பதிவு செய்த நாள்
25
அக்
2018
02:10
திருச்சி: ஸ்ரீரங்கம் கோவிலில் கிடந்த, 34 ஆயிரத்து, 500 ரூபாயை கண்டெடுத்த தம்பதி, தவறவிட்டவரிடம் ஒப்படைத்தனர்.
திருச்சி, கே.கே.நகரைச் சேர்நத தம்பதி ரவி தேவி. இவர்கள் நேற்று 24ல் காலை , ஸ்ரீரங்கத்தில் உள்ள சிங்கபெருமாள் கோவிலுக்கு, மகளின் திருமண பத்திரிக்கையை சாமியிடம் வைத்து கும்பிட சென்றனர். பைக்கில் சென்ற அவர்கள், கோவில் முன் நிறுத்திய போது, அங்கு, 2,000 500 ரூபாய் நோட்டுகள் சிதறி கிடந்து உள்ளன. உடன், ஆதார் கார்டு, ஏ.டி.எம்., ரேஷன் கார்டு, டிரைவிங் லைசன்ஸ் ஆகியவையும் கிடந்துள்ளன. அவற்றை எடுத்து பார்த்தபோது, 34 ஆயிரத்து, 500 ரூபாய் பணம் இருந்துள்ளது. ஆதார் கார்டு மூலம், அந்த பணத்துக்கு சொந்தக் காரர், மணப்பாறை அருகேயுள்ள புத்தாநத்தத்தைச் சேர்ந்த ஆண்டியப்பன் என்று தெரிய வந்தது. பணத்தை தம்பதி, ஸ்ரீரங்கம் போலீசில் ஒப்படைக்க முடிவு செய்து, சிறிது நேரம் அங்கேயே நின்று, யாரும் வருகின்றனரா என்று பார்த்துள்ளனர். அப்போது, 50 வயது மதிக்க த்தக்க ஒருவர், பணத்தை காணோம் என்று அங்கு வந்து உள்ளார். அவரிடம் விசாரித்த போது, பணத்தை தவறவிட்ட ஆண்டியப்பன் என்று தெரியவந்தது. இதையடுத்து பணம் மற்றும் ஆவணங்களை, தம்பதி ஒப்படைத்தனர்.அதை கண்ணீர் மல்க பெற்றுக் கொண்ட அவர், தம்பதிக்கு நன்றி தெரிவித்து சென்றுள்ளார். அங்கிருந்தவர்கள், தம்பதியை பெரிதும் பாராட்டினர்.