பார்ப்பது, உறவு பற்றி விசாரிப்பது வேறெங்கும் கிடைக் காதது. இதை கம்பன் கழகம் ஏற்படுத்தி கொடுப்பது மகிழ்ச்சிக்குரியது, என்றார்.
நிர்வாகிகள் தா.கு.சுப்பிரமணியன், புலவர் வேலாயுதம், பேச்சாளர் ராஜா, ரேவதி சுப்புலட்சுமி, முத்து சந்தானம், கண்ணன் பங்கேற்றனர்.