பதிவு செய்த நாள்
25
அக்
2018
11:10
உடுமலை: உடுமலை, சுற்றுப்பகுதி சிவாலயங்களில், ஐப்பசி மாத பவுர்ணமியையொட்டி, அன்னாபிஷேக வழிபாடு நடந்தது.
அனைத்து உயிரினங்களுக்கும் உணவை படியளக்கும் சிவபெருமானுக்கு, அன்னம் படைத்து நன்றி செலுத்தும் வகையில், சிவாலயங்களில் ஐப்பசி மாத பவுர்ணமியன்று அன்னாபிஷேக விழா நடக்கிறது.
உடுமலை, சுற்றுப்பகுதி சிவாலயங்களில், நேற்று (அக்., 24ல்) மகா அன்னாபிஷேக விழா நடந்தது. பிரசன்ன விநாயகர் கோவிலில், 20 கிலோ அரிசி, 10 கிலோ காய் வகையுடன் உணவு தயாரிக்கப்பட்டது. பால், திரவியப்பொடி, பஞ்சாமிர்தம், பழச்சாறு உட்பட 16 வகைகளில், விஸ்வநாத சுவாமிக்கு அபிேஷகம் நடந்தது.அன்னத்தால், சிவபெருமானுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை நடந்தது. பால், இளநீர், பன்னீர், தண்ணீரால் அபிேஷகம் நடத்தப்பட்டு, தீபாராதனை காட்டப்பபட்டது.
மாலையில், விசாலாட்சி அம்மனுக்கு, பவுர்ணமி சிறப்பு பூஜையுடன், விசாலாட்சி அம்மன் சமேத விஸ்வநாதர் சுவாமி புறப்பாடு நடந்தது. கள்ளிபாளையம் பிரிவு அவிநாசிலிங் கேஸ்வரர் கோவில், அரசு கலைக் கல்லூரி ரோடு புவனகணபதி கோவில், சோமவாரப்பட்டி அமரபுயங்கரீஸ்வரர் கோவில், தில்லை நகர் ரத்னலிங்கேஸ்வரர் கோவில், காந்திநகர் வரசித்தி விநாயகர் கோவிலில் சவுந்தரநாயகி சமேத சுந்தரரேஸ்வரருக்கு அன்னாபிஷேக விழா நடந்தது. பக்தர்கள் திரளாக பங்கேற்று வழிபட்டனர். அபிேஷகம் செய்யப்பட்ட அன்னம் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது.